Debut field | Adi Parva - Section 136 | Mahabharata In Tamil
(சம்பவ பர்வம் - 72)
பதிவின் சுருக்கம் : அரங்கத்தைக் கட்டத் தேவையான நிலத்தை அளந்த துரோணர்; குறித்த நாளில் இளவரசர்களின் வீர அரங்கேற்றம் நடந்தது; தங்கள் ஆற்றலை வெளிப்படுத்திய இளவரசர்கள்; பீமனும், துரியோதனனும் மோதிக் கொள்ள ஆயத்தமானது...
 |
| Debut field | Adi Parva - Section 136 | Mahabharata In Tamil |
வைசம்பாயனர் சொன்னார், “ஓ! பாரதகுலத்தோனே, திருதராஷ்டிரன் மற்றும் பாண்டுவின் மகன்கள் ஆயுதத் திறமையை அடைந்து விட்டதைக் கண்ட துரோணர், ஓ! ஏகாதிபதியே, கிருபர், சோமதத்தன், பாஹ்லீகர், மற்றும் கங்கையின் புத்திசாலி மகன் (பீஷ்மர்), வியாசர், விதுரன் ஆகியோரது முன்னிலையில் மன்னன் திருதராஷ்டிரனிடம்,(1,2) “ஓ! குரு மன்னர்களில் சிறந்தவரே, உமது மகன்கள் தங்கள் கல்வியை முடித்துவிட்டனர். ஓ! மன்னா, உமது அனுமதியுடன் அவர்கள் தங்கள் நிபுணத்துவத்தை வெளிப்படுத்தட்டும்" என்றார்.(3)
இதைக்கேட்ட மன்னன் இதயம்நிறைந்த மகிழ்ச்சியுடன், “ஓ! பிராமணர்களில் சிறந்தவரே, நீர் பெரும் செயலைச் சாதித்திருக்கிறீர். பரிசோதனை நிகழும் இடத்தையும் நேரத்தையும், அஃது எப்படி நடக்க வேண்டும் என்பதையும் எனக்குக் கட்டளையிடுவீராக.(4) என் குருட்டுத் தன்மை, எனக்கு ஏற்படுத்தியிருக்கும் துயர், எனது பிள்ளைகளின் ஆயுத வீரத்தைக் காணும் பாக்கியமுள்ளோரிடம் என்னை பொறாமை கொள்ள வைக்கிறது.(5) ஓ! க்ஷத்ரி (விதுரா), துரோணர் சொல்வதையெல்லாம் செய்து கொடுப்பாயாக. ஓ! அறத்துக்குத் தன்னை அர்ப்பணித்திருப்பவனே, இதைவிட ஏற்புடையது {இனிமையானது} எனக்கு வேறெதுவும் இல்லை என்று நினைக்கிறேன்" என்றான்.(6)