Indra made himself invisible overwhelmed with shame! | Anusasana-Parva-Section-41 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 41)
பதிவின் சுருக்கம் : விபுலர் ருசி தேவியின் உடலுக்குள் இருந்த போது ஆசிரமத்திற்கு வந்த இந்திரன்; ருசியின் உடலுக்குள் இருந்து அவளது செயல்பாடுகளைக் கட்டுப்படுத்திய விபுலர்; இவற்றை ஞானக்கண்ணால் கண்ட இந்திரன்; விபுலரின் எச்சரிக்கை; இந்திரன் நாணி மறைந்தது...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஒரு நாள் தேவர்களின் தலைவன் {இந்திரன்}, தெய்வீக அழகுடன் கூடிய ஒரு வடிவத்தை ஏற்று, தான் எதிர்பார்த்த சந்தர்ப்பம் இறுதியாக வாய்த்ததென எண்ணி அந்த முனிவரின் ஆசிரமத்திற்கு வந்தான்.(1) ஓ! மன்னா, உண்மையில் அந்த இந்திரன் ஒப்பற்ற அழகுடன் கூடியதும், பெண்களைப் பெரிதும் மயக்கக்கூடியதும், மிக இனிமையானதுமான ஒரு வடிவத்தை ஏற்று, அந்தத் தவசியின் {தவசி தேவசர்மனின்} ஆசிரமத்திற்குள் நுழைந்தான்.(2) அமர்ந்திருக்கும் நிலையில் இருப்பதும், மரத்தைப் போல அசையாமல் இருப்பதும், பார்வையற்ற விழிகளைக் கொண்டதும், துணியில் வரையப்பட்ட படத்தைப் போன்ற விபுலரின் உடலைக் கண்டான்.(3) மேலும் அவன், மிக அழகிய கடைக்கண்கள், சிறுத்த இடை, மற்றும் பருத்த முலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த ருசி அங்கே அமர்ந்திருப்பதையும் கண்டான். அவளது கண்கள் தாமரை இதழ்களைப் போல நீளமாகவும், பெரியதாகவும் இருந்தன, அவளது முகம் முழு மதியைப் போல அழகாகவும், இனிமையாகவும் இருந்தது.(4)