The Birth of Skanda! | Vana Parva - Section 224 | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
சுவாகா, ஏழு முனிவர்களின் மனைவியரில் அருந்ததியைத் தவிர மற்றவர்களுடைய உருவங்களில் சென்று அக்னியுடன் கூடியது; அக்னியின் உயிரணுக்களை வெள்ளை மலையில் உள்ள தங்கத் தடாகத்தில் சுவாகா வீசியது; அதிலிருந்து ஸ்கந்தன் உண்டானது; ஸ்கந்தன் கணைகளால் கிரௌஞ்ச மலையைப் பிளந்தது; ஸ்கந்தன், வேல் கொண்டு வெள்ளை மலையின் சிகரங்களை இரண்டாகப் பிளந்தது…
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, பெரும் நற்பண்புகளும், எந்தக் களங்கமும் அற்ற தன்மை கொண்ட அழகான சிவை {Siva} (ஏழு முனிவர்களில் ஒருவரான) அங்கிரசின் மனைவியாவாள். அந்த அற்புதமான மங்கை (சுவாகா}, முதலில் சிவையின் உருவம் கொண்டு, அக்னியின் முன்னிலையை அடைந்து, அவனிடம் {அக்னியிடம்} அவள், "ஓ! அக்னி, நான் உன் மீது கொண்ட காதலால் துன்புறுகிறேன். நீ என்னுடன் ஊடாடுவதே உனக்குப் பொருந்தும் என நான் நினைக்கிறேன். முனிவர்களின் மனைவியர் உரிய கவனத்திற்குப் பிறகு என்னை இங்கே அனுப்பினார்கள். நான் அவர்களின் ஆலோசனைப் படியே இங்கே வந்திருக்கிறேன்" என்றாள் {சுவாகா}.
அக்னி {சுவாகாவிடம்}, "நான் காதலால் துன்புறுகிறேன் என்பதை நீ எப்படி அறிந்தாய்? நீ யாரைக் குறித்துச் சொன்னாயோ அந்த ஏழு முனிவர்களின் {சப்தரிஷிகளின்} அன்புக்குரிய மனைவியர் இதை எப்படி அறிந்தனர்?" என்று கேட்டான்.
{சிவை உருவில் இருந்த} சுவாகா {அக்னியிடம்}, "நீ எங்களுக்கு எப்போதும் பிடித்தமானவனே, ஆனால் நாங்கள் உன்னைக் குறித்து அஞ்சுகிறோம். நன்கு அறியப்பட்ட குறிப்புகளால், உனது மனதைப் படித்த அவர்கள், என்னை உனது முன்னிலைக்கு அனுப்பியிருக்கின்றனர். நான் என் விருப்பத்தைத் தணித்துக் கொள்ள இங்கே வந்திருக்கிறேன். ஓ! அக்னி, உன் விருப்பத்தைச் சூழ விரைவாகச் செயல்படு. என் சகோதரிகள் {Sister-in-law} எனக்காகக் காத்திருக்கின்றனர். நான் விரைவாகத் திரும்ப வேண்டும்" என்றாள் {சுவாகா}.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "பின்பு, பெரும் மகிழ்ச்சியில் நிறைந்த அக்னி, சிவையின் உருவத்தில் இருந்த சுவாகாவைத் திருமணம் செய்தான். அவனுடன் இன்பமாகக் கூடிய வாழ்ந்த அந்த மங்கை {சுவாகா}, வீரியமான உயிரணுவை தனது கைகளில் ஏந்தினாள். பிறகு அவள் தனக்குள்ளேயே, 'கானகத்துக்குள் மாற்றுருவில் இருக்கும் நம்மைக் காண்போர், அக்னியுடன் தொடர்புப்படுத்தி, அந்த அந்தணப் பெண்களைத் தகுதியில்லாத இழிந்த நடத்தை கொண்டவர்கள் எனக் கருதுவார்களே. இதைத் தவிர்க்க, ஒரு பறவையின் உரு கொண்டால், இந்தக் கானகத்தில் இருந்து மிக எளிதாக வெளியேறலாமே!' என்று நினைத்தாள்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "பிறகு இறகுபடைத்த உயிரினத்தின் உருவத்தை ஏற்ற அவள் {சுவாகா}, கானகத்தைவிட்டு வெளியேறி, நாணல் கொத்துகளும், பிற செடிகளும், மரங்களும் அடர்ந்ததும், பார்வையிலேயே விஷம் கொண்ட ஏழு தலை கொண்ட விசித்திரமான பாம்புகளால் காக்கப்பட்டதும், ராட்சசர்கள், பிசாசங்களும், பயங்கரமான ஆவிகளும், பலவகைப்பட்ட பறவைகளும் விலங்குகளும் நிறைந்ததுமான வெண்மலையை {ஸ்வேத மலை} {White Mountain} அடைந்தாள். அந்த அற்புதமான மங்கை விரைவாக அந்த மலைகளின் சிகரத்திற்கு உயர்ந்து, அந்த உயிரணுவை தங்கத்தடாகத்துக்குள் {சுவர்ணக்குண்டத்துக்குள்} வீசினாள். பிறகு அவள் {சுவாகா}, அந்த உயர்-ஆன்ம முனிவர்களின் மற்ற மனைவியரின் உருவங்களையும் அடைந்து, தொடர்ந்து அக்னியுடன் கேளிக்கையில் ஈடுபட்டாள். ஆனால், தனது கணவருக்கு (வசிஷ்டருக்கு) அர்ப்பணிப்போடு இருந்த பெரும் தவத்தகுதி கொண்ட அருந்ததியின் உருவத்தை மட்டும் அவளால் எடுக்க முடியவில்லை.
ஓ! குரு குலத்தின் தலைவா {யுதிஷ்டிரா}, அந்தப் பெண் சுவாகா முதல் சந்திர நாளில் {பிரதமை திதியில்} அக்னியின் உயிரணுக்களை அத்தடாகத்திற்குள் ஆறுமுறை வீசினாள். அப்படி வீசப்பட்ட அவை {உயிரணுக்கள்}, பெரும் சக்தி கொண்ட ஓர் ஆண் குழந்தையைப் படைத்தன. கைவிடப்பட்ட குழந்தை என முனிவர்களால் கருதப்பட்ட காரணத்தால், அவன் {அக்குழந்தை} ஸ்கந்தன் {Skanda} என்ற பெயரால் அழைக்கப்பட்டான். அக்குழந்தைக்கு ஆறு முகங்களும், பனிரெண்டு காதுகளும், அதுபோலவே கண்களும், கைகளும், கால்களும், ஒரு கழுத்தும், ஒரு வயிறும் இருந்தன. அவன் இரண்டாவது சந்திர நாளில் {துதியைத் திதியில்} தனது உருவத்தைக் கொண்டான். பிறகு சிறு குழந்தையாக மூன்றாவது நாளில் வளர்ந்தான். அந்தக் குகனின் {ஸ்கந்தனின்} உறுப்புகள் நான்காவது நாளில் வளர்ந்தன. சிவந்த மேகங்கள் சூழ, மின்னல் மின்ன, அக்குழந்தை, சிவந்த மேகங்களுக்கிடையில் இருந்து உதிக்கும் சூரியனைப் போலப் பிரகாசித்தான்.
தேவர்களின் எதிரிகளை அழிப்பதற்காக அசுரன் திரிபுரனை அழித்தவனின் {சிவனின்} மகத்தான வில்லைப் பிடித்த அந்தப் பலம்வாய்ந்தவன் {ஸ்கந்தன்}, அசைவன, அசையாதன ஆகிய பிரிவுகளைக் கொண்ட மூவுலகமும் பிரமிப்படையும்படி பயங்கரமாகக் கர்ஜித்தான். பெரும் மேகக்கூட்டங்களின் பேரிரைச்சலைப் போலத் தெரிந்த அந்த ஒலியைக் கேட்டதும், பெரும் நாகர்களான சித்திரனும் ஐராவதனும் அச்சத்தால் நடுக்கமுற்றனர். அவர்கள் {இரு நாகங்களும்} நிலையற்று இருப்பதைகண்ட, சூரியனின் பிரகாசத்தோடு இருந்த அந்தப் பிள்ளை {ஸ்கந்தன்}, அவர்களைத் தனது இரு கைகளாலும் பிடித்தான். வேலை {தனது மற்றொரு} கையிலும், சிவப்புக் கொண்டை கொண்டு பருத்திருந்த பெரும் சேவலொன்றை மற்றொரு கையிலும் பிடித்துக் கொண்டான். அந்த நீண்ட கரம் கொண்ட அக்னியின் மகன் {ஸ்கந்தன்}, பயங்கரமான ஒலி எழுப்பியபடி {அங்கே} விளையாட ஆரம்பித்தான்.
அற்புதமான சங்குகளைத் தனது இரு கைகளிலும் தாங்கிய அந்தப் பலமிக்கவன், மிகப் பலம்வாய்ந்த உயிரினங்களும் நடுங்கும் வகையில் அதை {அந்தச் சங்கை} ஊத ஆரம்பித்தான். காற்றில் தனது இரு கைகளையும் தட்டியபடி, மலை உச்சியில் விளையாடிக் கொண்டிருந்த அந்தப் பெரும் பலம்வாய்ந்தவனும் ஒப்பற்ற பராக்கிரமம் கொண்டவனுமான மஹாசேனன் {ஸ்கந்தன்}, மூன்று உலகங்களையும் விழுங்கிவிடுவதைப் போலத் தோற்றமளித்தான். சொர்க்கத்தில் உயர்ந்து நிற்கும் சூரிய தேவனைப் போல அவன் {ஸ்கந்தன்} ஒளிர்ந்து கொண்டிருந்தான். அற்புதமான பராக்கிரமும், ஒப்பற்ற பலமும் கொண்ட அவன் {ஸ்கந்தன்}, அந்த மலையின் உச்சியில் அமர்ந்து கொண்டு, தனது பல்வேறு முகங்களால், பலதரப்பட்ட திசைப்புள்ளிகளையும் நோக்கி, பலதரப்பட்ட பொருட்களைக் கண்டு, தனது உரத்த கர்ஜனைகளை மீண்டும் எழுப்பினான்.
அந்தக் கர்ஜனையைக் கேட்ட பல்வேறு உயிரினங்கள் அச்சத்தால் பணிந்து விழுந்தன. அச்சத்தாலும், மனப்பதற்றத்தாலும், அவை பாதுகாப்பைத் தேடின. அப்போது அந்தத் தேவனின் {ஸ்கந்தனின்} பாதுகாப்பை நாடிய பல்வேறு வகைகளைச் சேர்ந்த மக்கள், அவனது பலமிக்க {ஸ்கந்தனின்} பிராமணத் தொண்டர்கள் என்று அறியப்படுகிறார்கள் {are known as his powerful Brahmana followers}. பிறகு தனது இருக்கையில் இருந்து எழுந்த அந்தப் பலமிக்கத் தேவன் {ஸ்கந்தன்}, அந்த மக்களின் அச்சத்தைப் போக்கினான். பிறகு தனது வில்லை எடுத்து, வெண்மலை {ஸ்வேதமலை} இருக்கும் திசையில் கணைகளை அடித்தான். அந்தக் கணைகளால், இமயத்தின் மகனான கிரௌஞ்ச மலை தவிடுபொடியானது. அன்னங்களும், கழுகுகளும் இப்போதும் சுமேரு மலைகளுக்கு {மேரு மலைதான்} குடியேற்றம் செல்வது இதன் காரணமாகத்தான். பெரிதும் காயமடைந்த கிரௌஞ்ச மலை, அச்சத்துடன் கதறி கீழே விழுந்தான். அவன் {கிரௌஞ்ச} மலை விழுவதைக் கண்ட மற்ற மலைகளும் கதறத் தொடங்கின.
கையில் தண்டாயுதத்துடன் பழனி முருகன் |
ஷட்டி {சஷ்டி} நோன்பு நாளன்று {இன்று 02.08.2014} முருகன் பிறப்பை மொழிபெயர்க்க நேர்ந்ததைப் பெறர்கரிய பேறாகக் கருதுகிறேன்!
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.