The sorrow of Janameja! | Adi Parva - Section 3c | Mahabharata In Tamil
(பௌசிய பர்வம்)
பதிவின் சுருக்கம் : உதங்கரிடம் இருந்து காதணிகளைத் திருடிய தக்ஷகன்; இந்திரன் உதவியுடன் மீண்டும் காதணிகளை அடைந்த உதங்கர்; ஜனமேஜயனைப் பாம்பு வேள்வி செய்யத் தூண்டிய உதங்கர்...
இதைச் சொன்ன உதங்கன், காதுகுண்டலங்களுடன் அங்கிருந்து புறப்பட்டான். சில நேரம் தோன்றுவதும், சில நேரம் மறைவதுமாகச் சாலையில் ஓர் அம்மணப் பிச்சைக்காரன் தன்னை நோக்கி வருவதை உதங்கன் கண்டான்.(128) குண்டலங்களைத் தரையில் வைத்துவிட்டு, நீரை நோக்கி உதங்கன் சென்றான். அந்நேரத்தில் அந்தப் பிச்சைக்காரன் வெகுவிரைவாக அந்த இடத்திற்கு வந்து, குண்டலங்களை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான்.(128) உதங்கன் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும் சடங்குகளை முடித்துக் கொண்டு, தேவர்களையும், ஆன்ம ஆசான்களையும் மரியாதையுடன் வணங்கி வெகுவிரைவாக அந்தக் கள்வனைப் பின்தொடர்ந்து சென்றான்.(129) மிகவும் சிரமப்பட்டு அவனை {திருடனை} முந்தி வந்து, குண்டலங்களை அவனிடம் இருந்து வலுக்கட்டாயமாகப் பிடுங்க முயற்சித்தான். ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தில், பிச்சைக்காரத் தோற்றத்தை விட்டு தன் உண்மை வடிவை ஏற்ற தக்ஷகன், தரையில் இருந்த ஒரு பொந்துக்குள் நுழைந்தான்.(130)
