Siva burnt Tripura! | Karna-Parva-Section-34b | Mahabharata In Tamil
பதிவின் சுருக்கம் : தேவர்களிடம் தனக்கு ஒரு சாரதியை நியமிக்குமாறு கேட்ட சிவன்; சிவனுக்குச் சாரதியாக இருக்கப் பிரம்மனிடம் வேண்டிய தேவர்கள்; கோரிக்கையை ஏற்ற பிரம்மன்; திரிபுரத்தை எரித்த சிவன்; சிவனுக்குச் சாரத்தியம் ஏற்ற பிரம்மனைப் போல, சல்லியனும் கர்ணனுக்குச் சாரதியாக வேண்டும் என வேண்டிய துரியோதனன்...
{துரியோதனன் சல்லியனிடம் தொடர்ந்தான்}, “தேவர்கள் அவனிடம் {சிவனிடம்}, “ஓ! தேவர்களின் தலைவா, யாரை நீ நியமிப்பாயோ, அவரே உன் சாரதியாகட்டும்” என்றனர்.(61) அவர்களிடம் அந்தத் தேவன் {சிவன்}, “நீங்களே சிந்தித்துப் பார்த்து, என்னைவிட மேன்மையானவனைத் தாமதமில்லாமல் எனக்குச் சாரதியாக்குவீராக” என்றான்.(62) அந்த உயர் ஆன்ம தேவனால் சொல்லப்பட்ட வார்த்தைகளைக் கேட்ட தேவர்கள் பெரும்பாட்டனிடம் {பிரம்மனிடம்} சென்று, அவனது அருளை நாடி இவ்வார்த்தைகளைச் சொன்னார்கள்:(63) “ஓ! புனிதமானவரே, தேவர்களின் எதிரிகளைப் பீடிக்கும் காரியத்தில் நீர் எங்களுக்கு ஆணையிட்ட அனைத்தையும் நிறைவேற்றிவிட்டோம். காளையைத் தன் அடையாளமாகக் கொண்ட தேவனும் {சிவனும்} எங்களிடம் மனம் நிறைந்தான்.(64) அற்புதமான ஆயுதங்கள் பலவற்றுடன் ஆயத்தம் செய்யப்பட்ட தேரை நாங்கள் கட்டமைத்துவிட்டோம். எனினும், அந்த முதன்மையான தேருக்கு யார் சாரதியாக முடியும் என்பதை நாங்கள் அறியவில்லை.(65) எனவே, தேவர்களில் எவராவது ஒருவரைச் சாரதியாக நியமிப்பீராக. ஓ! புனிதமானவரே {பிரம்மனே}, நீர் எங்களிடம் சொன்ன அந்த வார்த்தைகளை மெய்யாக்குவதே உமக்குத் தகும்.(66) ஓ! தேவரே, இதற்கு முன்னர், எங்களுக்கு நன்மை செய்வதாக நீர் சொல்லியிருக்கிறீர். அந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதே உமக்குத் தகும்.(67)
தாங்கிக் கொள்ளப்பட முடியாததும், நமது எதிரிகளை நிர்மூலமாக்கவல்லதுமான அந்தச் சிறந்த தேரானது, தேவர்களின் பகுதிகளால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பினாகை தரித்த அந்தத் தேவனே {சிவனே} அதில் நிற்கும் போர்வீரனாகச் செய்யப்பட்டான். தானவர்களை அச்சத்தால் பீடித்து அவன் {சிவன்} போருக்குத் தயாராக இருக்கிறான்.(68) {அந்தத் தேரில்} நான்கு வேதங்களும் நான்கு முதன்மையான குதிரைகளாகியிருக்கின்றன. மலைகளுடன் கூடிய பூமியானவளே அந்த உயர் ஆன்மாவுக்கு {சிவனுக்குத்} தேராகியிருக்கிறாள். நட்சத்திரங்கள் அந்த வாகனத்தை அலங்கரிக்கின்றன. (ஏற்கனவே சொன்னது போல) ஹரனே {சிவனே} போர்வீரனாக இருக்கிறான். எனினும், அவனுக்குச் சாரதியாகக்கூடிய எவரையும் நாங்கள் காணவில்லை.(69) இவை யாவற்றுக்கும் மேன்மையான ஒருவரையே அந்தத் தேரின் சாரதியாக நாட வேண்டும். ஹரனே போர்வீரன், ஓ! தேவரே {பிரம்மனே}, அந்தத் தேரின் முக்கியத்துவமும் உமக்கு இணையானதாகும். ஓ! பெரும்பாட்டனே, கவசம், ஆயுதங்கள், வில் ஆகியவற்றை ஏற்கனவே நாம் கொண்டிருக்கிறோம்.(70) அந்தத் தேரின் சாரதியாக உம்மைத் தவிர வேறு எவரையும் எங்களால் காண முடியவில்லை. நீர் அனைத்துச் சாதனைகளையும் {பண்புகளையும்} கொண்டவராக இருக்கிறீர். ஓ! தலைவா, தேவர்கள் அனைவருக்கும் நீர் மேன்மையாக இருக்கிறீர்.(71) தேவர்களின் வெற்றிக்காகவும், எங்கள் எதிரிகளின் அழிவுக்காகவும், அந்தத் தேரில் வேகமாக ஏறி, அந்த முதன்மையான குதிரைகளின் கடிவாளங்களைப் பிடிப்பீராக” என்றனர் {தேவர்கள்}.(72) மூவுலகங்களின் தலைவனான அந்தப் பெரும்பாட்டனிடம் தங்கள் தலைகளை வணங்கிய அந்தத் தேவர்கள், சாரதி நிலையை {சாரத்தியம்} ஏற்பதில் அவனை மனநிறைவு கொள்ளச் செய்ய முயன்றனர்.(73)
பெரும்பாட்டன் {பிரம்மன்}, “சொர்க்கவாசிகளே, நீங்கள் சொன்ன யாதிலும் பொய்மையேதும் இல்லை. கபர்தின் {சடை தரித்த சிவன்} போரிடுகையில் அவனது குதிரைகளின் கடிவாளத்தை நான் பிடிப்பேன்” என்றான்.(74) பிறகு, உலகங்களைப் படைப்பவனும், சிறப்புமிக்கத் தேவனுமான அந்தப் பெரும்பாட்டன் {பிரம்மன்}, உயர் ஆன்ம ஈசானனின் சாரதியாகத் தேவர்களால் நியமிக்கப்பட்டான்.(75) மேலும் அவன் {பிரம்மன்} அனைவராலும் வழிபடப்பட்டு அந்தத் தேரில் வேகமாக ஏறும்போது, காற்றின் வேகத்தைக் கொண்ட அந்தக் குதிரைகள், தலைவணங்கி பூமியில் விழுந்தன.(76) தேரில் ஏறிய பிறகு, சிறப்புமிக்கத் தேவனான அந்தப் பெரும்பாட்டன், தன் சக்தியால் பிரகாசித்தபடி, கடிவாளங்களையும், தான்றுகோலையும் {சாட்டையையும்} எடுத்தான்.(77) அப்போது அந்தச் சிறப்புமிக்கத் தேவன், அந்தக் குதிரைகளை எழுப்பிவிட்டு, தேவர்களில் முதன்மையான ஸ்தாணுவிடம், “{தேரில்} ஏறுவாயாக” என்று சொன்னான்.(78) பிறகு, விஷ்ணு, சோமன் மற்றும் அக்னி ஆகியோர் அடங்கிய அந்தக் கணையை எடுத்துக் கொண்ட ஸ்தாணு, அந்தத் தேரில் ஏறி, தன் வில்லால் எதிரியை நடுங்கச் செய்தான்.(79) அந்தத் தேவர்களின் தலைவன் தேரில் ஏறிய பிறகு, பெருமுனிவர்கள், கந்தர்வர்கள், தேவர்க்கூட்டங்கள், அப்சரஸ்களின் பல்வேறு இனக்குழுக்கள் ஆகியோர் அவனைத் துதித்தனர்.(80)
அழகுடன் பிரகாசித்தவனும், வாள், கணை மற்றும் வில் ஆகியவற்றைத் தரித்தவனுமான அந்த வரமளிக்கும் தேவன் {சிவன்}, தன் சக்தியால் மூன்று உலகங்களையும் சுடர்மிக்கவையாகச் செய்தபடி தன் தேரில் நின்றிருந்தான்.(81) அந்தப் பெரும் தேவன் {சிவன்}, இந்திரனின் தலைமையான தேவர்களிடம் மீண்டும், “அசுரர்களை அழிக்கும் என் திறனில் ஐயுற்று ஒரு போதும் நீங்கள் வருந்தக்கூடாது.(82) இந்தக் கணையால் அசுரர்கள் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டார்கள் என்பதை அறிவீராக” என்றான். அப்போது தேவர்கள், “உண்மைதான். அசுரர்கள் ஏற்கனவே கொல்லப்பட்டுவிட்டனர்” என்றனர்.(83) அந்தத் தெய்வீகத் தலைவன் {சிவன்} சொன்ன வார்த்தைகள் பொய்க்க முடியாது என்று நினைத்த தேவர்கள், உண்மையில் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.(84) பிறகு அந்தத் தேவர்களின் தலைவன் {சிவன்}, தேவர்கள் அனைவராலும் சூழப்பட்டு, எதற்கும் ஒப்பிடப்பட முடியாத அந்தப் பெரும் தேரில் சென்றான்.(85) அதே வேளையில் அந்தச் சிறப்புமிக்கத் தேவன், போரில் ஒப்பற்றவர்களும், மகிழ்ச்சியில் ஆடிக் கொண்டிருந்தவர்களும், ஒருவரை நோக்கி மற்றவர் கூக்குரலிட்டபடியே அனைத்துப் பக்கங்களிலும் மூர்க்கமாக ஓடிக் கொண்டிருந்தவர்களுமான துணைவர்களாலும், ஊனுண்ணிகள் பிறராலும் துதிக்கப்பட்டான்.(86) பெரும் நற்பேற்றைக் கொண்டவர்களும், தவத்தகுதிகளையுடையவர்களும், உயர்ந்த பண்புகளைக் கொண்டவர்களுமான முனிவர்களும், தேவர்களும் மகாதேவனின் வெற்றிக்காக அவனை வாழ்த்தினர்.(87)
மூன்று உலகங்களின் அச்சங்களை விலக்குபவனான அந்த வரமளிக்கும் தேவன் {சிவன்}, இவ்வாறு சென்ற போது, ஓ! மனிதர்களில் சிறந்தவரே {சல்லியரே}, தேவர்கள் அனைவருடன் கூடிய மொத்த அண்டமும் மிகவும் மகிழ்ச்சியடைந்தது.(88) மேலும் அங்கே இருந்த முனிவர்கள், ஓ! மன்னா {சல்லியரே], பல்வேறு பாடல்களால் அந்தத் தேவர்களின் தலைவனைத் துதித்து, அவனது சக்தியை மேம்படுத்தியபடி அங்கேயே நிலை கொண்டனர்.(89) அவன் {சிவன்} புறப்பட்ட அந்த நேரத்தில், லட்சக்கணக்கான, பத்துலட்சக்கணக்கான கந்தர்வர்கள், பல்வேறு இசைக்கருவிகளை இசைத்தனர்.(90) வரமளிக்கும் பிரம்மன், தேரில் ஏறி அசுரர்களை நோக்கிச் சென்ற போது, அந்த அண்டத்தின் தலைவன் {சிவன்} சிரித்துக் கொண்டே, “நன்று, நன்று.(91) ஓ! தேவரே {பிரம்மனே}, தைத்தியர்கள் எங்கிருக்கின்றனரோ அங்கே செல்வீராக. விழிப்புடன் குதிரைகளைத் தூண்டுவீராக. போரில் நான் இன்று எதிரியைக் கொல்லும்போது என் கரங்களின் வலிமையைக் காண்பீராக” என்றான்.(92) இப்படிச் சொல்லப்பட்ட பிரம்மன், காற்று, அல்லது சிந்தனையின் வேகத்தைக் கொண்ட அந்தக் குதிரைகளைத் தூண்டி, தைத்தியர்களாலும், தானவர்களாலும் பாதுகாக்கப்பட்ட முந்நகரம் {திரிபுரம்} இருந்த இடத்தை நோக்கிச் சென்றான்.(93) உலகங்கள் அனைத்தாலும் வழிபடப்பட்டவையும், வானத்தையே விழுங்கிவிடுவதைப் போன்ற வேகத்துடன் சென்றவையுமான அந்தக் குதிரைகளுடன் அந்தச் சிறப்புமிக்கத் தேவன் சொர்க்கவாசிகளின் வெற்றிக்காக வேகமாகச் சென்றான்.(94)
உண்மையில் பவன் {சிவன்}, முந்நகரத்தை {திரிபுரத்தை} நோக்கி அந்தத் தேரில் சென்ற போது, அவனது காளையானது திசைப்புள்ளிகள் அனைத்தையும் நிறைக்கும்வண்ணம் பயங்கரமாக முழங்கியது.(95) அந்தக் காளையின் பயங்கரமான பெருமுழக்கத்தைக் கேட்டவர்களும், தேவர்களின் எதிரிகளுமான தாரகனின் வழித்தோன்றல்கள் பலரும், அவனைப் பின்பற்றுபவர்களும் தங்கள் இறுதி மூச்சை சுவாசித்தனர்.(96) அவர்களில் பலர் போரில் எதிரியை எதிர்த்து நின்றனர். அப்போது, ஓ! மன்னா {சல்லியரே}, திரிசூலம் தரித்த ஸ்தாணு, கோபத்தால் தன் உணர்வுகளை இழந்தவனாக ஆனான்.(97) அனைத்து உயிரினங்களும் பீடியடைந்தன, மூன்று உலகங்களும் நடுங்கத் தொடங்கின. அந்தக் கணையால் அவன் குறிபார்த்த போது, பயங்கரமான சகுனங்கள் தோன்றின.(98) எனினும், அந்தக் கணையில் இருந்த சோமன், அக்னி மற்றும் விஷ்ணு ஆகியோரது எடையுடைய அழுத்தத்தின் விளைவாகவும், பிரம்மன், ருத்ரன் மற்றும் பின்னவனின் {ருத்ரனின்} வில் ஆகியவற்றின் அழுத்தத்தின் காரணமாகவும் அந்தத் தேரானது மூழ்குவதைப் போலத் தெரிந்தது.(99) அப்போது அந்தக் கணையின் முனையில் இருந்து வெளிப்பட்ட நாராயணன், காளையின் வடிவை ஏற்று அந்தப் பெரிய தேரை உயர்த்தினான்.(100)
அந்தத் தேரானது மூழ்கி, எதிரிகள் முழங்கத் தொடங்கிய போது, பெரும் வலிமையைக் கொண்ட அந்தச் சிறப்புமிக்கத் தேவன் {சிவன்}, ஓ! கௌரவங்களை அளிப்பவரே {சல்லியரே}, தனது குதிரைகளின் முதுகிலும், தனது காளையின் தலையிலும் நின்றபடியே, சினத்தால் பெருமுழக்கம் செய்யத் தொடங்கினான். அந்த நேரத்தில் சிறப்புமிக்க ருத்ரன் அந்தத் தானவ நகரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.(101,102) ஓ! மனிதர்களில் சிறந்தவரே {சல்லியரே}, அந்நிலையில் நின்ற ருத்ரன், அந்தக் குதிரைகளின் காம்புகளையும் (teats), காளையுடைய குளம்புகளின் ஆணிகளையும் வெட்டினான்.(103) ஓ! மன்னா, அற்புதச் செயல்களைச் செய்யும் வலிமைமிக்க ருத்ரனால் பீடிக்கப்பட்ட அந்தக் காலம் முதல் குதிரைகள் காம்புகள் இன்றியே இருக்கின்றன[1].(104)
[1] சுலோகம் 103 மற்றும் 104ல் உள்ள இந்த வர்ணனை தவறாக இருக்க வேண்டும். மன்மதநாத தத்தரின் பதிப்பில், “ஓ மனிதர்களில் முதன்மையானவரே {சல்லியரே}, ருத்ரன் தனது காளை மற்றும் குதிரைகளின் மீது இவ்வாறு நின்று கொண்டிருக்கையில், அவன், தன் குதிரைகளின் காலடிகளை வெட்டி, தன் காளையின் குளம்புகளை இரு பாகங்களாகப் பிரித்தான். நீர் அருளப்பட்டிருப்பீராக. அந்தக் காலத்தில் இருந்தே ஆவினம் சார்ந்த விலங்குகள் அனைத்தும், (இரண்டு பாகங்களையுடைய) குளம்புகள் பிளவுப்பட்டே இருக்கின்றன” என்றிருக்கிறது. இதுவே சரியாக இருக்க வேண்டும். வேறொரு பதிப்பிலும், பிபேக் திப்ராயின் பதிப்பிலும், கங்குலியில் சுலோகம் 95 முதல் 104 வரை உள்ள பகுதிகள் இல்லை..
அப்போது சர்வன் {சிவன்}, தன் வில்லின் நாணையேற்றிக் கொண்டு, முந்நகரத்தை {திரிபுரத்தை} நினைத்துக் கொண்டே, பாசுபத ஆயுதத்துடன் தான் ஒன்றிணைத்த அந்தக் கணையால் குறிபார்த்தபடி காத்திருந்தான்.(105) ஓ! மன்னா {சல்லியரே}, ருத்ரன் அவ்வாறு வில்லைப் பிடித்த படி நின்று கொண்டிருந்த அந்த நேரத்தில், அந்த மூன்று நகரங்களும் ஒன்று சேர்ந்தன.(106) அந்த மூன்று நகரங்களும் தங்கள் தனிப்பட்ட பண்புகளை இழந்து ஒன்று சேர்ந்த போது, ஆரவாரமே உயர் ஆன்மத் தேவர்களின் மகழ்ச்சியானது.(107) பிறகு தேவர்கள் அனைவரும், சித்தர்களும், பெரும் முனிவர்களும் மஹேஸ்வரனை {சிவனைப்} புகழ்ந்து, ஜெயம் என்ற சொல்லைச் சொன்னார்கள்.(108) அப்போது, தாங்கிக் கொள்ள முடியாத சக்தியைக் கொண்டவனும், விவரிக்க முடியாத வடிவமும், கடுமையும் கொண்ட தேவனும், அசுரர்களைக் கொல்ல விரும்பிய போர்வீரனுமான அந்தத் தேவனின் {சிவனின்} முன்னிலையில் அந்த முந்நகரம் உடனே தோன்றியது.(109) பிறகு, சிறப்புமிக்கத் தேவனான அந்த அண்டத் தலைவன், அந்தத் தெய்வீக வில்லை வளைத்து, மொத்த அண்டத்தின் வலிமையையும் பிரதிபலித்த அந்தக் கணையை முந்நகரத்தின் {திரிபுரத்தின்} மீது ஏவினான்.(110) ஓ! பெரும் நற்பேற்றைக் கொண்டவரே {சல்லியரே}, அந்த முதன்மையான கணை ஏவப்பட்டதும், பூமியை நோக்கி விழத்தொடங்கிய அந்த நகரங்களில் இருந்து துன்பம் நிறைந்த பேரோலங்கள் கேட்கப்பட்டன. அந்த அசுரர்களை எரித்த அவன் {சிவன்}, அவர்களை மேற்குப் பெருங்கடலில் வீசினான்.(111) முந்நகரம் {திரிபுரம்} இவ்வாறே எரிக்கப்பட்டது, மூன்று உலகங்களுக்கும் நன்மை செய்யும் விருப்பத்தால் கோபத்துடன் கூடிய மஹேஸ்வரனால் தானவர்களும் இவ்வாறே அழிக்கப்பட்டனர்.(112)
அந்த முக்கண் தேவன் {சிவன்}, தன் கோபத்தால் உண்டான நெருப்பிடம், “ஓ!, மூவுலகங்களையும் சாம்பலாக்கிவிடாதே” என்று சொல்லி அதைத் தணித்தான்.(113) இதன் பிறகு, தேவர்களும், முனிவர்களும், மூன்று உலகங்களும், தங்கள் இயல்பு நிலைகள் மீண்டு, ஒப்பற்ற சக்தி கொண்ட ஸ்தாணுவை {சிவனை} உயர்ந்த தரத்திலான வார்த்தைகளால் மனநிறைவு கொள்ளச் செய்தனர்.(114) பிறகு படைப்பாளனை {பிரம்மனைத்} தங்கள் தலைமையில் கொண்டவர்களும், இத்தகு முயற்சியால் தங்கள் நோக்கம் ஈடேறியவர்களுமான தேவர்கள், அந்தப் பெரும் தேவனிடம் {சிவனிடம்} அனுமதி பெற்றுக் கொண்டு, தாங்கள் எந்த இடங்களில் இருந்து வந்தனரோ அங்கேயே சென்றனர்.(115) சிறப்புமிக்கத் தேவனும், உலகங்களைப் படைப்பவனும், தேவர்கள் மற்றும் அசுரர்கள் ஆகிய இருவரின் தலைவனுமான மகேஸ்வரன், உலகங்கள் அனைத்தின் நன்மைக்காக எது செய்யப்பட வேண்டுமோ, அதைச் செய்தான்.(117)
உலகங்களைப் படைத்தவனும், பெரும்பாட்டனும், மங்காப் புகழ் கொண்ட உயர்ந்த தேவனுமான சிறப்புமிக்கப் பிரம்மன், ருத்ரனின் சாரதியாகச் செயல்பட்டதைப் போல, ருத்ரனின் குதிரைகளைக் கட்டுப்படுத்திய அந்தப் பெரும்பாட்டனைப் போல், உயர் ஆன்ம ராதையின் மகனுடைய {கர்ணனுடைய} குதிரைகளை நீர் கட்டுப்படுத்துவீராக.(118) ஓ! மன்னர்களில் புலியே {சல்லியரே}, கிருஷ்ணன், கர்ணன் மற்றும் பல்குனன் {அர்ஜுனன்} ஆகியோருக்கு நீர் மேம்பட்டவரே என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.(119) போரில் ருத்ரனைப் போன்றவனே கர்ணன், கொள்கையில் பிரம்மனைப் போன்றவரே நீரும். எனவே, ஒன்றாகச் சேர்ந்திருக்கும் நீங்கள் இருவரும், அசுரர்களைப் போன்ற என் எதிரிகளை வெல்லத் தகுந்தவர்களே.(120) ஓ! சல்லியரே, கிருஷ்ணனைத் தன் தேரின் சாரதியாகவும், வெண்குதிரைகளையும் கொண்டவனான குந்தியின் மகனை {அர்ஜுனனை} கர்ணனால் எதைக் கொண்டு கொல்ல முடியுமோ, அஃது இன்று வேகமாக நடக்கட்டும்.(121) எங்களுக்காகவும், எங்கள் அரசுகளுக்காகவும், போரில் வேண்டும் வெற்றிக்காகவும், கர்ணன் உம்மைச் சார்ந்தே இருக்கிறான். எனவே, (கர்ணனின்) அந்தச் சிறந்த குதிரைகளின் கடிவாளங்களைப் பிடிப்பீராக” {என்றான் துரியோதனன்}.(122)
ஆங்கிலத்தில் | In English |