The Births of Dhrishtadyumna and Draupadi! | Adi Parva - Section 169 | Mahabharata In Tamil
(சைத்ரரதப் பர்வம் - 03)
பதிவின் சுருக்கம் : துரோணரைக் கொல்லும் மகனை அடைய விரும்பிய துருபதன்; யாஜர் உபயாஜர் ஆகியோரைச் சந்தித்த துருபதன்; வேள்வித்தீயில் இருந்து பிறந்த திருஷ்டத்யும்னனும், திரௌபதியும்; திருஷ்டத்யும்னனுக்கும் குருவான துரோணர்...
பிராமணர் தொடர்ந்தார், "அதன்பிறகு மன்னன் துருபதன், இதயத்தில் துயர் கொண்டு, பிராமணர்களின் ஆசிரமங்களுக்குச் சென்று, வேள்விச் சடங்குகளை நடத்துவதில் நிபுணத்துவம் வாய்ந்த பிராமணர்களைத் தேடினான்.(1) "சாதனைகளைச் செய்யக்கூடிய வாரிசு ஒருவனும் எனக்கில்லையே" என்று நினைத்து எப்போதும் துயரத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுப் பிள்ளைகள் பெறுவதில் ஆழ்ந்த விருப்பம் கொண்டிருந்தான்.(2) அந்த ஏகாதிபதி பெரும் ஏக்கத்துடன் எப்போதும், "ம்…ம்… ச்சீ… ச்சீ…என்ன பிள்ளைகளைப் பெற்று வைத்திருக்கிறேன். என்ன உறவினர்களைக் கொண்டிருக்கிறேன்" என்று நினைத்துக் கொள்வான். எப்போதும் அந்த ஏகாதிபதி துரோணரைப் பழிவாங்குவதை நினைத்தே நிறுத்தாமல் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தான்.(3) ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அந்த மன்னர்களில் சிறந்தவன், கடினமாக முயற்சித்தும், க்ஷத்திரிய பலத்தாலோ, ஆற்றலாலோ, ஒழுக்கத்தாலோ, பயிற்சியாலோ, சாதனைகளாலோ, துரோணரை விஞ்ச ஒரு வழியையும் அடையவில்லை. யமுனை மற்றும் கங்கைக் கரைகளில் திரிந்த அந்த ஏகாதிபதி {துருபதன்}, {கங்கையின் கரையில்} ஒரு பிராமணரின் ஆசிரமத்தை வந்தடைந்தான். அந்த ஆசிரமத்தில் ஸ்நாதகர்
[1] அல்லாத எந்த பிராமணரும் இல்லை, கடும் நோன்புகள் நோற்காத எவரும் இல்லை, அறத்தகுதிகளில் உயர்ந்த இடத்தைப் பெறாமல் யாரும் இல்லை.(4-6)