Bhima vanquished Karna! | Drona-Parva-Section-128 | Mahabharata In Tamil
(ஜயத்ரதவத பர்வம் – 44)
பதிவின் சுருக்கம் : அனைவரையும்விடப் பீமனுக்கே அதிகம் அஞ்சிய திருதராஷ்டிரன்; பீமனை எதிர்த்த கர்ணன்; கர்ணனின் வில்லை அறுத்தது; கர்ணனின் குதிரைகளையும், தேரோட்டியையும் கொன்றது; விருஷசேனனின் தேரில் ஏறிக்கொண்ட கர்ணன்; பீமனால் வெல்லப்பட்ட கர்ணன் மீண்டும் பீமனிடம் மோதியது...
திருதராஷ்டிரன் {சஞ்சயனிடம்}, "மேகங்கள், அல்லது இடியின் முழக்கத்தைப் போல, வலிமைமிக்கப் பீமசேனன் ஆழமாக முழங்கியபோது, (நமது தரப்பில்) எந்த வீரர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டனர்? போரில் சீற்றமுள்ள பீமசேனனின் முன்பு நிற்கவல்ல எந்தப் போர்வீரனையும் மூவுலகங்களிலும் நான் காணவில்லை. ஓ! மகனே {சஞ்சயா}, காலனுக்கு ஒப்பாகக் கதாயுதத்தைத் தரித்து நிற்கும் பீமசேனனுக்கு எதிரில் போர்க்களத்தில் நிலைக்கவல்ல எவனையும் நான் காணவில்லை. தேரைத் தேராலும், யானையை யானையாலும் [1] அழிக்கும் அந்தப் பீமனை எதிர்த்துச் சக்ரனை {இந்திரனைத்} தவிர வேறு எவனால் நிற்க முடியும்? சினத்தால் தூண்டப்பட்டு, என் மகன்களைக் கொல்வதில் ஈடுபடும் பீமசேனனை எதிர்த்துத் துரியோதனனின் நன்மையில் அர்ப்பணிப்புள்ளோரில் எவனால் போரில் நிற்க முடியும்? உலர்ந்த இலைகளையும், வைக்கோலையும் எரிக்கும் காட்டுத்தீயைப் போல என் மகன்களை எரிப்பதில் ஈடுபடும் பீமசேனனின் முன்பு நின்ற மனிதர்கள் யாவர்? அனைத்து உயிரினங்களையும் வெட்டி வீழ்த்தும் மற்றொரு காலனைப் போலப் பீமன் என் மகன்களை ஒருவர் பின் ஒருவராகக் கொல்வதைக் கண்டு அவனைப் போரில் சூழ்ந்து கொண்டவர் யாவர்? நான் பீமனிடம் கொள்ளும் அச்சத்தைப் போல அர்ஜுனனிடமோ, கிருஷ்ணனிடமோ, சாத்யகியிடமோ, அல்லது வேள்வி நெருப்பில் பிறந்தவனிடமோ (திருஷ்டத்யும்னனிடமோ) பெரும் அச்சத்தைக் கொள்ளவில்லை. ஓ! சஞ்சயா, என் மகன்களை எரிக்கும் பீமனெனும் சுடர்மிகும் நெருப்பை எதிர்த்து விரைந்த அந்த வீரர்கள் யாவர் என்பதை எனக்குச் சொல்வாயாக" என்றான் {திருதராஷ்டிரன்}.
[1] தேர்களையும், யானைகளையும் கூடப் போர்க்கருவிகளாகப் பீமசேனன் பயன்படுத்தினான் என்று பொருள் கொள்ள வேண்டுமெனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "வலிமைமிக்கத் தேர்வீரனான பீமசேனன் இப்படி முழக்கங்களை வெளியிட்டபோது, அவற்றைத் தாங்கிக் கொள்ள முடியாத வலிமைமிக்கக் கர்ணன், தன் வில்லைப் பெரும் பலத்துடன் வளைத்து, பெருங்கூச்சலிட்டபடி அவனை {பீமனை} நோக்கி விரைந்தான். உண்மையில், போரை விரும்பிய வலிமைமிக்கக் கர்ணன், தன் பலத்தை வெளிப்படுத்திச் சூறாவளியைத் தாக்குப்பிடிக்கும் நெடிய மரமொன்றைப் போலப் பீமனின் வழியைத் தடை செய்தான். வீரப் பீமனும், தன் முன்னிலையில் விகர்த்தனன் மகனை {கர்ணனைக்} கண்டு திடீரெனக் கோபத்தில் சுடர்விட்டு, கல்லில் கூராக்கப்பட்ட கணைகள் பலவற்றைப் பெரும்பலத்துடன் அவன் {கர்ணன்} மீது ஏவினான். அந்தக் கணைகள் அனைத்தையும் ஏற்ற கர்ணன் பதிலுக்குப் பலவற்றையும் ஏவினான். பீமனுக்கும், கர்ணனுக்கும் இடையிலான அம்மோதலில், அவர்களது உள்ளங்கைகளின் தட்டல் ஒலிகளைக் கேட்ட போராளிகள், தேர்வீரர்கள், குதிரைவீரர்கள் ஆகியோர் அனைவரின் அங்கங்களும் நடுங்கத் தொடங்கின. உண்மையில், அந்தப் போர்க்களத்தில் பீமசேனனின் பயங்கர முழக்கங்களைக் கேட்டு, அவ்வொலிகள் மொத்த பூமியையும், ஆகாயத்தையும் நிறைப்பதாக க்ஷத்திரியர்களில் முதன்மையான அனைவரும் கருதினர்.
உயர் ஆன்ம பாண்டு மகனால் {பீமனால்} வெளியிடப்பட்ட கடுமுழக்கங்களால், அந்தப் போரில் போர்வீரர்கள் அனைவரின் விற்களும் பூமியில் விழுந்தன. ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துணிச்சலையிழந்த குதிரைகளும், யானைகளும் சிறுநீரும், மலமும் கழித்தன [2]. அச்சம்நிறைந்த பல்வேறு தீய சகுனங்கள் அப்போது தோன்றின. பீமனுக்கும், கர்ணனுக்கும் இடையிலான அந்தப் பயங்கர மோதலின் போது, கழுகுகள் மற்றும் கங்கங்களின் {பருந்துகளின்} கூட்டங்களால் ஆகாயம் மறைக்கப்பட்டது. கர்ணன் இருபது கணைகளால் பீமனைத் தாக்கி, ஐந்தால் பின்னவனின் தேரோட்டியை {விசோகனை} வேகமாகத் துளைத்தான். வலிமைமிக்கவனும், சுறுசுறுப்பானவனுமான பீமன் அந்தப் போரில் புன்னகைத்தபடியே, கர்ணனின் மீது அறுபத்துநான்கு {64} கணைகளை ஏவினான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிறகு கர்ணன் அவன் மீது நான்கு கணைகளை ஏவினான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீமன் அவற்றைத் தன் நேரான கணைகளால் பல துண்டுகளாக வெட்டித் தன் கரநளினத்தை வெளிக்காட்டினான். பிறகு கர்ணன் அடர்த்தியான கணைகளின் மாரியால் அவனை {பீமனை} மறைத்தான். எனினும், இப்படிக் கர்ணனால் மறைக்கப்பட்ட வலிமைமிக்கப் பாண்டு மகன் {பீமன்}, கர்ணனின் வில்லைக் கைப்பிடியில் அறுத்து, பிறகு பத்து நேரான கணைகளால் கர்ணனைத் துளைத்தான்.
[2] வேறொரு பதிப்பில் இவ்விடத்தில், "ரதிகர்கள், குதிரைவீரர்கள் இவர்களுடைய சப்தத்தையும், பீமன், கர்ணன் இவ்விருவர்களுடைய தலத்வனியையும் யுத்தரங்கத்தில் பயங்கரமான பீமனுடைய சப்தத்தையுங்கேட்டு க்ஷத்திரிய சிரேஷ்டர்கள் ஆகாயத்தையும், பூமியையும் நன்கு நிறைக்கப்பட்டவனாக எண்ணினார்கள். மறுபடியும், மகாத்மாவான பாண்டவனுடைய கோரமான சப்தத்தினாலே யுத்தகளத்தில் எல்லா வீரர்களுடைய விற்களும் பூமியில் நழுவி விழுந்தன. சில வீரர்களுடைய கைகளிலிருந்து சஸ்திரங்கள் கீழே விழுந்தன. சில வீரர்களுக்கு உயிர்களும் போயின. எல்லாம் பயந்து கொண்டு ஜலமலங்களைப் பெருக்கின. எல்லா வாகனங்களும் மனவருத்தத்தை அடைந்தவையாயின" என்று இருக்கிறது. கங்குலியின் பதிப்பிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் இந்த இடத்தில் இவ்விவரங்கள் இல்லை.
பயங்கரச் செய்கைகளைச் செய்யும் வலிமைமிக்கத் தேர்வீரனான அந்தச் சூத மகன் {கர்ணன்}, மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு அதில் விரைவாக நாணேற்றி அந்தப் போரில் பீமனை (பல கணைகளால்) துளைத்தான். அப்போது சினத்தால் தூண்டப்பட்ட பீமன், மூன்று நேரான கணைகளால் சூத மகனின் {கர்ணனின்} மார்பை பெரும்பலத்துடன் தாக்கினான். ஓ! பாரதக் குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, மூன்று நெடிய சிகரங்களைக் கொண்ட ஒரு மலையைப் போலக் கர்ணன், தன் மார்பில் ஒட்டிய அந்தக் கணைகளுடன் அழகாகத் தெரிந்தான். வலிமைமிக்கக் கணைகளால் இப்படித் துளைக்கப்பட்டதும், மலையின் சாரலில் வழியும் செஞ்சுண்ணாம்பின் நீர்த்தாரைகளைப் போல அவனது {கர்ணனது} காயங்களில் இருந்து குருதி பாயத் தொடங்கியது. பெரும்பலத்துடன் ஏவப்பட்ட அந்தக் கணைகளால் பீடிக்கப்பட்ட கர்ணன் சற்றே கலக்கமடைந்தான். தன் வில்லில் ஒரு கணையைப் பொருத்திய அவன் {கர்ணன்}, ஓ! ஐயா, மீண்டும் பீமனைத் துளைத்தான். பிறகு மீண்டும் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான கணைகளையும் அவன் ஏவத் தொடங்கினான்.
அந்த உறுதிமிக்க வில்லாளியான கர்ணனின் கணைகளால் திடீரென மறைக்கப்பட்ட அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, சிரித்துக் கொண்டே கர்ணனுடைய வில்லின் நாணை அறுத்தான். பிறகு அவன் {பீமன்}, ஒரு பல்லத்தால், கர்ணனின் தேரோட்டியை யமனுலகு அனுப்பினான். வலிமைமிக்கத் தேர்வீரனான பீமன், கர்ணனின் நான்கு குதிரைகளையும் உயிரிழக்கச் செய்தான். பிறகு வலிமைமிக்கத் தேர்வீரனான கர்ணன், ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குதிரைகளற்ற தன் தேரில் இருந்து வேகமாகக் கீழே குதித்து, விருஷசேனனின் தேரில் ஏறிக் கொண்டான்.
அப்போது, வீரப் பீமசேனன், போரில் கர்ணனை வென்ற பிறகு, மேகங்களின் முழக்கத்தைப் போன்ற ஆழமான பெருங்கூச்சலையிட்டான். ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அம்முழக்கத்தைக் கேட்ட யுதிஷ்டிரன், பீமசேனனால் கர்ணன் வெல்லப்பட்டதை அறிந்து மிகவும் மனம் நிறைந்தான். அனைத்துப் பக்கங்களில் இருந்தும் பாண்டவப் படையின் போராளிகள் தங்கள் சங்குகளை ஊதினர். அவர்களது எதிரிகளான உமது போர்வீரர்கள் அவ்வொலியைக் கேட்டு உரக்க முழங்கினர். அர்ஜுனன் காண்டீவத்தை வளைத்தான், கிருஷ்ணன் பாஞ்சஜன்யத்தை ஊதினான். எனினும் இவ்வொலிகள் அனைத்தையும் மூழ்கடித்த பீமனின் முழக்கம், ஓ! மன்னா, ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, போராளிகள் அனைவராலும் கேட்கப்பட்டது. பிறகு, கர்ணன் மற்றும் பீமன் ஆகிய அந்தப் போர்வீரர்கள் இருவரும் நேரான கணைகளால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். எனினும் ராதையின் மகன் {கர்ணன்} மென்மையாகக் கணைகளை ஏவினான், பாண்டுவின் மகனோ {பீமனோ}, பெரும்பலத்துடன் ஏவினான்" {என்றான் சஞ்சயன்} [3].
[3] வேறொரு பதிப்பில் இதன் பிறகும் இன்னும் அதிகம் இருக்கிறது. அது பின்வருமாறு, "மகாராஜரே, அசுரர்களுடைய பெரிய சேனையிலிருந்த தாரகாசுரனை நோக்கி சுப்ரம்மண்யர் எதிர்த்தது போலப் பீமனும் சூரியகுமாரனான கர்ணனை எதிர்த்தான். பயங்கரமான செய்கையுள்ளவர்களான அவ்விருவருக்கும் இவ்வாறான பெரும்போர் நடந்தது. பீமசேனன் பெரிதான அம்புமழையினால் அவனைத் தடுத்துக் கொண்டு அம்புகளால் அவனுடைய சாரதியையும், நான்கு குதிரைகளையும் அடித்தான். ஐயா, பீமன் கணுக்கள் படிந்துள்ள பல்லங்களால் அவனுடைய துவசத்தையும், கொடிச்சீலையையும் அறுத்து ரதத்தையும் சக்ரரக்ஷகர்களையும் நாசஞ்செய்தான். அரசரே, ரதிகர்களுள் சிறந்தவனும், பலசாலியுமான கர்ணனும், பீமசேனனால் நடுங்கும்படி செய்யப்பட்டவனாகக் கத்தியும் கேடகத்தையும் கையிற்பிடித்துப் பீமனை எதிர்த்தான். ஐயா, பீமன் அந்தக் கத்தியைக் கேடகத்தோடு வெட்டினான். மகாராஜரே, துரியோதனன், பீமனால் கர்ணன் அனேக அம்புகளாலே பீடிக்கப்பட்டதைக் கண்டு துச்சலனைப் பார்த்து, "கர்ணன் கஷ்டமான நிலைமையை அடைந்துவிட்டதைப் பார். சீக்கிரமாக அவனுக்கு ரதத்தைக் கொடு" என்று சொன்னான். இவ்வாறு அரசன் சொல்லியதைக் கேட்ட துச்சலன், பிறகு, கர்ணனுடைய சமீபத்தில் ஓடிவந்தான். மகாரதனான கர்ணனும், துச்சலனுடைய ரதத்தில் ஏறிக் கொண்டான். அவ்விருவரையும் பிருதையின் புத்ரனான பீமன் விரைவாக நெருங்கிப் பத்துப் பாணங்களாலடித்து மறுபடியும் கர்ணனை அடித்துத் துச்சலனுடைய தலையையுமறுத்தான். ஐயா, பீமசேனனால் துச்சலன் கொல்லப்பட்டதைப் பார்த்துக் கர்ணன் அவனுடைய வில்லை எடுத்துப் பாண்டவனையடித்தான். வீரர்களும் மகாபலசாலிகளும், சத்துருக்களுடைய மத்தியில் பலனும் இந்திரனும் போலப் பரஸ்பரம் போர்புரிந்தார்கள். மகாபலசாலியும் பிருதா புத்திரனுமான பீமன் அட்டகாசஞ்செய்து கொண்டு குதிரைகளையும் சாரதியையுமடித்த அடிக்கடி கர்ணனையெதிர்த்தான். பிறகு, யுத்த பூமியில் பீமன் போர் புரிகையில் அச்சேனை குழப்பமுற்றது. யாதொன்றும் அறியப்படவில்லை" என்றிருக்கிறது. கங்குலியின் பதிப்பிலும், மன்மதநாததத்தரின் பதிப்பிலும் இந்த இடத்தில் இவ்விவரங்கள் இல்லை.
ஆங்கிலத்தில் | In English |