Are asuras Persian gods? | Vana Parva - Section 219 | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
அக்னிகளான உக்தன் மற்றும் தபசின் பிள்ளைகள் குறித்து மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது.
காளையைப் பலி கொடுக்கும் பாரசீகத்தின் {இன்றைய ஈரானின்} முதன்மைக் கடவுள் மித்திரன் |
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "அவன் (உக்தன்), பிரம்மனின் புகழுக்கு ஒப்பான ஒரு பக்திமிக்க மகனைப் பெற பல வருடங்களாக நீடித்த கடுந்தவத்தைச் செய்தான். காசியபர், வசிஷ்டர், பிராணனின் மகனான பிராணன், அங்கிரசின் மகனான சியவணன், சுவர்ச்சகர் ஆகிய ஐந்து புனித நெருப்புகளின் துணைகொண்டு வியாஹிருதி மந்திரங்களை உச்சரித்துப் பிரார்த்தனை செய்யப்பட்டபோது, இயக்கம் தொடர்பான (படைப்பு) கொள்கைகளுடனும் ஐந்து வெவ்வேறு வண்ணங்களும் நிறைந்த மிகவும் பிரகாசமான ஆற்றல் (சக்தி) அங்கே எழுந்தது.
சுடர் விடும் நெருப்பின் நிறத்தில் அதன் தலை இருந்தது, அதன் கரங்கள் சூரியனைப் போலப் பிரகாசமாக இருந்தன. அதன் தோலும், கண்களும் தங்க நிறத்தில் இருந்தன. ஓ! பாரதா {யுதிஷ்டிரா}, அதன் பாதங்கள் கறுமையாக இருந்தன. அதன் ஐந்து வண்ணங்களும், அந்த ஐந்து மனிதர்களின் பெரும் தவத்தின் காரணமாக அதற்குக் கொடுக்கப்பட்டன. எனவே, இந்தத் தெய்வீகமானவன் {ஐந்து வண்ணமுள்ளவன் - பிரபாவனன்}, ஐந்து மனிதர்களுக்கு உடையவனாக விவரிக்கப்படுகிறான். அவனே ஐந்து இனங்களின் {கோத்திரங்களின்} முன்னோடியாவான்.
இப்படியே பத்தாயிரம் வருடம் தவம் செய்த பிறகு, அந்தப் பெரும் தவத்தகுதி படைத்தவன் {உக்தன்} படைப்புப் பணியைத் தொடங்கும் பொருட்டுப் பித்ருக்களுக்கு உடையதான பயங்கர நெருப்பு உற்பத்தியானது. தனது தலை மற்றும் வாயிலிருந்து அவன், வேகமாக வாழ்நாளை {ஆயுளை - உயிரை} அபகரிக்கும் பிருகத் மற்றும் ரதந்தாரா (பகல் மற்றும் இரவு) ஆகியவற்றைப் படைத்தான். சிவனைத் தனது தொப்புளிலும் {நாபியிலும்}, இந்திரனைத் தனது பலத்தில் இருந்தும், காற்று மற்றும் நெருப்பைத் தனது ஆன்மாவிலிருந்தும் படைத்தான். அவனது இரு கரங்களில் இருந்து உதத்தையும், அனுதத்தையும் படைத்தான்.
மனம், ஐம்புலன்கள் மற்றும் பிற உயிர்களையும் அவன் படைத்தான். இவற்றையெல்லாம் படைத்த அவன் {உக்தன்} பித்ருக்களின் ஐந்து மகன்களையும் படைத்தான். அவர்களில் பிரணிதி பிருகத்ரதனின் மகனாவான், பிருகத்ரதன் காசியபரின் மகனாவன். பானு சியவனனின் தெய்வமகனாவான். சௌபரன் சுவர்ச்சகனின் மகனாவான், அனுதாத்தன் பிராணனின் மகனாவான். இந்த இருபத்தைந்து பேரும் (அவனால் படைக்கப்பட்டதால்) புகழ்பெற்றவர்களாவர். தபஸ் என்பவன் வேள்விகளைத் தடுக்கும் பதினைந்து பிற தேவர்களையும் படைத்தான்.[1] அவர்கள் சுபீமன், பீமன், அதிபீமன், பீமபலன், அபலன், சுமித்ரன், மித்ரவந்தன், மித்ரசீனன், மித்ரவர்த்தனன், மித்ரதரமனனை {மித்ரதாமா} [2] மற்றும் சூரபிரவீரன், வீரன், சுவேகன், சூரவார்ச்சஸ், சூரஹந்திரி ஆகியோராவர்.
{[1] இந்து மதப் புராணங்களில் வேள்விகளை அழிக்கும் எந்தத் தேவனும் கிடையாது. அசுரர்களே அவ்வாறு செய்வர். பர்தவான் என்று மொழிபெயர்ப்பாளர் "மேற்கு நாடுகளைச் சார்ந்த பதினைந்து தேவர்கள் அல்லது அசுரர்கள்" என்று மொழிபெயர்த்திருக்கிறார். இந்துக்களால் அசுரர்கள் என்று கண்டிக்கப்பட்டவர்களை, சரத்துஸ்தர {Zarathustra} மதத்தைப் பின்பற்றுபவர்கள் {பாரசீகர்கள் - பண்டைய ஈரானியர்கள்} தங்கள் தேவர்களாக வழிபட்டது இங்கே கவனிக்கத்தக்கது என்கிறார் கங்குலி}.{[2} இந்த மித்ரா தேவர்களின் பெயர்கள் தொடர்பாக பார்க்கும்போது, பண்டைய பாரசீகர்களின் முதன்மைக் கடவுளுக்கு மித்ரன் என்ற பெயர் இருந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்கிறார் கங்குலி}
இந்தத் தேவர்கள் {அசுரர்கள்}, மூன்று வர்க்கமாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றனர். ஒவ்வொரு வர்க்கத்தில் ஐந்து பேர் உள்ளனர். அவர்கள் இவ்வுலகில் நிலைநிறுத்தப்பட்டு, சொர்க்கத்தில் நடைபெறும் தேவர்களின் வேள்விகளை அழிக்கின்றனர்; அவர்கள் {அழிவுத் தேவர்கள் [அ] அசுரர்கள்} அவர்களின் {தேவர்களின்} நோக்கங்களைக் கலங்கடித்து, அவர்களின் {தேவர்களின்} தெளிந்த நெய் காணிக்கையைக் {தானபலியைக்} கெடுக்கின்றனர். இதைத் தேவர்களுக்கு நீர்க்காணிக்கைகளைச் சுமந்து செல்லும் புனித நெருப்புகளை மீறுவதற்காக மட்டுமே இதை அவர்கள் {அசுரர்கள்} செய்கின்றனர். வேள்வியை நடத்தும் புரோகிதர்கள் கவனமாக இருந்தால், அவர்கள் {புரோகிதர்கள்}, அவர்களின் {அசுரர்களின்} நினைவாகத் தான பலியை வேள்விப்பீடத்திற்கு வெளியே வைக்கின்றனர். புனித நெருப்பு வைக்கப்படும் அந்தக் குறிப்பிட்ட இடத்திற்கு அவர்களால் {அசுரர்களால்} செல்ல முடியாது. அடியவர்களின் காணிக்கைகளைத் {தான பலிகளை} தங்கள் இறகுகள் மூலம் அவர்கள் {அசுரர்கள்} சுமந்து செல்கிறார்கள். பாடல்கள் {மந்திரங்கள்} மூலமாக அமைதிப்படுத்தப்படும்போது, அவர்கள் வேள்விச்சடங்குகளைக் கலைப்பதில்லை.
தபசின் மற்றொரு மகனான பிருகதுக்தன், பூமிக்கு சொந்தமானவன் ஆவான். அவன் இவ்வுலகில், அக்னிஹோத்திர வேள்விகள் செய்யும் பக்திமான்களால் வழிபடப்படுகிறான். தபசின் மற்றொரு மகன் ரத்நதரன் என்று அறியப்படுகிறான். அவனது நினைவாகவே வேள்விக் காணிக்கைகள் மித்ரபிந்தனுக்கு வழங்கப்படுகிறது என்று வேள்வியை நடத்தும் புரோகிதர்கள் அவனைக் {ரத்னதரன்} குறித்துச் சொல்கிறார்கள். கொண்டாடப்படும் தபஸ் இப்படியே தனது மகன்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.