You can too behold Brahman! | Udyoga Parva - Section 43c | Mahabharata In Tamil
(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 3)
பதிவின் சுருக்கம் : பிரம்மஞானம் கொண்டது எது என்று திருதராஷ்டிரன் சனத்சுஜாதரிடம் கேட்பது; எது பிரம்மம்? பல்வேறு இறைமைகள் இருப்பதாக ஏன் கருதப்படுகிறது? யார் வேத உரைகளின் உண்மையை நம்பி இருக்கிறார்கள்? வேள்விகள் எவ்வாறெல்லாம் செய்யப்படுகின்றன? பேசா நோன்புகளை ஒருவன் ஏன் கைக்கொள்ள வேண்டும்? பிராமணனாக யார் அறியப்பட வேண்டும்? சந்தங்கள் என்றால் என்ன? வேதங்களைப் படித்தால் மட்டும் சந்தங்களை அறிய முடியுமா? பிரம்மத்தை அடையும் வழிமுறை எது? வேதங்களின் உண்மையான பொருளை உணர்ந்தவர்கள் யாரும் இருக்கிறார்களா? பொருட்களின் தன்மைகளை யார் அறிவார்? எவனால் ஆத்மாவை அறிய முடியாது? முனிவன் என்பவன் யார்? வியாகரணம் என்பது என்ன? என்பது போன்றவற்றைச் சனத்சுஜாதர் திருதராஷ்டிரனுக்கு விளக்குவது...
திருதராஷ்டிரன் {சனத்சுஜாதரிடம்} சொன்னான், “ஆக்யானங்களைத் (புராணங்களைத்) தங்களில் ஐந்தாவதாகக் கொண்ட வேதங்கள், அசைவன மற்றும் அசையாதன ஆகியவை அடங்கிய இந்த அண்டமே பரமாத்மா என்று தீர்மானிக்கின்றன. பிறர், நான்கு இறைமைகள் {கடவுள் தன்மைகள்} {வேதங்கள் என்றும் கொள்ளலாம்} உள்ளன என்றும், இன்னும் பிறர் மூன்று உள்ளன என்றும், மேலும் பிறர் இரண்டு என்றும்; இன்னும் பிறர் ஒன்றே ஒன்று என்றும், மேலும் பிறர், (சுய இருப்பு என்று வேறு ஏதும் இல்லாத) பிரம்மன் மட்டுமே ஒரே இருப்பு என்றும் கருதுகிறார்கள். இவற்றில் எதை நான் பிரம்மஞானம் கொண்டதாக அறிய வேண்டும்?” என்று கேட்டான்.
அதற்குச் சனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்}, “உண்மை என்ற ஒரே பிரம்மம்தான் இருக்கிறது. அந்த ஒன்றைக் குறித்த அறியாமையால்தான் பல்வேறு இறைமைகள் {வேதங்கள்} இருப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால், ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, உண்மையின் சுயத்தையோ, பிரம்மத்தையோ அடைந்தவன் எவன் இருக்கிறான்? அறிவுப்பொருளான {ஞானப்பொருளான} அந்த ஒன்றை {பிரம்மத்தை} அறியாமலேயே ஒரு மனிதன் தன்னைத்தானே அறிஞன் {ஞானி} என்று கருதிக்கொள்கிறான். மகிழ்ச்சியின் மீது கொண்ட ஆசையால் அவன் கல்வியிலும், ஈகை மற்றும் வேள்வி நடைமுறைகளிலும் ஈடுபடுகிறான். (பிரம்மம்) என்ற உண்மையில் இருந்து விலகிய அவர்கள், (தங்கள் நிலையுடன்) தொடர்புடைய நோக்கங்களில் இன்புற வேத உரைகளின் உண்மையைச் சார்ந்து இருக்கிறார்கள். சிலர் வேள்விகளை மனதால் (தியானத்தின் மூலம்) செய்கிறார்கள் (அல்லது வேள்வியின் பொருளை அடைகிறார்கள்). சிலர் (குறிப்பிட்ட துதிகளை உரைப்பதாலும், அல்லது ஜபத்தின் மூலமும்} வார்த்தைகளாலும்; சிலர் செயல்களாலும் (யதிஸ்தோமத்தின் உண்மையான நிறைவாலும் மற்றும் பிற விலையுயர்ந்த சடங்குகளாலும்) செய்கிறார்கள்.
எனினும், உண்மையின் {சத்தியத்தின்} மூலம் பிரம்மத்தைத் தேடும் மனிதன், தனது ஆசைக்குகந்த பொருட்களைத் தனது வீட்டில் பெறுகிறான்.[1] இருப்பினும், ஒருவனது நோக்கங்கள் (தன்னறிவற்ற தனது நிலையின் காரணமாக) அழிகின்றன. ஒருவன் தீக்ஷவிரதம் போன்ற மௌன நோன்புகளைக் கைக்கொள்ள வேண்டும். உண்மையில் தீக்ஷை என்பது நோன்பு நோற்றல் என்ற பொருள் கொண்ட தீக்ஷையின் வேரில் இருந்தே வருகிறது. தன்னறிவு {சுயஞானம்} உடையவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் உண்மையை {சத்தியத்தை} உயர்ந்த பொருளாகக் கொள்ளும் நோக்கம் கொண்டவர்களாவர்.
[1] இங்கே, தியானத்தால் சித்தியடைந்த மனிதன், தான் விரும்பிய உலகங்களை அடைகிறான் என்றும் பொருள் கொள்ளலாம்.
அறிவின் {ஞானத்தின்} கனிகள் {பலன்கள்} காட்சிக்குப் புலப்படுபவையே; அதற்கு மேல் தவமே கனிகளை {பலன்களை} விளையச் செய்யும். அதிகமாகப் படிக்க மட்டுமே செய்திருக்கும் (அறிவும் தவமும் அற்ற) ஓர் அந்தணன், பெரும் படிப்பாளியாக {வாசிப்பாளனாக} மட்டுமே அறியப்பட வேண்டும். எனவே, ஓ! க்ஷத்திரியா {திருதராஷ்டிரா}, சாத்திரங்களைப் படித்ததால் மட்டும் ஒருவனைப் பிராமணன் (பிரம்மத்தை அறிந்தவன்) என்று எப்போதும் எண்ணிவிடாதே. மறுபுறம், உண்மையில் இருந்து வழுவாமல் இருப்பவன் மட்டுமே பிரம்மத்தை அறிந்தவன் {பிராமணன்} என்று உன்னால் அறியப்பட வேண்டும். [2]
[2] ஒருவன் படித்திருப்பதால் மட்டுமே அவனை அந்தணன் என்று எண்ணிவிடாதே, உண்மையிலிருந்து விலகாதிருப்பவனே உன்னால் பிராமணனாக அறியத்தக்கவன்.
ஓ! க்ஷத்திரியா {திருதராஷ்டிரா}, பெரும் முனிவர்களின் கூட்டத்திற்கு அதர்வாவால் {அதர்வா என்ற முனிவரால்}, பழங்காலத்தில் உரைக்கப்பட்ட உரைகள் சந்தங்கள் [3] என்ற பெயரால் அறியப்படுகின்றன. வேதங்களின் மூலமாக அறியப்படுபவனின் {பரமாத்மாவின்} அறிவை அடையாமல், வேதங்களைப் படித்ததால் மட்டுமே அவர்களைச் சந்தங்களை அறிந்தவர்கள் என்று கருதமுடியாது. ஓ! மனிதர்களில் சிறந்தவனே {திருதராஷ்டிரா}, அந்நியமான எதன் தேவைகளும் இல்லாமல் முழு உரிமையுடன் {சுதந்திரமாக} பிரம்மத்தை அடையும் வழிமுறையாகச் சந்தங்கள் திகழ்கின்றன. வேதங்களில் கடமை என்று விதிக்கப்பட்டுள்ள வேள்விகளைச் செய்யும் முறைகளை மட்டுமே அறிந்தவர்களைச் சந்தங்களை அறிந்தவர்கள் என்று கருத முடியாது. மறுபுறம், வேதங்களை அறிந்தவர்களுக்குக் காத்திருக்கும் {பணிவிடை செய்யும்} நெறிசார்ந்தவர்கள், வேதங்களின் மூலம் அறிந்து கொள்ளத்தக்க பொருளை அடைந்ததில்லையா? வேதங்களின் உண்மையான உணர்வை {பொருளை} உணர்ந்தவர்கள் யாரும் இல்லை. அல்லது, அந்த உணர்வைப் பெற்றவர்கள் சிலரே இருக்கலாம்.
[3] வேறு பதிப்பில் வேத வித்துகள் என்று இது {சந்தங்கள்} குறிப்பிடப்படுகிறது.
வேதங்களை மட்டுமே படித்தவர்கள், தாங்கள் அறிந்து கொள்ள வேண்டிய பொருளை அறிவதில்லை. எனினும், உண்மையில் {சத்தியத்தில்} நிறுவப்பட்டுள்ள ஒருவன், வேதங்களால் அறியத்தக்க பொருளை அறிகிறான். உடல் உணர்வுகளுக்கு வழிவகுக்கும் செயல்படு பொருளாக இருக்கும் கல்விகளால், உண்மையான ஞானத்தை அடைந்தவன் என்று எவனும் இல்லை. மனத்தால் மட்டுமே ஒருவன் தன்னறிவையும் {சுயஞானத்தையும்} தானற்ற அறிவையும் {சுயமற்ற ஞானத்தையும்} அடைய முடியும். உண்மையில் தன்னறிவை அறிந்த ஒருவன், தானற்ற நிலையையும் அறியவே செய்கிறான். மறுபுறம், தானற்ற நிலையை மட்டுமே அறிந்த ஒருவன் உண்மையை அறிய மாட்டான்.
சான்றுகளை அறிந்த ஒருவன், எது மெய்ப்பிக்கப்பட வேண்டும் என்பதையும் அறிவான். ஆனால், வேதங்களோ, வேதத்தை அறிந்தவர்களோ அறியாத {மெய்ப்பிக்கப்பட வேண்டிய} பொருட்களின் தன்மைகள் தான் என்ன இருக்கின்றன? எனினும், இவை யாவுக்குமாக, (உண்மையில்) வேதங்களை அறிந்த பிராமணர்கள், வேதங்களின் மூலமாக (வேதங்களால்) அறியப்பட வேண்டிய பொருளின் அறிவை அடைவதில் வெற்றி பெறுகிறார்கள். ஒரு குறிப்பிட்ட மரத்தின் கிளை சில நேரங்களில் வளர்பிறையில் வரும் முதல்நாள் நிலவின் இலக்கத்தைச் {சந்திர கலையை} சுட்டிக்காட்டுவது [4] போலவே, வேதங்களும், பரமாத்மாவின் உயர்ந்த பண்புகளைச் சுட்டிக்காட்டப் பயன்படுத்தப்படுகின்றன.
[4] அஃதாவது இருளில் மரம் தெரிந்தால் நிலவின் ஒளி அங்கே இருக்கிறது என்பதை நாம் அறிவது போல, வேதங்களின் துணை கொண்டு பரமாத்மாவை நாம் அறிய முடியும் என்பது இங்கே பொருள்.
தனது சொந்த ஐயங்கள் அனைத்தையும் தானே தீர்த்துக் கொண்டு, பிறரின் ஐயங்களுக்கு விளக்கமளிக்கும் (பிரம்ம ஞானம் கொண்டிருக்கும்) தன்னறிவு {சுயஞானம்} கொண்டவனையே நான் பிராமணன் என்று அறிந்து கொள்கிறேன். கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்காகவோ, துணைத்திசைகளிலோ, கிடைமட்டமாகவோ தேடிக் கொண்டிருப்பவனால் ஆத்மா என்பது என்ன என்பதை அறிய முடியாது. இந்த உடலையே தான் என்று கருதும் ஒருவனால் மிக அரிதாகவே அதை {ஆத்மாவை} அறிய முடியும். வேதங்களின் கருத்துருக்களுக்கு அப்பால், யோக தியானம் கொண்ட மனிதனால் மட்டுமே பரமாத்மாவைக் காண முடியும். உனது புலன்கள் அனைத்தையும், உனது மனதையும் முழுமையாகக் கட்டுப்படுத்தி, உனது {அவனவனின்} சொந்த ஆத்மாவுக்குள் வசிப்பதாக அறியப்படும் பிரம்மத்தை நாடுவாயாக {பிரம்மத்தை அடைய முயல்வாயாக}.
யோக தியானத்தை மட்டுமே பயில்பவன் முனிவனாக மாட்டான்; அதே போல (உலகத்தில் இருந்து ஓய்ந்து {விடுபட்டு}) காட்டில் மட்டுமே வாழ்பவனும் முனிவனாக மாட்டான். எனினும், தனது சொந்த இயல்பை அறிந்த ஒருவனே முனிவனும் அனைவரிலும் மேன்மையானவனும் ஆவான். அனைத்து பொருட்களையும் {அர்த்தங்களையும்} விளக்கும் திறன் பெற்றதன் (வியாகரணத்தின்) விளைவால் {பொருட்களின் இலக்கணம் அறிந்த} ஒருவன் அண்ட அறிவை {உலகாளவிய அறிவை} (வையாகரணத்தை) அடைந்தவனாகச் சொல்லப்படுகிறான். ஒவ்வொரு பொருளையும் {அர்த்தத்தையும்} (பிரம்மம் என்று அறியப்படும்) அதன் வேர்வரை விளக்க வல்ல அறிவியலே வியாகரணம் {இலக்கணம்} என்று அழைக்கப்படுகிறது. அனைத்து உலகங்களும் தன் கண் முன்னே இருப்பது போலக் காணும் ஒரு மனிதனே அண்ட அறிவைப் பெற்றவனாகச் சொல்லப்படுகிறான். எவன் உண்மையில் நிலைத்திருக்கிறானோ, எவன் பிரம்மத்தை அறிகிறானோ அவனே பிராமணன் என்று அழைக்கப்படுகிறான். ஒரு பிராமணன் அண்ட அறிவைப் பெற்றவனாவான். இத்தகு அறங்களைப் பயிலும் ஒரு க்ஷத்திரியனாலும் பிரம்மத்தைக் காண இயலும். அந்த உயர்ந்த நிலையை அவன் {க்ஷத்திரியன்}, வேதங்களில் குறிப்பிட்டுள்ளபடி படிப்படியாக அடையலாம். இதை உறுதியாக அறிந்ததாலேயே நான் இதை உனக்குச் சொல்கிறேன்” என்றார் {சனத்சுஜாதர்}.