Steps of Brahmacharya! | Udyoga Parva - Section 44 | Mahabharata In Tamil
(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 4)
பதிவின் சுருக்கம் : பிரம்மத்தைக் குறித்து இன்னும் அதிகம் சொல்லுமாறு திருதராஷ்டிரன் கேட்டது; அவசரத்தால் பிரம்மத்தை அடைய முடியாது என்றும், பற்றற்ற நிலையிலேயே பிரம்மத்தை அடையமுடியும் என்று சனத்சுஜாதர் பதிலளித்தது; எவற்றால் அறிவு வெளிப்படுகிறது? உடலில் இருந்து ஆத்மாவை எளிதாகப் பிரிக்க யாரால் முடியும்? குருவை ஏன் தந்தை தாயைப் போலக் கருத வேண்டும்? பிரம்மச்சரியத்தின் நான்கு படிநிலைகள் என்னென்ன? அந்த ஒவ்வொரு படிநிலையையும் எதனெதன் மூலம் அடையலாம்? பிரம்மச்சரியம் எத்தனை அறங்களைக் கொண்டது? பிரம்மதின் உண்மையான நிறமும் வடிவமும் என்ன? ஆகியவற்றைத் திருதராஷ்டிரனுக்குச் சனத்சுஜாதர் விளக்கிச் சொல்வது...
திருதராஷ்டிரன் {சனத்சுஜாதரிடம்} சொன்னான், “அருமை. ஓ! சனத்சுஜாதரே, இந்த உமது உரை பிரம்மத்தை அடைவதற்கும், அண்டத்தின் தோற்றத்தை அறிவதற்கும் உதவும். ஓ! கொண்டாடப்படும் முனிவரே, உலகத்தின் மீதான ஆசைக்குத் தொடர்பில்லாதவையும், மனிதர்கள் மத்தியில் அரிதானவையுமான இத்தகு வார்த்தைகளை எனக்கு இன்னும் சொல்ல வேண்டும் என்று நான் உம்மை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்” என்றான்.
அதற்குச் சனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்}, “இத்தகு மகிழ்ச்சியுடன் எந்தப் பிரம்மத்தைக் குறித்து நீ என்னிடம் கேட்கிறாயோ, அது விரைவில் அடைய முடியாதது {அதை அவசரக்காரனால் அடைய முடியாது}. தூய அறிவில், ஆசை இணைந்த பிறகு (புலன்கள் அடக்கப்பட்ட பிறகு), உலகச் சிந்தனை முற்றிலும் இல்லாத அந்நிலையிலேயே ஒருவன் வெல்வான் {பிரம்மத்தை அடைவான்}. (பிரம்மத்தை அடைய வழிவகுக்கும்) அதுவே அறிவாகும் {ஞானமாகும்}. பிரம்மச்சரியம் பயில்வதால் மட்டுமே அதை {பிரம்மத்தை} அடைய முடியும்” என்றார் {சனத்சுஜாதர்}.
திருதராஷ்டிரன் {சனத்சுஜாதரிடம்}, “பிரம்மச்சரியத்தால் மட்டுமே கண்டடையப்படும் பிரம்ம அறிவு மனதிலேயே வசிக்கிறது என்றும்; மனதிலேயே வசிக்கும் அது {பிரம்ம அறிவு} வெளிப்படுவதற்கு எந்த முயற்சியும் தேவையில்லை (எந்த வேலைக்கான அவசியமும் இல்லை) என்றும், (பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்துத்) தேடும்போது அது {அந்த பிரம்ம அறிவு} (தானே) வெளிப்படும் என்றும் சொல்கிறீர். பிறகு எப்படி இறவா {அழியா} நிலை, பிரம்மத்தை அடைவதோடு தொடர்புப்படுத்தப்படுகிறது?” என்று கேட்டான்.
அதற்குச் சனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்}, “மனதில் உள்ளார்ந்து இருக்கும் பிரம்ம அறிவு {பிரம்ம ஞானம்}, அதனுள்ளேயே {மனதிலேயே} வசித்தாலும் வெளிப்படுத்த இயலாததாக {விவரிக்க இயலாததாக} இருக்கிறது. தூய அறிவு மற்றும் பிரம்மச்சரியம் ஆகியவற்றின் துணையுடனேயே அந்த அறிவு {ஞானம்} வெளிப்படுகிறது. உண்மையில், அந்த அறிவை {ஞானத்தை} அடைந்த யோகியர் உலகத்தைக் கைவிடுகின்றனர். இதுவே, எப்போதும் தலைமையான ஆசான்கள் மத்தியில் காணப்படுகிறது. இப்போது அந்த அறிவைக் குறித்து நான் உனக்கு உரைக்கிறேன்” என்றார் {சனத்சுஜாதர்}.
திருதராஷ்டிரன் {சனத்சுஜாதரிடம்}, “பிரம்ம அறிவை சிரமமில்லாமல் அடையச்செய்யும் பிரம்மச்சரியத்தின் இயல்பு எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்? ஓ! இருபிறப்பாளரே {பிராமணரே}, இதை எனக்குச் சொல்லும்” என்று கேட்டான்.
சனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்}, “தங்கள் ஆசான்களின் வசிப்பிடங்களில் வசித்து, நல்ல விருப்பங்களையும், நட்பையும் அடைந்து, பிரம்மச்சரிய துறவை பயில்பவர்கள், தங்கள் உடல்களைத் துறந்து பரமாத்மாவுடன் இணைந்து, இவ்வுலகில் பிரம்மத்தின் உருவமாகிறார்கள்.
இவ்வுலகில் பிரம்ம நிலையை அடைய விரும்பி, தங்கள் ஆசைகளை அடக்கி, நெறிசார்ந்து இருப்போர், அடர்த்தியான முஞ்சைப்புல்லில் துருத்திக் கொண்டிருக்கும் கத்தியைப் போல, உடலில் இருந்து ஆத்மாவை பிரித்தெடுப்பதில் வெல்கிறார்கள்.
ஓ! பாரதா {திருதராஷ்டிரா}, தந்தை மற்றும் தாயால் உடல் படைக்கப்படுகிறது; எனினும், ஆசானின் அறிவுறுத்தல்களின் காரணமாக அடையப்படும் (புதிய {மறு}) பிறவி, புனிதமானதும், பலவீனமற்றதும், அழிவற்றதுமாகும்.
பிரம்மத்தை உரைத்து, அழியா நிலையை அருளி, உண்மை (என்ற முக்காட்டால்) அனைத்து மனிதர்களையும் மறைக்கும் ஒருவர் {குரு} தந்தையாகவும் தாயாகவும் கருதப்பட வேண்டும்; அவர் {குரு} செய்யும் நன்மையை மனதில் கொண்டு, ஒருவன் குருவுக்கு எந்தவகையிலும் தீங்கிழைக்கக்கூடாது.
{பிரம்மச்சரியத்தின் படிநிலைகள்}
பிரம்மத்தை உரைத்து, அழியா நிலையை அருளி, உண்மை (என்ற முக்காட்டால்) அனைத்து மனிதர்களையும் மறைக்கும் ஒருவர் {குரு} தந்தையாகவும் தாயாகவும் கருதப்பட வேண்டும்; அவர் {குரு} செய்யும் நன்மையை மனதில் கொண்டு, ஒருவன் குருவுக்கு எந்தவகையிலும் தீங்கிழைக்கக்கூடாது.
{1.பிரம்மச்சரியத்தின் முதல் படிநிலை}
ஒரு சீடன், தனது ஆசானை, மரியாதையுடன் வணங்குவதை வழக்கமாகக் கொண்டு, (உடல் மற்றும் மனத்) தூய்மையுடனும், நன்கு வழிநடத்தப்பட்ட கவனத்துடனும் கல்வி கற்க வேண்டும். அவன் {சீடன்} எந்தச் சேவையையும் இழிவாகக் கருதி கோபத்துக்கு ஆளாகக் கூடாது. இதுவே பிரம்மச்சரியத்தின் முதல் படிநிலை. தனது வர்க்கத்திற்கு {வர்ணத்திற்கு} விதிக்கப்பட்டுள்ள கடமைகளைக் கவனிப்பதன் மூலம் அறிவை {ஞானத்தை} அடையும் ஒரு சீடனின் நடைமுறைகளும் பிரம்மச்சரியத்தின் முதல் படிநிலை என்றே கருதப்படுகிறது.
{2.பிரம்மச்சரியத்தின் இரண்டாம் படிநிலை}
தனது வாழ்வையும் தனது உடைமைகள் அனைத்தையும் கொண்டு, ஒரு சீடன், எண்ணத்தாலும், வார்த்தையாலும், செயலாலும் ஆசானுக்கு ஏற்புடையதையே செய்ய வேண்டும். இதுவே பிரம்மச்சரியத்தின் இரண்டாம் படிநிலையாகக் கருதப்படுகிறது. தனது ஆசானின் மனைவி மற்றும் மகனிடமும், அந்த ஆசானிடம் நடந்து கொள்ளும் அதே முறையிலேயே நடந்து கொள்ள வேண்டும் இதுவும் பிரம்மச்சரியத்தின் இரண்டாம் படிநிலையாகக் கருதப்படுகிறது.
{3.பிரம்மச்சரியத்தின் மூன்றாம் படிநிலை}
தனது ஆசான் தனக்குச் செய்திருப்பதை நன்றாக மனதில் கொண்டு, அதன் நோக்கத்தைப் புரிந்து கொள்ளும் ஒரு சீடன், மகிழ்ச்சியான இதயத்துடன் “அவரால் {ஆசானால்} கற்பிக்கப்பட்டுப் பெரியவனாக்கப்பட்டிருக்கிறேன்” என்று நினைக்க வேண்டும். இதுவே பிரம்மச்சரியத்தின் மூன்றாவது படிநிலையாகும்.
{4.பிரம்மச்சரியத்தின் நான்காம் படிநிலை}
தனது ஆசானுக்கு இறுதி காணிக்கையான கட்டணத்தைக் கொடுக்காமல், ஒரு ஞானம் கொண்ட சீடன் {பிரம்மச்சாரி} மற்றொரு வகை {இல்லற} வாழ்க்கையைக் கைகொள்ளக்கூடாது; அல்லது ‘நான் இந்தக் காணிக்கையை அளிக்கிறேன்’ என்று சொல்லவோ, மனதால் நினைக்கவோ கூடாது. இதுவே பிரம்மச்சரியத்தின் நான்காவது படிநிலையாகும்.
ஒருவன், பிரம்மச்சரியத்துடைய நோக்கத்தின் (பிரம்ம அறிவை அடைதலின்) முதல் படிநிலையைக் காலத்தின் உதவியால் அடைகிறான்; இரண்டாம் படிநிலையை ஆசானின் {தேர்ந்தெடுக்கப்பட்ட} பாடங்களின் {Prelections} மூலம் அடைகிறான்: மூன்றாவதை, தனது சொந்த புரிதலின் சக்தியால் அடைகிறான்; இறுதியாக, நான்காவதை விவாதத்தின் {சாத்திர ஆராய்ச்சியின்} மூலம் அடைகிறான்.
பனிரெண்டு {12} அறங்களைக் கொண்டது பிரம்மச்சரியம் என்று கற்றோர் சொல்கின்றனர். யோகப் பயிற்சிகள் அதன் அங்கங்கள் என்று அழைக்கப்படுகின்றன. யோக தியானத்தில் விடாமுயற்சி வளம் என்று அழைக்கப்படுகிறது. ஆசானுடைய உதவி மற்றும் வேதங்களின் பொருளை புரிந்து கொள்ளுதல் ஆகியவற்றின் விளைவால் ஒருவன் {பிரம்மச்சரியத்தில்} வெற்றி மகுடம் சூட்டப்படுகிறான்.
இப்படி ஈடுபட்டுக்கொண்டிருக்கும் ஒரு சீடனால் ஈட்டப்படும் எந்தச் செல்வமும் ஆசானிடம் கொடுக்கப்பட வேண்டும். இப்படியே அந்த ஆசான் புகழ்மிக்க உயர்ந்த வாழ்வாதாரத்தை அடைய முடியும். இதுபோலவேதான் ஆசானின் மகனிடமும் ஒரு சீடன் நடந்து கொள்ள வேண்டும். இப்படி (பிரம்மச்சரியத்தில்) நிலைத்திருக்கும் சீடன், {பின்னர்} இந்த உலகத்தில் உள்ள அனைத்தின் மூலமும் செழித்து, பல சந்ததிகளையும் புகழையும் அடைகிறான்.
அனைத்து திக்குகளிலும் உள்ள மனிதர்கள் அவன் மீது செல்வத்தைப் பொழிவார்கள்; பிரம்மச்சரியம் பயில பலபேர் அவனது வசிப்பிடத்திற்கு வருவார்கள். இந்த வகைப் பிரம்மச்சரியத்தின் மூலமே தேவர்கள் தங்கள் தெய்வீகத்தன்மையையும், உயர்ந்த அருள் மற்றும் பெரும் ஞானம் கொண்ட தவசிகள் பிரம்ம லோகத்தையும் அடைந்தார்கள்.
இதன் காரணமாகவே கந்தர்வர்களும், அப்சரஸ்களுத் தங்கள் மேனி அழகை அடைந்தார்கள். பிரம்மச்சரியத்தாலேயே சூரியன் நாளை உண்டாக்க எழுகிறான் {இந்த பிரம்மச்சரியத்தாலேயே சூரியன் பகலைச் செய்பவனான்}. தத்துவஞானியின் கல்லைத் {Philosopher’s stone} {சிந்தாமணியைத்} [1] தேடுபவர்கள், மேலே குறிப்பிட்டிருபவர்களைப் போல (தேவர்கள் மற்றும் பிறரைப் போல) தங்கள் தேடலின் நோக்கத்தை அடைந்து, பெருமகிழ்ச்சியை அடைவதைப் போல, பிரம்மச்சரியத்தை நிறைவு செய்பவர்கள், தாங்கள் விரும்புபவற்றை அடையும் திறனைப் பெறுவதன் விளைவாகப் பெரும் மகிழ்ச்சியை அடைகிறார்கள்.
[1] விரும்புகிறவர்களுக்கு விரும்பிய பொருளைக் கொடுக்கும் கல்.
ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, தவத்துறவுப் பயிற்சிகளுக்குத் தன்னை அர்ப்பணித்து, முழுமையாகப் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடித்து, அதன் மூலம் தனது உடலை தூய்மைப்படுத்திக் கொள்பவன் உண்மையில் ஞானியாகிறான். எனெனில், (தீய ஆசைகளில் இருந்து விடுபட்டு) அவன் குழந்தையைப் போல ஆவதால், இறுதியில் அவன் மரணத்தையே வெல்கிறான்.
எனினும், ஓ! க்ஷத்திரியா {திருதராஷ்டிரா}, செயலால் {கர்மத்தால்} ஒருவன் அழியக்கூடிய உலகங்களை மட்டுமே அடைகிறான்; இருப்பினும், அறிவு அருளப்பட்ட ஒருவன், அந்த அறிவின் துணையால் அழியாத பிரம்மத்தை அடைகிறான். முக்தியை {விடுதலையை} அடைய {அறிவையோ, பிரம்மத்தை அடைதலையோ தவிர} வேறு ஒரு பாதை இல்லை” என்றார் {சனத்சுஜாதர்}
திருதராஷ்டிரன் {சனத்சுஜாதரிடம்}, “பிரம்மத்தின் இருப்பை ஒரு ஞானி தனது சொந்த ஆன்மாவிலேயே காண்கிறான் என்று சொல்கிறீர். இப்போது, பிரம்மம் என்பது வெள்ளையா? சிவப்பா? கருப்பா? நீலமா? ஊதாவா? நீக்கமற்ற நித்திய பிரம்மத்தின் உண்மை வடிவமும், நிறமும் என்ன என்பதை எனக்குச் சொல்லும்?” என்று கேட்டான்.
சனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்}, “உண்மையில் பிரம்மம், வெள்ளையாகவோ, சிவப்பாகவோ, கருப்பாகவோ, பழுப்பாகவோ, பிரகாசமாகவோ (காண்பது போலவே) தோன்றும். ஆனால், பூமியிலோ, வானத்திலோ, கடலின் நீரிலோ, அல்லது இவை போன்ற எவற்றிலோ, நட்சத்திரங்களிலோ, மின்னலிலோ, மேகங்களிலோ அதன் உருவத்தைக் காண இயலாது. வளிமண்டலத்திலோ, தெய்வங்களிலோ, நிலவிலோ சூரியனிலோ அது காணக்கிடைப்பது இல்லை. ரிக்குகளிலோ, யஜூர்களின் மத்தியிலோ, அதர்வண்களின் மத்தியிலோ, தூய சாமங்களின் மத்தியிலோ அது {பிரம்மம்} காணக்கிடைக்காது.
ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, அது {பிரம்மம்} {சாமவேதத்தின்} ரதந்திரத்திலோ பிருஹத்ரதத்திலோ {Rathantara or Varhadratha}, பெரும் வேள்விகளிலோகூடக் காணக்கிடைக்காது. சுற்றிவளைக்கப்பட இயலாததாக, வரையறுக்கப்பட்ட அறிவின் தொடுதூரத்திற்கு வெளியே இருக்கும் அதில், பிரளயத்திற்குப் பிறகு, அண்டத்தை அழிப்பவனே {அந்தகனே} தொலைந்து {மறைந்து} போகிறான் {லயிக்கிறான்}. பார்க்க இயலாத அளவுக்கு அது {பிரம்மம்}, கத்தி முனையைவிட நுட்பமானதாகவும், மலைகளைவிடப் பெருந்திரள் கொண்டதுமாகும். காணக்கிடைக்கும் அனைத்திற்கும் அதுவே அடிப்படை ஆதாரம்; அதுவே மாற்றமில்லாதது; அதுவே காணக்கூடிய (எங்கு நிறைந்திருக்கும்} இந்த அண்டம்; அது பரந்துள்ளது; அது இன்பமானதாக இருக்கிறது; அனைத்து உயிரினங்களும் அதில் {பிரம்மத்திலிருந்தே}இருந்தே எழுகின்றன, மீண்டும் அதற்கே {பிரம்மத்திற்கே} திரும்புகின்றன.
அனைத்துவகை இரட்டைகளில் இருந்தும் விடுபட்டிருக்கும் அது அனைத்திலும் ஊடுருவியிருக்கும் அண்டமாக வெளிப்படுகிறது. அதை விளக்கிச் சொல்லும் மொழியைத் தவிர, அது மாற்றமில்லாமலே இருக்கிறது என்று கற்றோர் சொல்கின்றனர். எதற்குள் அண்டம் நிறுவப்பட்டுள்ளதோ, அதை {பிரம்மத்தை} அறிந்தவர்கள் முக்தியடைகிறார்கள்.