Root of asceticism! | Udyoga Parva - Section 43a | Mahabharata In Tamil
(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 3)
பதிவின் சுருக்கம் : அமைதி மற்றும் விடுதலையை மௌனத்தால் அடைய முடியுமா? மௌனம் எப்படிச் செய்யப்பட வேண்டும்? வேதங்களை அறிந்தவன் பாவமிழைத்தால், அவன் பாவங்களால் பீடிக்கப்படுவானா? அறத்தின் துணையில்லாமல் மனிதனைக் காக்கும் திறன் இல்லாத வேதங்களின் மீது ஏற்பட்ட மாயை எப்படி வந்தது? தவங்கள் சில நேரங்களில் வெற்றி தருவதும், சில நேரங்களில் தராததும் எவ்வாறு? என்பது போன்ற திருதராஷ்டிரனின் கேள்விகளுக்குச் சனத்சுஜாதர் விடை பகர்ந்தது...
திருதராஷ்டிரன் {சனத்சுஜாதரிடம்} சொன்னான், “அந்தத் தவத்தின் (மௌனத்தின்) நோக்கம் என்ன? (பேசாமல் இருத்தல் மற்றும் தியானம் ஆகிய) இரண்டு வகை மௌனங்களில், எது உம்மால் அங்கீகரிக்கப்பட்டது? ஓ! கற்றவரே {சனத்சுஜாதரே}, மௌனத்தின் உண்மையான தன்மையைச் சொல்லும். கல்வியறிவு பெற்ற ஒருவன், அமைதி மற்றும் விடுதலை (மோட்சம்) நிலையை மௌனத்தால் அடைய முடியுமா? ஓ! முனிவரே, அந்தத் தவம் (மௌனம்) எப்படிச் செய்யப்பட வேண்டும்?” என்று கேட்டான்.
சனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்}, “வேதங்கள், மனம் ஆகிய இரண்டும் பரமாத்மாவை {பிரம்மத்தை} ஊடுருவ இயலாத காரணத்தால், ஆன்மா மௌனம் என்று அழைக்கப்படுகிறது. எதிலிருந்து வேத அசையான {சொல்லான} ஓம் {என்ற சொல்}, இவை (சாதாரண ஒலிகள்) ஆகிய இரண்டும் எழுகிறதோ, அதுவே {அந்த ஆத்மாவே} சொல்லாக {சொல்லற்ற நிலையே சொல்லாக} காட்சிப்படுகிறது” என்றார். [1]
[1] நீண்ட கேள்விக்குச் சுருக்கமாகப் பதிலளித்துவிடுகிறார். இதில் ஏதோ ஆழ்ந்த கருத்து இருக்க வேண்டும்
திருதராஷ்டிரன் {சனத்சுஜாதரிடம்}, “ரிக், யஜூர் வேதங்களை அறிந்தவனும், சாம வேதத்தை அறிந்தவனும் பாவங்களைச் செய்யும்போது, அவன் பாவங்களால் கறைபடுவானா, இல்லையா?” என்று கேட்டான்.
சனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்}, “தனது புலன்களை அடக்காத மனிதன், பாவச் செயல்களைச் செய்தால், அவன் சாம, ரிக், யஜூர் வேதங்களால் மீட்கப்பட மாட்டான் என்று நான் உனக்கு உண்மையாகச் சொல்கிறேன். ஏமாற்றுத்தனத்தில் வாழும் ஏமாற்றுகர மனிதன் செய்யும் பாவத்தில் இருந்து அவனை வேதங்கள் விடுவிக்காது. மறுபுறம், கூட்டைக் கைவிட்டுச் செல்லும் புதிய இறகுபடைத்த பறவைகளைப் போல, முடிவில், வேதங்கள் அந்த மனிதனை கைவிட்டுச் செல்லும்” என்றார்.
திருதராஷ்டிரன் {சனத்சுஜாதரிடம்}, “ஓ! புலன்களை அடக்கியவரே {சனத்சுஜாதரே}, அறத்தின் துணையில்லாமல் ஒரு மனிதனைக் காக்கும் திறன் வேதங்களுக்கு இல்லை என்றால், பின்னர் வேதங்கள் பாவங்களை அழிக்கும் என்ற அந்தணர்களின் மாயை எப்படி வந்தது?”
சனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! மேன்மைமிக்கவனே, பரமாத்மாவின் பெயர், உருவம் மற்றும் இன்னும் பிற குணங்கள் ஆகிய நிலைகளின் கலவையால் இந்த அண்டம் எழுந்தது {உருவானது}. அதை முறையாகக் குறிப்பிடும் வேதங்களும் அதையே தீர்மானித்து, பரமாத்மாவும், இந்த அண்டமும் வெவ்வேறானவை என்றும் ஒரே மாதிரியானவை அல்ல என்றும் கற்பிக்கின்றன. அந்தப் பரமாத்மாவை அடையவே, அந்தத் தவமும் {மௌனமும்}, வேள்விகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டால் தான் கல்வி கொண்ட மனிதன் அறத்தை ஈட்டுகிறான். அறம் கொண்டு பாவத்தை அழிப்பதால் அவனது ஆன்மா அறிவை {ஞானத்தை} உணர்கிறது. அறிவு {ஞானம்} கொண்ட மனிதன், அந்த அறிவின் துணை கொண்டு, பரமாத்மாவை அடைகிறான். இல்லையேல், நான்கு வகையான மனித நாட்டங்களில் ஆசை கொள்ளும் அவன், தன்னுடன் இங்கே இருக்கும் அனைத்தையும் எடுத்துக் கொண்டு, தனது பலன்களை மறுஉலகத்தில் அனுபவித்து, அஃது (அந்தப் பலன்கள்) அழியாத் தன்மை கொண்டதல்ல என்பதால் (அவனது மகிழ்ச்சி முடிந்ததும்) மீண்டும் செயல்களின் உலகத்திற்கே திரும்பி வருகிறான்.
உண்மையில், இவ்வுலகில் செய்யப்படும் தவத் துறவுகளின் கனிகள் {அவற்றின் பலன்}, (தங்கள் ஆன்மாக்களில் தேர்ச்சி பெறாத நபர்களைப் பொறுத்தவரை) மறு உலகத்தில் அனுபவிக்கப்படுகிறது. துறவுப் பயிற்சிகளில் ஈடுபடும் (தங்கள் ஆன்மாக்களில் தேர்ச்சி பெற்ற) அந்தணர்களைப் பொறுத்தவரை, இந்தப் பகுதிகளும் கனிகளை விளைவிக்கும் {பலன்களை ஈட்டும்} திறன் கொண்டதாகவே உள்ளன” என்றார் {சனத்சுஜாதர்} [2]
[2] அஃதாவது இவ்வுலகத்தில் தவம் செய்யப்படுகிறது. பரலோகத்தில் பயன் அனுபவிக்கப்படுகிறது. தங்கள் தவம் வளர்வதற்காக இவ்வுலகங்கள் மனிதர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கின்றன. பிரம்மத்தை அறிந்த பிராமணர்களின் தவம் பெரிதும் வளர்கிறது. பிரம்மத்தை அறியாத மற்ற பிராமணர்களின் தவம் குறைவாகவே வளர்கிறது. பலனை விரும்பாமல் செய்யப்படும் தவம் வளர்ந்து, வளர்ந்து மேலும் அதிகமாக வளர்கிறது என்கிறார்.
திருதராஷ்டிரன் {சனத்சுஜாதரிடம்}, “ஓ! சனத்சுஜாதரே, ஒரே வகையான அனைத்து தவத்துறவுகளும் சில நேரங்களில் வெற்றியைத் தருவதும், சில நேரங்களில் வெற்றியைத் தராததும் எவ்வாறு? நாங்களும் அறிந்து கொள்ளும்படி எங்களுக்கு அதைச் சொல்லும்!” என்று கேட்டான்.
சனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்}, “(ஆசை மற்றும் பிறவற்றால்) {பயனில் விருப்பம் முதலிய} தவறுகளால் கறை படியாத துறவே விடுதலையைப் {முக்தியைப்} பெறும் திறம் கொண்டது என்று கூறப்படுகிறது. எனவே அது {அப்படி செய்யப்படும் துறவு} வெற்றியைத் தருகிறது. அதே வேளையில் பகட்டால் கறைபடும் துறவும், உண்மையான அர்ப்பணிப்பு இல்லாத துறவும் வெற்றியடையாது எனக் கருதப்படுகிறது. ஓ! க்ஷத்திரியா {திருதராஷ்டிரா}, உனது விசாரணைகள் அனைத்தும் துறவின் வேரையே தொடுகிறது. கற்றவர்கள் துறவினாலேயே பிரம்மத்தை அறிந்து அழியா {இறவா} நிலையை {பரமாத்மாவை} அடைகின்றனர்!” என்றார் {சனத்சுஜாதர்}.