Honouring the parents is the highest virtue! | Vana Parva - Section 214 | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
தர்மவியாதன் கௌசிகரைத் தந்தை தாய்க்குப் பணிவிடை செய்யச் சொல்லி அறிவுறுத்தியது; அவன் ஏன் சூத்திர வர்க்கத்தில் பிறந்தான் என்ற காரணத்தையும் சொல்ல ஆரம்பித்தது…
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "தன் பெற்றோரை (இருவரையும்) தான் நினைக்கும் உயர்ந்த குருக்கள் என அந்த அந்தணரிடம் அறிமுகப்படுத்திய அந்த அறம் சார்ந்த வேடன் {தர்மவியாதன்}, "எனது அக ஆன்மப் பார்வையை விரிவடையச் செய்யும், இந்த அறத்தின் சக்தியைக் குறித்துக் கொள்ளும். கணவனுக்குத் தன்னை அர்ப்பணித்திருந்த, சுயக்கட்டுப்பாடுடைய, சத்தியவதியான அந்தப் பெண்ணால், "மிதிலைக்குச் செல்லும்; அங்கே அறத்தின் புதிர்களை உமக்கு விளக்கவல்ல ஒரு வேடன் வாழ்ந்து வருகிறான்" என்று இதற்காகவே உமக்குச் சொல்லப்பட்டது" என்றான்.
அந்த அந்தணர் {கௌசிகர்}, "ஓ! பக்திமானே, உனது அறக் கடமைகளை நிறைவேற்றுவதில் நிலையாக இருக்கும் உன்னைக் கண்ட பிறகு, கணவனுக்கு உண்மையாக இருக்கும், நல்ல குணம் கொண்ட அந்த உண்மை நிறைந்த மங்கை என்னைக் குறித்து சொன்ன வார்த்தைகளையும் நினைத்துப் பார்த்து, நீ உண்மையில் அனைத்து உயர்ந்த குணங்களையும் கொண்டவன் என்று உறுதியடைகிறேன்" என்றார். வேடன் {தர்மவியாதன்}, "என் தலைவா {கௌசிகரே}, கணவருக்கு நன்றியுடன் இருக்கும் அந்த மங்கை, என்னைக் குறித்து உம்மிடம் சொன்னவை, உண்மைச் செய்திகளின் {அடிப்படையில்} முழு ஞானம் கொண்டவை என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. ஓ அந்தணரே {கௌசிகரே}, நான் உமக்குச் சாதகமான அனைத்தையும் குறித்து விவரித்துவிட்டேன். நல்ல ஐயா {கௌசிகரே}, இப்போது நான் சொல்வதைக் கேளும். நான் உமக்கு நன்மையானதைச் சொல்கிறேன். ஓ! நல்ல அந்தணரே {கௌசிகரே}, நேர்மையான குணம் கொண்ட நீர், உமது தாய்க்கும் தந்தைக்கும் தகாததைச் செய்திருக்கிறீர். வேதங்களைக் கற்கும் காரணத்திற்காக, நீர், அவர்களின் அனுமதியின்றி வீட்டை விட்டு வெளியே வந்தீர். அக்காரியத்தில் நீர் முறையாக நடந்து கொள்ளவில்லை. வயது முதிர்ந்த துறவிகளான உமது பெற்றோர், உமது இழப்பால் ஏற்பட்ட துயரத்தில் முழுமையானக் குருடர்களானார்கள். விரைவாக இல்லம் திரும்பி அவர்களைச் சமாதானப் படுத்தும். இந்த அறம் உம்மை எப்போதும் கைவிடாதிருக்கட்டும். உயர்ந்த மனம் கொண்டு, தவத்தகுதி கொண்டு, அறத்திற்கு எப்போதும் உம்மை அர்ப்பணித்தீர். ஆனால் இவை அனைத்தும் உமக்குப் பயனில்லாமல் போகும். காலங்கடத்தாமல் விரைவாகத் திரும்பி உமது பெற்றோரைச் சமாதானப் படுத்தும். எனது சொற்களுக்குச் சிறிது மதிப்பு கொடும். மாறுபட்டு நடக்காதீர்; ஓ! அந்தண முனிவரே {கௌசிகரே}, நான் உமது நன்மைக்காகவே சொல்கிறேன், இந்நாளே விரைவாக உமது இல்லத்திற்குத் திரும்பும்" என்றான் {வேடன் தர்மவியாதன்}.
அதற்கு அந்த அந்தணர் {கௌசிகர்}, "நீ சொன்னது உண்மையே, ஐயமில்லை; ஓ! பக்திமானே நீ செழிப்பை அடைவாயாக; நான் உன்னிடம் மிகவும் திருப்தி அடைந்தேன்" என்றார். வேடன், "ஓ! அந்தணரே {கௌசிகரே}, சுத்தமான மனம் கொண்டவர்களாலும் அடைவதற்குக் கடினமான, தெய்வீகமான, பழமையான, நித்தியமான அறங்களை விடாமுயற்சியுடன் பயில்வதால், நீர் (எனக்கு) தெய்வீகமானவரைப் போலத் தோன்றுகிறீர். உமது தந்தை மற்றும் தாயின் பக்கத்திற்குச் செல்லும். விரைவாகச் சென்று, உமது பெற்றோரை வணங்குவதில் விடாமுயற்சி கொள்ளும்; இதைவிடப் பெரிய அறம் ஏதும் இருக்கிறதா என்பதை நான் அறியவில்லை" என்றான் {வேடன் தர்மவியாதன்}.
அதற்கு அந்த அந்தணர் {கௌசிகர்}, "என்னுடைய சிறு நற்பேறின் நிமித்தமாகவே நான் இங்கே வந்தேன், ஒரு சிறு நற்பேறின் காரணமாகவே நான் உன்னுடன் நட்பு கொண்டேன். அறத்தின் புதிர்களை இவ்வளவு அழகாக விளக்கக்கூடிய மனிதனை நமக்கு மத்தியில் கண்டுபிடிப்பது மிகவும் கடினமானதாகும்; ஆயிரக்கணக்கான மனிதர்களில் அறத்தின் அறிவியலை நன்கு அறிந்த ஒரு மனிதன் கிடைப்பது அரிதானது. ஓ! பெரும் மனிதா, உனது நட்பை அடைந்ததால், நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நீ செழிப்புடன் இருப்பாயாக. நான் நரகக்குழிக்குள் விழுந்து கொண்டிருந்தேன். ஆனால் நீ என்னைத் தூக்கி விட்டாய். இது இப்படி நடக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது. (நான் எதிர்பாராமல்) நீ என் வழியில் வந்தாய்.
ஓ! பெரும் மனிதா, {சொர்க்கத்தில் இருந்து} விழுந்த மன்னன் யயாதி, தனது பேரப்பிள்ளைகளின் {தனது மகள்களின் பிள்ளைகளின்} மூலம் காக்கப்பட்டதைப் போல, நானும் உன்னால் காக்கப்பட்டேன் என்பதை அறிந்து கொள். உனது அறிவுரையின் படி நடந்து, நான் எனது தந்தையையும், தாயையும் மதித்து நடப்பேன். சுத்தமில்லாத இதயம் கொண்ட மனிதனால் பாவம் மற்றும் நீதி ஆகியவற்றைக் குறித்து அறியவே முடியாது. நித்தியமான அறத்தின் புதிர்களைக் குறித்துச் சூத்திர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு மனிதன் கற்பது என்பது மிகவும் கடினமானது. நான் உன்னைச் சூத்திரனாகக் கருதவில்லை. இக்காரியத்தைப் பொறுத்தவரை நிச்சயம் ஏதோ மர்மம் இருக்கிறது. நீ இந்தச் சூத்திர நிலையை, உனது கடந்த கால {பூர்வ ஜென்} கர்மாவின் கனியாக அடைந்திருக்க வேண்டும். ஓ! பெருங்குணம் கொண்டவனே, நான் இக்காரியத்தின் உண்மையை அறிய பெரிதும் விரும்புகிறேன். இதனை எனக்குக் கவனத்துடனும், உனது விருப்பத்தின் பேரில் கூறுவாயாக" என்று கேட்டார் {கௌசிகர்}.
அதற்கு வேடன் {தர்மவியாதன்}, "ஓ! நல்ல அந்தணரே {கௌசிகரே}, எனது எல்லாவகை மதிப்புக்கும் அந்தணர்கள் தகுதி வாய்ந்தவர்களே. ஓ! பாவற்றவரே, எனது முற்பிறவியின் கதையைக் கேளும். ஓ! அற்புதமான அந்தணரின் மகனே {கௌசிகரே}, நான் முற்பிறவியில் வேதங்களை நன்கு படித்த, வேதாங்கங்களில் சாதித்த ஓர் அந்தண மாணவனாக இருந்தேன். எனது தவறால் நான் இந்தத் தற்போதைய என் தாழ்ந்த நிலையை அடைந்தேன். தனுர் வேத அறிவியலை (வில்வித்தை அறிவியலை) அறிந்த ஒரு குறிப்பட்ட மன்னன் எனக்கு நண்பனாக இருந்தான். ஓ! அந்தணரே {கௌசிகரே} அவனது நட்பால் நானும் வில்வித்தையில் நிபுணனாக இருந்தேன். ஒரு நாள் அம்மன்னன், தனது அமைச்சர்களுடனும் சிறந்த வீரர்களுடனும் வேட்டைக்குச் சென்றான்.
ஒரு ஆசிரமத்தினருகே அவன் பெரிய எண்ணிக்கையிலான மான்களைக் கொன்றான். ஓ! நல்ல அந்தணரே {கௌசிகரே}, நானும் ஒரு கொடுங்கணையை அடித்தேன். வளைந்த கணுக்களுள்ள அந்தக் கணையால் ஒரு முனிவர் காயப்பட்டார். அவர் தரையில் விழுந்து சத்தமாக, "நான் எவருக்கும் தீங்கிழைக்கவில்லையே, எந்தப் பாவி இந்தக் காரியதைதச் செய்தான்" என்று கதறினார். என் தலைவா {கௌசிகரே}, அவரை மானென்று கருதிய நான் அவரிடம் சென்றேன். அங்கு அவர் எனது கணையால் உடல் துளைக்கப்பட்டுக் கிடப்பதைக் கண்டேன். இத்தீயக் காரியத்தின் விளைவாக நான் (மனதால்) மிகவும் வருந்தினேன். தரையில் விழுந்து, சத்தமாக அழுது கொண்டிருந்த அந்தக் கடும் தவத்தகுதி படைத்த முனிவரிடம் நான், "ஓ! முனிவரே! அறியாமல் நான் இதைச் செய்துவிட்டேன்" என்று சொல்லி, மீண்டும், "இந்த மீறல் அனைத்தையும் மன்னிப்பதே முறையானது என்பதை நினைத்துப் பாரும்" என்றேன். ஆனால், ஓ! அந்தணரே {கௌசிகரே}, கோபம் மூண்ட அந்த முனிவர், "நீ கொடூர வேடனாகச் சூத்திர வர்க்கத்தில் பிறக்கக் கடவாய்" என்று சொன்னார்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.