Am I a fool?" asked Kunti! | Adi Parva - Section 124 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 60)
பதிவின் சுருக்கம் : பாண்டுவிடம் பேசிய மாத்ரி, மாத்ரிக்காகக் குந்தியிடம் பேசிய நகுலன்; நகுலன் மற்றும் சகாதேவன் பிறப்பு; பொறாமையடைந்த குந்தி; பாண்டவர்களுக்குப் பெயர் சூட்டல்; பாண்டவர்களின் வளர்ச்சி...
வைசம்பாயனர் சொன்னார், "குந்தியின் மகன்களும், திருதராஷ்டிரனின் நூறு மகன்களும் பிறந்த பிறகு, மத்ர மன்னனின் மகள் {மாத்ரி} பாண்டுவிடம்,(1) "ஓ எதிரிகளைத் தண்டிப்பவரே, நீர் எனக்கு நன்மை செய்யவில்லையென்று நான் உம்மைக் குறைசொல்லவில்லை. ஓ பாவங்களற்றவரே, பிறப்பால் நான் குந்தியைவிட உயர்ந்தவளாக இருப்பினும், இருப்பு நிலவரத்தில் நான் தாழ்ந்தவளாகவே இருக்கிறேன் என்று குறைசொல்லவில்லை.(2) ஓ குரு குலத்தவரே, காந்தாரி நூறு மகன்களைப் பெற்றுவிட்டாள் என்றும் நான் கவலை கொள்ளவில்லை.(3) குந்தியும் நானும் இணையானவர்களாகவே இருந்தாலும் உமக்குக் குந்தியின் மூலமாக பிள்ளைகள் இருக்க, நான் பிள்ளையில்லாமல் இருப்பதே என் பெரும் துயராகும்.(4) குந்திபோஜனின் மகள் நான் பிள்ளைப்பேறடைய விட்டாள் என்றால், அவள், எனக்கு நன்மை செய்ததோடு மட்டுமல்லாமல் உமக்கும் நன்மை செய்ததாகவே இருக்கும்.(5) அவள் எனது சக்காளத்தியாக இருப்பதால், அவளிடம் எனது நன்மையைக் கருதச் சொல்ல என்னால் முடியவில்லை. ஓ மன்னரே, நீர் என்னிடம் அன்பாக இருப்பது உண்மையென்றால், அவளிடம் எனது விருப்பத்தை நிறைவேற்றச் சொல்வீராக" என்றாள்.(6)