Vidura consoles Dhritarashtra! | Stri-Parva-Section-02 | Mahabharata In Tamil
(ஜலப்ரதானிக பர்வம் - 02) [விசோக பர்வம் - 02]
பதிவின் சுருக்கம் : முதிய மன்னனுக்கு ஆறுதலளித்த விதுரன்; கொல்லப்பட்டவர்கள் சொர்க்கத்தையும், கொலை செய்தவர்கள் புகழையும் அடைவார்கள் எனவே கவலை கொள்வது தகாது எனத் திருதராஷ்டிரனுக்குச் சொன்ன விதுரன்; காலத்தின் வலிமை, வாழ்வின் நிலையாமை, ஞானத்தின் மேன்மை, முற்பிறவிச் செயல்களின் விளைவுகள் ஆகியவற்றைச் சொன்ன விதுரன்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "ஓ! ஜனமேஜயா, விதுரன், விசித்திரவீரியன் மகனிடம் {திருதராஷ்டிரனிடம்} சொன்ன அமுதம் போன்ற எந்த வார்த்தைகள் அந்த மனிதர்களில் காளையை {திருதராஷ்டிரனை} மகிழ்ச்சியடைச் செய்தனவோ அவற்றைக் கேட்பாயாக.(1)
விதுரன் {திருதராஷ்டிரனிடம்}, "ஓ! மன்னா! எழுவீராக. ஏன் பூமியில் கிடக்கிறீர்? உம்மைத் தாங்கிக் கொள்வீராக. ஓ! மன்னா, இதுவே உயிரினங்கள் அனைத்தின் இறுதி முடிவாகும்.(2) ஒன்றாகத் திரளும் அனைத்தும் முடிவில் அழிவையே அடைகிறது; உயர்ந்து செல்லும் அனைத்தும் விழப்போவது உறுதி. சேர்வது முடிவில் பிரிவது உறுதி; உயிரானது முடிவில் இறப்பது உறுதி.(3) ஓ! பாரதரே, வீரன் மற்றும் கோழை ஆகிய இருவரையும் யமன் இழுத்துச் செல்கிறான். ஓ! க்ஷத்திரியர்களில் காளையே, பிறகு ஏன் க்ஷத்திரியர்கள் போரில் ஈடுபட மாட்டார்கள்?(4) போரிடாதவனும் மாள்வதைக் காண்கிறோம். மேலும், போரிடுபவன் உயிர் தப்புவதையும் காண்கிறோம். எனினும், ஓ! மன்னா, நேரம் வரும்போது எவரும் தப்ப முடியாது.(5)
வாழும் உயிரினங்களைப் பொறுத்தவரையில், அவை முதலில் {ஆதியில்} இருப்பிலில்லை. இறுதியில் மீண்டும் அவை இருப்பில் இல்லாமல் போகின்றன. இதில் {நடுவில் மட்டுமே இருக்கும் ஒன்றில்} துயர் கொள்ள என்ன இருக்கிறது?(6) துயரில் ஈடுபடும் மனிதன் இறந்தவனைச் சந்திப்பதில் வெல்வதில்லை. துயரில் ஈடுபடுவதாலேயே ஒருவன் தானே சாவதில்லை. உலகத்தின் வழி இவ்வாறிருக்கையில், ஏன் நீர் துயரில் ஈடுபடுகிறீர்?(7) அனைத்துயிர்களையும், ஏன் தேவர்களையும் கூடக் காலன் இழுத்துச் செல்கிறான். ஓ! குருக்களில் சிறந்தவரே, காலத்திற்கு அன்புக்குரியவனோ, வெறுப்புக்குரியவனோ எவனும் கிடையாது.(8) புல்லின் நுனிகள் அனைத்தையும் கிழிக்கும் காற்றைப் போலவே, காலமும் அனைத்து உயிரினங்களையும் தன் வசப்படுத்துகிறது.(9) ஒரே இடத்தை நோக்கிச் செல்லும் வணிகக்கூட்டத்தின் உறுப்பினர்களைப் போலவே அனைத்து உயிரினங்களும் இருக்கின்றன. (அனைத்தையும் காலன் சந்திக்கும்போது) அவன் {காலன்} எவரை முதலில் சந்திக்கிறான் என்பது பெரிய காரியம் இல்லை {எவனுக்குக் காலம் வருகிறதோ அவன் முந்திச் செல்கிறான்}.(10)
ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, போரில் கொல்லப்பட்டவர்களைக் குறித்துத் துயருறுவது உமக்குத் தகாது. சாத்திரங்களுக்கு ஏதேனும் அதிகாரம் இருக்குமெனில், அவர்கள் அனைவரும் உயர்ந்த முடிவையே அடைந்திருக்க வேண்டும்.(11) அவர்கள் அனைவரும் வேதங்களை நன்கறிந்தவர்கள்; அவர்கள் அனைவரும் நோன்புகள் நோற்றவர்கள். எதிரியை முகத்துக்கு நேராகச் சந்தித்தே அவர்கள் அனைவரும் மரணத்தைச் சந்தித்திருக்கிறார்கள். இதில் கவலை கொள்ள என்ன இருக்கிறது?(12) (பிறப்பதற்கு முன்பு) அவர்கள் கண்ணுக்குத் தெரியாதவர்களாக இருந்தார்கள். அறியப்படாத அவ்விடத்தில் இருந்து வந்த அவர்கள் மீண்டும் காணப்படாமலேயே கண்ணுக்குத் தெரியாமல் போகிறார்கள். அவர்கள் உம்முடையவர்களல்ல; நீரும் அவர்களுடையவரல்ல. பிறகு இத்தகு மறைவால் என்ன கவலை ஏற்பட முடியும்?(13) கொல்லப்பட்ட ஒருவன் சொர்க்கத்தை வெல்கிறான் {அடைகிறான்}. கொலையைச் செய்தவனால் புகழ் வெல்லப்படுகிறது {அடையப்படுகிறது}. நம்மைப் பொறுத்தவரை, இவ்விரண்டும் {சொர்க்கமும், புகழும்} பெரும் தகுதியையே {புண்ணியத்தையே} தருகின்றன. எனவே, போரானது பலனற்றதில்லை.(14) இந்திரன், அனைத்து விருப்பங்களையும் அருளவல்ல உலகங்களை அவர்களுக்குக் கொடுப்பான் என்பதில் ஐயமில்லை. ஓ! மனிதர்களில் காளையே, அவர்கள் இந்திரனின் விருந்தினர்களாவர்.(15)
போரில் கொல்லப்பட்ட வீரர்கள் சொர்க்கத்திற்குச் செல்வதைவிட, அபரிமிதமான கொடைகளைக் கொண்ட வேள்விகளாலோ, தவங்களாலோ, கல்வியாலோ ஒரு மனிதன் சொர்க்கத்திற்கு வேகமாகச் செல்ல முடியாது.(16) வேள்வி நெருப்பைக் கொண்டிருக்கும் பகைவீரர்களின் உடல்களில் அவர்கள் தங்கள் கணை ஆகுதிகளைப் பொழிகிறார்கள். பெருஞ்சக்தி கொண்ட அவர்கள், பதிலுக்கு (தங்கள் எதிரிகளால் அவர்கள் மீது ஊற்றப்படும்) கணை ஆகுதிகளைப் தாங்கிக் கொள்கிறார்கள்.(17) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இவ்வுலகில் ஒரு க்ஷத்திரியனுக்கு, போரைவிடச் சொர்க்கத்திற்குச் செல்லும் சிறந்த பாதை வேறேதும் இல்லை என நான் உமக்குச் சொல்கிறேன்.(18) அவர்கள் அனைவரும் உயர் ஆன்ம க்ஷத்திரியர்களும், துணிச்சல் கொண்டவர்களும், சபைகளின் ரத்தினங்களுமாவர். அவர்கள் உயர்ந்த அருள்நிலையை அடைந்திருக்கின்றனர். அவர்கள் நாம் கவலைகொள்ளத்தக்க மனிதர்களல்லர்.(19) ஓ! மனிதர்களில் காளையே, உம்மை நீரே தேற்றிக் கொண்டு, கவலையை விடுவீராக. செயல்கள் அனைத்தையும் கைவிட்டு, கவலையில் மூழ்குவது உமக்குத் தகாது.(20)
இவ்வுலகில் ஆயிரக்கணக்கான தாய்மாரும், தந்தைமாரும், மகன்களும், மனைவியரும் இருக்கின்றனர். அவர்கள் யாருடையவர்கள்? நாம் யாருடையவர்கள்?(21) கவலையில் இருந்து நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கான காரணங்கள் எழுகின்றன. அந்த ஆயிரக்கணக்கான காரணங்களும் அச்சத்தையே உண்டாக்குகின்றன. எனினும், இவை அறியாமை கொண்டோரையே பாதிக்கும்; ஞானியருக்கோ அவை ஒன்றுமில்லை.(22) ஓ! குருக்களில் சிறந்தவரே, காலத்திற்கு அன்புக்குரியவரோ, வெறுப்புக்குரியவரோ எவருமில்லை. அனைவரையும் சமமாகவே காலம் இழுத்துச் செல்கிறது. காலமே அனைத்துயிரையும் வாழச் செய்கிறது. காலமே அனைத்தையும் அழிக்கவும் செய்கிறது. அனைவரும் உறங்கும்போது, காலம் மட்டுமே விழித்துக் கொண்டிருக்கிறது. காலம் தடுக்கப்பட முடியாததாகும்.(24) இளமை, அழகு, உயிர், உடைமைகள், உடல்நலம், நண்பர்களின் தோழமை ஆகிய அனைத்தும் நிலையற்றவையே. ஞானியாக இருப்பவன் இவை எவற்றிலும் ஒருபோதும் நாட்டங்கொள்ள மாட்டான்.(25)
உலகளாவிய {அனைவருக்கும் பொதுவான} ஒன்றுக்காக வருந்துவது உமக்குத் தகாது. துயரில் ஈடுபடுவதால் ஒருவன் இறக்கலாம். ஆனால் துயரமானது, அதில் ஈடுபடுவதால் ஒருபோதும் கனமற்றதாகாது.(26) நீர் உமதுதுயரைக் கனமானதாக உணர்ந்தால், அதில் ஈடுபடாமல் அதற்குப் பதலடியைக் கொடுக்க வேண்டும். துயரத்தில் ஈடுபடாமல் இருப்பதே துயரத்திற்கான மருந்தாகும்.(27) அதிலேயே வசிப்பதால் ஒருவன் அதைக் குறைக்க முடியாது. மறுபுறம் அதில் ஈடுபடுவதால் அது வளரவே செய்கிறது. தீமை நேரும்போதோ, அன்புக்குரிய ஒன்றை இழக்கும் நிலையிலோ துயரில் மனம் பீடிக்கப்படுபவர்கள் சிறுமதி கொண்டோரே.(28) உமது இதயம் எதில் வசித்திருக்கிறதோ {எதை விரும்புகிறதோ}, அது பொருளோ, அறமோ, இன்பமோ கிடையாது(29). மனநிறைவற்றவர்கள், செல்வத்தை அடைவதில் நேரும் திருப்பத்தின் இணக்கத்தில் திகைப்படைகிறார்கள். ஒருவனது உடலின் துயரமானது, மருந்தால் கொல்லப்படுவதைப் போலவே, அவன் மனத்துயரத்தை ஞானத்தால் கொல்ல வேண்டும். ஞானமே இந்தச் சக்தியைக் கொண்டிருக்கிறது. எனினும், மூடர்களால் மன அமைதியை அடையவே முடியாது.(30,31)
முந்தைய வாழ்வின் செயல்பாடுகள் ஒரு மனிதனை நெருக்கமாகப் பின்தொடர்ந்து, அவன் எங்கே கிடக்கிறானோ அங்கேயே கிடந்து, எங்கே தங்குகிறானோ அங்கேயே தங்கி, அவன் ஓடும்போது அவனுடனேயே ஓடுகிறது.(32) வாழ்வின் அச்சூழல்களில் ஒருவன் நல்லதாகவோ, அல்லதாகவோ செயல்பட்டிருந்தால், அவன் அதே போன்ற சூழ்நிலைகளில் இன்புறவோ, துன்புறவோ செய்கிறான்.(33) ஒருவன் செயல்களைச் செய்யும் (உடல் அமைப்புகளில்) அவ்வடிவங்களில் அவன் அதேபோன்ற வடிவங்களின் பலன்களால் இன்புறவோ, துன்புறவோ செய்கிறான்.(34) ஒருவன் தானே தனது நண்பனாவான், அதே போலவே அவனே அவனுக்கு எதிரியுமாவான். ஒருவன் தானே தன் நல்ல மற்றும் தீய செயல்பாடுகளின் சாட்சியாக இருக்கிறான்.(35) நற்செயல்களில் இருந்து இன்பநிலையெழுகிறது, தீச்செயல்களில் இருந்து பாவகரச் செயல்களே எழுகின்றன. ஒருவன் எப்போதும் தன் செயல்பாடுகளின் கனிகளையே அடைவான்.(36) ஓ! மன்னா, உம்மைப் போன்ற புத்திசாலி மனிதர்கள், அறிவால் அங்கீகரிக்கப்படாததும், அடிவேரையே (அறம் மற்றும் இன்பத்தைத்) தாக்குவதுமான பாவகரமான பெருங்குற்றங்களில் ஒருபோதும் மூழ்குவதில்லை" என்றான் {விதுரன்}.(37)
ஸ்திரீ பர்வம் பகுதி – 02ல் உள்ள சுலோகங்கள் : 37
ஆங்கிலத்தில் | In English |