Rigid Ascetic Penance of Aurva! | Adi Parva - Section 181 | Mahabharata In Tamil
(சைத்ரரதப் பர்வம் - 15)
பதிவின் சுருக்கம் : அந்தப் பிராமணப் பெண்ணின் சொல்லைக் கேட்டு ஔர்வரைத் தஞ்சமடைந்த க்ஷத்திரியர்கள்; கண்பார்வையைத் திரும்பப் பெற்ற க்ஷத்திரியர்கள்; உலகத்தை அழிக்க தவம் செய்த ஔர்வரைத் தடுத்த அவருடைய பித்ருக்கள்...
வசிஷ்டர் தொடர்ந்தார், "இப்படி அவர்களால் கேட்டுக் கொள்ளப்பட்ட அந்த பிராமணப் பெண், "குழந்தைகளே, நான் உங்கள் பார்வையைப் பறிக்கவில்லை. உங்களிடம் கோபம் கொள்ளவும் இல்லை. இருப்பினும், பிருகு வம்சத்தைச் சேர்ந்த இந்தக் குழந்தை உங்களிடம் கோபமாக இருக்கிறான்.(1) தன் குலம் உங்களால் அழிந்ததை அறிந்த இந்தக் குழந்தையின் கோபத்தினால்தான் உங்கள் பார்வை பறிபோனது என்பதில் சிறு ஐயமும் கிடையாது.(2) குழந்தைகளே, நீங்கள் பிருகு குலத்தின் கருக்களைக்கூட அழித்துக் கொண்டிருந்த அந்த நேரத்தில் இந்தக் குழந்தை எனது தொடைக்குள் நூறு வருடங்கள் இருந்தான்.(3) பிருகு குலத்திற்கு வளமை உண்டாக, ஆறு அங்கங்களுடன் கூடிய வேதமானது, எனது கருவில் இருந்த இவனுக்கு அருளப்பட்டது.(4) பிருகு குலத்தின் இந்தக் கொழுந்து, தனது மூதாதையர்களின் மரணத்திற்குப் பழிவாங்கவே உங்களைக் கொல்ல விரும்புகிறது! இவனது தெய்வீகச் சக்தியால் தான் உங்கள் கண்கள் பறிக்கப்பட்டன.(5) எனவே, ஓ குழந்தைகளே, எனது தொடையிலிருந்து பிறந்த இந்த அற்புதமான குழந்தையிடம் நீங்கள் வேண்டிக் கொள்ளுங்கள். உங்கள் அஞ்சலியின் மூலம் நிறைவடைந்த இவன் உங்களுக்குப் பார்வையை அருளக்கூடும்" என்றாள்".(6)