Shall I recite Mahabharata?" said Sauti! | Adi Parva - Section 1a | Mahabharata In Tamil
(அனுக்ரமானிகா பர்வம்)
பதிவின் சுருக்கம் : நைமிசாரண்யம் வந்த சௌதி; வியாசர் சொன்ன கதைகளைச் சொல்லட்டுமா என்று முனிவர்களைக் கேட்கும் சௌதி; முனிவர்கள் சௌதியிடம் பாரதம் உரைக்க வேண்டும் என்று கேட்டல்; வியாசர் சொன்ன பாரதத்தின் வரலாறு; தேவர் பிறப்பு; அண்டத்தின் படைப்பு; பாரதத்தின் சுலோகப் பிரிவினை; கௌரவர்களையும், பாண்டவர்களையும் மரமாக உருவகப்படுத்துதல்...
ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் [ஜயா] என்று குறிப்பிடப்படுவது - அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்.}
ஒரு நாள், "சௌதி" என்ற குடும்பப் பெயர் கொண்டவரும், புராணங்களை நன்கறிந்தவரும், லோமஹர்ஷணரின் {ரோமஹர்ஷணரின்} மகனுமான உக்ரசிரவன் {சௌதி }[1], நைமிச வனத்தில் நடந்து வந்ததும், "குலபதி" என்ற குடும்பப் பெயர் கொண்ட சௌனகரால் நடத்தப்பட்டதுமான பன்னிரண்டு வருட {12} {சத்ரம் என்று அழைக்கப்பட்ட} வேள்வியில் பங்கெடுத்தவர்களும், கடினமான நோன்புகளை மேற்கொண்டு, சுகமாக அமர்ந்திருந்தவர்களுமான பெரும் முனிவர்களைத் தன்னடக்கத்துடன் அணுகினார் {சௌதி}.(1,2) இவ்வாறு அந்த நைமிசக்காட்டுவாசிகளின் {துறவிகளின்} தனிப்பட்ட வசிப்பிடத்திற்கு {ஆசிரமத்திற்கு} வந்த சௌதியிடம், அவரது அழகான வர்ணனைகளைக் கேட்கும் ஆர்வத்தில் அந்தத் தவசிகள் பேசத் தொடங்கினர்.(3) சரியான முறையில் அந்தத் தெய்வீக மனிதர்களால் உற்சாகமூட்டப்பட்ட அவர் {சௌதி}, தமது கரங்களைக் கூப்பி அவர்களை வணங்கியபடியே, தவத்தில் அவர்களிடம் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் குறித்து விசாரித்தார்.(4)
[1] வேறு மொழிபெயர்ப்புகளிலும், வேறு பல சுருக்கங்களிலும் இவர் சூத முனிவர் என்று அழைக்கப்படுகிறார். சௌதி என்பது, சூதன் மகன் என்ற பொருளைக் கொண்டதாகும். பௌராணிகர் என்பது புராணங்களை உரைப்பவரின் பெயராகும். நாம் கங்குலியில் உள்ளதைப் போலவே சௌதி என்பதையே பின்பற்றிச் செல்வோம்.அனைவரும் அமர்ந்த பின்னர், அந்த லோமஹர்ஷனரின் மகன் {சௌதி}, தமக்கென ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் பணிவாக அமர்ந்தார்.(5) அவர் சுகமாக அமர்ந்ததையும், அவரது பயணக் களைப்பு நீங்கியதையும் கண்ட அந்த முனிவர்களில் ஒருவர், விவாதத்தைத் தொடங்கும் வகையில்.(6) "நீர் எங்கிருந்து வருகிறீர்? ஓ! தாமரைக்கண் சௌதியே, நீர் உமது காலத்தை எங்கு கழித்தீர்? {இவற்றைக்} கேட்பவனான எனக்கு விவரமாகச் சொல்வீராக!" என்றார்.(7) இவ்வாறு கேட்கப்பட்டவரும், பேச்சில் வல்லவருமான சௌதி, ஆழ்நிலை தியானம் செய்பவர்களான முனிவர்களின் அந்தப் பெரிய கூட்டத்திற்கு மத்தியில், அவர்களது வாழ்வு முறைக்கு ஏற்ற சொற்களைக் கொண்டு, முறையாகவும், முழுமையாகவும் பதிலளிக்க முற்பட்டார்.(8)
சௌதி, "கிருஷ்ண-துவைபாயனரால் {வியாசரால்}, தமது மஹாபாரதத்தில் இயற்றப்பட்டவையும், உயர்-ஆன்மா கொண்டவனும், பரீக்ஷித்தின் மகனும், இளவரசர்களின் தலைவனுமான அரசமுனி ஜனமேஜயனின் பாம்பு வேள்வியில், அவனது {ஜனமேஜயனின் முன்னிலையிலேயே,{வியாசரின்சீடர்} வைசம்பாயனரால் முழுமையாக உரைக்கப்பட்டவையும், புனிதமானவையும், அற்புதம் நிறைந்தவையுமான பல்வேறு கதைகளைக் கேட்ட பிறகு,(9-11) புனித நீர்நிலைகளுக்கும், புண்ணியத்தலங்களுக்கும் சென்ற நான், முன்பொரு சமயம், குரு மற்றும் பாண்டுவின் பிள்ளைகளுக்கும், அந்த இருதரப்பிற்கும் அடங்கிய நிலத்தின் தலைவர்கள் அனைவருக்கும் இடையில் போர் நடைபெற்ற களமும், த்விஜர்களால் {இருபிறப்பாளர்களால்} போற்றப்படுவதும், சமந்தபஞ்சகம் என்றழைக்கப்படுவதுமான நாட்டிற்கு {குருசேத்திரம் என்னும் புண்ணியத்தலத்திற்குப்} பயணித்தேன்.(12-13) அங்கிருந்தே உங்களைக் காணும் ஆவலில், உங்களிடம் {நைமிசாரண்யம்} வந்தேன். பிரம்மாவைப் போன்ற பெரும் முனிவர்களே; இந்த வேள்விச்சாலையில் சூரிய நெருப்பின் காந்தியோடு ஒளிரும் வகையில் மிகவும் அருளப்பட்டவர்களே; புனித நெருப்புக்கு {அக்னிக்கு} உணவு அளித்து, மௌன தியானங்களை நிறைவு செய்தவர்களே; இருப்பினும் {இவ்வளவு செய்திருந்தாலும்} அலட்சியமாக அமர்ந்திருப்பவர்களே, ஓ! த்விஜர்களே (இருபிறப்பாளர்களே), அறக்கடமைகள் மற்றும் உலக ஆதாயங்கள் குறித்த கட்டளைகளை {விதிகளைக்} கொண்டவையான புராணங்களில் உள்ள புனிதக் கதைளை நான் மறுபடியும் சொல்லட்டுமா? அல்லது, சிறப்புமிக்கத் தவசிகள் மற்றும் மனித குலத்தின் மன்னர்கள் ஆகியோரின் செயல்பாடுகளைக் குறித்துச் சொல்லட்டுமா? " என்று கேட்டார் {சௌதி}”.(14-16)
அந்த முனிவர், {சௌதியிடம்}, "பெருமுனிவர் துவைபாயனரால் {வியாசரால்} முதலில் அறிவிக்கப்பட்டதும், தேவர்களாலும், பிரம்மமுனிவர்களாலும் கேட்கப்பட்ட பிறகு உயர்வாக மதிக்கப்பட்டதும், இருக்கும் உரைநடைகளிலேயே மிகச் சிறப்புவாய்ந்ததும், சொற்தேர்வு {பதங்கள்} மற்றும் பிரிவுகள் {பர்வங்கள்} ஆகிய இரண்டிலும் பலவகைகளில் விரிவானதும், அளவையியலோடு இயைந்த {தர்க்க ரீதியில்} அதிநுட்பமான பொருள்களைக் கொண்டதும், வேதங்களில் இருந்து சேகரிக்கப்பட்டதுமான {சம்ஹிதையான} அந்தப் புராணம் {மஹாபாரதம்}, ஒரு புனிதமான படைப்பாகும்.(17,18) நேர்த்தியான மொழியில் இயற்றப்பட்டிருக்கும் அது, பிற நூல்களின் உட்பொருள்களையும் {தனக்குள்} கொண்டிருக்கிறது. வேறு சாத்திரங்களால் தெளிவுபடுத்தப்பட்டிருக்கும் அது, நான்கு வேதங்களின் பொருளையும் {தனக்குள்} உள்ளடக்கியிருக்கிறது. அற்புதம் நிறைந்ததும், வியாசருடைய புனிதத் தொகுப்பும், தீமை குறித்த அச்சத்தை அகற்றுவதும், பாரதம் என்றும் அழைக்கப்படுவதுமான அந்த வரலாற்றை {மஹாபாரதத்தை}, மன்னன் ஜனமேஜயனின் பாம்பு வேள்வியில், துவைபாயனரின் {வியாசரின்} வழிகாட்டுதலின் படி, முனிவர் வைசம்பாயனரால் உற்சாகத்தோடு உரைக்கப்பட்டதைப் போலவே, உள்ளபடியே அதை {மஹாபாரதத்தை} நாங்கள் கேட்க விரும்புகிறோம்” என்றார் {முனிவர்}.(19-21)
சௌதி சொன்னார், "{வேள்விகளில்} பலரால் படையல்கள் அளிக்கப்படுபவனும், பலரால் துதிக்கப்படுபவனும்; உண்மையில் அழிவில்லாத, உணரப்படக்கூடிய, புலப்படாத, நித்தியமான பிரம்மமே ஆனவனும்; இருப்பானவனும், இல்லாமையே ஆனவனும்; இந்த அண்டமே ஆனவனும்; இருக்கும் மற்றும் இல்லாத அண்டத்தில் முற்றாக மாறுபட்டவனும்; உயர்வு தாழ்வைப் படைத்தவனும்; பழமையான, மேன்மையான, முடிவில்லாத ஒருவனும்; நலம் பயப்பவனும்; நலமேயானவனும்; அனைத்து முன்னுரிமைகளுக்கும் தகுந்தவனும்; தூய்மையானவனும், மாசற்றவனுமான விஷ்ணுவே ஆனவனும்; அனைத்துப் பிரிவுகளின் {துறைகளின்} ஆட்சியாளனும்; அசையும் மற்றும் அசையாத பொருட்கள் அனைத்தின் வழிகாட்டியுமான ஹரியே ஆனவனும்; ஆதி இருப்புமான அந்த ஈசானனை வணங்கிப் பணியும் நான், அற்புதமான காரியங்களைச் செய்தவரும், இங்கே அனைவராலும் வழிபடப்படுபவரும், சிறப்புமிக்கத் தவசியுமான வியாசரின் புனித எண்ணங்களை நான் அறிவிக்கப் போகிறேன்.(22-25) சில புலவர்கள் ஏற்கனவே இந்த வரலாற்றை வெளியிட்டிருக்கின்றனர், சிலர் இப்போது இதைக் கற்பித்துக் கொண்டிருக்கின்றனர், இதே போலவே, இதன்பிறகும் மேலும் பலர் இதை அறிவிப்பார்கள் {என்பதில் ஐயமில்லை}.(26) உலகின் மூன்று பகுதிகளிலும் முழுமையாக நிறுவப்பட்ட இஃது அறிவின் பெரும் கொள்ளிடமாகும். விவரமாகவும், சுருக்கமாகவும் என இருபிறப்பாளர்களிடம் {பிராமணர்களிடம்} இஃது இரு வடிவங்களில் இருக்கிறது.(27) நேர்த்தியான வெளிப்பாடுகள், மனித மற்றும் தெய்வீக உரையாடல்கள், பல்வேறு கவித்துவ அளவீடுகள் ஆகியவற்றால் கல்விமான்களுக்கு இது மகிழ்ச்சியை அளிக்கிறது[2]. (28)
[2] வேறொரு பதிப்பில் "இது அழகான சொற்களாலும், தேவர்களுடைய வரலாறுகளாலும், மனிதர்களுடைய வரலாறுகளாலும் அலங்கரிக்கப்பட்டது; பலவகையான சந்தங்களோடு கூடியது; பண்டிதர்களுக்குப் பிடித்தமானது; சத்தியவதியின் மகனான வியாசர், தம்முடைய தவத்தினாலும், பிரமச்சரியத்தினாலும், நித்தியமான வேதத்தை வகுத்த பிறகு, இந்தப் புண்ணியமான இதிஹாசத்தைச் செய்தார். புண்ணியத்தலமான இமய மலையின் அடிவாரத்தில் பரிசுத்தமான குஹாக்ருஹத்தில் அற ஆன்மா கொண்டவரான அந்த வியாசர், நீராடிவிட்டு, தர்ப்பையைப் பரப்பி, அதன்மேல் அமர்ந்து கொண்டு, தூய்மையும், நியமமும் கொண்டவராக மனதையடக்கித் தியானத்திலேயே நிலைபெற்றிருந்து பாரதமென்னும் இதிஹாசத்தின் வரலாற்றைத் தபோ பலத்தினால் ஆராய்ந்து, யோகத்தில் ஊடுருவி, ஞானத்தால் அனைத்தையும் முழுவதுமாகப் பார்த்தார்" அதன் பிறகு பின்வருவன தொடர்கிறது.
இவ்வுலகம், ஒளியற்று, சுற்றிலும் முற்றுமுழுதாக இருளால் சூழப்பட்டிருந்தபோது, அனைத்து உயிரினங்களின் ஒரே வற்றாத விதையும், படைப்பின் அடிப்படைக் காரணமுமான ஒரு பெரிய முட்டை அங்கே இருப்புக்கு வந்தது.(29) அழிவற்றதும், அற்புதம் நிறைந்ததும், ஒரே தன்மையுடன் அனைத்திடங்களிலும் ஊடுருவியிருப்பதும், நினைப்பதற்கரியதும், காணமுடியாத நுட்பமான காரணமாக இருப்பதுமான பிரம்மத்தின் உண்மை ஒளியைக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படும் அது மஹாதிவ்யம் {அந்த முட்டை} என்றழைக்கப்பட்டது.(30,31)
முதல் பிரஜாபதியும், தலைவனும், பிதாமகனுமான பிரம்மன், சூரகுரு {சுக்ராச்சாரியார்} மற்றும் ஸ்தாணுவுடன் அந்த முட்டையிலிருந்து வெளியே வந்தான்.(32) அதன் பிறகு, மனு, வசிஷ்டர், பரமேஷ்டி, பத்துப் பிரசேதர்கள், தக்ஷன், தக்ஷனின் மகன்கள் எழுவர் ஆகிய இருபத்தோரு பிரஜாபதிகள் தோன்றினர். அதன் பிறகு, முனிவர்கள் அனைவராலும் அறியப்பட்டவனும், நினைத்துப் பார்க்க முடியாத இயல்புடையவனுமான மனிதன் {விராட்புருஷன்} தோன்றினான்; அவ்வாறே, விஸ்வதேவர்கள், ஆதித்யர்கள், வசுக்கள், அசுவினி இரட்டையர்கள் ஆகியோரும்; யக்ஷர்கள், சத்யஸ்கள், பிசாசங்கள், குஹ்யர்கள் மற்றும் பித்ருக்களும் தோன்றினர்.(33-35)
அதன்பிறகு, ஒவ்வொரு உன்னதக் குணத்தாலும் புகழ்பெற்ற விவேகிகளும், மிகப் புனிதமானவர்களுமான பிரம்மமுனிகளும் {பிரம்மரிஷிகளும்}, எண்ணற்ற அரசமுனிகளும் {ராஜரிஷிகளும்} படைக்கப்பட்டனர். அதே போல, நீர், சொர்க்கங்கள், பூமி, காற்று, வானம், திசைப்புள்ளிகள், வருடங்கள், காலங்கள் {பருவங்கள்}, மாதங்கள், பக்ஷங்கள் என்றழைக்கப்படும் பிறைநாட்கள், இரவு மற்றும் பகல் ஆகியன முறையாக அடுத்தடுத்துப் படைக்கப்பட்டன. இவ்வாறே மனிதகுலத்தால் அறியப்பட்ட பொருள்கள் அனைத்தும் படைக்கப்பட்டன.(36-37)
இந்த அண்டத்தில் காணப்படும் படைக்கப்பட்ட பொருள்களில், அசைவனவோ, அசையாதனவோ, உலகின் இறுதிக் காலத்தில், யுகம் தீர்ந்த பிறகு மீண்டும் சீர்குலைகின்றன.(38) வேறு யுகங்கள் தொடங்குகையில், பூமியின் பல்வேறு கனிகளை {பலன்களைப்} போல, அனைத்துப் பொருள்களும், தங்கள் காலங்களில் {பருவங்களில்} முறையான வரிசையில் அடுத்தடுத்து புணரமைக்கப்படுகின்றன.(39) இவ்வாறே அனைத்துப் பொருள்களுக்கும் அழிவை உண்டாக்கும் இந்தச் சக்கரம், தொடக்கமும், முடிவும் இல்லாமல் நிரந்தரமாக இவ்வுலகில் தொடர்ந்து சுழன்று வருகிறது.(40)
தேவர்களின் தலைமுறையானது, முப்பத்து மூன்று ஆயிரங்களும், முப்பத்துமூன்று நூறுகளும், முப்பத்துமூன்றுமாகச் சுருக்கமாகச் சொல்லப்படுகிறது.(41) திவ்-ன் மகன்கள்: ப்ருஹத்பானு, சக்ஷூஸ், ஆத்மா, விபாவசு, சவிதா, ரிசீகன், அர்க்கன், பானு, ஆசாவஹன் மற்றும் ரவி ஆவர்.(42)
ஜோதி=நட்சத்திரம், பெருவெடிப்பிலிருந்து தோன்றிய ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களும், மேலும் மேலும் வெடித்து லட்சக்கணக்கான மற்றும் கோடிக்கணக்கான சூரிய நட்சத்திரங்களை உண்டாக்கின. |
முவ்வழி புதிர்களான வேதங்கள், யோகம், விஞ்ஞானம்; தர்மம் {அறம்}, அர்த்தம் {பொருள்}, காமம் {இன்பம்} ஆகியனவும்;(48) தர்மம், அர்த்தம், காமம் ஆகியவற்றை விளக்கும் பல்வேறு நூல்களும்; மனிதகுலத்தின் நடத்தைவிதிகளும்;(49) வரலாறுகள் மற்றும் பல்வேறு சுருதிகள் குறித்த உரைகளும், என இவையனைத்தும் முனிவர் வியாசரால் காணப்பட்டு, இந்த நூலில் {மஹாபாரதத்தில்} எடுத்துக்காட்டுகளாக {மாதிரிகளாக} முறையான வரிசையில் குறிப்பிடப்படுகின்றன. (50,51)
முனிவர் வியாசர் இந்த அறிவுத்திரளை விவரமாகவும், சுருக்கமாகவும் இரு வடிவங்களில் வெளியிட்டார். விவரமானதைக் கொள்வதா? சுருக்கமானதைக் கொள்வதா? என்பது உலகில் உள்ள கல்விமான்களின் விருப்பத்தைப் பொருத்ததாகும்.(52) சிலர் பாரதத்தைத் தொடக்க மந்திரத்துடன்[3] படிக்கத் தொடங்குகின்றனர், சிலர் ஆஸ்தீகர் கதையிலிருந்தும், சிலர் உபரிசரனிலிருந்தும், மேலும் சில பிராமணர்கள் முற்றுமுழுதாகவும் படிக்கின்றனர்.(53) கல்விமான்கள், இந்தத் தொகுப்பைக் குறித்துக் கருத்துத் தெரிவித்து, பல்வேறு அறிவுத்துறைகளில் {ஸ்மிருதிகளில்} தங்கள் அறிவை வெளிப்படுத்துகின்றனர். சிலர் அதை விளக்குவதிலும், மேலும் சிலர், அதன் உள்ளடக்கத்தை நினைவுகொள்வதிலும் திறன்மிக்கவர்களாக இருக்கின்றனர். (54)
[3] "நாராயணம் நமஸ்க்ருத்ய" என்ற சுலோகம் முதலாகவும் என்பது இங்கே பொருள்.
அந்தச் சத்யவதியின் மகன் {வியாசர்}, தவம் மற்றும் தியானத்தைக் கொண்டு நித்தியமான வேதத்தை ஆய்வு செய்த பிறகே இந்தப் புனித வரலாற்றைத் இயற்றினார்.(55) கடும் நோன்புகளைக் கொண்டவரும், கல்விமானும், பராசரரின் வாரிசுமான துவைபாயன வியாசர், விவரிப்புகளில் சிறந்த இந்த விவரிப்பை நிறைவு செய்த போது, அதைத் தன் சீடர்களுக்குத் தன்னால் எவ்வாறு கற்பிக்க முடியும் என்று பரிசீலனை செய்யத் தொடங்கினார்.(56) ஆறு குணங்களைக் கொண்டவனும், உலகங்களின் ஆசானுமான பிரம்மன், முனிவர் துவைபாயனரின் {வியாசரின்} கவலையை அறிந்து, அந்தத் தவசியை {வியாசரை} நிறைவு செய்வதற்காகவும், மக்களுக்கு நன்மையைச் செய்வதற்காகவும், அவர் {வியாசர்} இருந்த இடத்திற்கு வந்தான்.(57) முனி இனங்கள் அனைத்தாலும் சூழப்பட்ட வியாசர், அவனைக் {பிரம்மனை} கண்டு ஆச்சரியமடைந்தார்; கூப்பிய கரங்களோடு நின்று வணங்கிய அவர் {வியாசர்}, ஓர் ஆசனத்தைக் கொண்டு வருமாறு {அந்த முனிவர்களில் இருந்த தம் சீடர்களை} பணித்தார்.(58) வியாசர், ஹிரண்யகர்பன் என்று அழைக்கப்பட்ட அவனை {பிரம்மனை} வலம் வந்து, அந்தப் புகழ்மிக்க ஆசனத்தின் அருகே நின்றார்;(59) பிரம்ம பரமேஷ்டியினால் ஆணையிடப்பட்ட அவர், நிறைந்த அன்புடனும், மகிழ்ச்சியில் புன்னகைத்துக் கொண்டும் அந்த ஆசனத்தின் அருகே அமர்ந்தார்.(60)
அப்போது, பெரும்புகழ்வாய்ந்த வியாசர், அந்தப் பிரம்ம பரமேஷ்டியிடம், "ஓ! தெய்வீகப் பிரம்மனே, பெரிதும் மதிக்கப்படும் செய்யுள் தொகையொன்று {காவியமொன்று} என்னால் இயற்றப்பட்டிருக்கிறது.(61) வேதத்தின் புதிர், மற்றும் வேறு அனைத்து உட்பொருள்களும் என்னால் அதில் விளக்கப்பட்டிருக்கின்றன; அங்கங்களோடு கூடிய உபநிஷத்துகளின் பல்வேறு சடங்குகள்;(62) காலத்தின் மூன்று பிரிவுகளான கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றின் பெயரால் என்னால் அமைக்கப்பட்ட புராணங்கள் மற்றும் வரலாற்றின் தொகுப்பு; (63) சிதைவு {மூப்பு, இறப்பு}, அச்சம், நோய், இருப்பு மற்றும் இல்லாமை ஆகியவற்றைக் கொண்ட இயற்கையின் உறுதிப்பாடு; சமய நம்பிக்கைகள் மற்றும் பல்வேறு வாழ்வுமுறைகளைக் குறித்த விளக்கங்கள்;(64) நான்கு சாதிகளின் {வர்ணங்களின்} விதி மற்றும் புராணங்கள் அனைத்தின் சாரம்; தவம் மற்றும் ஓர் அற மாணவனின் கடமைகள்;
நான்கு காலங்களின் {யுகங்களின்} காலவரையறைகளுடன் சேர்த்து சூரியன், சந்திரன், கோள்கள், விண்மீன்கூட்டங்கள் {நட்சத்திரக்கூட்டங்கள்}, நட்சத்திரங்கள் ஆகியவற்றின் பரிமாணங்கள்; ரிக், சாமம் மற்றும் யஜூர் வேதங்கள்; ஆதியாத்மம்;(65,66) நியாயம் {தர்க்கசாஸ்திரப் பயிற்சி}, மருத்துவம் மற்றும் நோய்களுக்கான சிகிச்சைகள் என்று அழைக்கப்படும் அறிவியல்கள்; ஈகை மற்றும் பாசுபததர்மம்; குறிப்பிட்ட காரியங்களுக்காகப் பிறந்த தேவர்கள் மற்றும் மனிதர்கள்;(67)
புனிதப்பயணத்திற்கான இடங்கள், ஆறுகள், மலைகள், காடுகள், பெருங்கடல்கள்,(68) தெய்வீக நகரங்கள் ஆகிய பிற புனித இடங்கள் மற்றும் கல்பங்கள் {பிரம்மனின் நாட்கள்}; போர்க்கலை; பல்வேறு வகைகளிலான நாடுகள் மற்றும் மொழிகள்; மக்களுடைய நடைமுறைகளின் {செயல்பாடுகளின்} இயல்பு;(69) அனைத்திலும் படர்ந்தூடுருவியிருக்கும் ஆவி {பரம்பொருள்} ஆகிய அனைத்தின் உட்பொருள்களும் அதில் பிரதிபலிக்கப்பட்டுள்ளன. ஆனால், இவை யாவற்றுக்கும் பிறகு, இந்தப் படைப்புக்கான எழுத்தர் எவரும் பூமியில் காணப்படவில்லை" என்றார் {வியாசர்}.(61-70)
பிரம்மன் {வியாசரிடம்}, "தெய்வீகப் புதிர்களில் உனக்கிருக்கும் அறிவைக் கொண்டு உன்னை, வாழ்வின் புனிதத்தன்மைக்காகக் கொண்டாடப்படும் இந்த முனிவர்க்கூட்டத்திற்கு முன்னிலையில் நான் உயர்வாக மதிக்கிறேன்.(71) தெய்வீகச் சொற்களை, அவை முதலில் உச்சரிக்கப்பட்டதிலிருந்தே, உண்மையான மொழியில் நீ வெளிக்கொணர்வாய் என்பதை நான் அறிவேன். உன் தற்போதைய படைப்பை நீ செய்யுள் தொகுப்பு {காவியம்} என்று அழைத்தாய், எனவே அது செய்யுள் தொகுப்பாகவே இருக்கட்டும் {காவியமேயாகும்}.(72) இல்லற ஆசிரமத்தின் தகுதிக்கு, மற்ற மூன்று வகை ஆசிரமங்களும் ஒருபோதும் இணையாகாததைப் போலவே, இந்தச் செய்யுள்தொகுப்பின் விளக்கங்களுக்கு இணையான படைப்பைத் தரக்கூடிய எந்தப் புலவரும் எப்போதும் இருக்க மாட்டார்கள்.(73) ஓ! முனியே, இந்தச் செய்யுள் தொகுப்பை {காவியத்தை} எழுதும் காரியத்திற்காகக் கணேசன் {விநாயகர்} நினைக்கப்பட வேண்டும் {கணபதியைத் தியானிப்பாயாக}" என்றான் {பிரம்மன்}.(74)
சௌதி சொன்னார், "இவ்வாறு வியாசரிடம் பேசிய பிரம்மன், தன் வசிப்பிடத்திற்குச் சென்று சேர்ந்தார். பிறகு வியாசர் கணேசனைத் தமது மனத்தில் அழைக்கத் தொடங்கினார். தன் பற்றார்வலர்களின் {பக்தர்களின்} விருப்பங்களை நிறைவேற்றத் தயாராக இருப்பவனும், தடைகளை அகற்றுபவனுமான கணேசன், நினைக்கப்பட்ட மாத்திரத்திலேயே, வியாசர் அமர்ந்திருந்த இடத்தை அடைந்தான்.(75,76) அவன் {கணேசன்} வணங்கப்பட்டு, அமர்ந்த பிறகு, வியாசர் அவனிடம் இவ்வாறு பேசினார், "ஓ! கணங்களின் வழிகாட்டியே, என் மனத்தில் நான் அமைத்ததும், நான் திரும்பச் சொல்லப்போவதுமான பாரதத்திற்கு நீ எழுத்தனாவாயாக" என்று கேட்டார்.(77)
இந்த அறிமுகத்தைக் கேட்ட கணேசன், இவ்வாறு பதலளித்தான், "{நீர் சொல்லும்போது} என் எழுத்தாணி ஒரு கணமும் எழுதாமல் நிற்காதென்றால், நான் உமது படைப்பின் எழுத்தனாவேன்" {என்றான் கணேசன்}.(78) வியாசர் அந்தத் தெய்வீகத்தன்மையிடம் {கணேசனிடம்}, "எங்காவது, ஏதாவது உனக்குப் புரியாதபோது, தொடர்ந்து எழுதுவதை நிறுத்துவாயாக" என்றார். கணேசன், "ஓம்" என்ற சொல்லை மீண்டும் மீண்டும் சொல்லி, தன் இசைவைக் குறிப்பிட்டுவிட்டு, எழுத முனைந்தான்; வியாசரும் {சொல்லத்} தொடங்கினார்;(79) திசை திருப்பும் வழியின் மூலம் அவர் {வியாசர்} அந்தத் தொகுப்பில் மிக நெருக்கமான முடிச்சுகளைப் {பொருள் விளங்கிக் கொள்ள முடியாத வியாசகூடங்களைப்} பின்னினார்; அதைச் செய்ததன் மூலம் அவர், தமது ஒப்பந்தத்தின்படி இந்தப் படைப்பை எழுதுவதற்குக் கூறினார்.(80)
(சௌதி தொடர்ந்தார்), {சௌதியான} எனக்கு அவற்றில் {வியாசகூடங்களில்} எட்டாயிரத்து எண்ணூறு (8800) செய்யுள்கள் தெரியும், அதே போலச் சுகருக்கும் {வியாசரின் மகனுக்கும்}, ஒருவேளை சஞ்சயனுக்கும் தெரியும். ஓ! முனிவரே, {வியாசகூடங்களால்} நெருக்கமாகப் பின்னப்பட்டு, புதிர்த்தன்மையுடன் கூடிய அந்தக் கடினமான சுலோகங்களுக்குள் யாராலும் ஊடுருவிப் புரிந்து கொள்ள இந்நாள் வரை முடியவில்லை.(81,82) அனைத்தையும் அறிந்த கணேசனே கூட, கருத்தில் கொள்ள ஒரு கணத்தை எடுத்துக் கொண்டான் {அதனால் கண நேரம் தாமதமானது}; எனினும், அதேவேளையில் வியாசர், {அதே வேளையில்} தொடர்ந்து வேறு செய்யுள்களை மிக அபரிமிதமாக இயற்றினார்.(83)
அஞ்சனமிட {கண்களைக் கழுவும் மருந்தை இடப்} பயன்படும் கருவியொன்றைப் போல, இந்தப் படைப்பின் அறிவானது, அறியாமை எனும் இருளில் குருடாகியிருந்ததும், அறிவார்வம் கொண்டதுமான இந்த உலகத்தின் கண்களைத் திறந்திருக்கிறது.(84) சூரியன் இருளை அகற்றுவதைப் போலவே, இந்தப் பாரதம், அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றில் தான் கொள்ளும் கருத்துப் பரிமாற்றங்களால், மனிதர்களின் அறியாமையை அகற்றுகிறது.(85) முழு நிலவானது, தன் மென்மையான ஒளியால், ஆம்பல் மலர்களின் இதழ்களை விரிப்பதுபோலவே, இந்தப் புராணமும், சுருதியின் ஒளியை வெளிப்படுத்தி, மனித அறிவை மலரச் செய்திருக்கிறது.(86) அறியாமையெனும் இருளை அளிக்கும் வரலாறு {மஹாபாரதம்} எனும் விளக்கால், இயற்கையெனும் மொத்த மாளிகையும், சரியாகவும், முழுமையாகவும் ஒளியூட்டப்படுகிறது.(87)
இந்தப் படைப்பு {பாரதம்} ஒரு மரமாகும். அதன் பகுதிகளின் பொருளடக்கம் {அனுக்கிரமணிகம்} அதன் விதையாகும்; பௌலோமம் மற்றும் ஆஸ்தீகம் என்றழைக்கப்படும் பிரிவுகள் {உபபர்வங்கள்} அதன் வேர்களாகும். சம்பவம் என்றழைக்கப்படும் பகுதி அதன் தண்டாகும்; சபா மற்றும் ஆரண்யம் என்றழைக்கப்படும் நூல்கள் ஓங்கி உயர்ந்த கிளைகளாகும்; ஆரணி என்றழைக்கப்படும் நூல் முடிக்கப்பட்ட முடிச்சுகளாகும் {புதிர்களாகும்};(88) விராடம் மற்றும் உத்யோகம் என்றழைக்கப்படும் நூல்கள் நடுப்பாகமாகும்; பீஷ்மர் என்றழைக்கப்படும் நூலானது முக்கியக் கிளையாகும்; துரோணர் என்றழைக்கப்படும் நூலானது இலைகளாகும்; கர்ணன் என்றழைக்கப்படும் நூலானது அழகிய மலர்களாகும்; சல்லியன் என்ற பெயரைக் கொண்ட நூலானது அவற்றின் இனிய மணமாகும்; ஸ்திரீ மற்றும் ஐஷீகம் என்று தலைப்பிடப்பட்ட நூல்கள் புத்துணர்ச்சியளிக்கும் நிழலாகும்; சாந்தி என்றழைக்கப்படும் நூலானது பெரும் கனியாகும்;(89,90) அஸ்வமேதம் என்றழைக்கப்படும் நூலானது அழிவில்லாத இனப்பாலாகும் {அமிர்தத்திற்கு ஒப்பான பழரசமாகும்}; ஆசிரமவாசிகம் என்ற பெயரிடப்பட்டது, அது {மரம்} வளரும் இடமாகும்; மௌசலம் என்றழைக்கப்படும் நூலானது, வேதங்களின் சுருக்கமும், நல்ல பிராமணர்களால் பெரிதாக மதிக்கப்படுவதுமாகும். பாரதம் எனும் இந்த மரமானது, மேகங்களைப் போல மனித குலத்திற்கு வற்றாததாகி, புகழ்வாய்ந்த புலவர்கள் அனைவரின் வாழ்வாதாரமாக அமையும்.(91,92)
நான் இப்போது இந்த மரத்தில் இறுதிவரை மலர்ந்திருப்பவையும், கனிநிறைந்தவையாக இருப்பவையும், தூய்மை மற்றும் இனிய சுவையைக் கொண்டவையும், தேவர்களாலும் அழிக்கப்பட முடியாதவையுமான படைப்புகளைச் சொல்லப் போகிறேன்.(93)
முன்பொரு சமயம், உற்சாகமுள்ளவரும், அறம் சார்ந்தவருமான கிருஷ்ண-துவைபாயனர் {வியாசர்}, கங்கையின் ஞானமகனான பீஷ்மர், மற்றும் தன் சொந்த தாயார் {சத்தியவதி} ஆகியோரின் உத்தரவுகளின்டி, விசித்திரவீரியனின் மனைவியர் இருவரின் மூலமும், மூன்று நெருப்புகளைப் போன்றவர்களான மூன்று ஆண்பிள்ளைகளுக்குத் தந்தையானார்;(94) இவ்வாறு திருதராஷ்டிரன், பாண்டு மற்றும் விதுரன் ஆகியோரை பெற்ற அவர், தமது அறப்பயிற்சியின் வழக்கத்தைத் தொடர தமது தனிப்பட்ட வசிப்பிடத்திற்கு {ஆசிரமத்திற்குச்} சென்றார்.(95)
பெரும் முனிவரான வியாசர், இவர்கள் {அந்த மூவரும்} பிறந்து, வளர்ந்து, உயர்ந்த பயணத்தில் பிரிந்து போகும் வரை இம்மனிதகுலவுலகில் பாரதத்தை வெளியிடவில்லை;(96) ஜனமேஜயனாலும்,[4] ஆயிரக்கணக்கான பிராமணர்களாலும் வேண்டிக் கேட்டுக் கொள்ளப்பட்டபோது, தமதருகே அமர்ந்திருந்த தம் சீடரான வைசம்பாயனரை அவர் அறிவுறுத்தினார்;(97) அவரோ {வைசம்பாயனரோ}, சத்யஸ்களுடன் அமர்ந்து கொண்டு, மீண்டும் மீண்டும் உரைக்கத் தூண்டப்பட்டு, வேள்வி சடங்குகளின் {ஹோம காரியங்களின்} இடைவேளைகளின் போது இந்தப் பாரதத்தை உரைத்தார்.(98)
[4] விசித்திரவீரயன் மகன் பாண்டு. பாண்டு மகன் அர்ஜுனன். அர்ஜுனன் மகன் அபிமன்யு. அபிமன்யு மகன் பரிக்ஷித்.பரிக்ஷித் மகன் ஜனமேஜயன்.
அந்த ஜனமேஜயன் நடத்திய நாகயாகத்தின் போது, ஜனமேஜயன் கேட்டுக் கொண்டதற்கிணங்க வியாசரின் முன்னிலையிலேயே வியாசரின் சீடரான வைசம்பாயனர் உரைத்ததே இந்த மகாபாரதம்.
வைசம்பாயனர் உரைத்ததைக் கேட்ட சௌதியே தற்போது நைமிசாரண்யத்தில் உரையாற்றுகிறார்.
குரு {கௌரவக்} குடும்பம், காந்தாரியின் அறக்கொள்கைகள், விதுரனின் அறிவு, குந்தியின் பண்பு மாறா இயல்பு நிலை ஆகியவற்றின் பெருமைகளை வியாசர் இதில் முழுமையாகப் பிரதிபலித்திருக்கிறார்.(99) உன்னதமான அந்த முனிவர் {வியாசர்}, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} தெய்வீகத் தன்மையையும், பாண்டு மகன்களின் {பாண்டவர்களின்} நன்னெறிகளையும், திருதராஷ்டிரனுடைய மகன்கள் மற்றும் அவர்களுடைய பங்காளிகளின் தீய நடைமுறைகளையும் விளக்கியிருக்கிறார்.(100)
இந்திய வரைபடத்தில் நைமிசாரண்யம் இருக்கும் இடம் |
ஆங்கிலத்தில் | In English |