Showing posts with label பீஷ்ம பர்வம். Show all posts
Showing posts with label பீஷ்ம பர்வம். Show all posts

Saturday, May 07, 2016

பீஷ்ம பர்வம் - முழுவதும் - பிடிஎஃப் கோப்பு

Bhishma Parva in Tamil - Full - Pdf File


பீஷ்ம பர்வத்தின் முதல் இரண்டு பகுதிகள் ஏற்கனவே பதவிறக்கத்திற்காக அளிக்கப்பட்டிருக்கின்றன. அவை பின்வருமாறு:பீஷ்ம பர்வம் பகுதி 001 முதல் 050 வரை .
இதன் நிறை 5.58 MB நிறை ஆகும்

பீஷ்ம பர்வம் பகுதி 051 முதல் 100 வரை .
இதன் நிறை 4.85 MB ஆகும்.

எஞ்சிய பகுதிகளைக் கொண்ட 3ம் கோப்பு இப்போது...

பீஷ்ம பர்வம் பகுதி 101 முதல் 124 வரை.
இதன் நிறை 2.6 MB ஆகும்.

பீஷ்ம பர்வம் முழு பிடிஎஃப் கோப்பு

பீஷ்ம பர்வம் பகுதி 001 முதல் 124 வரை.
இதன் நிறை 11.1 MB ஆகும்.

அடுத்த பகுதியான துரோண பர்வத்தில் இதுவரை 28 பகுதிகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. அவற்றை வலைத்தளத்திலேயே தொடர்ந்து படித்து வாருங்கள்.


நண்பர் திரு.செல்வராஜ் ஜெகன் அவர்கள் பீஷ்ம பர்வம் பகுதிகள் 001 முதல் 124 வரையுள்ள பகுதிகளைச் சேகரித்து நமது மின்னஞ்சலுக்கு MS Word கோப்பாக அனுப்பி வைத்தார். அவருக்கு நன்றி.


ஆதிபர்வம், சபாபர்வம், வனபர்வம், விராடபர்வம், உத்யோகபர்வம் ஆகியவற்றை பதிவிறக்கத்திற்கு ஏற்கனவே  கொடுத்திருக்கிறேன். அவை பின்வருமாறு:


என்னதான் பிடிஎப் கோப்புகளைக் கொடுத்தாலும், மேற்கண்ட இவை எவையும் இறுதியானவை அல்ல. அனுதினமும் பிழைத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, இந்த நிமிடத்தில் வலைத்தளத்தில் கடைசியாக இருக்கும் பதிவுகள்,  இந்த நிமிடம் வரைதான் இறுதியானதாகும். நாளையே கூட திருத்தப்படலாம்.

நன்றி

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்

Friday, March 25, 2016

பீஷ்ம பர்வச் சுவடுகளைத் தேடி!

கிருஷ்ண ஜெயந்தி அன்று {03.08.2015} பீஷ்ம பர்வம் மொழிபெயர்ப்பைத் தொடங்கி, பங்குனி உத்திரத்தன்று {23.03.2016} நிறைவை எட்டுகிறேன். மொத்தம் 234 நாட்களாகியிருக்கின்றன. நினைத்ததைவிடக் காலம் அதிகமாகத்தான் ஆகியிருக்கிறது. பொருளளவில் பீஷ்ம பர்வம் கனமானதாகும். ஆரம்ப அத்தியாயங்களிலேயே ஜம்பூகண்ட நிர்மாண பர்வம், பூமி பர்வம் ஆகியவற்றில் புவியியல், இயற்கையின் வரலாறு குறித்த செய்திகள்; அது முடிந்தவுடனேயே பகவத் கீதை எனும் தத்துவ உரை; அதன் பிறகு, முதல் பத்து நாள் போரின் வர்ணனைகள் என்று அடுத்தடுத்து மொழிபெயர்க்கக் கடினமான பகுதிகளையே பீஷ்ம பர்வம் கொண்டிருக்கிறது. எதிர்பாரா தாக்குதல்களைச் செய்து, அந்தப் போர் முடிந்த பிறகு இரு தரப்பும் ஒப்பந்தமிடுவதை நாம் கண்டிருக்கிறோம். ஆனால் மகாபாரதத்தில் போர் தொடங்குவதற்கு முன்பே இருதரப்பும் போர் உடன்படிக்கைகளை ஏற்றுக் கொண்டு போரிடுவது நம்மை வியப்பில் ஆழ்த்தும். ஒன்றன்றபின் ஒன்றாக ஏற்படும் பிரமிப்புகளே கூட நம்மைத் தாமதம் செய்யத்தூண்டுகிறது. மேலும், நான் அடிக்கடி வெளியூர்களுக்குச் சென்றது, அலுவலகப் பணிகள், இயற்கை சீற்றங்கள், மின் பழுது, இணையப் பழுது என என்னென்ன எல்லாம் உண்டோ, அனைத்தும் பீஷ்ம பர்வம் தாமதமாவதற்கு ஒவ்வொரு வகையில் காரணங்களாகின.


23.03.2016 அன்று பங்குனி உத்திரம், அன்று அர்ஜுனன் பிறந்தநாளும் கூட, அன்றே பீஷ்ம பர்வத்தின் நிறைவை எட்டிவிட வேண்டும் என்று மனத்தில் தோன்றியது. அது தோன்றிய போது பீஷ்ம பர்வத்தில் மூன்று பகுதிகள் எஞ்சியிருந்தன. 22ந்தேதி காலையில் பகுதி 122ஐயும், அன்று இரவே பகுதி 123யும் மொழிபெயர்த்து வலையேற்றினேன். 23ந்தேதி பகல் பொழுதில் அலுவலகத்தில் மொழிபெயர்க்க முடியாது என்பதால் 22ந்தேதி இரவே அதிக நேரத்தை எடுத்துக் கொண்டு இறுதிப் பகுதியான 124ஐயும் முடித்து விட வேண்டும் என்று முயன்றேன். மணி 3.30 ஆகிவிட்டது கண்கள் சொக்கிவிட்டன. ஒரு பத்தி கூட மொழிபெயர்க்க முடியவில்லை. சரி காலையில் எழுந்து இந்தப் பகுதியை முடித்த பிறகுதான் அலுவலகத்தைத் திறக்க வேண்டும் என்று மனத்தில் தீர்மானித்துக்கொண்டு உறங்கிவிட்டேன்.

காலை 8.00 மணிக்கு எழுந்தேன். எழுந்ததும் கணினியில் அமர்ந்தேன். பகுதி 124ல் பீஷ்மரைக் கர்ணன் சந்தித்தான். இரண்டு மூன்று வரிகள் தாண்டுவதற்குள் கர்ணன் பேசும் ஒரு வசனம் மனத்தை கனக்கச் செய்தது. 8.30க்குப் பிள்ளைகளைப் பள்ளியில் விட வேண்டும். மொழிபெயர்ப்பதை நிறுத்தி எழுந்து சென்றேன். பள்ளிக்குச் சென்று திரும்பும் வழியெங்கும் கர்ணனே மனமுழுவதும் நிறைந்திருந்தான். பள்ளியில் இருந்து திரும்பியதும் மொழிபெயர்ப்பைத் தொடராமல், அந்தப் பகுதி முழுவதையும் ஆங்கிலத்தில் படித்தேன். அந்தக் காலத்து மனிதர்களின் பண்புகளை எண்ணி எண்ணி வியந்தேன். சரி மொழிபெயர்க்க ஆரம்பிக்கலாம் என்று நினைத்த போது, வாசலில் நண்பர் சீனிவாசன் ஓர் அவசர வேலையுடன் வந்திருந்தார். ஒரு கல்லூரியின் பிராஸ்பெக்டஸ் வடிவமைப்பைச் செய்வதற்கு வந்திருந்தார். “அர்ஜுனன் பிறந்த நாளில் பீஷ்ம பர்வத்தை முடிக்கக் கர்ணன் விடமாட்டான் போல, இன்னுமாடா உங்க பகை தொடருது” என்று நினைத்துக் கொண்டு வேண்டா வெறுப்பாக அலுவலகத்தைத் திறந்து கணினியில் அமர்ந்தேன்.

3, 4 விதங்களில் அந்த வடிவமைப்பைக் கேட்டார் நண்பர். சில ஐயங்களுக்காக, அவர் கல்லூரிக்குப் போன் செய்து பேசிக் கொண்டிருந்தபோது, வீட்டுக்கு வந்து அவசர அவசரமாகக் காலை உணவை உண்டுவிட்டு மீண்டும் அலுவலகம் சென்று {வீடும் அலுவலகமும் அருகருகில்தான்} வடிவமைப்பில் அமர்ந்தேன். நேரம் போனதே தெரியவில்லை. மதியம் மணி 2.30 இருக்கும். “வாங்கையா, வாங்க, நல்லவரே” என்று யாரையோ அழைத்தார் நண்பர் சீனிவாசன். “யாரது?” என்று திரும்பிப் பார்த்தேன். என் முகத்தின் அருகே நண்பர் ஜெயவேலன் அவர்கள் முகம் இருந்தது. “என்னங்க, திடீர்னு வந்திருக்கீங்க?” என்றேன். “பீஷ்ம பர்வம் முடிச்சிட்டீங்க போல!” என்றார். “இல்லங்க, வேல… அதான் முடியல” என்றேன். “சரி, சீக்கிரம் முடிங்க” என்று சொல்லித் தன் கையில் இருந்த கவரை என்னிடம் கொடுத்தார். கவரை வாங்கி வைத்துவிட்டு, வடிவமைப்பு வேலையையும் செய்து கொண்டே நண்பர்கள் இருவருடனும் பேசிக் கொண்டிருந்தேன்.

அன்று என் மனைவியின் தந்தையுடைய நினைவு நாள். அங்கும் நான் செல்ல வேண்டியிருந்தது. என் மனைவி காலையிலேயே சென்று விட்டாள். நண்பர்களை அலுவலகத்திலேயே இருத்திவிட்டு, பிள்ளைகளைப் பள்ளியில் இருந்து அழைத்து வந்தேன். பிறகு நண்பர் சீனிவாசனின் வடிவமைப்பு வேலைகளை முடித்துக் கொடுத்துவிட்டு, நண்பர் ஜெயவேலனையும் வழியனுப்பிவிட்டு, என் மாமியார் வீட்டுக்குச் சென்றேன். மீண்டும் வீடு திரும்பும்போது இரவு மணி 10.00 ஆகிவிட்டது. அதன் பிறகே இறுதிப் பகுதியை மொழிபெயர்த்து வலையேற்ற முடிந்தது. இந்த ஒரு பகுதி மட்டுமல்ல, பீஷ்ம பர்வத்தின் பெரும்பாலான பகுதிகள் இப்படித்தான் மொழிபெயர்க்கப்பட்டன. இன்று ஒரு பகுதியை மொழிபெயர்த்து வலையேற்றிவிட வேண்டும் என்று நினைத்தால், அது முடிவதற்கே ஒரு பெரும் போர் செய்ய வேண்டியதிருக்கும். ஆனாலும் பீஷ்ம பர்வம் நிறைவை எட்டிய போது ஏதோ இனம் புரியாத ஒரு மகிழ்ச்சி மனத்தில் பரவியது. அது போன்ற ஓர் உணர்வு யாருக்கும் எளிதில் கிட்டிவிடாது. பரமனின் கருணையை எண்ணி மகிழ்கிறேன்.

நண்பர் ஜெயவேலன் அவர்கள் கொடுத்த கவரை காலையில்தான் பிரித்தேன். எண்ணியது போலவே ரூ.12,400/- இருந்தது. ஒவ்வொரு பதிவையும் வலையேற்றியதும், அப்பதிவைத் திருத்தி அடுத்தநாளே அந்தப் பதிவைக் குறித்துப் பின்னூட்டம் தரும் திரு.ஜெயவேலன் அவர்கள் பிப்ரவரி 1, 2016 அன்று நாடு முழுவதும் உடல் மற்றும் உறுப்புத் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கையில் விழிப்புணர்வு பதாகைகளுடன் இரு சக்கர வாகனத்தில் தன் பயணத்தை ஆரம்பித்தார். தங்க நாற்கரச்சாலையில் 10,300 கி.மீ. கொண்ட தன் பிரச்சாரப்பயணத்தை மார்ச் 4 அன்று நிறைவு செய்தார். நண்பர் ஜெயவேலன் அவர்களின் 10000 கிமீ இருசக்கர வாகன பயணத்தின் வாயிலாக உடல் மற்றும் உறுப்புத் தானம் விழிப்புணர்வு குறித்த நிகழ்வுகளை காண கீழ்கண்ட லிங்கிற்குச் செல்லலாம்:

https://www.facebook.com/10000-km-Bike-Ride-to-spread-Awareness-of-Organs-and-Body-Donation-1520691041594782/

அவர் இல்லாத அந்த 33 நாட்களும் கண்களை இழந்த குருடன் நிலையாகவே எனக்கு இருந்தது. பயணத்தில் இருந்து திரும்பி ஒன்றிரண்டு நாட்களுக்குள் அவர் திருத்தாதிருந்த 33 பகுதிகளையும் திருத்தி விட்டார். இப்படி முழுமஹாபாரதம் வளர்வதில் அவரது பங்கும், அவரது மனைவி தேவகி ஜெயவேலன் அவர்களது பங்கும் மிகப் பெரியது.

ஆதிபர்வம் இன்னும் வெளிவரவில்லையே ஏன்?

அச்சிடப்போகிறோம் என்று அறிவித்த உடனேயே, முடிந்தவரை சொற்பிழைகள் அனைத்தையும் நீக்கி, அச்சக நண்பர் சீனிவாசன் அவர்களிடம் அச்சேற்றிவிடும்படி கோப்பினைக் கொடுத்தும் விட்டேன். பிறகு தான், இப்போது மொழிபெயர்க்கும் பர்வங்களில் உள்ளது போல ஆதிபர்வத்தில் ஒவ்வொரு பகுதியின் சுருக்கங்களும் இல்லை என்பது நினைவுக்கு வந்தது. எனவே, புத்தகத்தை அச்சிட வேண்டாம் என்று நண்பரிடம் சொல்லி, ஒவ்வொரு பகுதிக்கு முன்பும் அந்தந்தப் பகுதியின் சுருக்கங்களைச் சேர்த்தேன். கிட்டத்தட்ட அதையும் முடிக்கும் சமயத்தில் விஜயசாரதி என்றொரு நண்பர் அறிமுகமானார். அவர் குழந்தைகளுக்கான மகாபாரதத்தை எழுதி வருகிறார். அதில் சில பக்கங்களையும் நான் கண்டேன். குழந்தையோடு குழந்தையாக அமர்ந்து கதை சொல்வது போல நேர்த்தியான நடையில் எழுதியிருந்தார். பிற்காலத்தில் அஃது ஒரு பெரிய படைப்பாக நிச்சயம் அறியப்படும். அப்படிப்பட்ட அவர் நம் மஹாபாரதத்தை படிக்க நேர்ந்தவிதத்தைச் சொல்லிப் பாராட்டி, “ஆதிபர்வம் அச்சிடப் போகிறீர்களா?” என்றும் கேட்டார். நான், “ஆம்” என்றதும். “ஆதிபர்வத்தின் ஆரம்பப் பகுதிகளில் ஆங்காங்கே சில வரிகள் விடுபட்டிருக்கின்றன, அதைச் சரி செய்த பிறகு அச்சுக்குச் செல்லுங்கள்” என்று சொன்னார். “மீண்டும் ஒவ்வொரு வரியையும் சரிபார்ப்பது எனக்கு மிகப் பெரிய வேலையாக இருக்கும். அதனால் பீஷ்ம பர்வம் மற்றும் பிற பர்வங்களின் மொழிபெயர்ப்பும் பாதிக்கப்படும்” என்று நான் சொன்னேன். “நானே சரி பார்த்து, ஒவ்வொரு பகுதியாக உங்களுக்கு அனுப்புகிறேன்” என்றார் அவர். நானும் சம்மதித்தேன். இதுவரை ஆதிபர்வத்தில் 56 பகுதிகளை அனுப்பியிருக்கிறார். அவர் சுட்டிக் காட்டும் இடங்களைச் சரி பார்த்து மீண்டும் திருத்தி வருகிறேன். அவரது புண்ணியத்தால், வாசகர்கள் எளிதாகப் புரிந்து கொள்வதற்கு ஏதுவாகப் புதிய அடிக்குறிப்புகளையும் சேர்க்க முடிகிறது. வேறு புத்தகங்களையும் மேற்கோளில் சேர்க்க முடிகிறது. இந்தத் திருத்தங்கள் முடிந்ததும் அச்சுக்குச் செல்ல வேண்டியதுதான். பார்ப்போம், உத்தரவு மேலிருந்தல்லவா வர வேண்டும்! காத்திருப்போம்.

பாண்டிச்சேரி "முகநூல் நண்பர்கள் சந்திப்பு"

2016, ஜனவரி 30 அன்று, முகநூல் நண்பர் திரு.நாராயணன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த "முகநூல் நண்பர்கள் சந்திப்புக் கூட்டம்" புதுவையில் நடைபெற்றது. புதிய நண்பர்கள் பலரைப் பெற முடிந்தது. முகநூல் நண்பர்கள் கூட்டத்திற்கு முன்மாதிரியான கூட்டமாக அது அமைந்தது. நிகழ்வில் பேசிய அனைவரும் அருமையாகப் பேசினார்கள். திடீரென என்னையும் பேச அழைத்துவிட்டார் நாராயணன் அவர்கள். தயார் செய்து பேசினாலே நான் பயங்கரமாகப் பேசுவேன். இப்போது தயாரிப்பில்லாமல் பேசவேண்டும். ஏதோ பேசி சமாளித்துவிட்டேன். "திராவிட மாயை" சுப்பு மணியன் அவர்களைச் சந்தித்துப் பேசும் வாய்ப்பும் கிடைத்தது. நண்பர் முத்துமாணிக்கத்தின் உரை நெகிழ்வை ஏற்படுத்தியது. அனுபமா ரெட்டி என்றொரு நண்பர் உணர்வுப் பூர்வமாகப் பேசினார். காவல்துறையைச் சேர்ந்த ஒரு பெண்மணியும் அருமையாகப் பேசினார். யோகானந்த் ராமலிங்கம் அவர்கள் நிகழ்வை அருமையாகத் தொகுத்து வழங்கினார். இடையிடையே சுப்பு அவர்களின் நகைச்சுவை கலந்த அனுபவ உரைகளும் அருமையாக இருந்தது. மொத்தத்தில் அன்றைய நிகழ்வு மனத்துக்கு நிறைவை அளித்தது. என்னுடன் நண்பர் சீனிவாசனும் வந்திருந்தார். அந்நிகழ்வு முடிந்ததும் நாங்கள் இருவரும் வடலூர் சென்று வள்ளலாரின் சபையைத் தரிசித்துவிட்டு சென்னை திரும்பினோம்.

ஆடியோ பதிவுகளின் வேலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. நண்பர் தேவகி ஜெயவேலன் அவர்கள் அதைச் செய்து கொண்டிருக்கிறார். ஆதி பர்வம் முதல் 21 பகுதிகளும், விராட பர்வம் முழுமையாக 72 பகுதிகளும், உத்யோக பர்வம் முழுமையாக 199 பகுதிகளும், பீஷ்ம பர்வம் முதல் 50 பகுதிகளும் நிறைவு செய்திருக்கிறார். அலுவலகப் பணி, வீட்டுப் பணி, ரோட்டரி சங்கப் பணி, ரோட்டராக்ட் சங்கப் பணி, மஹாபாரத ஆடியோ பணி எனச் சுழன்று சுழன்று வேலை செய்து வருகிறார். அவரது உழைப்புப் பிரமிப்பைத் தருகிறது.

விவாத மேடையில் நண்பர் தாமரைச் செல்வன் அவர்கள் பெரும் ஆய்வுகளை அப்போதைக்கப்போது தந்து கொண்டே இருக்கிறார். மேலும் வாசகர்களின் கேள்விகளுக்கும் அவரே பதிலளித்து வருகிறார். சில வேளைகளில் என் மின்னஞ்சலுக்கு வரும் சில கேள்விகளையும் அவருக்கே நான் அனுப்பி விடுவதுமுண்டு. மஹாபாரதத்தில் தெளிந்த ஞானம் கொண்டவர் அவர்.

நண்பர் செல்வராஜ் ஜெகன் அவர்கள் வழக்கம்போபவே ஒவ்வொரு 50 பகுதி நிறைவின் போதும், வலைத்தளத்தில் உள்ள பகுதிகளை வேர்ட் கோப்பில் சேகரித்து அனுப்பித் தருகிறார். சில வேளையில் நான் வலைத்தளத்தில் பல திருத்தங்களைச் செய்திருப்பேன், எனவே அவரை அப்பகுதிகளை மீண்டும் எடுத்துத் தரச் சொல்வேன். நான் கேட்ட போதெல்லாம் சலிக்காமல் அதைச் செய்து தந்திருக்கிறார்.

மஹாபாரதத்தின் மூலம் மற்றொரு நண்பரும் எனக்கு அறிமுகமானர். அவர் பெயர் வெற்றிவேல். வயதில் மிகவும் இளையவர். மூர்த்திச் சிறிதாயினும் கீர்த்திப் பெரிது என்பது போல 24 வயதிற்குள்ளாகவே பெரும் காரியங்களைச் செய்து வருகிறார். கரிகாலன் சம்பந்தமான ஒரு சரித்திர நாவலை எழுதி முடித்துள்ளார். “வானவல்லி” என்ற தலைப்பில் நான்கு பாகங்களில் அதை எழுதியிருக்கிறார். குறைந்தது 2000 பக்கங்கள் இருக்கும் என நினைக்கிறேன். அவரது நாவல் வெளிவருவதற்கு முன்பே, அதைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மயிலை சீனி.வேங்கடசாமி அவர்களின் தாக்கம் இவரிடம் அதிகம் இருக்கிறது. அந்நாவல் முழுவதையும் வேறு தடையில்லாமல் என்னால் ரசித்துப் படிக்க முடிந்தது. நல்ல வேகமான நடையும் கூட… பிற்காலத்தில் இந்நண்பர் பெரிய எழுத்தாளராக வர வாய்ப்பிருக்கிறது.

இப்படி நண்பர்கள் பலரையும் மஹாபாரதம் எனக்கு அறிமுகம் செய்து கொண்டே இருக்கிறது. அடுத்து துரோண பர்வம்… இன்று ஹோலிப் பண்டிகை இதோ அதற்குள் நுழைகிறேன்…. வழக்கமாகத் திரௌபதி சிரிப்பாள், பீஷ்ம பர்வத்தில் கர்ணன் சிரித்தான். வரப்போகும் துரோண மற்றும் கர்ண பர்வங்களிலும் அவனே சிரிப்பான் என நினைக்கிறேன்.

நன்றி

அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
திருவொற்றியூர்
24.03.2016

பின்குறிப்பு: இப்பதிவில், பாண்டிச்சேரியில் நண்பர் திரு நாராயணன் அவர்களின் ஏற்பாட்டின் பேரில் நிகழ்ந்த முகநூல் நண்பர்கள் கூடுகையைப் பதிய நான் மறந்துவிட்டேன். துரோண பர்வம் பகுதி 1-ஐ மொழிபெயர்த்து வலையேற்றிய பிறகு உறங்கச் சென்றேன். அதிகாலையில் ஒரு கனவு...

நான் என் வீட்டைவிட்டு வெளியே வருகிறேன் {கனவில்தான்}. சற்றுத் தொலைவில் புதுவையில் நான் சந்தித்திருந்த திரு.முத்துமாணிக்கம் அவர்கள் நின்று கொண்டிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் அவர் ஆற்றிய வெளிப்படையான உரையைக் கேட்டு நெகிழ்ந்திருந்தேன். இவர் ஏன் இங்கு நிற்கிறார். ஒரு வேளை நம்மைத் தேடித்தான் வந்திருக்கிறாரோ என்று எண்ணி அவரை நோக்கிக் கையசைத்தவாறே நடந்து சென்றேன். அவருடன் ஒரு நண்பரும் இருந்தார். அவர் புகைப்பிடித்துக் கொண்டிருந்தார். முத்துமாணிக்கத்தின் நண்பர் புகைப்பிடிக்கிறாரா? பரவாயில்லை அது அவரவர் விருப்பம்தானே என்றெண்ணி ஓடிச் சென்று அவரது கைகளைப் பிடித்துக் கொண்டு வீட்டுக்கு வாருங்கள் என்று அழைத்தேன். திடீரெனச் சூழல் மாறுகிறது. பொழுது இருட்டிவிட்டது. இருட்டு என்றால் அப்படியொரு மையிருட்டு. என் வீட்டை நோக்கி நாங்கள் நடக்க எத்தனிக்கையில் எங்களை நோக்கி ஒரு மங்கை நடந்து வருகிறாள். சிவப்பு நிறப் பட்டுடுத்தியிருக்கிறாள், நீல நிற இரவிக்கையணிந்திருக்கிறாள். அவள் எங்களை நெருங்கி வந்து கொண்டிருக்கிறாள். அருகில் வரும்போதுதான் தெரிகிறது அவள் தன் கூந்தலை முன்னே தொங்கவிட்டபடி நடந்துவருகிறாள். நெஞ்சில் திக் என்று இருக்கிறது. யார் இந்தப் பெண் என்று மனம் நினைத்தாலும், அச்சத்தில் அந்தப் பெண்ணுக்கு விலகி வழி அளிக்கிறேன். அப்படியே காட்சி மறைகிறது.

திடீரென வேறொரு காட்சி நானும் என் தம்பிகளில் ஒருவரும் ஒரு இடத்தில் நின்றிருக்கிறோம். எங்களுக்கு முன்பு ஒரு அகழி இருக்கிறது. அகழியைத் தாண்டி பூங்கா போன்ற ஒரு பகுதி இருக்கிறது. அந்த இடம் அவ்வளவு அழகாக இருக்கிறது. அப்படியே அந்தக் காட்சியில் லயித்துக் கொண்டிருக்கும்போது அந்தப் பக்கத்தில் ஒரு பெரும் மனிதன் வருகிறான். பெரும் மனிதன் என்றால் 6 அடி 7 அடி மனிதனல்ல; அதையும் விட மிகப் பெரும் மனிதன். அவன் அகழியை நோக்கித் தான் நடந்து வருகிறான். அழகாகத் தெரிகிறான். அவன் முகத்தைப் பார்க்கிறேன். அவனுக்குக் கருவிழிகளில்லை. கண்கள் முழுவதும் வெள்ளையாக இருக்கின்றன. என்னடா இது என்று நினைத்துக் கொண்டிருக்கையில்தான் அவனுக்கு இரண்டு பக்கத்திலும் மற்றும் இரண்டு முகங்கள் இருப்பதைக் காண்கிறேன். அவனது தாடி மீசை ஆகியவற்றோடு சேர்த்துப் பார்க்கையில் சிங்கம் போன்ற முகமாகத் தெரிகிறது. நான் "ஆ" என்று அலறிக் கொண்டே, ஆர்கிமீடிஸ் போல "நான் பாத்துட்டேன், நான் பாத்துட்டேன்" என்று கதறுகிறேன். அதுவரை என்னைக் கவனியாத அம்மனிதன் என்னை நோக்கித் திரும்புகிறான். என் இதயம் கிலி கொள்கிறது. அருகில் இருந்த என் தம்பியையும் மறந்துவிட்டு அச்சத்தால் "ஆ" என்று அலறியபடியே தலைதெறிக்க ஓடுகிறேன். ஓடுகிறேன் ஓடுகிறேன் எவ்வளவு தூரம் என்பது தெரியவில்லை. பிறகு ஒரு வீட்டிற்குள் செல்கிறேன். அவ்வீடு எனக்குத் தெரிந்தவர்கள் யாரோ ஒருவருடைய வீடு என எண்ணுகிறேன். மூச்சுவாங்குகிறது. நான் நிர்வாணமாக இருப்பதை உணர்கிறேன். அங்கே கொடியில் தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு வேட்டியை எடுத்து உடுத்துகிறேன். கனவு கலைந்து வியர்த்து எழுகிறேன். எப்பா, என்ன கனவு இது?

பிறகு தான் பாண்டிச்சேரி நிகழ்வு நினைவுக்கு வந்து மேலுள்ள பதிவில் திருத்தியிருக்கிறேன். 27.03.2016


Wednesday, March 23, 2016

கர்ணனை அனுமதித்த பீஷ்மர்! - பீஷ்ம பர்வம் பகுதி – 124

Bhishma permitted Karna! | Bhishma-Parva-Section-124 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 82)

பதிவின் சுருக்கம் : பீஷ்மரிடம் சென்ற கர்ணன்; கர்ணனிடம் அன்பொழுகப் பேசிய பீஷ்மர்; கர்ணனைப் பாண்டவர்களுடன் சேருமாறு அறிவுறுத்திய பீஷ்மர்; பீஷ்மரின் அறிவுரையை மறுத்துப் போரில் களம் காண பீஷ்மரிடம் அனுமதி கோரிய கர்ணன்; கர்ணனுக்கு அனுமதியளித்த பீஷ்மர்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “சந்தனுவின் மகனான பீஷ்மர் அமைதியடைந்த பிறகு, ஓ! ஏகாதிபதி, அங்கே இருந்த பூமியின் ஆட்சியாளர்கள் அனைவரும் தங்களுக்கு உரிய இடங்களுக்கு {தங்கள் தங்கள் பாசறைகளுக்குத்} திரும்பினர். பீஷ்மரின் படுகொலையைக் கேள்விப்பட்ட [1] மனிதர்களில் காளையான ராதையின் மகன் (கர்ணன்), ஓரளவு அச்சத்தால் தூண்டப்பட்டு அங்கே வந்தான். அவன் {கர்ணன்}, நாணல் படுக்கையில் {கிடப்பதைப் போல} கிடக்கும் [2] அந்தச் சிறப்புவாய்ந்த வீரரை {பீஷ்மரைக்} கண்டான். பிறகு, பெரும்புகழ் கொண்ட அந்த விருஷன் (கர்ணன்), கண்களை மூடிக் கிடந்த அந்த வீரரை {பீஷ்மரை} அணுகி, கண்ணீரால் தடைபட்ட குரலுடன் அவரது பாதத்தில் விழுந்தான். அவன் {கர்ணன் பீஷ்மரிடம்}, “ஓ! குருக்களின் தலைவரே {பீஷ்மரே}, உமது கண்களுக்கு முன்பாக இருந்த போதெல்லாம், உம்மால் எங்கும் வெறுப்புடனே பார்க்கப்பட்ட நான் ராதையின் மகன் {கர்ணன்} {வந்திருக்கிறேன்}” என்றான் [3].


[1] பீஷ்ம பர்வம் பகுதி 121ல் பீஷ்மரின் மரணத்தை நினைத்து வருந்திய குறிப்பு இருக்கிறது.

[2] வேறொரு பதிப்பில், “அவன் {கர்ணன்}, அப்பொழுது கணைகளின் படுக்கையை அடைந்த மகாத்மாவான பீஷ்மரை, ஜனனகாலத்தில் நாணல்படுக்கையில் கிடந்த வீரனும், தலைவனுமான சுப்ரமண்யனைப் போலக் கண்டான்” என்று இருக்கிறது.

[3] வேறொரு பதிப்பில், “ஓ குருக்களில் சிறந்தவரே, யான் ராதையின் மகன்; குற்றம்மற்றவனாயினும் பார்க்கும்பொழுதெல்லாம் உம்மால் வெறுக்கப்படுபவன்” என்று கர்ணன் கூறியதாக இருக்கிறது.

இவ்வார்த்தைகளைக் கேட்டவரும், குருக்களின் கிழட்டுத் தலைவருமான கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, திரையால் [4] மூடப்பட்ட தன் கண்களின் இமைகளை மெல்ல உயர்த்தி, காவலர்களை விலகச் செய்து, அந்த இடத்தில் யாரும் இல்லாததைக் கண்டு {உறுதி செய்து கொண்டு}, மகனை அணைக்கும் தந்தையைப் போல ஒரு கரத்தால் கர்ணனை அணைத்துக் கொண்டு, பெரும்பாசத்துடன் இவ்வார்த்தைகளைச் சொன்னார். {பீஷ்மர் கர்ணனிடம்} “வா, என்னுடன் ஒப்பிட்டுக் கொண்டு எப்போதும் சவால் விடும் எதிராளியான நீ வருவாயாக. நீ என்னிடம் வந்திராவிடில் அஃது உனக்கு நன்றாயிராது என்பதில் ஐயமில்லை. நீ குந்தியின் மகனே, ராதையினுடையவனல்ல {ராதையின் மகன் அல்ல}. அதிரதனும் உன் தந்தையல்ல. ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, உன்னைக் குறித்த இவை அனைத்தையும் நான் நாரதரிடமும், கிருஷ்ண துவைபாயனரிடமும் {வியாசரிடமும்} கேட்டிருக்கிறேன். இவையனைத்தும் உண்மை என்பதில் ஐயமில்லை.

[4] ஒரு வேளை பீளையாக இருக்கலாம்.

ஓ! மகனே {கர்ணா} நான் உன்னிடம் வெறுப்பெதையும் கொண்டிருக்கவில்லை என்பதை நான் உண்மையாகவே சொல்கிறேன். உன் சக்தியைக் குறைப்பதற்காகவே நான் அத்தகு கடும் வார்த்தைகளைப் பயன்படுத்தினேன். ஓ! அற்புத நோன்புகளைக் கொண்டவனே {கர்ணா}, காரணமே இல்லாமல் நீ பாண்டவர்களைத் தவறாகப் பேசுகிறாய். பாவத்தாலேயே நீ இவ்வுலகில் வந்தாய். இதன் காரணமாக உனது இதயம் அப்படி இருக்கிறது. செருக்காலும், இழிந்தோரின் தோழமையாலும் உன் இதயம் தகுதிவாய்ந்த மனிதர்களையும் {புண்ணியவான்களையும்} வெறுக்கிறது. இதன் காரணமாகவே நான் குரு முகாமில் உன்னைக் குறித்து அத்தகு கடும் வார்த்தைகளைப் பேசினேன்.

பூமியில் எதிரியால் தாங்கிக் கொள்ளக் கடினமான உன் போராற்றலைக் குறித்து நான் அறிவேன். பிராமணர்கள் மீது நீ கொண்ட மரியாதையையும், உனது வீரத்தையும், கொடையளிப்பதில் நீ கொண்ட பெரும் பற்றையும் நான் அறிவேன். ஓ! தேவனைப் போன்றவனே {கர்ணா}, மனிதர்களில் உன்னைப் போல வேறு எவனும் இல்லை. குடும்பத்துக்குள் உண்டாகும் பிளவுக்கு அஞ்சியே நான் உன்னைக் குறித்துக் கடும் வார்த்தைகளை எப்போதும் பேசினேன்.

வில்லாளித்தன்மை, ஆயுதத்தைக் குறிபார்த்தல், கர நளினம் {லாகவம்}, ஆயுத பலம் ஆகியவற்றில் நீ பல்குனனுக்கோ {அர்ஜுனனுக்கோ}, உயர் ஆன்ம கிருஷ்ணனுக்கோ இணையானவனாவாய்! ஓ! கர்ணா, காசி நகரத்திற்குத் தனியாக உன் வில்லுடன் சென்று, குரு மன்னனுக்கு {துரியோதனனுக்கு} மணமகளை {பானுமதியை} அடைவதற்காகப் போரில் மன்னர்களைத் தாக்கினாய். வலிமைமிக்கவனும், வெல்லப்பட இயலாதவனும், போரில் தன் ஆற்றல் குறித்து எப்போதும் தற்பெருமை பேசுபவனுமான மன்னன் ஜராசந்தனும் போரில் உனக்கு இணையாக முடியவில்லை. நீ பிராமணர்களுக்கு அர்ப்பணிப்புடன் இருப்பவன்; நீ எப்போதும் நல்ல போரைச் செய்பவன். சக்தியிலும், பலத்திலும் நீ தேவர்களின் பிள்ளைக்கு இணையானவன், மேலும், நிச்சயமாக மனிதர்களுக்கு மேன்மையானவன்.

உனக்கு எதிராக நான் கொண்டிருந்த கோபம் தணிந்துவிட்டது. முயற்சியால் விதியைத் தவிர்க்க முடியாது. ஓ! எதிரிகளைக் கொல்பவனே {கர்ணா}, வீரர்களான பாண்டுவின் மகன்கள் உனக்கு இரத்த {உடன்பிறந்த} சகோதரர்களாவர். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {கர்ணா}, நீ எனக்கு ஏற்புடையதைச் செய்ய விரும்பினால் அவர்களுடன் {பாண்டவர்களுடன்} சேர்வாயாக. ஓ! சூரியனின் மகனே {கர்ணா}, இந்தப் பகையுணர்ச்சிகள் என்னோடு முடியட்டும். பூமியின் மன்னர்கள் அனைவரும் இன்று ஆபத்திலிருந்து விடுபடட்டும்” என்றார் {பீஷ்மர்}.

கர்ணன் {பீஷ்மரிடம்}, “ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவரே {பீஷ்மரே}, இதை நான் அறிவேன். இவை யாவிலும் (நீர் சொல்வதைப் போலவே) ஐயமில்லை. நீர் என்னிடம் சொல்வதைப் போலவே, ஓ! பீஷ்மரே, நான் குந்தியின் மகனே, சூதர் ஒருவரின் மகனல்ல. எனினும், நான் குந்தியால் கைவிடப்பட்டு, சூதர் ஒருவரால் வளர்க்கப்பட்டு வந்தேன். (இவ்வளவு நெடுங்காலத்திற்கு) துரியோதனனின் செல்வத்தை அனுபவித்த நான், அஃதை இப்போது பொய்யாக்கத் துணியேன்.

பாண்டவர்களுக்காக உறுதியாகத் தீர்மானம் செய்திருக்கும் வசுதேவரின் மகனை {கிருஷ்ணனைப்} போல, ஓ! பிராமணர்களுக்கு அபரிமித கொடியளிப்பவரே {பீஷ்மரே}, துரியோதனனுக்காக, என் உடைமைகள், என் உடல், என் பிள்ளைகள், மனைவி ஆகியோரையும் கைவிட நான் தயாராகவுள்ளேன். ஓ! குரு குலத்தவரே {பீஷ்மரே}, நோயால் மரணம் க்ஷத்திரியருக்குரியதில்லை. துரியோதனனைச் சார்ந்தே நான் எப்போதும் பாண்டவர்களை அவமதித்து வந்தேன். இக்காரியங்கள் அதன் வழியில் செல்ல விதிக்கப்பட்டிருக்கிறது. அது தவிர்க்க முடியாததாகும்.

முயற்சியால் விதியை வெல்லத் துணிந்தவர்கள் {இதுவரை} யார் இருந்துள்ளனர்? ஓ! பாட்டா {பீஷ்மரே}, பூமியின் அழிவைக் குறிக்கும் பல்வேறு சகுனங்கள் உம்மால் காணப்பட்டு, சபையிலும் அறிவிக்கப்பட்டது. அந்தப் பாண்டுவின் மகனும் {அர்ஜுனனும்}, வாசுதேவனும் {கிருஷ்ணனும்} பிற மனிதர்களால் வெல்லப்பட முடியாதவர்கள் என்பதை நான் நன்கறிவேன். அவர்களோடே நாம் போரிடத் துணிகிறோம். போரில் நான் பாண்டுவின் மகனை {அர்ஜுனனை} வீழ்த்துவேன். இதுவே என் உறுதியான தீர்மானமாகும்.

(பாண்டவர்களுக்கு எதிரான) இந்தக் கடும் பகையைக் கைவிட இயன்றவனாக நான் இல்லை. மகிழ்ச்சியான இதயத்துடனும், என் வகையின் கடமைகளை என் கண் முன் கொண்டும், நான் தனஞ்சயனை {அர்ஜுனனை} எதிர்ப்பேன். ஓ! வீரரே {பீஷ்மரே}, போரில் உறுதியான தீர்மானத்தைக் கொண்டிருக்கும் எனக்கு உமது அனுமதியைக் கொடுப்பீராக. நான் போரிடுவேன். இதுவே என் விருப்பமாகும். எப்போதாவது நான், கோபத்தாலோ, சிந்தனையற்ற தன்மையினாலோ உமக்கு எதிராகக் கடுஞ்சொற்களைப் பேசியிருந்தாலும், எந்தச் செயலையாவது உமக்கெதிராகச் செய்திருந்தாலும் என்னை நீர் மன்னிப்பதே உமக்குத் தகும்” என்றான் {கர்ணன்}.

பீஷ்மர் {கர்ணனிடம்}, “உண்மையிலேயே, இந்தக் கடும் பகையை உன்னால் கைவிட இயலவில்லையெனில், ஓ! கர்ணா நான் உனக்கு அனுமதியளிக்கிறேன். சொர்க்கத்தில் விருப்பத்துடன் போரிடுவாயாக. கோபமில்லாமலும், பழியுணர்ச்சியின்றியும், உனது சக்திக்கும், துணிவுக்கும் தகுந்த வகையில், அற நடத்தை நோற்று மன்னனுக்கு {துரியோதனனுக்குப்} பணிசெய்வாயாக. ஓ! கர்ணா, என் அனுமதியைப் பெற்றுக் கொள்வாயாக. நீ எதை வேண்டினாயோ அதை அடைவாயாக. நீ தனஞ்சயன் {அர்ஜுனன்} மூலமாக, க்ஷத்திரியனின் கடமைகளை நிறைவேற்ற வல்ல உலகங்கள் அனைத்தையும் {இதன் பிறகு} அடைவாயாக.

நேர்மையான போரைத் தவிர, வேறெதிலும் க்ஷத்திரியன் ஒருவனுக்குப் பெருமகிழ்ச்சி இல்லை என்பதால், செருக்கிலிருந்து விடுபட்டு, உன் பலம் மற்றும் சக்தியை நம்பி போரில் ஈடுபடுவாயாக. அமைதியை ஏற்படுத்த நான் நீண்ட காலம் பெருமுயற்சிகளைச் செய்தேன். ஆனால், ஓ! கர்ணா, நான் அந்தப் பணியில் வெல்லவில்லை. இதை நான் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன்” என்றார் {பீஷ்மர்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “கங்கையின் மைந்தர் {பீஷ்மர்} இதைச் சொன்னதும், பீஷ்மரை வணங்கிய அந்த ராதையின் மகன் {கர்ணன்}, அவரிடம் மன்னிப்பைப் பெற்று, தன் தேரில் ஏறி, உமது மகனை (அவனது {துரியோதனனின்} பாசறையை} நோக்கிச் சென்றான்” {என்றான் சஞ்சயன்}" {என்றார் வைசம்பாயனர்}.

***************** பீஷ்ம வத உபபர்வம் முற்றிற்று ***************
********* பீஷ்ம பர்வம் முற்றிற்று *********ஆங்கிலத்தில் | In English

துரியோதனனை வேண்டிய பீஷ்மர்! - பீஷ்ம பர்வம் பகுதி – 123

Bhishma's solicitation to Duryodhana! | Bhishma-Parva-Section-123 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 81)

பதிவின் சுருக்கம் : பதினோராம் நாள் காலையில் பீஷ்மரைச் சந்தித்த கௌரவர்களும், பாண்டவர்களும்; மன்னர்களிடம் தண்ணீர் கேட்ட பீஷ்மர்; அருஞ்செயலால் தண்ணீர் கொணர்ந்த அர்ஜுனன்; அர்ஜுனனைப் புகழ்ந்த பீஷ்மர்; அர்ஜுனனின் மகிமை; துரியோதனனை அறிவுறுத்திய பீஷ்மர்; பீஷ்மரின் அறிவுரைகளை ஏற்காத துரியோதனன்...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “அந்த இரவு கடந்ததும், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, மன்னர்கள் அனைவரும், பாண்டவர்களும், தார்தராஷ்டிரர்களும் பாட்டனிடம் {பீஷ்மரிடம்} சென்றனர். அந்த க்ஷத்திரியர்கள், தங்கள் வகையைச் சார்ந்த காளையும், குருக்களில் முதன்மையனவரும், வீரப்படுக்கையில் கிடந்த அந்த வீரரை {பீஷ்மரை} வணங்கி, அவர் முன்னிலையில் நின்றனர்.

அந்த இடத்திற்கு வந்த ஆயிரக்கணக்கான கன்னியர், அந்தச் சந்தனுவின் மகன் {பீஷ்மர்} மீது சந்தனப் பொடிகளையும், பொரிகளையும், மலர்மாலைகளையும் பொழிந்தனர். பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள், சாதாரணப் பார்வையாளர்கள் ஆகியோர் அனைவரும், சூரியனைக் காண விரும்பும் உலக உயிரினங்களைப் போல, சந்தனுவின் மகனை {பீஷ்மரைக் காண} அணுகினர். நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான எக்காளங்கள், நர்த்தகர்கள், கைவினைஞர்கள் ஆகியோரும் முதிர்ந்த குரு பாட்டனிடம் {பீஷமரிடம்} வந்தனர்.


குருக்களும், பாண்டவர்களும் போரை நிறுத்தி, தங்கள் கவசங்களை அகற்றி, தங்கள் ஆயுதங்களை ஒருபுறம் கிடத்திவிட்டு, எதிரிகளைத் தண்டிப்பவரும் வெல்லப்பட முடியாதவருமான தேவவிரதரிடம் {பீஷ்மரிடம்} ஒன்று சேர்ந்து வந்தனர். பழங்காலத்தைப் போலவே ஒன்றாகக் கூடி வந்த அவர்கள், தங்கள் தங்கள் வயதுக்கேற்றபடி ஒருவரோடொருவர் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டனர்.

நூற்றுக்கணக்கான பாரத மன்னர்களால் நிறைந்த அந்தச் சபையானது, பீஷ்மரால் அலங்கரிக்கப்பட்டு, சொர்க்கத்தில் உள்ள தேவர்களின் சபையைப் போலச் சுடர்விட்டபடி அழகாகத் தெரிந்தது. கங்கையின் மைந்தரை {பீஷ்மரை} மதிக்கும் மன்னர்களால் ஆன அந்தச் சபை, தங்கள் தலைவனான பாட்டனை (பிரம்மனை) வழிபடும் தேவர்களின் சபையைப் போல அழகாகத் தெரிந்தது.

எனினும் பீஷ்மர், ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, (தன் மேனியில் தைத்திருந்த) கணைகளால் எரிந்து கொண்டிருந்தாலும் மனோ பலத்தால் தன் வேதனைகளை அடக்கிக் கொண்டு, பாம்பொன்றைப் போலப் பெருமூச்சுவிட்டுக் கொண்டிருந்தார். அந்தக் கணைகளால் எரிச்சலடைந்த தன் உடலுடன், ஆயுதக் காயங்களின் விளைவால், கிட்டத்தட்ட தன் உணர்வுகளை இழந்த நிலையில் இருந்த பீஷ்மர், அந்த மன்னர்களின் மேல் தன் கண்களைச் செலுத்தி, {அவர்களிடம்} தண்ணீர் கேட்டார்.

அப்போது அந்த க்ஷத்திரியர்கள், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சிறந்த உணவுப் பொருட்களையும், குளிர்ந்த நீர் கொண்ட குடங்கள் பலவற்றையும் அங்கே கொண்டு வந்தனர். தனக்காகக் கொண்டுவரப்பட்ட அந்த நீரைக் கண்ட சந்தனுவின் மகன், “மனித மகிழ்ச்சிக்குகந்த {பயன்பாட்டுக்குரிய} எந்தப் பொருளையும் என்னால் இப்போது பயன்படுத்த இயலாது. மங்கிய மாந்தர் இனத்தில் இருந்து நான் நீக்கப்பட்டுவிட்டேன். நான் கணைகளின் படுக்கையில் கிடக்கிறேன். சந்திரனும், சூரியனும் திரும்புவதை எதிர்பார்த்தே நான் இங்குத் தங்கியிருக்கிறேன்” என்றார். இவ்வார்த்தைகளைப் பேசிய பிறகு, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அம்மன்னர்களை நிந்தித்த அவர் {பீஷ்மர்}, “நான் அர்ஜுனனைக் காண விரும்புகிறேன்” என்றார். பிறகு, வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட அர்ஜுனன், அங்கே வந்து, இருகரங்களையும் கூப்பிப் பாட்டனை {பீஷ்மரை} மரியாதையுடன் வணங்கியபடி, “நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.

நீதிமிக்க ஆன்மா கொண்ட பீஷ்மர், தன் முன்னிலையில் இப்படி நின்று, மரியாதை நிரம்பிய வணக்கங்களைத் தனக்குச் செலுத்திய பாண்டுவின் மகனை {அர்ஜுனனைக்} கண்டு, மகிழ்ச்சியுடன் அந்தத் தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்}, “உனது கணைகளால் முழுவதும் மறைக்கப்பட்டுள்ள என் உடல் பெரிதும் எரிகிறது! என் உடலின் முக்கிய அங்கங்கள் யாவும் வேதனையை அனுபவிக்கின்றன. என் வாய் உலர்ந்திருக்கிறது. ஓ! அர்ஜுனா, வேதனையால் பீடிக்கப்பட்டிருக்கும் உடலைக் கொண்ட எனக்குத் தண்ணீரைத் தருவாயாக. நீ ஒரு பெரும் வில்லாளியாவாய். முறையாக எனக்குத் தண்ணீரைத் தர நீயே இயன்றவனாவாய்” என்றார் {பீஷ்மர்}.

“அப்படியே ஆகட்டும்” என்று சொன்ன வீர அர்ஜுனன், தன் தேரில் ஏறி, தன் காண்டீவத்தைப் பலமாகத் தட்டி, அதை வளைக்கத் தொடங்கினான். அவனது {அர்ஜுனனது} வில்லின் நாணொலியையும், இடிமுழக்கத்திற்கு ஒப்பான அவனது உள்ளங்கைத் தட்டல்களையும் கேட்ட மன்னர்கள் அனைவரும் அச்சத்தால் தூண்டப்பட்டனர். பிறகு, அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவன் {அர்ஜுனன்}, தன் தேரில் ஏறி, படுத்துக் கிடந்தவரும், ஆயுதபாணிகள் அனைவரிலும் முதன்மையானவருமான பாரதர்களின் தலைவரை {பீஷ்மரை} வலம் வந்தான். மந்திரங்களால் தூண்டப்பட்ட, பர்ஜன்ய ஆயுதத்தின் அடையாளத்தைக் கொண்ட சுடர்மிக்கக் கணையொன்றைக் குறிபார்த்தப் பாண்டுவின் மகன் பார்த்தன் {அர்ஜுனன்}, {அவ்வாயுதத்தைக் கொண்டு}, முழுப் படையும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, பீஷ்மர் கிடந்த இடத்திற்கும் சிறிது தெற்கில் [1] பூமியைத் துளைத்தான். பிறகு அங்கே, தூய்மையானதும், மங்கலகரமானதும், குளுமையானதும், அமுதத்துக்கு ஒப்பானதும், தேவ மணமும், சுவையும் கொண்டதுமான நீரூற்று ஒன்று எழுந்தது. பார்த்தன் {அர்ஜுனன்}, அந்தக் குளிர்ந்த நீரூற்றைக் கொண்டு, தேவர்களைப் போன்ற செயல்களும், ஆற்றலும் கொண்டவரும், குருக்களில் காளையுமான அந்தப் பீஷ்மரை மனம் நிறையச் செய்தான்.

[1] வேறொரு பதிப்பில் பீஷ்மருக்கு வலப்பக்கத்தில் என்றிருக்கிறது.

சக்ரனுக்கு {இந்திரனுக்கு} ஒப்பான செயல்பாடுகளைக் கொண்ட பார்த்தனின் அந்த அருஞ்செயலால், பூமியின் மன்னர்கள் அனைவரும் ஆச்சரியத்தால் நிறைந்தனர். ஆச்சரியத்தால் நிறைந்தவர்களான அங்கே இருந்த மன்னர்கள் அனைவரும் தங்கள் ஆடைகளை (காற்றில்) அசைத்தனர். சங்குகளின் முழக்கமும், பேரிகைகளின் ஒலியும் களமெங்கும் உரக்கக் கேட்கப்பட்டன.

தன் தாகம் தணிந்த சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்த மன்னர்கள் அனைவரின் முன்னிலையிலும் ஜிஷ்ணுவை {அர்ஜுனனை} உயர்வான இவ்வார்த்தைகளால் புகழ்ந்தார், அவர் {பீஷமர்} “ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே ஓ! குருகுலத்து மகனே {அர்ஜுனா}, உன்னிடம் {காணப்படும்} இஃது ஆச்சரியமானதல்ல, ஓ! அளவிலா காந்தி கொண்டவனே {அர்ஜுனா}, நீ ஒரு புராதன முனிவன் என்று நாரதரே சொல்லியிருக்கிறார்! உண்மையில், வாசுதேவனை {கிருஷ்ணனை} உனது கூட்டாளியாகக் கொண்ட நீ, தேவர்கள் அனைவருடனும் கூடிய தேவர்களின் தலைவனே {இந்திரனே} அடையத் துணியாத வலிமையான அருஞ்செயல்கள் பலவற்றை அடைவாய். இது போன்ற விஷயங்களில் {தேவ ரகசியங்களில்} அறிவு கொண்டோர், க்ஷத்திரிய குலம் முழுவதையும் அழிப்பவன் நீ என்று அறிவர். உலகத்தில் உள்ள வில்லாளிகளில் நீ ஒருவனே வில்லாளியாவாய். மனிதர்களில் முதன்மையானவன் நீயே.

இவ்வுலகில், உயிரினங்களில் அனைத்திலும் முதன்மையான மனிதர்கள், சிறகு படைத்த உயிரினங்கள் அனைத்திலும் முதன்மையான கருடன், நீர் கொள்ளிடங்கள் அனைத்திலும் முதன்மையான கடல், நான்கு கால் உயிரினங்களில் முதன்மையான பசு, ஒளிப் பொருட்கள் அனைத்திலும் முதன்மையான சூரியன், மலைகள் அனைத்திலும் முதன்மையான இமயம்; சாதிகள் அனைத்திலும் முதன்மையான பிராமணன் ஆகியவற்றைப் போல வில்லாளிகள் அனைவரிலும் நீயே முதன்மையானவன் ஆவாய். என்னாலும், விதுரன், துரோணர், ராமர் {பரசுராமர்} [2], ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} ஆகியோராலும் சஞ்சயனாலும் கூட மீண்டும் மீண்டும் சொல்லப்பட்ட வார்த்தைகளைத் திருதராஷ்டிரன் மகன் (துரியோதனன்) கேட்கவில்லை. ஒரு முட்டாளைப் போல அறிவற்ற துரியோதனன் அந்த வார்த்தைகளின் மீது நம்பிக்கை கொள்ளவில்லை. அனைத்து வழிமுறைகளையும் மீறிய அவன் {துரியோதனன்} பீமனின் வல்லமையால் வீழ்த்தப்பட்டு எப்போதும் கிடக்க வேண்டியிருக்கும் என்பது உறுதி” என்றார் {பீஷ்மர்}.

[2] இவர் பரசுராமராகவே இருக்க வேண்டும், இருப்பினும் வேறொரு பதிப்பில் இது பலராமன் என்று குறிக்கப்படுகிறது.

அவரது இவ்வார்த்தைகளைக் கேட்ட குரு மன்னன் துரியோதனன், இதயத்தால் மகிழ்ச்சியற்றவனானான். அவனை {துரியோதனனைக்} கண்ட சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, “ஓ! மன்னா {துரியோதனா}, கேட்பாயாக. உன் கோபத்தைக் கைவிடுவாயாக! ஓ! துரியோதனா, அமுத மணம் கொண்ட குளுமையான அந்த நீரூற்றைப் புத்திசாலிப் பார்த்தன் {அர்ஜுனன்} எவ்வாறு உண்டாக்கினான் என்பதை நீ கண்டாய். இத்தகு அருஞ்செயலைச் செய்யக்கூடிய வேறு எவனும் இவ்வுலகில் இல்லை. அக்னி, வருணன், சோமன், வாயு, விஷ்ணு ஆகியோருக்கு உடையவையும், இந்திரன், பசுபதி, பரமேஷ்டி {பிரம்மன்}, பிரஜாபதி, தாத்ரி {தாதா}, தாஷ்ட்ரி {தவஷ்டா}, சாவித்ரி {ஸவிதா}, விவஸ்வான் ஆகியோருக்கு உடையவையுமான இவ்வாயுதங்கள் அனைத்தையும் மனிதர்களின் இவ்வுலகில் தனஞ்சயன் {அர்ஜுனன்} மட்டுமே அறிவான் [3]. தேவகியின் மகனான கிருஷ்ணனும் அவற்றை அறிவான். ஆனால் அவற்றை அறிந்தவன் என வேறு எவனும் இல்லை. ஓ! ஐயா {துரியோதனா}, இந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, போரில் தேவர்களும் அசுரர்களும் இணைந்து வந்தாலும் வீழ்த்தப்பட முடியாதவனாவான். இந்த உயர் ஆன்மாவின் {அர்ஜுனனின்} சாதனைகள் மனித சக்திக்கு அப்பாற்பட்டவையாகும்.

[3] வேறொரு பதிப்பில் இப்பத்தி, “அர்ஜுனன், ஆக்னேயாஸ்திரம், வாருணாஸ்திரம், ஸௌம்யாஸ்திரம், வாயவ்யாஸ்திரம், வைஷ்ணாவாஸ்திரம், ஐந்திராஸ்திரம், பாசுபதாஸ்திரம், உலகங்களைப் படைத்த பிரம்ம தேவனிடம் கிடைத்த பிரம்மாஸ்திரம், தாதாவையும். தவஷ்டாவையும், ஸவிதாவையும், விவஸ்வானையும் தேவதையாகக் கொண்ட அஸ்திரங்கள் ஆகிய இவை அனைத்தையும் அறிவான். இம்மண்ணுலகனைத்திலும் தனஞ்சயன் ஒருவனே இவ்வஸ்திரங்களை அறிகிறான்” என்று இருக்கிறது.

உண்மையான வீரனும், போரின் ஆபரணமும், போரில் சாதித்தவனுமான அந்தப் போர்வீரனை {அர்ஜுனனைக்} கொண்டு, ஓ! மன்னா {துரியோதனா} விரைவில் அமைதி ஏற்படுத்தப்படட்டும். வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட கிருஷ்ணன் கோபத்துக்கு ஆட்படாமல் இருக்கும்போதே, ஓ! குருக்களின் தலைவா {துரியோதனா} வீரர்களான பார்த்தர்களுடன் {பாண்டர்வளுடன்}, ஓ! ஐயா {துரியோதனா} அமைதி ஏற்படுத்தப்படுவதே தகும். ஓ! ஏகாதிபதி {துரியோதனா}, எஞ்சியிருக்கும் இந்த உனது தம்பிகள் கொல்லப்படாமல் இருக்கும்போதே,  அமைதி {சமாதானம்} ஏற்படட்டும். கோபத்தால் எரியும் கண்களுடன் கூடிய யுதிஷ்டிரன், போரில் உனது துருப்புகளை எரிக்காதிருக்கும்போதே அமைதி ஏற்படட்டும். பாண்டுவின் மகன்களான நகுலன், சகாதேவன், பீமசேனன் ஆகியோர் உன் படையை நிர்மூலமாக்காமல் இருக்கும்போதே, ஓ ஏகாதிபதி {துரியோதனா} வீரப் பாண்டவர்களுக்கும், உனக்கும் இடையில் நட்புறவுகள் மீட்கப்பட வேண்டும் என்று எனக்குத் தோன்றுகிறது.

ஓ! ஐயா, இந்தப் போர் என் மரணத்தோடு முடியட்டும்! பாண்டவர்களுடன் அமைதி {சமாதானம்} கொள்வாயாக. ஓ! பாவமற்றவனே {துரியோதனா}, என்னால் உனக்குச் சொல்லப்படும் இவ்வார்த்தைகள் உனக்கு ஏற்புடையனவாகட்டும். உனக்கும், (குரு) குலத்திற்கும் இதுவே நன்மையைத் தரும் என நான் கருதுகிறேன். உன் கோபத்தைக் கைவிட்டு, பார்த்தர்களுடன் அமைதியை ஏற்படுத்துவாயாக. ஏற்கனவே பல்குனன் {அர்ஜுனன்} செய்திருப்பதே போதுமானது. பீஷ்மனின் மரணத்தோடு நட்புறவுகள் மீட்கப்படட்டும்! எஞ்சிய இவர்கள் (இந்த வீரர்கள்) வாழட்டும்!

ஓ! மன்னா {துரியோதனா}, மனம் இரங்குவாயாக! பாண்டவர்களுக்கு நாட்டில் பாதியைக் கொடுப்பாயாக. நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனை இந்திரப்பிரஸ்தத்திற்குப் போகட்டும். ஓ! குருக்களின் தலைவா {துரியோதனா}, உறவினர்களுக்குள் பிளவினை ஏற்படுத்தும் அற்பத்தனத்திற்கான நிந்தனையைப் பெற்று, பூமியின் மன்னர்களிடம் பழிச்சொல்லை அடையாதே. என் மரணத்தோடு அனைவருக்கும் அமைதி உண்டாகட்டும்! பூமியின் ஆட்சியாளர்களான இவர்கள் ஒருவரோடொருவர் மகிழ்ச்சியாகக் கலக்கட்டும்! மகன் தந்தையை அடையட்டும், சகோதரியின் மகன் தாய்மாமனை அடையட்டும்! இந்நேரத்திற்குத் தகுந்த என்னுடைய சரியான வார்த்தைகளை மூடத்தனத்தாலோ, புத்தி குறைவாலோ நீ கேளாமற்போனால் பிறகு நீ பெரிதும் வருந்த வேண்டியிருக்கும். நான் சொல்வது உண்மையேயாகும். எனவே, இப்போதே {போரில் இருந்து} விலகுவாயாக” என்றார் {பீஷ்மர்}.

கடலுக்குச் செல்வபளின் (கங்கையின்) மகன் {பீஷ்மர்}, மன்னர்களுக்கு மத்தியில் இருந்த துரியோதனனிடம் பாசத்தால் இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு அமைதியானார். கணைக்காயங்களால் தன் முக்கிய உறுப்புகள் எரிந்து கொண்டிருந்தாலும், தன் வேதனைகளை அடக்கிக் கொண்ட அவர் {பீஷ்மர்}, தன்னை யோகத்தில் ஆழ்த்தினார்.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “அறம், பொருள் ஆகிய இரண்டும் நிறைந்த இந்த நன்மையான அமைதிநிறைந்த வார்த்தைகளை உமது மகன் {துரியோதனன்} கேட்டாலும், சாகும் மனிதன் மருந்தை மறுப்பதைப் போல அவற்றை ஏற்றானில்லை” {என்றான் சஞ்சயன்}. 


ஆங்கிலத்தில் | In English

Tuesday, March 22, 2016

பீஷ்மருக்குத் தலையணை அமைத்த அர்ஜுனன்! - பீஷ்ம பர்வம் பகுதி – 122

Arjuna made a pillow for Bhishma! | Bhishma-Parva-Section-122 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 80)

பதிவின் சுருக்கம் : பீஷ்மரிடம் தான் அவரது அடிமை என்று சொன்ன அர்ஜுனன்; அர்ஜுனனிடம் தலையணை கேட்ட பீஷ்மரும், அதை அமைத்துக் கொடுத்த அர்ஜுனனும்; அர்ஜுனனைப் பாராட்டிய பீஷ்மர்; மருத்துவர்களைத் திருப்பிய அனுப்பிய துரியோதனன்; கிருஷ்ணன், யுதிஷ்டிரன் பேச்சு...

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “தன் பெரிய வில்லில் நாணேற்றி, பாட்டனை {பீஷ்மரை} மரியாதையுடன் வணங்கிய அர்ஜுனன், கண்ணீரால் நிறைந்த கண்களுடன் இவ்வார்த்தைகளைச் சொன்னான், “ஓ! குருக்களில் முதன்மையானவரே, ஆயுதங்களைத் தரிப்போர் அனைவரிலும் முதலானவரே, ஓ! வெல்லப்பட்டமுடியாதவரே {பீஷ்மரே}, நான் உமது அடிமை, எனக்குக் கட்டளையிடுவீராக. ஓ! பாட்டா {பீஷ்மரே}, நான் என்ன செய்ய வேண்டும்?” {என்றான் அர்ஜுனன்}.

அதற்குச் சந்தனுவின் மகன் {பீஷ்மர்} அவனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ! ஐயா {அர்ஜுனா}, என் தலை தொங்குகிறது. ஓ! குருக்களில் முதன்மையானவனே, ஓ! பல்குனா {அர்ஜுனா}, எனக்குத் தலையணை தருவாயாக. உண்மையில், ஓ! வீரா {அர்ஜுனா}, எனக்குப் படுக்கையாகத் தகுந்ததைத் தாமதமில்லாமல் எனக்குத் தருவாயாக. ஓ! பார்த்தா {அர்ஜுனா}, விற்கள் தாங்குவோர் அனைவரிலும் முதன்மையான நீயே அதற்குத் தகுந்தவன். க்ஷத்திரியர்களின் கடமைகளை அறிந்தவன் நீயே, மேலும், புத்திக்கூர்மையையும், நற்குணத்தையும் கொண்டவன் நீயே” என்றார் {பீஷ்மர்}.


பிறகு, “அப்படியே ஆகட்டும்” என்று சொன்ன பல்குனன் {அர்ஜுனன்} பீஷ்மர் சொன்னதைச் செய்ய விரும்பினான். காண்டீவத்தையும், நேரான கணைகள் சிலவற்றையும் எடுத்து, மந்திரங்களால் அவற்றைத் தூண்டி, பாரதக் குலத்தின் வலிமைமிக்கத் தேர்வீரரான அந்த ஒப்பற்றவரிடம் அனுமதி பெற்ற அர்ஜுனன், பிறகு, பெரும் சக்தியுடன் கூடிய மூன்று கூரிய கணைகளைக் கொண்டு பீஷ்மரின் தலையைத் தாங்கினான் {தூக்கி நிறுத்தினான்}.

பிறகு, பாரதர்களின் தலைவரும், அறத்தின் உண்மைகளை அறிந்தவரும், அற ஆன்மா கொண்டவருமான பீஷ்மர், தமது எண்ணத்தை அறிந்து, அந்தச் சாதனையை அடைந்த அர்ஜுனனைக் கண்டு மிகவும் மனம் நிறைந்தார். இப்படி அவருக்கு {பீஷ்மருக்கு} அந்தத் தலையணை கொடுக்கப்பட்டதும், அவர் {பீஷ்மர்} தனஞ்சயனை {அர்ஜுனனைப்} புகழ்ந்தார்.

அங்கிருந்த பாரதர்கள் அனைவரின் மீதும் தன் கண்களைச் செலுத்திய அவர் {பீஷ்மர்}, போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், தன் நண்பர்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனுமான குந்தியின் மகன் அர்ஜுனனிடம், “ஓ! பாண்டுவின் மகனே {அர்ஜுனா}, எனக்குப் படுக்கையாகக் கூடிய ஒரு தலையணையை நீ எனக்குக் கொடுத்துவிட்டாய். நீ வேறுவகையில் செயல்பட்டிருந்தாயானால், கோபத்தால் நான் உன்னைச் சபித்திருப்பேன். ஓ! வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே {அர்ஜுனா}, தன் கடமைகளை நோற்ற க்ஷத்திரியன் ஒருவன், கணைகளாலான தன் படுக்கையில், போர்க்களத்தில் இப்படியே உறங்க வேண்டும்”, என்றார்.

பீபத்சுவிடம் {அர்ஜுனனிடம்} இப்படிப் பேசிய அவர் {பீஷ்மர்}, பிறகு அப்போது அங்கிருந்த மன்னர்கள் மற்றும் இளவரசர்களிடம், “பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} எனக்குக் கொடுத்திருக்கும் தலையணையைக் காண்பீராக. சூரியன் வடகோட்டிற்கு {உத்தர அயனத்திற்குத்} திரும்பும் வரை நான் இந்தப் படுக்கையிலேயே உறங்குவேன் {கிடப்பேன்}. அப்போது என்னிடம் வரும் மன்னர்கள் என்னைக் காண்பார்கள் (உயிரை விடும் என்னைக் காண்பார்கள்). சூரியன் ,பெரும் வேகம் கொண்டதும், ஏழு குதிரைகள் பூட்டப்பட்டதுமான தன் தேரில் வைஸ்ரவணன் {குபேரன்} இருக்கும் திசையை நோக்கிச் செல்லும்போது, அன்புக்குரிய நண்பனை விட்டுப் பிரியும் அன்பு நண்பனைப் போல நான் என் உயிரை விடுவேன். மன்னர்களே {நான் இருக்கும் இந்த} என் இடத்தைச் சுற்றி அகழ் ஒன்று தோண்டப்பட வேண்டும். இப்படி நூறு கணைகளால் துளைக்கப்பட்ட நான் சூரியனுக்கு என் துதிகளைச் செலுத்தப் போகிறேன். உங்களைப் பொறுத்தவரை, மன்னர்களே, பகையைக் கைவிட்டு, போரிடுவதை நிறுத்துவீராக” என்றார் {பீஷ்மர்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} தொடர்ந்தான், “பிறகு, கணைகளைப் பிடுங்குவதில் திறம்பெற்றவர்களும், (தங்கள் தொழிலுக்குத்) தேவையான அனைத்து உபகரணங்களுடன் கூடியவர்களும், (தங்கள் அறிவியலில்) நன்கு பயிற்சி கொண்டவர்களுமான அறுவைசிகிச்சை நிபுணர்கள் சிலர் அவரிடம் {பீஷ்மரிடம்} அங்கே வந்தனர்.

அவர்களைக் கண்ட கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, உமது மகனிடம் {துரியோதனனிடம்}, “இந்த மருத்துவர்களுக்கு உரிய மரியாதைகளை வழங்கி, செல்வங்களைப் பரிசளித்து அனுப்புவாயாக. இந்நிலையை அடைந்தும் எனக்கு மருத்துவர்களால் என்ன தேவை இருக்கிறது? க்ஷத்திய செயல்பாடுகளில் மிகவும் மெச்சத்தகுந்த மிக உயர்ந்த நிலையை நான் வென்றிருக்கிறேன் {அடைந்திருக்கிறேன்}. மன்னர்களே, கணைகளின் படுக்கையில் கிடக்கும் நான் மருத்துவர்களின் சிகிச்சையை ஏற்பது எனக்குத் தகாது. மனிதர்களின் ஆட்சியாளர்களே, என் உடலில் உள்ள இந்தக் கணைகளுடனே நான் எரிக்கப்பட வேண்டும்” என்றார் {பீஷ்மர்}.

அவரது {பீஷ்மரின்} வார்த்தைகளைக் கேட்ட உமது மகன் துரியோதனன், மருத்துவர்களுக்குத் தகுந்த மரியாதைகளைச் செலுத்தி அவர்களை அனுப்பி வைத்தான். பல்வேறு ஆட்சிப்பகுதிகளின் மன்னர்களான அவர்கள், அளவிலா சக்தி கொண்ட பீஷ்மர், அறத்தில் நிலையான உறுதியை வெளிப்படுத்தியதைக் கண்டு ஆச்சரியத்தில் நிறைந்தனர். இப்படி உமது தந்தைக்குக் தலையணை கொடுத்தவர்களும், வலிமைமிக்கத் தேர்வீரர்களும் அந்த மனிதர்களின் ஆட்சியாளர்களுமான பாண்டவர்களும், கௌரவர்களும், அந்தச் சிறந்த படுக்கையில் கிடந்த உயர் ஆன்ம பீஷ்மரை மீண்டும் ஒன்றுசேர்ந்து அணுகினர். உயர் ஆன்மா கொண்ட அவரை {பீஷ்மரை} மரியாதையுடன் வணங்கி, அவரை மும்முறை வலம் வந்து, அவரது பாதுகாப்புக்காகச் சுற்றிலும் காவலர்களை நிறுத்தி அவ்வீரர்கள் {பாண்டவர்களும், கௌரவர்களும்}, மேனியெங்கும் குருதியால் நனைந்து, தங்கள் இதயங்கள் துயரத்தில் மூழ்கி, தாங்கள் கண்டவற்றை நினைத்துக் கொண்டே, மாலை வேளையில் ஓய்வுக்காகத் பாசறைகளுக்குச் சென்றனர்.

பிறகு, வலிமைமிக்க மாதவன் {கிருஷ்ணன்}, பீஷ்மரின் வீழ்ச்சியால் இன்பத்தில் நிறைந்து, ஒன்றாகச் சேர்ந்து மகிழ்ச்சியாக அமர்ந்திருந்த வலிமைமிக்கத் தேர்வீரர்களான பாண்டவர்களைச் சரியான நேரத்தில் அணுகி, தர்மனின் மகனான யுதிஷ்டிரனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான், “ஓ! குருகுலத்தவரே {யுதிஷ்டிரரே}, நற்பேறாலேயே வெற்றி உமதானது. நற்பேறாலேயே மனிதர்களால் கொல்லப்பட இயலாதவரும், கலங்கடிக்கப்பட இயலாத வலிமைமிக்கத் தேர்வீரருமான பீஷ்மர் வீழ்த்தப்பட்டார். அல்லது, ஒருவேளை, விதிவசத்தால், அனைத்து ஆயுதங்களிலும் கரைகண்டவரான அந்தப் போர்வீரர் {பீஷ்மரை}, உமது கண்களால் மட்டுமே கொல்ல முடிந்தவரான உம்மை எதிரியாக அடைந்து, கோபம் நிறைந்த உமது பார்வையால் எரிக்கப்பட்டார்” {என்றான் கிருஷ்ணன்}.

கிருஷ்ணனால் இப்படிச் சொல்லப்பட்டதும், நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், அந்த ஜனார்த்தனனிடம் {கிருஷ்ணனிடம்}, “உன் அருளாலேயே வெற்றி {கிடைக்கும்}, உன் கோபத்தாலேயே தோல்வியும் {கிடைக்கும்}! உன்னிடம் அர்ப்பணிப்பு கொண்டோரின் அச்சங்களை விலக்குபவன் நீயே! எங்கள் புகலிடம் நீயே! ஓ! கேசவா {கிருஷ்ணா} யாரை போரில் எப்போதும் நீ காக்கிறாயோ, யாருடைய நன்மைக்காக எப்போதும் நீ ஈடுபடுகிறாயோ, அவர்கள் வெற்றியை அடைவது அச்சரியமில்லை. எங்கள் புகலிடமாக உன்னை அடைந்த நான் எதையுமே ஆச்சரியமானதாகக் கருதவில்லை” என்றான் {யுதிஷ்டிரன்}. இப்படி அவனால் {யுதிஷ்டிரனால்} சொல்லப்பட்டதும், ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} புன்னகைத்தவாறே, “ஓ! மன்னர்களில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, உம்மிடம் இருந்து மட்டுமே இவ்வார்த்தைகள் வர முடியும்” என்று பதிலுரைத்தான்” {என்றான் சஞ்சயன்}. 


ஆங்கிலத்தில் | In English

Monday, March 21, 2016

திடீரென விழுந்த துரோணர்! - பீஷ்ம பர்வம் பகுதி – 121

Drona fell suddenly! | Bhishma-Parva-Section-121 | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 79)

பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரன் அடைந்த வேதனை; கௌரவர்களின் துயரமும், பீமசேனனின் மகிழ்ச்சியும்; பீஷ்மர் கொல்லப்பட்டதைத் துரோணரிடம் தெரிவித்த துச்சாசனன்; அதிர்ச்சியில் மயங்கி விழுந்த துரோணர்; பீஷ்மரிடம் சென்ற பாண்டவர்களும், கௌரவர்களும்; அர்ஜுனனிடம் தலையணை கேட்ட பீஷ்மர்...

திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம் சொன்னார்}, “ஐயோ, ஓ! சஞ்சயா, தன் மரியாதைக்குரிய தந்தைக்காக {சந்தனுவிற்காகப்} பிரம்மச்சாரியானவரும், தேவர்களைப் போன்றவருமான பீஷ்மரை இழந்த போது (என்) வீரர்களின் நிலை எவ்வாறு இருந்தது? பீஷ்மர், துருபதன் மகனை {சிகண்டியை} இழிவாகக் கருதி அவனைத் தாக்கதிருந்தபோதே பாண்டவர்களால் குருக்களும் மற்றவர் அனைவரும் கொல்லப்பட்டதாகவே நான் கருதினேன். இழிந்த நிலையில் இருக்கும் நான், இன்று என் தந்தை {பீஷ்மர்} கொல்லப்பட்டதையும் கேட்டேன்.


இதைவிடக் கனமான துன்பம் வேறென்ன இருக்க முடியும்? ஓ! சஞ்சயா, பீஷ்மரின் மரணத்தைக் கேட்டும் நூறு துண்டுகளாக உடையாமல் இருக்கும் என் இதயம் நிச்சயம் உருக்காலானதே. ஓ! சிறந்த நோன்புகளைக் கொண்டவனே {சஞ்சயா}, குரு குலச் சிங்கமான வெற்றியை விரும்பும் பீஷ்மர் போரில் கொல்லப்பட்ட போது, என்ன செய்தார் என்பதை எனக்குச் சொல்வாயாக. தேவவிரதர் {பீஷ்மர்} போரில் கொல்லப்பட்டார் என்பதை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ஐயோ, பழங்காலத்தில் ஜமதக்னி மகனின் {பரசுராமரின்} தெய்வீக ஆயுதங்களாலும் கொல்லப்படாத அவர் {பீஷ்மர்}, ஐயோ துருபதன் மகனான பாஞ்சால இளவரசன் சிகண்டியால் இப்போது கொல்லப்பட்டாரே” என்றான் {திருதராஷ்டிரன்}.

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், “மாலையில் கொல்லப்பட்ட குரு பாட்டன் பீஷ்மர் {தன் மறைவால்} தார்தராஷ்டிரர்களைக் கவலை கொள்ளச் செய்து, பாஞ்சாலர்களை மகிழ்வித்தார். அவர் {பீஷ்மர்} பூமியில் விழுந்தாலும், அவரது உடலானது பூமியைத் தொடாதவகையில், கணைகளின் படுக்கையில் கிடந்தார். உண்மையில், பீஷ்மர் தன் தேரில் இருந்து வீசப்பட்டுப் பூமியின் பரப்பில் விழுந்த போது, அனைத்து உயிரினங்களும், “ஓ!” என்றும், “ஐயோ!” என்றும் கதறின.

குருக்களின் எல்லை மரமானவரும் {வேலியானவரும்}, எப்போதும் வெல்பவருமான பீஷ்மர் விழுந்த போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இரு படை க்ஷத்திரியர்களின் இதயங்களில் அச்சம் நுழைந்தது. கொடிமரம் வீழ்த்தப்பட்டு, கவசம் பிளக்கப்பட்ட சந்தனுவின் மகன் பீஷ்மரைக் கண்டு, குருக்களும், பாண்டவர்களும் மகிழ்ச்சியற்ற மனநிலைக்கு உந்தப்பட்டார்கள். ஆகாயம் இருளால் மூடப்பட்டது, சூரியனும் {ஒளியிழந்து} மங்கினான். சந்தனுவின் மகன் {பீஷ்மர்} கொல்லப்பட்டபோது, பூமி உரக்க அலறுவதாகத் தெரிந்தது.

“வேதங்களை அறிந்தோரில் முதன்மையானவர் இவர்! {பீஷ்மர்!} வேதங்களை அறிந்தோரில் சிறந்தவர் இவர் {பீஷ்மர்}” என்றே (கணைகளின் படுக்கையில்) கிடந்த அந்த மனிதர்களில் காளையை {பீஷ்மரைக்} குறித்து உயிரினங்கள் பேசின. [1]“முன்பு, தன் தந்தை {சந்தனு} காமத்தால் பீடிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கொண்ட இந்த மனிதர்களில் காளை {பீஷ்மர்}, தன் உயிர் வித்தை மேலெழுப்பத் தீர்மானித்தவராவார்” என்றே கணைகளின் படுக்கையில் கிடந்த பாரதர்களில் முதன்மையானவரைக் குறித்துச் சித்தர்கள் மற்றும் சாரணர்களோடு கூடிய முனிவர்கள் பேசினர்.

பாரதர்களின் பாட்டனான சந்தனுவின் மகன் பீஷ்மர் கொல்லப்படப் போது, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, என்ன செய்வது என்பதை உமது மகன்கள் அறியவில்லை. அவர்களது முகங்கள் துன்பக்குறிகளை அணிந்து கொண்டன. ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அவர்களது முகத்தோற்றங்கள் காந்தியை இழந்தன, அவர்கள் அனைவரும் அவமானத்தில் தங்கள் தலைகளைத் தொங்கப்போட்டபடியே நின்றனர். மறுபுறம், வெற்றியடைந்த பாண்டவர்கள் தங்கள் படையணிகளின் தலைமையில் நின்றனர். பிறகு அவர்கள் அனைவரும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தங்கள் பெரிய சங்குகளை முழங்கினர்.

ஓ! பாவமற்றவரே {திருதராஷ்டிரரே}, தங்கள் மகிழ்ச்சியின் விளைவால் ஆயிரக்கணக்கான பேரிகைகள் முழக்கப்பட்ட போது, ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பெரும் பலம் படைத்தவனும், குந்தியின் மகனுமான பீமசேனன் பெரும் பலமிக்கப் பகை வீரர்கள் பலரைக் கொன்று, பெரும் மகிழ்ச்சியோடு விளையாடிக் கொண்டிருப்பதை நாங்கள் கண்டோம்.

குருக்கள் அனைவரையும் பெரும் மயக்கம் ஆட்கொண்டது. கர்ணனும் [1], துரியோதனனும், அடிக்கடி பெருமூச்சுவிட்டார்கள். குரு பாட்டனான பீஷ்மர் இப்படி விழுந்தபோது சுற்றிலும் துன்பக்குரல்கள் கேட்கப்பட்டன, (குரு படையின் மத்தியில்) பெரும் குழப்பம் நிலவியது.

[1] கர்ணன் களத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லை. பீஷ்மரின் படுகொலை கேள்விப்பட்டு வருந்தியிருக்க வேண்டும்.

பீஷ்மர் விழுந்ததைக் கண்ட உமது மகன் துச்சாசனன், துரோணரின் தலைமையிலான படைப்பிரிவுக்குள் பெரும் வேகத்தோடு நுழைந்தான். தன் தருப்புகளின் தலைமையில் கவசம் பூண்டவனாக நின்ற அந்த வீரன் {துச்சாசனன்}, (பீஷ்மரின் பாதுகாப்பிற்காகத்) தன் அண்ணனால் நிறுத்தப்பட்டிருந்தான். அந்த மனிதர்களில் புலி {துச்சாசனன்}, தன் தலைமையிலான துருப்புகளைத் துன்பத்தில் ஆழ்த்தியபடி இப்போது அங்கே {துரோணரிடம்} வந்தான். இளவரசன் துச்சாசனன் தங்களை நோக்கி வருவதைக் கண்ட கௌரவர்கள், அவன் {துச்சாசனன் சொல்வதைக் கேட்க விரும்பி அவனைச் சூழ்ந்து கொண்டனர்.

குரு குலத்தின் துச்சாசனன் பீஷ்மர் கொல்லப்பட்டதைத் துரோணருக்குத் தெரிவித்தான். அந்தத் தீய செய்திகளைக் கேட்ட துரோணர், தன் தேரில் இருந்து திடீரென விழுந்தார். பிறகு, தன் சுயநினைவை விரைவாக அடைந்த பரத்வாஜரின் வீர மகன் {துரோணர்}, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, தொடர்ந்து போரிடும் குரு படையைத் தடுத்தார். போரில் இருந்து குருக்கள் விலகுவதைக் கண்ட பாண்டவர்களும், வேகமான குதிரைகளில் செல்லும் தூதர்களைக் கொண்டு, போரிடுவதை நிறுத்தினர். இரு படைகளின் மன்னர்கள் அனைவரும் தங்கள் கவசங்களை அகற்றி பீஷ்மர் இருந்த இடத்திற்குச் சென்றனர். போரில் இருந்த விலகிய ஆயிரக்கணக்கான {பிற} வீரர்களும், அனைத்து உயிர்களின் தலைவனை {பிரம்மனை} நோக்கிச் செல்லும் தேவர்களைப் போல உயர் ஆன்ம பீஷ்மரை நோக்கிச் சென்றனர்.

ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, (அப்போது அம்புப் படுக்கையில் கிடந்த) பீஷ்மரை அணுகிய பாண்டவர்களும், குருக்களும், அவருக்குத் தங்கள் வணக்கங்களைத் தெரிவித்தனர். நீதிமிக்க ஆன்மா கொண்டவரான சந்தனுவின் மகன் பீஷ்மர், இப்படித் தன்னை வணங்கித் தன் முன் நின்ற பாண்டவர்களிடமும், குருக்களிடமும் பேசினார்.

அவர் {பீஷ்மர்}, “உயர்ந்த அருளைப் பெற்றவர்களே {பெரும்பாக்கியசாலிகளே}, உங்களுக்கு நல்வரவு! வலிமைமிக்கத் தேர்வீரர்களே, உங்களுக்கு நல்வரவு! தேவர்களுக்கு ஒப்பான உங்களைக் கண்டதால் நான் மனநிறைவடைகிறேன்” என்றார். தலையைத் தொங்கப்போட்டபடியே அவர்களிடம் பேசிய அவர் {பீஷ்மர்} மீண்டும் அவர்களிடம், “என் தலை அதிகமாகத் தொங்குகிறது. ஒரு தலையணையை எனக்குக் கொடுப்பீராக” என்றார். பிறகு, (அங்கே நின்று கொண்டிருந்த) மன்னர்கள், மிக மென்மையானவையும், மிக மெல்லிய துணிகளாலான பல அற்புத தலையணைகளைக் கொண்டு வந்தனர். எனினும், பாட்டன் {பீஷ்மர்} அவற்றை விரும்பவில்லை.

பிறகு அந்த மனிதர்களில் புலி {பீஷ்மர்}, சிரித்துக் கொண்டே அந்த மன்னர்களிடம், “மன்னர்களே, இவை வீரனின் படுக்கைக்காகாது” என்றார். பிறகு, அவர்களைக் {அந்த மன்னர்களைக்} கண்ட அந்த மனிதர்களில் முதன்மையானவர் {பீஷ்மர்}, உலகங்கள் அனைத்திலும் உள்ள தேர்வீரர்களில் வலிமையானவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனும், பாண்டுவின் மகனுமான தனஞ்சயனிடம் {அர்ஜுனனிடம்}, “ஓ! தனஞ்சயா, ஓ! வலிய கரங்களைக் கொண்டவனே, ஓ! ஐயா {அர்ஜுனா}, என் தலை தொங்குகிறது. {அம்புப் படுக்கையில் படுத்திருக்கும் எனக்குத்} தகுந்தது என்று நீ கருதும் தலையணையை எனக்குக் கொடுப்பாயாக” என்றார் {பீஷ்மர்}” {என்றான் சஞ்சயன்}.

பத்தாம் நாள் போர் முற்றும்


[1} பீஷ்மர், “ஏற்கனவே நான், அரியணையில் எனக்கு இருக்கும் உரிமையைத் துறந்தேன். இப்போது எனது பிள்ளைகளின் காரியத்திற்கு ஒரு தீர்வைச் சொல்கிறேன். ஓ மீனவரே, இந்த நாள் முதல் நான் பிரம்மச்சரியத்தை மேற்கொள்கிறேன். நான் மகனற்று இறந்தாலும், நித்திய அருளுள்ள சொர்க்கலோக உலகங்களை அடைவேன்." என்றான்.

அங்கே கூடியிருந்த மன்னர்கள் தனியாகவும், கூடியும் இந்த செயற்கரிய செயலைப் பாராட்டி "இவன் {தேவவிரதன்} உண்மையிலேயே பீஷ்மன் (பயங்கரமானவன்) தான்!" என்றனர். சந்தனு தனது மகனின் இயல்புக்குமிக்க சாதனைகளால், பெரிதும் மகிழ்ந்து, அந்த உயர் ஆன்ம இளவரசனுக்கு அவனது விருப்பத்திற்கேற்ப இறக்கும் வரம் கொடுத்து, "நீ வாழ விரும்பும்வரை, இறப்பு உன்னை அணுகாது. ஓ! பாவமற்றவனே {பீஷ்மனே}, நிச்சயமாக இறப்பு உன்னை அணுகும். ஆனால், முதலில் உன்னிடம் அனுமதி பெற்ற பிறகே அப்படி அணுகும்", என்றான் {சந்தனு}.

பயங்கரமானவன் | ஆதிபர்வம் - பகுதி 100

The Terrible one | Adi Parva - Section 100 | Mahabharata In Tamil

- See more at: http://mahabharatham.arasan.info/2013/05/Mahabharatha-Adiparva-Section100.html#sthash.B9j1J7uG.dpuf
http://mahabharatham.arasan.info/2013/05/Mahabharatha-Adiparva-Section100.htmlஆங்கிலத்தில் | In English

“நான் உயிரோடிருக்கிறேன்” என்ற பீஷ்மர்! - பீஷ்ம பர்வம் பகுதி – 120இ

“I am alive” said Bhishma! | Bhishma-Parva-Section-120c | Mahabharata In Tamil

(பீஷ்மவத பர்வம் – 78)

பதிவின் சுருக்கம் : உத்தர அயனத்தை எதிர்பார்த்துக் காத்திருந்த பீஷ்மரிடம், அன்னப்பறவைகளை அனுப்பிய கங்கை; அன்னங்களிடம் தன் உறுதியைச் சொன்ன பீஷ்மர்; துக்கத்தில் ஆழ்ந்த கௌரவர்கள்; பாண்டவப் படையினரின் மகிழ்ச்சி; யோகத்தில் ஆழ்ந்த பீஷ்மர்...

{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, “அவர் {பீஷ்மர்} விழுந்து கொண்டிருந்தபோது, சூரியன் தென் கோட்டில் {தக்ஷிணாயனத்தில்} இருப்பதைக் கவனித்தார். எனவே, அவ்வீரர் {பீஷ்மர்}, (மரணத்திற்கான) காலத்தை (காலம் மங்கலமற்றதாக இருப்பதை) நினைத்து, தன் புலன் உணர்வுகளைப் போக அனுமதிக்கவில்லை {நினைவு தப்பாமல் இருந்தார்} [1]. “ஏன், ஆயுதப் போர்வீரர்கள் அனைவரிலும் முதன்மையான கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, {சூரியனின்} தெற்குச் சரிவின் போது, ஓ! ஏன் தன் உயிரை விட வேண்டும்?” என்ற தேவக் குரல்களை வானமெங்கும் அவர் {பீஷ்மர்} கேட்டார். இவ்வார்த்தைகளைக் கேட்ட கங்கையின் மைந்தர் {பீஷ்மர்}, “நான் உயிரோடிருக்கிறேன்” என்று பதிலளித்தார். குரு பாட்டனான பீஷ்மர் பூமியில் விழுந்தாலும், {சூரியனின்} வடக்குச் சரிவை {உத்தர அயனத்தை} எதிர்பார்த்து தன் உயிரை விடவில்லை [2].


[1] வேறு பதிப்பில் “வீரரான பீஷ்மர் காலத்தை ஆலோசித்துப் பிரஜ்ஞையையடைந்தார்” என்றிருக்கிறது.

[2] வேறொரு பதிப்பில் இந்தப் பத்தி, “”மகாத்மாவும், கங்கையின் மைந்தரும், வில்லாளிகள் அனைவரிலும் சிறந்தவரும், மனிதர்களில் சிறந்தவருமான பீஷ்மர் தக்ஷிணாயனம் நேர்ந்திருக்குங்காலத்தில் எவ்வாறு உயிரை விட்டார்?” என்ற திவ்ய வாக்குகளை ஆகாயத்தின் அனைத்துப் பக்கங்களிலும் கேட்டார். காங்கேயர், அவைகளைக் கேட்டு நல்ல கதியை அடைய வேண்டுமென்ற விருப்பத்தோடு, “உத்தராயணத்தை விரும்பியவனான நான் இதோ உயிரோடிருக்கிறேன். பூமியில் விழுந்தாலும் நான் உயிரைத் தரிப்பேன்” என்று தேவர்களைப் பார்த்து மறுமொழி கூறினார்” என்று இருக்கிறது.

ஹிமவத்தின் {ஹிமவானின் - இமயத்தின்} மகளான கங்கை, இதையே அவரது {பீஷ்மரின்} தீர்மானமாகக் கொண்டு, அவரிடத்தில் {பீஷ்மரிடத்தில்} அன்னத்தின் வடிவத்தில் இருந்த பெருமுனிவர்களை அனுப்பினாள். மானஸத் {மானசரோவர்} தடாகவாசிகளும், அன்னத்தைப் போன்ற வடிவம் கொண்டவர்களுமான அந்த முனிவர்கள் விரைவாக எழுந்து, குரு பாட்டனான பீஷ்மரைக் காண்பதற்காக, அந்த மனிதர்களில் முதன்மையானவர் {பீஷ்மர்} கணைகளின் படுக்கையில் கிடந்த அந்த இடத்திற்கு ஒன்றாக வந்தனர்.

அன்னங்களைப் போன்ற வடிவங்களில் இருந்த அந்த முனிவர்கள், பீஷ்மரிடம் வந்து, கணைகளின் படுக்கையில் கிடந்த அந்தக் குரு குலக் கொழுந்தை {பீஷ்மரைக்} கண்டனர். பாரதர்களின் தலைவரான உயர் ஆன்ம கங்கையின் மைந்தரை {பீஷ்மரைக்} கண்டு, அவரை வலம் வந்து, சூரியன் தென்கோட்டில் இருந்ததால், அவர்கள் தங்களுக்குள், “உயர் ஆன்ம மனிதனான பீஷ்மர் {சூரியனின்} தென் சரிவின்போது ஏன் (இவ்வுலகத்தை விட்டு) செல்ல வேண்டும்?” என்ற வார்த்தைகளைச் சொன்னார்கள். இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்த அன்னங்கள் தென் திசையை நோக்கிச் சென்றன.

அப்போது, ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, பெரும் புத்திக் கூர்மை கொண்ட பீஷ்மர், அவற்றைக் கண்டு ஒருக்கணம் சிந்தித்தார். பிறகு அந்தச் சந்தனுவின் மகன் {பீஷ்மர்} அவர்களிடம், “சூரியன் தென்கோட்டில் உள்ள வரை நான் (இவ்வுலகத்தைவிட்டு) செல்ல மாட்டேன். இதுவே என் தீர்மானமாகும். சூரியன் வடகோட்டை அடையும்போதே, நான் என் புராதன வசிப்பிடத்திற்குச் செல்வேன். அன்னங்களே, இதை நான் உங்களுக்கு உண்மையாகவே சொல்கிறேன். {சூரியனின்} வடக்குச் சரிவை எதிர்பார்த்து நான் என் உயிரைப் பிடித்துக் கொள்ளப் போகிறேன். உயிரை விடுவதில் முழுக் கட்டுப்பாடும் என்னிடம் உள்ளதால், வடக்குச் சரிவின் போதான மரணத்தை எதிர்பார்த்து நான் அதை {உயிரைப்} பிடித்துக் கொள்வேன்.

என் மரணம் என் விருப்பதைப் பொறுத்தே அமையும் என்று என் ஒப்பற்ற தந்தையால் {சந்தனுவால்} எனக்குக் கொடுக்கப்பட்ட வரமானது, ஓ! உண்மையாகட்டும். என் உயிரை விடுவதில் நான் கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதால் என் உயிரைப் பிடித்துக் கொள்வேன்” என்றார். அன்னங்களிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன அவர் {பீஷ்மர்}, கணைகளின் படுக்கையிலேயே தொடர்ந்து கிடந்தார்.

குரு குலச் சிகரமான பெரும் சக்தி படைத்த பீஷ்மர் விழுந்தபோது, பாண்டவர்களும், சிருஞ்சயர்களும் சிங்க முழக்கம் செய்தனர். குருக்கள் அனைவரும் முழுமையாகத் தங்கள் புலனுணர்வுகளை இழந்தனர். கிருபர் மற்றும் துரியோதனனின் தலைமையிலான குருக்கள் பெருமூச்சுவிட்ட படியே அழுதனர். துக்கத்தால் அவர்கள் நீண்ட நேரத்திற்கு உணர்விழந்தபடியே இருந்தனர். அவர்கள், ஓ! ஏகாதிபதி, போரில் தங்கள் இதயங்களைச் செலுத்தாமல் முற்றிலும் அசையாதிருந்தனர். பாண்டவர்களை எதிர்த்துச் செல்லாத அவர்கள், ஏதோ தொடை பிடிப்பு ஏற்பட்டவர்களைப் போல அசைவற்றிருந்தனர்.

கொல்லப்பட இயலாதவரான (என்று கருதப்பட்ட) வலிமைமிக்க சக்தி கொண்ட சந்தனுவின் மகன் பீஷ்மர் கொல்லப்பட்டபோது, குரு மன்னனின் {துரியோதனனின்} அழிவு அருகிலேயே இருக்கிறது என்று நாங்கள் அனைவரும் நினைத்தோம். சவ்யசச்சினால் {அர்ஜுனனால்} வீழ்த்தப்பட்டும், எங்கள் முதன்மையான வீரர்கள் கொல்லப்பட்டும், கூரிய கணைகளால் சிதைக்கப்பட்டும் இருந்த எங்களுக்கு {மேற்கொண்டு} என்ன செய்வது என்பது தெரியவில்லை. பரிகாயுதங்களைப் போன்று தெரியும் பெரிய கரங்களைக் கொண்ட வீரப் பாண்டவர்கள் அனைவரும், வெற்றியை அடைந்தும், அடுத்த உலகத்தின் உயர்ந்த அருள்நிலையை வென்றும் தங்கள் பெரும் சங்குகளை முழங்கினர்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, சோமகர்கள் மற்றும் பாஞ்சாலர்கள் அனைவரும் மகிழ்ந்தனர். ஆயிரக்கணக்கான பேரிகைகள் முழங்கிய போது, வலிமைமிக்கப் பீமசேனன் தன் கக்கங்களை {தோள்களைத்} தட்டிக் கொண்டு உரத்த கூச்சலிட்டான். மிகவும் சக்திவாய்ந்தவரான கங்கையின் மகன் {பீஷ்மர்} கொல்லப்பட்ட போது, வீரமான இரு படைகளின் போர்வீரர்களும், தங்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு, சிந்தனையில் மூழ்கத் தொடங்கினர்.

சிலர் உரக்க அலறினர், சில தப்பி ஓடினர், சிலர் தங்கள் உணர்வுகளை இழந்தனர் {மயக்கமடைந்தனர்}. சிலர் க்ஷத்திரிய வகையினரின் நடைமுறைகளை நிந்தித்தனர், சிலர் பீஷ்மரைப் போற்றினர். முனிவர்களும், பித்ருக்கள் அனைவரும் உயர் நோன்புகளைக் கொண்ட பீஷ்மரைப் போற்றினர். பாரதர்களின் {இறந்து போன} மூதாதையர்களும் பீஷ்மரைப் புகழ்ந்தனர். அதே வேளையில், புத்திக்கூர்மையுள்ளவரும், சந்தனுவின் மகனுமான வீர பீஷ்மர், பெரும் உபநிஷத்துகளில் சொல்லப்பட்டுள்ள யோகத்தை அடைந்து, மனத்துதிகளில் ஈடுபட்டுத் தன் நேரத்தை எதிர்பார்த்து அமைதியில் நீடித்தார்” {என்றான் சஞ்சயன்}.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2019, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top