Story continued by Varga! | Adi Parva - Section 219 | Mahabharata In Tamil
(அர்ஜுன வனவாச பர்வம் - 05)
பதிவின் சுருக்கம் : பிராமணனிடம் சாபம் பெற்ற அப்சரஸ்கள்; நாரதர் அப்சரஸ்களுக்கு தெற்கு கடற்கரையில் இருக்கும் புனித நீர்நிலைகளுக்குச் செல்லுமாறு வழிகாட்டியது; அர்ஜுனன் அவர்களை சாபத்திலிருந்து மீட்டது; அர்ஜுனன் மீண்டும் மணிபுரம் சென்று தனது மகன் பப்ருவாஹனன் அரியணையில் அமர்த்தப்பட்டிருப்பதைக் காண்பது; அர்ஜுனன் சித்ராங்கதையைக் கண்ட பிறகு கோகர்ணம் செல்வது...
வைசம்பாயனர் சொன்னார், "வர்க்கை தொடர்ந்தாள், "ஓ பாரதக் குலத்தில் முதன்மையானவரே, இந்தச் சாபத்தின் காரணமாக நாங்கள் அனைவரும் துயர் உற்றோம். நாங்கள் தவத்தை செல்வமாகக் கொண்டு தனது உறுதியில் இருந்து விலகாத அந்த பிராமணரை மனநிறைவு செய்ய நினைத்தோம்.(1) அவனிடம் நாங்கள், "அழகினாலும் இளமையாலும் ஏற்பட்ட கர்வத்தாலும், காம தேவனின் உந்துதலாலும், முறையற்ற செயலைச் செய்தோம்.(2) ஓ அந்தணரே, நீர் எங்களை மன்னியும். உண்மையில், ஓ அந்தணரே, கடும் நோன்பு நோற்று, தவத்தை செல்வமாகக் கொண்ட உம்மை மயக்க நாங்கள் இங்கு வந்தது, மரணத்தை நோக்கி வந்தது போலாயிற்று.(3) இருப்பினும், அறம்சார்ந்தவர்கள், பெண்கள் கொல்லப்படக்கூடாது என்று சொல்லியிருக்கின்றனர். எனவே, அறத்தால் நீர் இன்னும் வளர்வீராக.(4) நீர் எங்களைக் கொல்லலாகாது. ஓ அறத்தை நன்கு அறிந்தவரே, ஒரு பிராமணன் என்பவன் அனைத்து உயிர்களுக்கும் நண்பன் என்றே சொல்லப்பட்டுள்ளது. ஓ பெரும் வளமை கொண்டவரே! ஞானமுள்ளோர் வாக்கும் மெய்யாகட்டும்.(5) மேம்பட்டவர்கள் தங்களிடம் பாதுகாப்பை நாடி வருபவரை எப்போதும் காப்பர். நாங்கள் உமது பாதுகாப்பைக் கோருகிறோம். நீர் எங்களை மன்னிப்பதே தகும்" என்றோம்.(6)
