The encounter between Bhima and Aswatthama! | Drona-Parva-Section-201b | Mahabharata In Tamil
(நாராயணாஸ்த்ரமோக்ஷ பர்வம் - 08)
பதிவின் சுருக்கம் : திருஷ்டத்யும்னனைப் பலவீனமடையச் செய்த அஸ்வத்தாமன்; பாண்டவத் தேர்வீரர்கள் ஐவரைத் தாக்கியது; மாலவ மன்னன் சுதர்சனனையும், சேதிகளின் இளவரசனையும் கொன்றது; பீமசேனனுக்கும் அஸ்வத்தாமனுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்; அஸ்வத்தாமனின் வில்லை அறுத்த பீமன்; கண்களை மூடி கொடிக்கம்பத்தைப் பற்றிக் கொண்ட அஸ்வத்தாமன்; பீமனின் வில்லை அறுத்த அஸ்வத்தாமன்; பீமனின் சாரதியை மயக்கமடையச் செய்த அஸ்வத்தாமன்; பீமனை களத்தைவிட்டே கொண்டு சென்ற குதிரைகள்; பாஞ்சாலர்களுக்கு மத்தியில் பேரழிவை ஏற்படுத்திய அஸ்வத்தாமன்...
{சஞ்சயன் திருதராஷ்டிரனிடம் தொடர்ந்தான்}, “பிறகு, அந்த எதிரிகளை எரிப்பவனான அஸ்வத்தாமன், முற்றிலும் நேரானதும், நல்ல சிறகுகளைக் கொண்டதுமான மற்றொரு கணையால் திருஷ்டத்யும்னனின் புருவ மத்தியைத் தாக்கினான்.(70) அந்தப் பாஞ்சால இளவரசன் {திருஷ்டத்யும்னன்} ஏற்கனவே மிகவும் துளைக்கப்பட்டிருந்ததால், அந்தக் கணையால் ஆழமான காயம்பட்டதும், மிகவும் பலவீனமடைந்து கொடிமரத்தைப் பற்றிக்கொண்டு, தன்னைத் தாங்கிக் கொண்டான். சிங்கத்தால் தாக்கப்பட்ட மதங்கொண்ட யானையைப் போல அஸ்வத்தாமனால் இப்படிப் பீடிக்கப்பட்ட திருஷ்டத்யும்னனைக் கண்டு, கிரீடி {அர்ஜுனன்}, பீமசேனன், பூரு குலத்தின் பிருஹத்க்ஷத்திரன் {விருத்தக்ஷத்திரன்}, இளைஞனான சேதிகளின் இளவரசன், மாலவர்களின் தலைவன் சுதர்சனன் ஆகிய பாண்டவப் படையின் வீரத் தேர்வீரர்கள் ஐவரும் அஸ்வத்தாமனை எதிர்த்து வேகமாக விரைந்தனர்.(71-73) வில் தரித்திருந்த அவர்கள் அனைவரும், “ஓ!” என்றும், “ஐயோ!” என்றும் கூக்குரலிட்டப்படியே விரைந்து சென்றனர். மேலும் அந்த வீரர்கள், துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} அனைத்துப் பக்கங்களிலும் சூழ்ந்து கொண்டனர்.(74)
கவனமாக இருபது {20} எட்டுகள் {அடிகள்} முன்னேறிய அவர்கள் அனைவரும் இருபத்தைந்து கணைகளால் அடுத்தடுத்து ஆசானின் {துரோணரின்} அந்தக் கோபக்கார மகனைத் {அஸ்வத்தாமனைத்} தாக்கினர்.(75) எனினும் அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளுக்கு ஒப்பான இருபத்தைந்து கணைகளால் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் தன்னை நோக்கி ஏவப்பட்ட இருபத்தைந்து கணைகளையும் அறுத்தான்.(76) பிறகு அஸ்வத்தாமன் ஏழு கணைகளால் பௌரவ இளவரசனைப் பீடித்தான். மேலும் அவன் மாலவர்கள் தலைவனை {சுதர்சனனை} மூன்றாலும், பார்த்தனை {அர்ஜுனனை} ஒன்றாலும், விருகோதரனை {பீமனை} ஆறு கணைகளாலும் பீடித்தான்.(77) பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அந்தப் பெரும் தேர்வீரர்கள் அனைவரும், ஒன்று சேர்ந்தும், தனித்தனியாகவும், துரோணரின் மகனைக் கல்லில் கூராக்கப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான கணைகள் பலவற்றால் துளைத்தனர்.(78) இளைஞனான சேதிகளின் இளவரசன் துரோணரின் மகனை இருபது கணைகளாலும், பார்த்தன் {அர்ஜுனன்} மூன்று கணைகளாலும் அவனைத் துளைத்தனர்.(79)
அப்போது அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, அர்ஜுனனை ஆறு கணைகளாலும், வாசுதேவனை {கிருஷ்ணனை} ஆறாலும், பீமனை ஐந்தாலும், மாலவன் {சுதர்சனன்} மற்றும் பௌரவன் ஆகிய மற்ற இருவரில் ஒவ்வொருவரையும் இரு கணைகளாலும் தாக்கினான்.(80) அடுத்ததாகப் பீமனின் தேர்ச் சாரதியை ஆறு கணைகளால் துளைத்த அஸ்வத்தாமன், மேலும் இரண்டு கணைகளால் பீமசேனனின் வில்லையும், கொடிமரத்தையும் அறுத்தான். பிறகு அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, மீண்டும் பார்த்தனைக் {அர்ஜுனனைக்} கணைமாரியால் துளைத்து சிங்க முழக்கம் செய்தான்.(81) துரோணர் மகனால் {அஸ்வத்தாமனால்} ஏவப்பட்டவையும், கூரியவையும், நன்கு கடினமாக்கப்பட்டவையும், பயங்கரமானவையுமான கணைகளால், பூமி, வானம், ஆகாயம், முக்கிய மற்றும் துணைத் திசைகள் ஆகிய அனைத்தும், அவனுக்கு முன்னும், பின்னும் என முற்றிலும் நிறைந்ததாக இருந்தது.(82)
அப்போது, கடும் சக்தியும், இந்திரனுக்கு ஒப்பான ஆற்றலையும் கொண்டவனான அஸ்வத்தாமன், இந்திரனின் கொடிமரங்களுக்கு ஒப்பான சுதர்சனனின் இரு கரங்களையும், பின்னவன் {சுதர்சனன்} தேரில் அமர்ந்திருந்த போது அவனது தலையையும், கிட்டத்தட்ட அடுத்தடுத்த மூன்று கணைகளால் அறுத்தான்.(83) பிறகு ஓர் ஈட்டியால் பௌரவனைத் துளைத்து, அவனது தேரைத் தன் கணைகளால் தூள் தூளாக்கிய அஸ்வத்தாமன், சந்தனம் பூசப்பட்ட தன் எதிராளியின் இரு கரங்களை வெட்டிய பிறகு, அகன்ற தலை கணை {பல்லம்} ஒன்றால் அவனது {பௌரவனின்} தலையையும் அவனது உடலில் இருந்து அறுத்தான்.(84) பெரும் சுறுசுறுப்பைக் கொண்ட அவன் {அஸ்வத்தாமன்}, நெருப்பின் சுடர்மிக்கத் தழல்களின் சக்திக்கு ஒப்பான கணைகள் பலவற்றைக் கொண்டு, இளமைநிறைந்தவனும், வலிமைமிக்கவனும், கருநெய்தலின் நிறத்தாலானவனுமான சேதிகளின் இளவரசனை, அவனது சாரதி மற்றும் குதிரைகளுடன் யமலோகம் அனுப்பினான்.(85)
வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பாண்டுவின் மகன் பீமசேனன், தான் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, துரோணரின் மகனால் மாலவர்களின் தலைவன் {சுதர்சனன்}, பூருவின் வழித்தோன்றல் {விருத்தக்ஷத்திரன்}, இளமைநிறைந்த சேதிகளின் ஆட்சியாளன் ஆகியோர் கொல்லப்பட்டதைக் கண்டு சினத்தால் நிறைந்தான். பிறகு, அந்த எதிரிகளை எரிப்பவன் {பீமன்}, கடும் நஞ்சுமிக்கக் கோபக்காரப் பாம்புகளுக்கு ஒப்பான நூறு கூரிய கணைகளால் அந்தப் போரில் துரோணரின் மகனை {அஸ்வத்தாமனை} மறைத்தான். வலிமையும், சக்தியும் கொண்டவனான துரோணரின் கோபக்கார மகன், அந்தக் கணைமாரியை அழித்துக் கூரிய கணைகளால் பீமசேனனைத் துளைத்தான்.(86-88) பிறகு, வலிமைமிக்கக் கரங்களையும், பெரும் பலத்தையும் கொண்ட பீமன், அகன்ற தலை கணையொன்றால் {பல்லத்தால்} துரோணர் மகனின் வில்லை அறுத்துப் பிறகு, ஒரு பலமிக்கக் கணையால் துரோணர் மகனையும் துளைத்தான். அந்த உடைந்த வில்லைத் தூக்கி வீசிய உயர் ஆன்ம துரோணர் மகன்,(89,90) மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு, சிறகு படைத்த தன் கணைகளால் பீமனைத் துளைத்தான். பிறகு, பெரும் பலமும், ஆற்றலும் படைத்த துரோணர் மகன் மற்றும் பீமன் ஆகிய இருவரும்,(91) மழை நிறைந்த இரு மேகத்திரள்களுக்கு ஒப்பாகத் தங்கள் கணை மாரியைப் பொழியத் தொடங்கினர். கல்லில் கூராக்கப்பட்டவையும், பீமனின் பெயர் பொறிக்கப்பட்டவையும், தங்கச் சிறகுகளைக் கொண்டவையுமான கணைகள்,(92) சூரியனை மறைக்கும் மேகத் திரள்களைப் போலத் துரோணரின் மகனை மறைத்தன. அதே போலப் பீமனும், துரோணர் மகனால் ஏவப்பட்ட நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பலமான கணைகளால் மறைக்கப்பட்டான்.
அந்தப் போரில் பெரும் திறன்மிக்கப் போர்வீரனான துரோணர் மகனால் {அஸ்வத்தாமனால்} மறைக்கப்பட்டாலும்,(93,94) ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பீமன் வலியை ஏதும் உணரவில்லை என்பது மிக ஆச்சரியமானதாகத் தெரிந்தது. பிறகு வலிமைமிக்கக் கரங்களைக் கொண்ட பீமன், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், பெரும் கூர்மை கொண்டவையும், யமனின் ஈட்டிகளுக்கு ஒப்பானவையுமான கணைகளைத் தன் எதிரியின் {அஸ்வத்தாமன்} மீது ஏவினான். ஓ! ஐயா {திருதராஷ்டிரரே}, துரோணர் மகனின் தோள்களின் மீது விழுந்த அந்தக் கணைகள்,(95,96) எறும்புப்புற்றுக்குள் ஊடுருவும் பாம்புகளைப் போல அவனது உடலை வேகமாகத் துளைத்தன. பாண்டுவின் உயர் ஆன்ம மகனால் {பீமனால்} ஆழத் துளைக்கப்பட்ட அஸ்வத்தாமன்,(97) தன் கண்களை மூடிக் கொண்டு, தன் கொடிக்கம்பத்தைப் பற்றியபடியே தன்னைத் தாங்கிக்கொண்டான். ஒருக்கணத்திற்குள் தன் உணர்வுகள் மீண்ட துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே},(98) குருதியில் குளித்தபடியே தன் கோபம் அனைத்தையும் திரட்டினான். பாண்டுவின் உயர் ஆன்ம மகனால் பலமாகத் தாக்கப்பட்டவனும், வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனுமான அஸ்வத்தாமன், பீமசேனனின் தேரை நோக்கிப் பெரும் வேகத்தோடு விரைந்தான்.
ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, அப்போது அவன் {அஸ்வத்தாமன்}, தன் வில்லை முழுமையாக வளைத்து, கடும் நஞ்சுமிக்கப் பாம்புகளைப் போன்றவையும், கடும் சக்தி கொண்டவையுமான நூறு கணைகளைப் பீமசேனன் மீது ஏவினான். போரில் தன் ஆற்றலின் மீது செருக்குடையவனும், பாண்டுவின் மகனுமான பீமனும், அஸ்வத்தாமனின் சக்தியை அலட்சியம் செய்து, அடர்த்தியான கணைமாரியை அவன் மீது பொழிந்தான். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பிறகு அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, தன் கணைகளால் பீமனின் வில்லை அறுத்து,(99-102) சினத்தால் நிறைந்து, கூரிய கணைகள் பலவற்றால் அந்தப் பாண்டவனின் {பீமனின்} மார்பைத் தாக்கினான். அந்தச் சாதனையைப் பொறுத்துக் கொள்ள முடியாதவனான பீமசேனன் மற்றொரு வில்லை எடுத்துக் கொண்டு,(103) அந்தப் போரில் ஐந்து கூரிய கணைகளால் துரோணரின் மகனைத் துளைத்தான். உண்மையில், கோடையின் நெருக்கத்தில் எழும் இரண்டு மேகத்திரள்களைப் போல, ஒருவர் மீது ஒருவர் தங்கள் கணை மாரியைப் பொழிந்த அந்தப் போர்வீரர்கள் இருவரும்,(104) சினத்தால் தாமிரமாகக் கண்கள் சிவந்து, அந்தப் போரில் தங்கள் கணைகளால் ஒருவரையொருவர் முற்றாக மறைத்தனர். தங்கள் உள்ளங்கைகளில் பயங்கர ஒலிகளை உண்டாக்கி ஒருவரையொருவர் அச்சுறுத்திய அவர்கள்,(105) ஒருவர் சாதனையை மற்றவர் எதிர்த்தபடியே தங்கள் போரைத் தொடர்ந்தனர்.
பிறகு தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட தன் உறுதியான வில்லை வளைத்த துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்},(106) இவ்வாறு தன் மீது கணைகளை ஏவிக் கொண்டிருந்த பீமனை நிலைத்த பார்வையுடன் பார்க்கத் தொடங்கினான். அந்நேரத்தில் அஸ்வத்தாமன், கூதிர்கால நாட்களில் சுடர்மிக்கக் கதிர்களைக் கொண்ட நடுப்பகல் சூரியனைப் போலத் தெரிந்தான்.(107) அவன் {அஸ்வத்தாமன்}, அம்பறாத்தூணியில் இருந்து தன் கணைகளை எப்போது எடுத்தான், அவற்றை வில்லின் நாணில் எப்போது பொருத்தினான், நாண்கயிறை எப்போது இழுத்தான், எப்போது அதை விடுத்தான் என்பதை மக்கள் காண முடியாத அளவுக்குத் தன் கணைகளை மிக வேகமாக ஏவினான்.(108) உண்மையில் அவன் {அஸ்வத்தாமன்} தன் கணைகளை ஏவிக் கொண்டிருக்கையில், ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அவனது வில்லானது, இடையறாமல் வளைக்கப்பட்ட நெருப்பு வளையத்தைப் போலத் தெரிந்தது.(110) உண்மையில் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், துரோணர் மகனின் வில்லில் இருந்து ஏவப்பட்டவையுமான அந்தப் பயங்கரக் கணைகள், பீமனின் தேரை நோக்கி இடையறாமல் சென்று கொண்டிருந்தன.(111) ஓ! பாரதரே {திருதராஷ்டிரரே}, கோடையின் நெருக்கத்தில் பொழியும் மழைக்குச் சற்றும் குறையாமல் அவனைச் சுற்றிலும் விழுந்த அந்தப் பயங்கரக் கணை மாரிகளை, அடர்த்தியான மேகத்திரள்களைப் போலக் கருத வேண்டியிருந்ததால், அப்போது நாங்கள் கண்ட பீமசேனனின் ஆற்றல், அவனது வலிமை, சக்தி, உற்சாகம் ஆகியன மிக அற்புதமாகத் தெரிந்தன.(112-114)
உறுதிமிக்கதும், தங்கப் பிடி கொண்டதும், அந்தப் போரில் இடையறாமல் வளைக்கப்பட்டதுமான பீமனின் பெரிய வில்லானது, இந்திரனின் இரண்டாவது வில்லைப் போலப் பிரகாசமாகத் தெரிந்தது.(115) அதிலிருந்து நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் வெளிவந்த கணைகள், அம்மோதலில் போர்க்கள ரத்தினமான துரோணர் மகனை {அஸ்வத்தாமனை} மறைத்தன.(116) அவ்விருவராலும் ஏவப்பட்ட கணைமாரியானது, ஓ! ஐயா, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, இடையில் காற்றுக்கே இடமில்லாத அளவுக்கும் மிக அடர்த்தியாக இருந்தது.(117) அப்போது, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, பீமனைக் கொல்ல விரும்பிய துரோணர் மகன் {அஸ்வத்தாமன்}, தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், எண்ணெயில் நனைக்கபட்டவையுமான கூர்முனைகளைக் கொண்ட கணைகள் பலவற்றை அவன் {பீமன்} மீது ஏவினான்.(118) துரோணர் மகனுக்குத் தன் மேன்மையை வெளிக்காட்டுவதற்காகப் பீமசேனன், தன்னை நோக்கி வரும் அந்தக் கணைகள் தன்னை அடையும் முன்பே, அவை ஒவ்வொன்றையும் மூன்று துண்டுகளாக வெட்டினான். பிறகு அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, “நில்லும், நில்லும்” என்று சொன்னான்.(119)
மீண்டும் சினத்தால் நிறைந்த அந்தப் பாண்டுவின் மகன் {பீமன்}, துரோணர் மகனைக் கொல்ல விரும்பி அவனை நோக்கி கடும் கணைகளின் பயங்கர மழையை ஏவினான்.(120) பிறகு, உயர்ந்த ஆயுதங்களை அறிந்த போர்வீரனான துரோணரின் மகன், அந்தக் கணை மாரியைத் தன் ஆயுதங்களின் மாயையால் விரைவாக அழித்து, அம்மோதலில் பீமசேனனின் வில்லை அறுத்தான்.(121) சினத்தால் நிறைந்த அவன் {அஸ்வத்தாமன்}, அந்தப் போரில் பீமசேனனையும் எண்ணற்ற கணகளால் துளைத்தான். பெரும் வலிமை கொண்ட பீமன், தன் வில்லானது வெட்டப்பட்ட பிறகு, பெரும் மூர்க்கத்துடன் ஓர் ஈட்டியைச் சுழற்றி அஸ்வத்தாமனின் தேரை நோக்கி வீசினான். அம்மோதலில் தன் கரநளினத்தை வெளிப்படுத்திய துரோணர் மகன், சுடர்மிக்கத் தீப்பந்தத்தின் காந்தியுடன் தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த அந்த ஈட்டியைக் கூரிய கணைகளால் விரைவாக வெட்டினான். அதேவேளையில், பயங்கரமான விருகோதரன் {பீமன்}, வலிமைமிக்க ஒரு வில்லை எடுத்துச் சிரித்துக் கொண்டே கணைகள் பலவற்றால் துரோணர் மகனைத் துளைக்கத் தொடங்கினான்.
அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, அந்தத் துரோணர் மகன் {அஸ்வத்தாமன்} நேரான கணை ஒன்றால் பீமனுடைய சாரதியின் நெற்றியைத் துளைத்தான். பின்னவன் {பீமனின் சாரதி}, வலிமைமிக்கத் துரோணர் மகனால் ஆழத் துளைக்கப்பட்டு,(122-126) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, குதிரைகளின் கடிவாளங்களைக் கைவிட்டு மயக்கத்தில் வீழ்ந்தான். பீமனின் சாரதி மயக்கத்தில் வீழ்ந்ததும், ஓ! மன்னா, குதிரைகள் வில்லாளிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே பெரும் வேகத்துடன் ஓடின. ஓடிக் கொண்டிருக்கும் அந்தக் குதிரைகளால் போர்க்களத்தைவிட்டே பீமன் கொண்டு செல்லப்படுவதைக் கண்டவனும்,(127,128) வெல்லப்பட முடியாதவனுமான அஸ்வத்தாமன் மகிழ்ச்சியாகத் தன் பெரிய சங்கை முழக்கினான். களத்தைவிட்டே கொண்டு செல்லப்படும் பீமசேனனைக் கண்ட பாஞ்சாலர்கள் அனைவரும்,(129) அச்சமடைந்து திருஷ்டத்யும்னனின் தேரைக் கைவிட்டு அனைத்துப் பக்கங்களிலும் தப்பி ஓடினர். பிறகு துரோணரின் மகன் பிளந்த அத்துருப்புகளைப் பின்தொடர்ந்து சென்று அவர்களுக்கு மத்தியில் பேரழிவை உண்டாக்கினான். துரோணர் மகனால் போரில் இப்படிக் கொல்லப்பட்ட அந்த க்ஷத்திரியர்கள், அந்தப் போர்வீரனின் {அஸ்வத்தாமனின்} மீது கொண்ட அச்சத்தால் அனைத்துத் திசைகளிலும் தப்பி ஓடினர்” {என்றான் சஞ்சயன்}.(130,131)
Sacred texts வலைத்தளத்தில் இதற்கு மேலும் இந்தப் பகுதி தொடர்கிறது. ஆனால் கங்குலியின் புத்தகப் பதிப்பில் இந்தப் பகுதி இங்கேயே நிறைவடைகிறது. மன்மதநாத தத்தரின் பதிப்பிலும், வேறு பதிப்பிலும் கூட இந்த இடத்திலேயே இந்தப் பகுதி நிறைவடைவதாலும், பகுதி எண் மற்றும் சுலோக எண்களில் குழப்பம் நேராமல் இருக்கவும், நாமும் இதையே பின்பற்றலாம்.
ஆங்கிலத்தில் | In English |