Krishna removed fatigue of the steeds! | Drona-Parva-Section-099 | Mahabharata In Tamil
(ஜயத்ரதவத பர்வம் – 15)
பதிவின் சுருக்கம் : காலாளாகத் தனியாக நின்று பகைவீரர்களைத் தடுத்த அர்ஜுனன்; குதிரைகளில் தைத்த கணைகளைப் பிடுங்கி, அவற்றின் களைப்பையும், வலியையும் போக்கி மீண்டும் தேரில் பூட்டிய கிருஷ்ணன்; வேகமாகச் சென்ற கிருஷ்ணார்ஜுனர்களைத் தடுக்க முடியாத கௌரவர்கள்; அர்ஜுனனைப் பின்தொடர்ந்து சென்ற துரியோதனன்...
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "உயர் ஆன்மக் குந்தியின் மகன் {அர்ஜுனன்} நீரை உண்டாக்கிய பிறகு, பகைவரின் படையை அவன் {அர்ஜுனன்} தடுக்கத் தொடங்கி, கணைமயமான கூடத்தைக் கட்டியதும், பெரும் காந்தி கொண்ட வாசுதேவன் {கிருஷ்ணன்}, தேரில் இருந்து இறங்கி, கணைகளால் துளைத்துச் சிதைக்கப்பட்ட குதிரைகளை நுகத்திலிருந்து அவிழ்த்தான். எப்போதும் கண்டிராத அக்காட்சியைக் கண்டதால், சித்தர்கள், சாரணர்கள் மற்றும் போர்வீரர்கள் அனைவராலும் கரவொலியுடன் எழுப்பப்பட்ட ஆரவாரப் பேரொலி அங்கே கேட்கப்பட்டது. காலாளாக நின்று போரிட்ட குந்தியின் மகனை {அர்ஜுனனை} (ஒன்றுகூடியிருந்த) வலிமைமிக்கத் தேர்வீரர்களால் எதிர்க்க இயலவில்லை. இவையாவும் மிக அற்புதமாகத் தெரிந்தது.
கூட்டம் கூட்டமாகத் தேர்களும், எண்ணற்ற யானைகளும், குதிரைகளும் தன்னை நோக்கி விரைந்தாலும், தன் எதிரிகள் அனைவருடன் போரில் ஈடுபட்ட பார்த்தன் {அர்ஜுனன்} எந்த அச்சத்தையும் உணரவில்லை. (பகை) மன்னர்கள், அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்} மீது தங்கள் கணைமாரியைப் பொழிந்தனர். எனினும், பகைவீரர்களைக் கொல்பவனும், அற ஆன்மா கொண்டவனுமான அந்த வாசவன் மகன் {அர்ஜுனன்} எவ்வித கவலையையும் உணரவில்லை. உண்மையில் அந்த வீரப் பார்த்தன் {அர்ஜுனன்}, பெருங்கடலானது, தன்னில் பாயும் நூற்றுக்கணக்கான ஆறுகளை ஏற்பதைப் போலத் தன்னை நோக்கி வரும் நூற்றுக்கணக்கான கணைமாரிகளையும், கதாயுதங்களையும், வேல்களையும் ஏற்றான்.
பார்த்தன் {அர்ஜுனன்}, அந்த முதன்மையான மன்னர்களால் தன்னை நோக்கி ஏவப்பட்ட முதன்மையான கணைகளை மூர்க்கமான வலிமை கொண்ட தன் ஆயுதங்கள் மற்றும் தன் கரப் பலத்தின் மூலம் வரவேற்றான். அவன் {அர்ஜுனன்}, தரையில் தனியாக நின்றிருந்தாலும், பேராசை எனும் ஒரு தவறானது சாதனைகள் அனைத்தையும் அழிப்பதைப் போலத் தேர்களில் இருந்த அந்த மன்னர்கள் அனைவரையும் கலங்கடிப்பதில் வென்றான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, வாசுதேவன் {கிருஷ்ணன்} மற்றும் பார்த்தன் ஆகிய இருவரின் அற்புதம் நிறைந்த ஆற்றலைக் கண்டு புகழ்ந்த கௌரவர்கள், "போரில் பார்த்தனும் {அர்ஜுனனும்}, கோவிந்தனும் {கிருஷ்ணனும்} குதிரைகளை நுகத்திலிருந்து அவிழ்த்ததைக் காட்டிலும் அற்புதம் நிறைந்த செயல் உலகில் வேறு எது இருக்கிறது? அல்லது இருக்கப் போகிறது? போரில் கடும் சக்தியையும், பெரும் நம்பிக்கையையும் காட்டும் இந்த மனிதர்களில் சிறந்தவர்கள் நம்மைப் பெரும் எண்ணங்களால் ஊக்கப்படுத்துகின்றனர்" என்றனர் [1].
[1] வேறொரு பதிப்பில் இதன் பிறகு இன்னும் அதிகம் இருக்கிறது. அவை பின்வருமாறு: "பிரபுவே, புருஷோத்தமர்களான அவ்விருவரும் நம் விஷயத்தில் அதிகப் பயத்தை உண்டு பண்ணினார்கள். உக்ரமான சக்தியையும் வெளிப்படுத்தினார்கள். பொங்கி வருகின்ற சமுத்திரத்தைக் கரை தடுப்பது போல ரணகளத்தில் பார்த்தன் ஒருவனே உம்முடைய சேனையைத் தடுத்தான். பாரதரே, பார்த்தனுடைய அம்புகளால் வேயப்பட்ட அந்த வீட்டில், பக்ஷிகள் ஆகாயத்தை அடைந்து சஞ்சரிப்பது போலச் சஞ்சரித்தன. ஐயா, யுத்தத்தில் நிற்கின்ற அந்த அர்ஜுனனை நோக்கி உம்முடைய படைகளுள் உம்மைச் சேர்ந்தவன் ஒரு மனிதனாவது மிகுந்த கோபத்தோடு எதிர்த்துச் செல்லவில்லை. உம்முடைய யுத்தவீரர்கள் அனைவரும் அந்த யுத்தகளத்தில் கோவிந்தரையும் பாண்டு குமாரனான தனஞ்சயனையும் பார்த்து மனநிலைமையை இழந்தவர்களானார்கள்" என்று இருக்கிறது. அதன் பிறகு பின்வருமாறே தொடர்கிறது.
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்ட ரிஷிகேசன் {கிருஷ்ணன்}, அந்தப் போர்க்களத்தில் கணைகளாலான கூடத்தை அர்ஜுனன் உண்டாக்கியபிறகு, உமது துருப்புகள் அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, ஏதோ பெண்களின் சபையில் தான் இருப்பதைப் போல மிகுந்த நம்பிக்கையுடன் புன்னகைத்தபடியே குதிரைகளை அதற்குள் அழைத்துச் சென்றான். குதிரைகளைச் சீர்செய்வதில் நல்ல திறம்பெற்ற கிருஷ்ணன், அவற்றின் {குதிரைகளின்} களைப்பு, வலி, நுரை தள்ளுதல், நடுக்கம், காயங்கள் ஆகியவற்றை நீக்கினான். பிறகு அவற்றில் இருந்த கணைகளைப் பிடுங்கி, தன் கைகளால் அக்குதிரைகளைத் தேய்த்து, அவற்றை முறையாகத் துள்ளி நடக்கச் செய்து, அவற்றை {நீரைக்} குடிக்க வைத்தான். அவற்றைக் குடிக்கச் செய்து, அவற்றின் களைப்பு மற்றும் வலியைப் போக்கிய அவன் {கிருஷ்ணன்}, மீண்டும் அவற்றை {குதிரைகளைத்} தேர்களில் முதன்மையான அந்தத் தேரின் நுகத்தில் கவனமாகப் பூட்டினான்.
பிறகு, ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவனும், பெரும் சக்தி கொண்டவனுமான அந்தச் சௌரி {கிருஷ்ணன்}, அர்ஜுனனோடு சேர்ந்து அந்தத் தேரில் ஏறி பெரும் வேகத்தில் சென்றான். தேர்வீரர்களில் முதன்மையானவனுக்கு {அர்ஜுனனுக்குச்} சொந்தமானதும், தாகம் தணிக்கப்பட்ட குதிரைகள் மீண்டும் பூட்டப்பட்டதுமான அந்தத் தேரைக் கண்ட குருபடையின் முதன்மையானவர்கள் மீண்டும் உற்சாகமிழந்தனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, நச்சுப்பற்கள் பிடுங்கப்பட்ட பாம்புகளைப் போலவே அவர்கள் பெருமூச்சுவிட்டனர். அவர்கள், "ஓ!, ஐயோ, நமக்கு ஐயோ {நாம் கெட்டோம்}! க்ஷத்திரியர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, கவசம் பூண்ட பார்த்தன் மற்றும் கிருஷ்ணன் ஆகிய இருவரும், மரப்பாவையுடன் {பொம்மையுடன்} விளையாடும் பிள்ளையைப் போல மிக எளிதாக அதே தேரில் சென்றுவிட்டனரே. உண்மையில், எதிரிகளை எரிப்பவர்களான அவர்கள், மன்னர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தங்கள் ஆற்றலை வெளிப்படுத்தி, நம் முழக்கங்களாலும், போரிடும் போராளிகளாலும் தடுக்கப்படாமல் சென்றுவிட்டனரே" என்றனர்.
அவர்கள் சென்றுவிட்டதைக் கண்ட போர் வீரர்கள் பிறர், "கௌரவர்களே, கிருஷ்ணனையும், கிரீடம் தரித்தவனையும் ({கிரீடியான} அர்ஜுனனையும்) கொல்ல விரைவீராக. (நம்) வில்லாளிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே குதிரைகளைத் தன் தேரில் பூட்டிய தாசார்ஹ குலத்தோன் {கிருஷ்ணன்} போரில் நம்மைக் கொன்று ஜெயத்ரதனை நோக்கிச் செல்கிறான்" என்றனர். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அவர்களில் பூமியின் சில தலைவர்கள், போரில் இதற்கு முன் எப்போதும் கண்டிராத மிக அற்புதமான நிகழ்வைக் கண்டு, "ஐயோ, துரியோதனனின் தவறால், மன்னன் திருதராஷ்டிரரின் போர்வீரர்களான இந்த க்ஷத்திரியர்களும், மொத்த உலகமும், பெரும் துயரில் விழுந்து அழிவை அடைகின்றனரே. மன்னன் துரியோதனன் இதைப் புரிந்து கொள்ளவில்லையே" என்றனர். இப்படியே பல க்ஷத்திரியர்கள் பேசினர். ஓ! பாரதரே, இன்னும் பிறரோ, "சிந்துக்களின் ஆட்சியாளன் {ஜெயத்ரதன்} ஏற்கனவே யமனுலகு அனுப்பப்பட்டுவிட்டான். குறுகிய பார்வை கொண்டவனும், வழிமுறைகளை அறியாதவனுமான துரியோதனன், அந்த மன்னனுக்கு {ஜெயத்ரதனுக்கு} என்ன செய்ய வேண்டுமோ அதை இப்போது செய்யட்டும் [2]" என்றனர்.
[2] "அதாவது, ஜெயத்ரதனின் ஈமச்சடங்குகளைத் துரியோதனன் செய்யட்டும் என்பது இங்கே பொருள். வட்டார மொழி சார்ந்த மொழிபெயர்ப்பாளர்கள், இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் நகைச்சுவையைக் காண்பதில்லை" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார். வேறொரு பதிப்பில் இவ்வரி, "யமனின் வீட்டை அடைந்தபின் சிந்துராஜனான ஜயத்ரதன் விஷயத்தில் செய்ய வேண்டிய காரியத்தை, வீணான எண்ணமுள்ளவனும், உபாயங்களை அறியாதவனுமான துரியோதனன் செய்யட்டும்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தரின் பதிப்பில், "தவறான பார்வை கொண்டவனும், செயல்பாடுகளில் அற்ப புத்தி கொண்டவனுமான திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, யமனுலகுக்கு அனுப்ப ஏற்கனவே எடுக்கப்பட்ட சிந்துக்களின் ஆட்சியாளனுக்காக {ஜெயத்ரதனுக்காக}, இறந்தோருக்குச் செய்யும் சடங்குகளை இப்போது செய்யட்டும்" என்றிருக்கிறது.
அதே வேளையில், மேற்கு {அஸ்த} மலைகளை நோக்கி நகரும் சூரியனைக் கண்ட பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, தாகம் தணிக்கப்பட்ட தன் குதிரைகளில், சிந்துக்களின் ஆட்சியாளனை {ஜெயத்ரதனை} நோக்கி பெரும் வேகத்துடன் சென்றான். ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையானவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அந்த வீரன் {அர்ஜுனன்}, அந்தகனைப் போலக் கோபத்துடன் சென்ற போது, (குரு) வீரர்களால் அவனைத் தடுக்க முடியவில்லை. எதிரிகளை எரிப்பவனான அந்தப் பாண்டுவின் மகன் {அர்ஜுனன்}, ஜெயத்ரதனை அடையச் சென்ற போது, (தன் முன்னிருந்த) வீரர்களை முறியடித்து, மான்கூட்டத்தைக் கலங்கடிக்கும் ஒரு சிங்கத்தைப் போல அந்தப் படையைக் கலங்கடித்தான்.
பகைவரின் படைக்குள் ஊடுருவிய தாசார்ஹ குலத்தோன், குதிரைகளைப் பெரும் வேகத்தில் தூண்டி, மேகங்களின் நிறத்தைக் கொண்ட தன் சங்கான பாஞ்சஜன்யத்தை முழக்கினான். காற்றின் வேகம் கொண்ட குதிரைகள் அந்தத் தேரை விரைவாக இழுத்ததால், குந்தியின் மகனால் {அர்ஜுனனால்} எதிரில் ஏவப்பட்ட கணைகள் அவனுக்குப் பின்னால் விழத் தொடங்கின [3]. சினத்தால் நிறைந்த மன்னர்கள் மற்றும் க்ஷத்திரியர்கள் பலரும், ஜெயத்ரதனைக் கொல்ல விரும்பிய தனஞ்சயனை {அர்ஜுனனைச்} சூழ்ந்து கொண்டனர். அந்தப் பெரும் போரில் ஒருக்கணம் நின்ற அந்த மனிதர்களில் காளையை (அர்ஜுனனை) நோக்கி (குரு) வீரர்கள் இப்படி விரைந்தபோது, துரியோதனனும் பார்த்தனை {அர்ஜுனனும்} விரைவாகப் பின்தொடர்ந்து சென்றான். மேகங்களின் முழக்கங்களுக்கு ஒப்பான சடசடப்பொலி கொண்டதும், குரங்கைத் தாங்கியிருக்கும் பயங்கரக் கொடி மரம் பொருத்தப்பட்டிருந்ததும், காற்றில் மிதக்கும் கொடியைக் கொண்டதுமான {அர்ஜுனனின்} தேரைக் கண்ட {பகை} வீரர்கள் பலரும் மிகவும் உற்சாகமிழந்தனர். (போராளிகளால் எழுப்பப்பட்ட) புழுதியால் கிட்டத்தட்ட முழுமையாகச் சூரியன் மறைக்கப்பட்ட போது, கணைகளால் பீடிக்கப்பட்ட (குரு) வீரர்களால், அந்தப் போரில் இரு கிருஷ்ணர்களையும் {கிருஷ்ணனையும், அர்ஜுனனையும்} பார்க்கக்கூட முடியவில்லை" {என்றான் சஞ்சயன்}.
[3] வேறொரு பதிப்பில் இவ்வரி, "கௌந்தேயனாலே எதிரில் பிரயோகிக்கப்படுகிற அம்புகள் பின்புறத்தில் விழுந்தன. ஏனெனில், காற்றின் வேகம் போன்ற வேகமுடைய குதிரைகள் பாண வேகத்தைக் காட்டிலும் அதிக வேகத்தோடு (ரதத்தை) இழுத்துச் சென்றன" என்றிருக்கிறது.
ஆங்கிலத்தில் | In English |