Adbhuta and Swaha! | Vana Parva - Section 223 | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
பிரஜாபதியின் மகளான தேவசேனை, இந்திரனிடம் ஒரு பலமிக்கக் கணவனை வேண்டுவது; சூரியனும் சந்திரனும் சேர்ந்த ரௌத்திர முகூர்த்தத்தில் உண்டாகும் குழந்தையே அவளுக்குச் சிறந்த கணவனாக இருப்பான் என்று இந்திரன் பிரம்மனிடம் கோருவது; அத்புதன் என்ற நெருப்பானவன் சப்த ரிஷிகளின் மனைவியரிடத்தில் மையல் கொள்வது; காமத்தால் எரிந்த அவன் தன்னை அழித்துக் கொள்ளக் கானகம் சென்றது; அவன் மீது மையல் கொண்ட சுவாகா அவனை அடைய ஒரு தந்திரத்தைச் சிந்தித்தது...
அந்த மங்கை {இந்திரனிடம்}, "நான் (அனைத்து உயிர்களின் தலைவனான பிரம்மனின்) பிரஜாபதியின் மகள். என் பெயர் தேவசேனை. எனது தங்கையான தைத்தியசேனை இந்தக் கேசினால் நாசம் செய்யப்பட்டாள் {ravished}. நாங்கள் இரு சகோதரிகளும் எங்கள் பணிப்பெண்களுடன் இந்த மானஸ மலைகளில் இன்பமாக இருப்பதற்காகப் பிரஜாபதியின் அனுமதி பெற்று இங்கு வருவது வழக்கம். பெரும் அசுரனான கேசின் எங்களுக்குத் தினமும் தனது மரியாதையைச் செலுத்திவந்தான். ஓ! பகனை விழ்த்தியவனே {இந்திரா}, தைத்தியசேனை அவனுக்கு {அசுரன் கேசினுக்குச்} செவிமடுத்தாள். ஆனால் நான் அப்படிச் செய்யவில்லை. எனவே, தைத்தியசேனை அவனாள் எடுத்துச் செல்லப்பட்டாள். ஆனால், ஓ! சிறப்புமிக்கவனே {இந்திரா}, நீ உனது பலத்தால் என்னைக் காத்தாய். இப்போது, ஓ! தேவர்களின் தலைவா {இந்திரா}, நீ எனக்கு யாராலும் வெல்லமுடியாத கணவனைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என விரும்புகிறேன்" என்றாள் {தேவசேனை}. இதற்கு இந்திரன் {தேவசேனையிடம்}, "நீ எனக்குச் சித்தியின் மகளாவாய். உனது அன்னை, எனது தாயான தாக்ஷாயணிக்கு {தக்ஷனின் மகள் என்பதால் தாக்ஷாயணி} சகோதரி ஆவாள். இப்போது நான் உனது பராக்கிரமத்தைக் {பலத்தைக்} குறித்துக் கேட்க விரும்புகிறேன்" என்றான்.
அதற்கு அந்த மங்கை {தேவசேனை - இந்திரனிடம்}, "ஓ! நீண்ட கரங்களைக் கொண்ட வீரனே {இந்திரா}, நான் அபலம்[1] (பலமில்லாதவள்), ஆனால் எனது கணவர் பலமிக்கவராக இருக்க வேண்டும். என் தந்தையுடைய வரத்தின் பலத்தால், அவர் தேவர்களாலும், அசுரர்களாலும் மதிக்கப்படுவார்" என்றாள். இந்திரன் {தேவசேனையிடம்}, "ஓ! களங்கமற்றவளே {தேவசேனா}, உனது கணவன் என்ன மாதிரியான பலத்தைப் பெற்றிருக்க வேண்டும் என நீ விரும்புகிறாய் என நான் கேட்க விரும்புகிறேன்" என்றான். அதற்கு அந்த மங்கை {தேவசேனை - இந்திரனிடம்}, "ஆண்மையும், புகழும், சக்தியும் வாய்ந்து, பிரம்மத்துக்கு அர்ப்பணிப்புடன் தேவர்கள், அசுரர்கள், யக்ஷர்கள், கின்னரர்கள், உரகர்கள், ராட்சசர்கள், தீய மனம் கொண்ட தைத்தியர்கள் ஆகியோர் அனைவரையும் வீழ்த்த வல்ல, அனைத்து உலகங்களையும் அடக்கவல்லவரே எனது கணவராகலாம்", என்றாள் {தேவசேனை}.
[1] அபலம் என்பது பெண்களுக்குப் பொதுவான பெயர். பலம் அல்லது சக்தி இல்லாதவன்/ள் என்று அதற்குப் பொருள். இச்சொல் உரிச்சொல்லாகவும் பயன்படுத்தப்படுகிறது என்கிறார் கங்குலி. {உரிய சொல் என்ற பொருளில் அது உரிச்சொல் எனப் பெயர்பெற்றது. உ-ம்: ஓடு என்பதை வேகமாக ஓடு என்று சொல்லலாம். இங்கு வேகமாக என்பது உரிச்சொல். இது {வேகமாக என்ற சொல்} செயலைக் குறிப்பதால் வினை உரிச்சொல் என்றும் வினையடை என்றுப் கூறப்படும். உயரமான பெண் என்றால், அதில் வரும் உயரமான என்ற சொல், தொடர்ந்து வரும் பெயர்ச்சொல்லுக்கு மேலும் விளக்கம் தருவதால், அது பெயர் உரிச்சொல் என்றும் பெயரடை என்றும் கூறப்படும்.}
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "அவளது பேச்சைக் கேட்ட இந்திரன் பெரும் துன்பத்துக்குள்ளாகி, தனக்குள்ளேயே, "இந்த மங்கையின் {தேவசேனையின்} விவரிப்புக்கு ஏற்ற ஒருவன் {கணவன்} இல்லையே" என்று ஆழ்ந்து சிந்தித்தான். சூரியனைப் போன்ற பிரகாசம் கொண்ட அந்தத் தேவன் {இந்திரன்}, உதய மலையில் [2] உதிக்கும் சூரியனையும், அந்தச் சூரியனுக்குள் வழுக்கிச் செல்லும் பெரும் சோமனையும் {சந்திரனையும்} கண்டான். அந்நேரம் புதி நிலவு நாள் {அமாவாசையாததால்} ஆதலால், அந்த நூறு வேள்விகளைச் செய்தவன் {இந்திரன்}, அந்த ரௌத்திர [3] நேரத்தில் {ரௌத்திர முகூர்த்தத்தில்}, சூரியோதைய மலையில் தேவர்களும் அசுரர்களும் போரிடுவதைக் கண்டான். சிவந்த மேகங்களுடன் கூடிய வைகறையையும் {காலை சந்திப் பொழுதையும்} அவன் {இந்திரன்} கண்டான். இரத்தம் போன்ற சிவந்த நிறத்தில் இருக்கும் வருணனின் வசிப்பிடத்தையும் {கடலையும்} அவன் {இந்திரன்} கண்டான். பிருகு, அங்கிரஸ் மற்றும் இன்ன பிறரால் பலதரப்பட்ட மந்திரங்களுடன் கொடுக்கப்படும் காணிக்கைகளைச் சுமந்து செல்லும் அக்னி சூரியனின் வட்டுக்குள் செல்வதைக் கண்டான். மேலும் அவன் {இந்திரன்}, சூரியனை அலங்கரிக்கும் இருபத்துநான்கு பருவங்களையும், அத்தகு சூழ்நிலையில் சூரியனில் இருக்கும் பயங்கரமான சோமனையும் {சந்திரனையும்} கண்டான்.
[2] சூரியன் உதிப்பதும், மறைவதும் முறையே இரு மலைகளுக்குப் பின்னால் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அவன் {சூரியன்} உதய மலையில் இருந்து உதித்து, அஸ்த மலையில் மறைகிறான் என்பதே அந்நம்பிக்கை என்கிறார் கங்குலி[3] ரௌத்திரம் - கோபம், வன்முறை, போர் போன்றவற்றின் தேவனான ருத்திரனுக்கு உரியது என்கிறார் கங்குலி
சூரியன் மற்றும் சந்திரனின் அந்தப் பயங்கரமான இணைப்பைக் கண்ட சக்ரன் {இந்திரன்} தனக்குள், "சூரியன் மற்றும் சந்திரனின் இந்தப் பயங்கரமான இணைப்பு, நாளை நடக்கப் போகும் பெரும் போரை முன்னறிவிக்கிறது. சிந்து {Indus} நதியும், புதிதான இரத்த ஓட்டத்துடன் பாய்கிறது. ஓநாய் வாயில் நெருப்புடன் சூரியனுக்கு எதிராக ஊளையிடுகிறது. இந்தப் பெரும் இணைப்பு பயங்கரமானதாகவும், சக்தி நிறைந்ததாகவும் இருக்கிறது. சூரியனுடனும், அக்னியுடனும் இணையும் சந்திரனின் (சோமன்) சேர்க்கை மிகவும் அற்புதமாக இருக்கிறது. இப்போது இந்தச் சோமன் ஒரு மகனைப் பெற்றெடுத்தால், அந்த மகன், இந்த மங்கைக்கு {தேவசேனைக்குக்} கணவனாகலாம். அக்னியும் அதே போன்ற சூழ்நிலையையே கொண்டிருக்கிறான். அவனும் ஒரு தேவனே. இந்த இருவரும் ஒரு மகனைப் பெற்றெடுத்தால், அந்த மகன் இந்த மங்கைக்குக் கணவனாவான்" என்று நினைத்தான் {இந்திரன்}. இந்த நினைப்போடே, அந்த ஒப்பற்ற தேவன், தேவசேனையையும் [4] தன்னுடன் அழைத்துக் கொண்டு பிரம்ம லோகத்திற்குச் சென்றான். பெருந்தகப்பனை {பிரம்மனை} வணங்கிய {அவன்} இந்திரன், அவனிடம் {பிரம்மனிடம்}, "புகழ்பெற்ற போர்வீரனை இந்த மங்கைக்குக் கணவனாக நிச்சயம் செய்யும்" என்றான் {இந்திரன்}.
[4] தேவசேனை என்பதற்குச் சொல்லுக்குச் சொல் பொருள் {literal meaning} தேவர்கள் படை என்பதாகும்., தேவர்கள் படைக்கு ஒரு தலைவனை அடைய இந்திரன் செய்த முயற்சிகளின் உருவகப் பிரதிபலிப்பே இந்தக் கட்டுக்கதை {நீதிக்கதை} என்கிறார் கங்குலி.
பிரம்மன் {இந்திரனிடம்}, "ஓ! அசுரர்களைக் கொல்பவனே, நீ நினைத்தவாறே ஆகட்டும். அந்தச் சேர்க்கையின் மூலம் உண்டாகும் மகன் பலம்வாய்ந்தவனாக இருப்பான். அந்தப் பலமிக்கவன் {அப்படிப் பிறக்கும் குழந்தை}, இந்த மங்கையின் கணவனாகவும், உன்னுடன் சேர்ந்து உனது படைகளுக்குத் தலைவனாகவும் இருப்பான்" என்றான் {பிரம்மன்}. இப்படிச் சொல்லப்பட்ட தேவர்கள் தலைவனும் {இந்திரனும்}, அந்த மங்கையும் {தேவசேனையும்} அவனை {பிரம்மனை} வணங்கிய பிறகு, பலமிக்க தெய்வீக முனிவர்களும், பெரும் அந்தணர்களுமான வசிஷ்டரும் இன்னும் பிறரும் வாழும் இடத்திற்குச் சென்றனர். இந்திரனைத் தலைமையாகக் கொண்ட பிற தேவர்களும் அந்த முனிவர்கள் செய்யும் வேள்விகளில் தங்களுக்கு உரிய காணிக்கை பங்குகளைப் பெற்று சோம பானத்தைக் குடிக்கும் விருப்பத்தோடு அங்கே சென்றனர். முறையாகச் சுடர்விட்டெரியும் நெருப்பைக் கொண்டு சடங்குகளைச் செய்து அந்தப் பெரும் மனம் படைத்தவர்கள் {முனிவர்கள்} தேவர்களுக்குக் காணிக்கைகளை அளித்தனர்.
காணிக்கைகளைச் சுமந்து செல்லும் அத்புத நெருப்பு, மந்திரங்களால் அழைக்கப்பட்டான். சூரிய வட்டிலில் இருந்து வெளியே வந்த அந்தத் தலைமை நெருப்பு {அத்புதன்} பேச்சைக் கட்டுப்படுத்திக் கொண்டு முறையாக அங்கே வந்தான். ஓ! பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரா}, தூண்டப்பட்ட வேள்வி நெருப்புக்குள் புகுந்து, அதில் முனிவர்களால் மந்திரங்களுடன் படைக்கப்பட்ட காணிக்கைகளை எடுத்துக்கொண்டு {சுமந்து கொண்டு} சொர்க்கவாசிகளிடம் {தேவர்களிடம்} சென்றான். அப்படி அவன் திரும்பும்போது, அவன் அந்த உயர் ஆன்ம முனிவர்களின் மனைவியர் வசதியாகத் தங்கள் படுக்கையில் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டான். அந்த மங்கையர், தங்கப் பலிப்பீடம் போலவும், களங்கமற்ற சந்திரக் கதிர்கள் போலவும், நெருப்புச் சுடர்களைப் போலவும், எரியும் நட்சத்திரம் போலவும் இருந்தனர். ஆவல் நிறைந்த கண்களுடன் அந்தச் சிறப்புமிக்க அந்தணர்களின் மனைவியரைக் கண்ட அவனது மனம் கலங்கியது. அவன் {அத்புதன்} அவர்களது அழகால் தாக்கப்பட்டான். அப்படிக் கலங்குவது முறையற்றது எனக் கருதிய அவன், தனது இதயத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டான். பிறகு அவன் தனக்குள்ளேயே, "இந்தப் பெரும் அந்தணர்களின் மனைவியர் கற்புடையவர்கள், {கணவனுக்கு} உண்மையானவர்கள், பிற மனிதர்களின் ஆசைகளுக்கு அப்பாற்பட்டவர்கள். நான் அவர்களை அடையும் விருப்பத்தால் நிறைந்திருக்கிறேன். விதிப்படி நான் அவர்கள் மீது கண்களைச் செலுத்தக்கூடாது. அவர்களைத் தொடவும் கூடாது. எனவே, நான் அவர்களது கார்ஹபத்ய {வீட்டில் வைக்கும்} நெருப்பாகி தினமும் அவர்களைக் கண்டு திருப்தியடைவேன்" என்று நினைத்துக் கொண்டான்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "இப்படித் தன்னை வீட்டு நெருப்பாக மாற்றிக் கொண்ட அந்த அத்புத நெருப்பானவன், அந்தத் தங்க நிறம் கொண்ட பெண்களைக் கண்டும், தனது சுடர்களால் அவர்களைத் தொட்டும் மிகவும் திருப்தி கொண்டான். அவர்களது {முனிவர்களின் மனைவியரின்} அழகால் மிகவும் கவரப்பட்ட அவன் {அத்புத நெருப்பானவன்}, அவர்களுக்கு இதயத்தைக் கொடுத்து, அவர்களிடம் தீவிரக் காதல் கொண்டு அங்கேயே நீண்ட நாள் தங்கினான். அந்த அந்தணப் பெண்களின் இதயங்களை வென்றெடுக்கும் முயற்சிகளில் கலங்கடிக்கபட்டான் அவன். அந்தக் காதலால் தனது இதயம் சித்திரவதைக்குள்ளாகி, தன்னை அழித்துக் கொள்ளும் நோக்கோடு ஒரு கானகத்திற்குச் சென்றான்.
அதற்குச் சில காலத்திற்கு முன்பே தக்ஷனின் மகளான சுவாகா, அவனிடம் {அத்புத நெருப்பானவனிடம்} காதல் கொண்டிருந்தாள். அந்தச் சிறந்த பெண் {சுவாகா}, அவனது பலவீனமான தருணங்களைக் கண்டறிய நீண்ட காலம் முயற்சி செய்தாள். ஆனால் அந்தக் குற்றமற்ற பெண்ணால் {சுவாகாவால்}, அமைதியாகவும் மன ஒருமையுடனும் இருந்த அக்னி தேவனிடம் எந்தப் பலவீனத்தையும் காணமுடியவில்லை. ஆனால் இப்போதோ, காமனால் சித்திரவதை செய்யப்பட்ட அந்த அக்னி தேவனைக் கண்ட அவள் {சுவாஹா}, தனக்குள், "நானும் காதலால் கவலை கொண்டு இருகிகறேன். எனவே, நான் அந்த ஏழு முனிவர்களின் மனைவிகளைப் போல உருவம் கொண்டு, அவர்களது அழகால் தாக்கப்பட்டுள்ள அக்னி தேவனை அந்த உருவத்தோடு அணுகுவேன். இது நடந்தால், அவனும் {அத்புத நெருப்பான அக்னி தேவனும்} திருப்தியடைவான், எனது விருப்பமும் ஈடேறும்" என்று நினைத்துக் கொண்டாள்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.