Who is a fool? | Udyoga Parva - Section 33b | Mahabharata In Tamil
(சேனோத்யோக பர்வத் தொடர்ச்சி - 33) {விதுர நீதி - 2}
பதிவின் சுருக்கம் : மூடன் என்பவனது இலக்கணத்தை விதுரன் திருதராஷ்டிரனுக்கு எடுத்துரைத்தது; செருக்கடையாதிருத்தல், செல்வத்தைப் பகிர்ந்தளித்தல் ஆகியன மனிதனை ஞானியாக்கும் என்று சொல்வது; கெடுநோக்கத்தில் புத்தியின் தலையீடு இருந்தால் எப்படி தனியொருவனை அழிக்காமல் மொத்த நாட்டையும் அது அழித்துவிடும் என்று சொல்வது; நஞ்சோ ஆயுதமோ ஒருவனைத் தான் கொல்லும், ஆனால் தீய ஆலோசனை ஒரு நாட்டையே அழித்துவிடும் என்று சொன்னது; பொறுமைசாலி, கோபக்காரன் ஆகியவர்களால் விளையும் செயல்களைச் சொல்வது ...
{மூடத்தனம்}
{விதுரன் திருதராஷ்டிரனிடம் சொன்னான்} “மறுபுறம், சாத்திரத்தை அறியாமல் வீணானவனும், வறுமையிலும் செருக்குடன் {கர்வத்துடன்} இருப்பவனும், தன் நோக்கங்களை அடைய முறையற்ற வழிகளை நாடுபவனும் மூடனாவான். தன் சொந்த நோக்கங்களை விட்டு விட்டு, பிறரின் நோக்கங்களில் தன்னைத் தொடர்புப்படுத்திக் கொள்பவனும், நண்பர்கள் காரியங்களில் ஏமாற்றுத்தனத்தைக் {கபடத்தைக்} கடைப்பிடிப்பவனும் மூடன் என்று அழைக்கப்படுகிறான். விரும்பத்தகாத பொருட்களை விரும்புபவனும், நியாயமாக விரும்பத்தக்க பொருட்களைக் கைவிடுபவனும் {விரும்பாதவனும்}, சக்திவாய்ந்தவர்களிடம் பகை கொள்பவனும், மூட ஆன்மா கொண்டவனாகக் கருதப்படுகிறான்.
தன் எதிரியைத் தனது நண்பனாகக் கருதுபவனும், நண்பனிடம் பகை கொள்பவனும், தீய செயல்கள் செய்பவனும், மூட ஆன்மா கொண்ட மனிதனாகச் சொல்லப்படுகிறான். ஓ! பாரத குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, தனது திட்டங்களை வெளிப்படுத்திக் கொள்பவனும், எல்லாவற்றிலும் சந்தேகங்கொள்பவனும், குறுகிய காலமே செய்ய வேண்டியவற்றில் நீண்ட நேரத்தைச் செலவழிப்பவனும் மூடனாவான். பித்ருக்களுக்கு சிராத்தம் செய்யாதவனும், தெய்வங்களை வழிபடாதவனும், உன்னத மனம் கொண்ட நண்பர்களைப் பெறாதவனும், மூட ஆன்மா கொண்ட மனிதனாகச் சொல்லப்படுகிறான்.
அழையாத இடத்தில் நுழைபவனும், கேட்கப்படாத போதே அதிகம் பேசுபவனும், நம்பத்தகாத மனிதர்களை நம்புபவனும், மனிதர்களில் இழிந்தவனான மூடனாவான். தானே குற்றவாளியாக இருந்து கொண்டு, மற்றவர்கள் மீது பழிபோடுபவனும், தான் சக்தியற்றவனாக இருந்த போதும் கோபத்தை வெளிப்படுத்துபவனும், மனிதர்களிலேயே மிகப்பெரும் முட்டாளாவான். தனது சொந்த சக்தியை அறியாமல், அறம் பொருளில் {தர்ம அர்த்தங்களில்} இருந்து விலகிச்சென்று, அடைவதற்கு அரிதான பொருளை விரும்பியும் போதுமான வழிவகைகளைக் கைக்கொள்ளாமல் இருப்பவன், அறிவற்றவனாகச் சொல்லப்படுகிறான். {தன் பலத்தை அறியாமல், அறம், பொருள் இல்லாத அடைய முடியாத பொருளை முயற்சியில்லாமலேயே விரும்புபவன் மூடனாவான்}. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தண்டனைக்குத் தகாதவனைத் தண்டிப்பவனும், மனிதர்கள் அறியாமலேயே அவர்களுக்கு அஞ்சலி செலுத்துபவனும், கஞ்சனுக்குச் சேவை செய்பவனும், சிறு புத்தி கொண்டவன் என்று சொல்லப்படுகிறான்.
ஆனால், மகத்தான செல்வத்தையும், செழிப்பையும் அடைந்திருந்தாலும் அல்லது (பரந்த) கல்வியை அடைந்திருந்தாலும், ஒருவன் செருக்கடையாதிருந்தால், அவன் ஞானி என்று எண்ணப்படுகிறான். அதேபோல ஒருவன் செல்வச்செழிப்பு கொண்டிருந்தாலும், தானே உண்டு, அற்புத ஆடைகளை தானே உடுத்திக் கொண்டு, தன்னை நம்பியிருப்பவர்கள் மத்தியில் தனது செல்வத்தை பகிர்ந்தளிக்காதவனை {விநியோகிக்காதவனை} விட இதயமற்றவன் வேறு எவன் இருக்க முடியும்? ஒருவன் பாவங்களைச் செய்யும்போது, அதன் விளைவுகளின் பயனை அறுவடை செய்பவர்கள் பலராக இருப்பினும், (கடைசியில்), அந்தக் கனியை அனுபவித்தவர்கள் தீங்கில்லாமல் தப்பித்தாலும், {அந்தப் பாவங்களைச்} செய்தவனை மட்டுமே பாவம் சேரும். [1]
[1] அதாவது, தான் செய்த பாவத்தின் மூலம் பலன்களை அனுபவித்தவர்கள் பலராக இருப்பினும், பாவத்தைச் செய்தவன் மட்டுமே அந்தப் பாவத்தால் பற்றப்படுகிறான் என்பது இங்கே பொருள்.
ஒரு வில்லாளி கணையை அடிக்கும்போது, அவன் ஒரு மனிதனையாவது கொல்வதில் வெல்லவோ வெல்லோமலோ போகலாம், ஆனால், அதில், ஒரு தனிப்பட்ட புத்திசாலி, தனது புத்தியைப் (கெடு நோக்கத்துடன்) செலுத்தும்போது, மன்னனோடு கூடிய மொத்த நாட்டையும் அவன் அழித்துவிட நேரும்.
ஒன்றின் மூலம் இரண்டைப் பகுத்துப் பார்த்து, மூன்றை, நான்கின் மூலம் அடக்கி, ஐந்தை வென்று, ஆறை அறிந்து, ஏழைத் தவிர்த்து மகிழ்ச்சியாக இருப்பீராக. [2]
[2] அதாவது {1} அறிவு {புத்தி} என்ற ஒன்றால், {1} நன்மை, {2} தீமை என்ற இரண்டைப் பகுத்துப் பார்த்து, {1} எதிரி, {2} நண்பன், {3} புறக்கணிக்கப்பட்டவன் ஆகிய மூவரையும், {1} பேசுதல் {சாம}, {2} கொடுத்தல் {தான}, {3} மிரட்டுதல் {பேத}, {4} தண்டித்தல் {தண்டம்} ஆகிய நான்கால் அடக்கி, {1} கண், {2} காது, {3} மூக்கு, {4} நாக்கு, {5} உடல் {தோல்} ஆகிய ஐம்பொறிகளையும் வென்று, {1} நட்பு {சந்தி}, {2} பகை {விக்கிரகம்}, {3} செலவு {யானம்}, {4} இருக்கை {ஆசனம்}, {5} பிரிதல் {துவைதம்}, {6} கூட்டல் {ஆச்சிரயம்} ஆகிய ஆறு குணங்களை {அரசரறுகுணங்களை} அறிந்து, {1} பெண், {2} சூது, {3} வேட்டை, {4} மது, {5} கடுஞ்சொல், {6} கடுந்தண்டனை, {7} பொருள் விரயம் ஆகிய ஏழையும் தவிர்த்து மகிழ்ச்சியாக இருப்பீராக என்பது இங்கே பொருள்.
{ஒன்றானது}
நஞ்சு ஒருவனேயே கொல்லும், ஆயுதமும் ஒருவனையே கொல்லும், ஆனால் தீய ஆலோசனைகள் மன்னனையும், குடிமக்களையும், மொத்த நாட்டையுமே அழித்துவிடும்.
ஒருவன் சுவைமிக்க உணவு எதையும் தனியாக உண்ணக்கூடாது, பொருளாதாயம் {லாபம்} சம்பந்தமான காரியங்களில் தனியாக ஆலோசிக்கக்கூடாது, தனியாக பயணத்தை மேற்கொள்ளக் கூடாது, உறங்கும் தோழர்களுக்கு மத்தியில் தனியாக விழித்திருக்ககூடாது. ஓ! மன்னா, உம்மால் புரிந்து கொள்ள முடியாத, இரண்டற்ற ஒன்று உண்மையே {சத்தியமே}. கடலில் படகைப் போன்று அதுவே {உண்மை}, சொர்க்கத்திற்கு வழியாக இருக்கிறது.
{மன்னிப்பு [அ] பொறுமை}
மன்னிக்கும் இயல்புடைய மனிதர்களுக்கு {பொறுமைசாலிகளுக்கு} ஒரே குறை மட்டுமே உள்ளது, மற்றொன்று இல்லை. மன்னிக்கும் இயல்புடைய மனிதனை, மக்கள் பலமற்றவன் என்று நினைக்கிறார்கள். அதுவே அந்தக் குறை. எனினும், அந்தக் குறையைக் கருத்தில் எடுத்துக் கொள்ளக்கூடாது. மன்னிக்கும் இயல்பே பெரும் சக்தியாகும். மன்னிக்கும் இயல்பு {பொறுமை என்பது}, பலமற்றவர்களுக்கு அறமும், பலவான்களுக்கு ஆபரணமும் ஆகும். {சக்தியற்றவர்களுக்கு பொறுமை குணமாகிறது. சக்தியுள்ளவர்களுக்கு அதுவே அலங்காரமாகும்}.
மன்னிக்கும் இயல்பே இவ்வுலகில் (அனைத்தையும்) வெல்லும்; மன்னிக்கும் இயல்பால் {பொறுமையால்} அடையமுடியாதுதான் என்ன இருக்கிறது? எவனுடைய கையில் மன்னிப்பு எனும் கத்தி {ஆயுதம்} இருக்கிறதோ, அந்த மனிதனைத் தீய மனிதர்களால் என்ன செய்து விட முடியும்? புற்களற்ற {வைக்கோலற்ற} நிலத்தில் விழும் நெருப்பு தானே அணைந்துவிடுகிறது. மன்னிக்காத மனிதன் {பொறுமையில்லாதவன் = கோபப்படுபவன்} பெருங்கொடுமை செய்து தன்னைக் கறைப்படுத்திக் கொள்கிறான். நீதியே {தர்மமே} ஒரே உயர்ந்த நன்மை; மன்னிக்கும் இயல்பே {பொறுமையே} ஒரே உச்சபட்ச அமைதி; அறிவே ஒரே உச்சபட்ச மனநிறைவு; மனிதாபிமானமே ஒரே ஏக மகிழ்ச்சியுமாகும்.