Showing posts with label வார்ஷ்ணேயன். Show all posts
Showing posts with label வார்ஷ்ணேயன். Show all posts

Sunday, January 12, 2014

வார்ஷ்ணேயனின் சந்தேகம் - வனபர்வம் பகுதி 71

The doubt of Varshneya | Vana Parva - Section 71 | Mahabharata In Tamil

(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)

தமயந்தியின் சுயம்வரத்திற்கு ஒரே நாளில் செல்ல ரிதுபர்ணன் பாகுகனைப் பணித்தது; பாகுகன், வார்ஷ்ணேயன் மற்றும் ரிதுபர்ணன் ஆகிய மூவரும் விதரப்ப்பம் நோக்கி தேரில் சென்றது; பாகுகன் தேரோட்டும் திறனைப் பார்த்து இவன் நளனாக இருப்பானோ என்று வார்ஷ்ணேயன் சந்தேகித்தது…

பிருகதஸ்வர் தொடர்ந்தார், "சுதேவனின் வார்த்தைகளைக் கேட்ட மன்னன் ரிதுபர்ணன், பாகுகனிடம் மென்மையான வார்த்தைகளில், "ஓ பாகுகா {நளனே}, குதிரைகளைப் பழக்குவதிலும், அவற்றை வழிநடத்துவதிலும் நீ அதி நிபுணனாக இருக்கிறாய். இது உனக்கு விருப்பமானால், நான் தமயந்தியின் சுயம்வரத்திற்கு ஒரே நாளில் செல்ல விரும்புகிறேன்" என்றான். ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, இப்படிச் சொல்லப்பட்ட நளன், தனது இதயம் வெடித்துவிடுவது போன்ற துயரத்தில் ஆழ்ந்தான். அந்த உயர்ந்த ஆன்மா கொண்ட மன்னன் துன்பத்தால் எரிந்தான். அவன் தனக்குள்ளேயே, "துன்பத்தால் குருடாகியே தமயந்தி இப்படிச் செய்கிறாளோ! அல்லது இந்த அற்புதமானத் திட்டத்தை அவள் {தமயந்தி} என் பொருட்டு உருவாக்கியிருக்கிறாளோ!


ஐயோ, புத்தியற்ற எனது பாவத்தால் ஏமாற்றப்பட்ட விதரப்ப்பத்தின் அப்பாவி இளவரசி {தமயந்தி} செய்யும் இந்தச் செயல் கொடூரமாக இருக்கிறதே. இந்த உலகத்தில் பெண்களின் இயல்பு நிலையற்றதாகவே காணப்படுகிறது. எனது குற்றமும் பெரியதுதான்; அல்லது எனது பிரிவால் துயரடைந்ததால் என்னை வெறுத்து இப்படிச் செய்கிறாளோ. உண்மையில், அந்தக் கொடியிடை கொண்ட பெண் {தமயந்தி}, என்னால் துன்பத்துக்கும் நம்பிக்கையின்மைக்கும் ஆளாகியிருந்தாலும், நிச்சயமாக இவ்வகை செயலைச் செய்யக் கூடியவள் அல்ல. அதுவும் குறிப்பாக (என்மூலமாக) குழந்தைகள் இருக்கும்போது அப்படிச் செய்ய மாட்டாள். இருப்பினும், இது உண்மையா? பொய்யா? என்று நான் அங்கே சென்று உறுதி செய்த பிறகு அறிந்து கொள்வேன். ஆகையால், நான் ரிதுபர்ணன் காரியத்தையும் மற்றும் எனது காரியத்தையும் {ஒரே நாளில் விதரப்ப்பம் செல்வது என்ற ரிதுபர்ணன் காரியத்தையும் எனது மனைவியைக் காண்பது என்ற எனது காரியத்தையும்} சாதிப்பேன்" என்று நினைத்துக் கொண்டான்.

இப்படி மனதுக்குள் தீர்மானித்துக் கொண்ட பாகுகன் {நளன்}, இதயத்தில் துயரத்துடன் மன்னன் ரிதுபர்ணனிடம் கரங்கள் கூப்பி, "ஓ ஏகாதிபதி, நான் உமக்கு அடிபணிகிறேன். ஓ மனிதர்களில் புலியே, ஓ மன்னா {ரிதுபர்ணரே} நான் விதரப்ப்ப நகரத்திற்கு ஒரே நாளில் செல்வேன்" என்றான். பிறகு ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, மன்னன் பங்காசூரனின் மகனின் {ரிதுபர்ணனின்} கட்டளையின் பேரில் பாகுகன் {நளன்} கொட்டிலுக்குச் {குதிரை லாயத்திற்குச்} சென்று குதிரைகளைப் பரிசோதித்தான். விரைந்து செய்யுமாறு ரிதுபர்ணனால் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்ட பாகுகன் {நளன்}, தீவிர ஆராய்ச்சிக்கும், கவனமான யோசனைக்கும் பின்னர், சதைப்பற்றற்று மெலிந்திருந்தும், வலிமையுடையதும், நீண்ட பயணத்துக்கு தகுதியானதும், உயர்ந்த இனம் மற்றும் பண்புகளால் பலம்வாய்ந்ததும், அமங்களமான குறிகளற்றதும், அகலமான நாசிகளும், வீங்கிய கன்னங்களும், முடி சார்ந்த பத்து சுழிகளால் குறைகளற்றதும், சிந்து நாட்டில் பிறந்ததும், காற்றைப் போன்ற வேகம் கொண்டதுமான சில குதிரைகளைத் தேர்ந்தெடுத்தான்.

அந்தக் குதிரைகளைக் கண்ட மன்னன் {ரிதுபர்ணனின்} சிறிது கோபம் கொண்டு, "நீ செய்ய விரும்பிய இந்தக் காரியம் என்ன? நீ எங்களைக் கேலி செய்யக்கூடாது. பலத்திலும் மூச்சிலும் பலவீனமான இந்த எனது குதிரைகள் எப்படி நம்மைச் சுமந்து செல்லும்? இவற்றின் உதவியைக் கொண்டு இந்த நெடும்பாதையில் எப்படிச் செல்ல முடியும்?" என்று கேட்டான். அதற்கு பாகுகன் {நளன்}, "இந்தக் குதிரைகள் ஒவ்வொன்றும் தனது நெற்றியில் ஒரு சுழியும், நெற்றிப்பொட்டில் இரண்டும், இரு பக்க உடலிலும் நான்கும், மார்பில் ஒன்றும், முதுகில் ஒன்றும் என சுழிகளைக் கொண்டிருக்கின்றன. சந்தேகமற, இந்தப் புரவிகளால் விதரப்ப்ப நாட்டிற்குச் செல்ல முடியும். ஓ மன்னா {ரிதுபர்ணரே}, நீர் மற்றவைகளைத் தேர்ந்தெடுக்க விரும்பினால், அவற்றைக் குறித்துக் காட்டும், அந்தப் புரவிகளை நான் உமக்காக விரட்டி ஓட்டுகிறேன்" என்றான். பிறகு விடைகொடுத்த ரிதுபர்ணன், "ஓ பாகுகா, நீ குதிரைகளைப் பற்றிய அறிவியலை அறிந்தவன். நீ அவற்றில் (அவற்றை வழிநடத்துவதிலும்) நிபுணனாக இருக்கிறாய். எவை தகுதியுடையவை என்று நீ நினைக்கிறாயோ அவற்றை விரைவாக விரட்டு" என்றான்.

அதன் பிறகு திறன் வாய்ந்த நளன் தேரில், அதிவேகமாகச் செல்லும் நான்கு அற்புதமான உயர்சாதிக் குதிரைகளைப் பூட்டினான். குதிரைகள் பூட்டப்பட்டதும், மன்னன் {ரிதுபர்ணன்} நேரத்தைக் கடத்தாமல் அந்தத் தேரில் ஏறினான். அப்போது அந்தச் சிறந்த குதிரைகள் முழங்கால் மடக்கி பூமியில் விழுந்தன. பிறகு, ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அந்த மனிதர்களில் முதன்மையான மன்னன் நளன், சக்தியும் பலமும் கொண்ட அந்தக் குதிரைகளைத் தேற்றினான். பிறகு கடிவாளத்தை இழுத்து அவற்றை எழுப்பி, தேரோட்டியான வார்ஷ்ணேயனையும் தேரில் அமர்த்தி, மிகுந்த வேகத்தில் செல்ல ஆயத்தமானான். அந்த குதிரைகளில் சிறந்தவை, பாகுகனால் {நளன்தூண்டப்பட்டு, வாகனத்தில் இருப்பவர்க்ள ஆச்சரியம் அடையும் வகையில் வானத்தில் எழுந்தன.

காற்றின் வேகத்தைக் கொடையாகக் கொண்டு அந்த தேரை இழுத்துச் சென்ற அக்குதிரைகளைக் கண்டு, அருள்நிறைந்த அயோத்தியா மன்னன் {ரிதுபர்ணன்} மிகுந்த ஆச்சரியம் கொண்டான். தேர்ச்சக்கரங்களின் ஒலியையும், குதிரைகளின் நிர்வாகத்தையும் கண்ட வார்ஷ்ணேயன், குதிரைகளை வழிநடத்துவதில் பாகுகனின் {நளனின்} திறமையைக் குறித்துச் சிந்தித்தான். அவன் {வார்ஷ்ணேயன்} தனக்குள், "இவன், தேவர்கள் தலைவனின் {இந்திரனின்} தேரோட்டியான மாதலியா? அதே அற்புதமான குறிகளை நான் இந்த வீரன் பாகுகனிடம் காண்கிறேன். அல்லது அழகான மனித உடலை அடைந்தவனும், புரவிகளின் அறிவியலை அறிந்தவனுமான சாலிஹோத்ரனோ {குதிரை சாஸ்திரம் என்கிற அஸ்வசாஸ்திரம் இயற்றிய முனிவரே சாலிஹோத்ரர் என்று அறிகிறோம்}. அல்லது எதிரிகளின் நகரத்தை அழிக்கும் மன்னன் நளர்தான் இங்கு வந்துவிட்டாரா? அல்லது அந்த நளர் அறிந்த அறிவியலை இந்த பாகுகனும் அறிந்திருக்கிறானா? நளருக்கு இணையான அறிவை இந்த பாகுகன் பெற்றிருப்பதை நான் காண்கிறேனே.

மேலும் பாகுகனுக்கும் நளருக்கும் ஒரே வயது தான் இருக்கும். மேலும், இவன் பெரும் பராக்கிரம் கொண்ட நளனாக இல்லாவிட்டாலும், அவருக்கு இணையான அறிவு கொண்டவனே. இருப்பினும், துரதிர்ஷ்ட காலத்தில் சிறப்புமிக்க மனிதர்கள்கூட சாத்திரங்களின் விதிகளுக்கு மாற்றுருவில் உலவுவார்கள். இந்த மனிதனின் பார்க்கச் சகியாத தோற்றத்தில் எனது எண்ணம் மாறத் தேவையில்லை; நளன் கூட தனது தனிப்பட்ட குணங்களை அழித்துக் கொண்டார். வயதைப் பொறுத்தவரை இவன் நளருக்குச் சமமாகவே இருக்கிறான். இருப்பினும் தோற்றத்தில் வித்தியாசம் இருக்கிறது. பாகுகனும் {நளனும்} அனைத்து சாதனைகளுக்கும் சொந்தக்காரனாக இருக்கிறான். அகையால், இவனை நளர் என்றே நினைக்கிறேன்" என்று நினைத்துக் கொண்டான்.

ஓ பலம் வாய்ந்த ஏகாதிபதியே {யுதிஷ்டிரா}, இப்படி நீண்ட நேரம் தனது மனதில் சிந்தித்த, நீதிமானான நளனின் (முன்னாள்) தேரோட்டியான வார்ஷ்ணேயன், இப்படியே சிந்தனையில் ஆழ்ந்தான். மேலும், மன்னர்களில் முதன்மையான ரிதுபர்ணன், குதிரைச்சவாரி அறிவியலில் பாகுகனின் திறமையைக் கண்டு, தனது தேரோட்டியான வார்ஷ்ணேயனுடன் சேர்ந்து பெரும் மகிழ்ச்சியை அனுபவித்தான். மேலும் பாகுகனின் திறனையும், தீவிரத்தையும், கடிவாளத்தைப் பிடிக்கும் முறையையும் நினைத்த மன்னன் {ரிதுபர்ணன்} பெரும் மகிழ்ச்சியடைந்தான்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Friday, January 10, 2014

குதிரைக்கொட்டில் அதிகாரியான நளன் - வனபர்வம் பகுதி 67

Nala, the superintendent of stables | Vana Parva - Section 67 | Mahabharata In Tamil

(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)

பாம்பு கார்க்கோடகன் மறைந்த பிறகு நளன் அயோத்தி செல்வது; ரிதுபர்ணனின் கொட்டில் (லாயம்) கண்காணிப்பாளன் ஆனது; வார்ஷ்ணேயன் மற்றும் ஜீவலன் என்ற நண்பர்களை அடைந்தது; தனது மனைவி தமயந்தியை நினைத்துப் புலம்பியது…

பிருகதஸ்வர் சொன்னார், "பிறகு அந்தப் பாம்பு {கார்க்கோடன்} மறைந்ததும், நிஷாதர்களின் ஆட்சியாளனான நளன், அன்றிலிருந்து பத்தாம் நாளில் ரிதுபர்ணனின் நகரத்திற்குள் {அயோத்திக்குள்} நுழைந்தான். பிறகு அவன் {நளன்} மன்னனை {ரிதுபர்ணனை} அணுகி, "எனது பெயர் பாகுகன். இந்த உலகத்தில் குதிரைகளை நிர்வகிப்பதில் எனக்கு இணை யாரும் இல்லை. அனைத்து காரியங்களிலும் நிபுணத்துவம் பெற்ற என்னிடம் கடினமான விஷயங்கள் குறித்த ஆலோசனைக்கும் நாடலாம். சமையற்கலையிலும் நான் அனைவரையும் விஞ்சி இருக்கிறேன். கடினமான அனைத்து சாதனைகளிலும், இந்த உலகத்தில் உள்ள அனைத்து கலைகளிலும் வெற்றியடைய நான் முயல்கிறேன். ஓ ரிதுபர்ணரே, என்னை நீர் ஆதரிக்கலாமே!" என்று கேட்டான் {நளன்}.


அதற்கு ரிதுபர்ணன், "ஓ பாகுகா என்னுடன் வசிப்பாயாக. உனக்கு நன்மை ஏற்படட்டும். நீ சொன்ன அனைத்தையும் நீ செய்வாய். குறிப்பாக, எனக்கு எப்போதுமே விரைவாக {பயணம்} செல்வதில் விருப்பம் உண்டு. எனது குதிரைகள் விரைவாகச் செல்ல தக்க நடவடிக்கைகள் எடு. நான் உன்னை கொட்டில்களின் {லாயங்களின்} கண்காணிப்பாளனாக நியமிக்கிறேன். நான் உனக்கு பத்தாயிரம் {10000} (பொன் அல்லது நாணயம்) ஊதியமாகக் கொடுப்பேன். வார்ஷ்ணேயன், ஜீவலன் ஆகிய இருவரும் எப்போதும் உனது கட்டளைப்படியே நடப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து நீ மகிழ்ச்சியாக வாழ்வாய். ஆகையால், ஓ பாகுகா, நீ என்னிடம் வசித்துக் கொள்" என்று மறுமொழி கூறினான் {அயோத்தி மன்னன் ரிதுபர்ணன்}.

பிருகதஸ்வர் தொடர்ந்தார், "இப்படி மன்னனால் சொல்லப்பட்ட நளன், வார்ஷ்ணேயனையும், ஜீவலனையும் துணையாகக் கொண்டு, மரியாதையுடன் நடத்தப்பட்டு, ரிதுபர்ணனின் நகரத்திலேயே {அயோத்தியிலேயே} வசிக்க ஆரம்பித்தான். அந்த மன்னன் {நளன்} அங்கேயே வசித்துக் கொண்டு, விதரப்ப்பத்தின் இளவரசியை {தமயந்தியை} நினைவுகூர்ந்து, எல்லா மாலை நேரங்களிலும் பின்வரும் ஸ்லோகத்தை உரைத்தான். அதாவது, "கதியற்று, பசி மற்றும் தாகத்தால் பீடிக்கப்பட்டு, களைத்துப் போய் அந்த இழிந்தவனை {என்னை} நினைத்து எங்கு படுத்திருக்கிறாளோ? இப்போது யாருக்காக {வேலை செய்யக்} காத்திருக்கிறாளோ?" என்று சொன்னான் {என்ற பொருள் கொண்ட சுலோகத்தைச் சொன்னான்}. ஒருமுறை இரவில், அவன் அந்தச் சுலோகத்தை இப்படிச் சொல்லிக் கொண்டிருந்த போது, ஜீவலன், "ஓ பாகுகா, நீ தினமும் யாருக்காகப் புலம்புகிறாய்? நான் அதைக் கேட்க ஆவலாக இருக்கிறேன். ஓ நீண்ட ஆயுள் அருளப்பட்டவனே, நீ யாருக்காகப் புலம்புகிறாயோ, அவள் யாருடைய மனைவி?" என்று கேட்டான்.

இப்படிக் கேட்கப்பட்ட அந்த மன்னன் நளன், "புத்தியற்ற குறிப்பிட்ட ஒருவனுக்கு, அனைவராலும் நன்கு அறியப்பட்ட ஒரு மனைவி இருந்தாள். அந்த இழிந்தவன் தனது சத்தியங்களைப் பொய்யாக்கினான். ஏதோ காரணத்திற்காக அந்தத் தீய மனிதன் அவளிடம் இருந்து பிரிந்தான். அவளிடம் இருந்து பிரிந்த பிறகு, அந்த இழிந்தவன் ஊரெல்லாம் சுற்றி துயரத்துடனும், துன்பத்தில் எரிந்தும் இரவும் பகலும் ஓயாதிருந்தான். இரவில் அவளைக் குறித்து அவன் நினைத்து, இந்த சுலோகத்தைப் பாடுகிறான். இந்தத் துயரங்களுக்குத் தகுதியில்லாத அவன், உலகம் முழுவதும் சுற்றி, கடைசியாக ஒரு புகலிடத்தை அடைந்து, தனது நாட்களைக் கடத்தி, தனது மனைவியை நினைத்துக் கொண்டிருக்கிறான்.

இந்த மனிதனுக்குப் பேரிடர் சம்பவித்தபோது, அவனது மனைவி அவனுடன் காட்டுக்குத் தொடர்ந்து வந்தாள். அற்ப அறம் கொண்ட அவனால் கைவிடப்பட்ட அவளது உயிர் கூட ஆபத்தில் இருக்கிறது. தனியாக, வழிகளைப் பற்றிய ஞானம் இல்லாமல், தாங்க முடியாத துன்பத்தோடு, பசியாலும் தாகத்தாலும் களைப்படைந்த ஒரு பெண்ணால், தனது உயிரைக் காத்துக்கொள்ள முடியாது. ஓ நண்பா, அதிர்ஷ்டமற்ற, புத்தியற்ற அவனால், இரைதேடும் விலங்குகள் நிறைந்த, அகன்ற, பயங்கரமான கானகத்தில் அவள் கைவிடப்பட்டாள்" என்றான் {நளன் }.

இப்படி தமயந்தியை நினைவுகூர்ந்த நிஷாதர்களின் மன்னன் {நளன்}, யாரும் அறியாதவாறு, அந்த ஏகாதிபதியின் {ரிதுபர்ணனின்} வசிப்பிடத்தில் தொடர்ந்து வசிக்கலானான்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Saturday, January 04, 2014

விதர்ப்பம் சென்ற பிள்ளைகள் - வனபர்வம் பகுதி 60

Children were sent toVidarbha | Vana Parva - Section 60 | Mahabharata In Tamil

(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)

நளன் சூதில் அனைத்தையும் இழந்துவிடுவான் என்று எதிர்பார்த்த தமயந்தி, தேரோட்டியை அழைத்து தனது பிள்ளைகளை விதரப்ப்ப நாட்டில் இருக்கும் தனது தந்தை பீமனிடம் அழைத்துச் செல்ல வேண்டுவது. தேரோட்டியும் அவ்வாறே செய்வது...

பிருகதஸ்வர் சொன்னார், "ஓ மன்னா {யுதிஷ்டிரா} பீமனின் மகளான கலக்கமற்ற தமயந்தி, நேர்மையான மன்னன் {நளன்} பகடையால் உணர்விழந்திருப்பதைக் கண்டு, அச்சத்திலும் துயரத்திலும் மூழ்கினாள். மன்னன் செய்யும் இக்காரியம் மிகத்தீவிரமானது என்று அவள் {தமயந்தி} நினைத்தாள். நளனை அச்சுறுத்திக் கொண்டிருந்த பேரிடரின் தொடர்ச்சியைக் கண்டு, தனது தலைவன் {நளன்} அனைத்தையும் தொலைத்துவிட்டான் என்பதைப் புரிந்து, அவனுக்கு {நளனுக்கு} நன்மை செய்ய வேண்டி, பெரும் புகழ்வாய்ந்த, தன் மேல் நல்ல நோக்கம் கொண்ட, அனைத்துக் கடமைகளையும் குதூகலமாகச் செய்யும், நம்பிக்கையும் இனிமையான பேச்சும் கொண்ட பிருகத்சேனை என்ற பணிப்பெண்ணை அழைத்து, "ஓ பிருஹத்சேனா, இங்கிருந்து சென்று நளரின் பெயரால் அமைச்சர்களை அழைத்து, செல்வத்தில் எதுவெல்லாம் தோற்கப்பட்டது, எவை நம்மிடம் மீதம் எஞ்சியிருக்கிறது என்பதைச் சொல்" என்று சொல்லி அனுப்பினாள்.


நளனின் அழைப்பைக் கேட்ட அமைச்சர்கள், "இது நமக்கு நற்பேறே" என்று சொல்லி மன்னனை அணுகினர். இரண்டாவது முறையும் வந்த குடிமக்களைக் கண்ட பீமனின் மகள் {தமயந்தி}, நளனிடம் அதைத் தெரிவித்தாள். ஆனால் மன்னன் {நளன்} அவளை மதிக்கவில்லை. தனது வார்த்தைகளை தனது கணவன் கருதவில்லை என்பதைக் கண்டு, மிகவும் நாணி, தனது உள் அறைக்கு {அந்தப்புரத்திற்குத்} திரும்பினாள். தொடர்ச்சியாக பகடை அறம்சார்ந்த நளனுக்குச் சாதகமாக இல்லை, அவன் அனைத்தையும் இழந்துவிட்டான் என்பதைக் கேள்விப்பட்டு, மீண்டும் தனது பணிப்பெண்ணிடம், "ஓ பிருஹத்சேனா, திரும்பவும் நளரின் வார்த்தைகளை, ஓ அருளப்பட்டவளே, தேரோட்டியான வார்ஷ்ணேயனிடம் சுமந்து செல். இப்போது கையில் இருக்கும் காரியம் மிகவும் தீவிரமானது" என்றாள். தமயந்தியின் வார்த்தைகளைக் கேட்ட பிருஹத்சேனை, வார்ஷ்ணேயனை நம்பிக்கைக்குரிய பணியாட்களை அனுப்பி அழைத்தாள்.

காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ற நடத்தையுள்ள களங்கமற்ற பீமனின் மகள் {தமயந்தி}, அந்தச்சூழ்நிலைக்குத் தக்கவாறு மென்மையான வார்த்தைகளால், "உன்னிடம் மன்னர் எப்படி நடந்து கொள்வார் என்பது உனக்குத் தெரியும். அவர் இப்போது சிரமத்தில் இருக்கிறார். ஆகவே அவருக்கு உதவுவதே உனக்குத் தகும். * புஷ்கரனிடம் மன்னர் {நளர்} எந்த அளவு தோற்கிறாரோ அவ்வளவு அந்த விளையாட்டின் மீதான தீவிரம் அதிகரிக்கிறது. புஷ்கரனுக்குக் கீழ்ப்படிந்தே பகடை விழுகிறது. அவை {பகடை} விளையாட்டில் நளருக்குச் சாதகமாக இல்லை என்று காணப்படுகிறது. அந்த {பகடை} விளையாட்டால் ஈர்க்கப்பட்டு, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வார்த்தையை அவர் கேட்பதில்லை. ஏன் எனது வார்த்தைகளையே கூட அவர் {நளர்} கேட்பதில்லை. இருப்பினும், விளையாட்டால் ஈர்க்கப்பட்டு, எனது வார்த்தைகளை அவர் கருதிப்பார்க்க வில்லையெனினும், அந்த உயர் ஆன்ம நிஷாதர் {நளர்} பழிச்சொல்லுக்கு உரியவர் இல்லை. ஓ தேரோட்டியே {வார்ஷ்ணேயரே}, நான் உனது பாதுகாப்பை நாடுகிறேன். என் கட்டளைப்படி நட. என் மனம் எனக்கு ஐயமூட்டுகிறது. மன்னர் துயரத்தை அடையலாம். ஆகவே, நளருக்குப் பிடித்தமான மனோவேகம் கொண்ட குதிரைகளையும், இந்த இரட்டையர்களையும் {எனது மகன் மற்றும் மகளையும்) தேரில் அழைத்துக் கொண்டு குண்டினபுரம் செல். எனது உறவினர்களிடம் {பிறப்பால் உண்டான உறவுகளிடம்{ எனது பிள்ளைகளையும் தேரையும் குதிரைகளையும் கொடுத்துவிட்டு, நீ அங்கேயே தங்கினாலும் சரிதான், அல்லது வேறு ஏதாவது இடத்திற்கு உனது விருப்பபடி செல்வதாக இருந்தாலும் சரிதான்" என்றாள் {தமயந்தி}.

நளனின் தேரோட்டியான வார்ஷ்ணேயன், தமயந்தியின் இவ்வார்த்தைகளை விவரமாக மன்னனின் தலைமை அதிகாரிகளிடம் தெரிவித்தான். அவர்களிடம் ஆலோசித்து அவர்களது ஏற்பையும் பெற்றுக் கொண்டு, ஓ பெரும் பலம் வாய்ந்த மன்னா {யுதிஷ்டிரா}, {நளனின்} குழந்தைகளைத் தேரில் அழைத்துக் கொண்டு விதரப்ப்பத்திற்குக் கிளம்பினான். இந்திரசேனன் என்ற ஆண்பிள்ளையையும், இந்திரசேனை என்ற பெண்பிள்ளையையும், தேர்களில் சிறந்த தேரையும், குதிரைகளையும், கொடுத்துவிட்டு, நளனைக் குறித்து இதயத்தில் வருந்திய அந்தத் தேரோட்டி, பீமனிடம் {தமயந்தியின் தந்தையிடம்} பிரியாவிடை பெற்று சென்றான். சிலகாலம் பயணத்தில் உலவிக்கொண்டிருந்தவிட்டு, அயோத்தியா நகரம் சென்றான். அங்கு துக்கம் நிறைந்த இதயத்துடன் மன்னன் ருதுபர்ணனின் முன்னிலையில் நின்று, அந்த ஏகாதிபதிக்குத் தேரோட்டியாகப் பணியில் சேர்ந்தான்.

---------------------------------------------------------
* புஷ்கரன் - நளனுடைய தம்பி


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2018, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top