Jackals dragged Drona's feet! | Stri-Parva-Section-23 | Mahabharata In Tamil
(ஸ்திரீவிலாப பர்வம் - 08) [ஸ்திரீ பர்வம் - 14]
பதிவின் சுருக்கம் : சல்லியன், பகதத்தன், பீஷ்மர், துரோணர் ஆகியோர் வீழ்ந்து கிடப்பதைக் கிருஷ்ணனுக்குச் சுட்டிக் காட்டிய காந்தாரி; அவர்கள் ஒவ்வொருவரின் பெருமையையும் சொன்னது; துரோணர் ஈமச்சிதையிலிடப்பட்டு அவருக்கான இறுதிச்சடங்குகள் நடைபெறுவதைக் கிருஷ்ணனுக்குச் சொன்ன காந்தாரி ...
காந்தாரி {கிருஷ்ணனிடம்}, "ஓ! ஐயா, நகுலனின் தாய்மாமனான சல்லியன், பக்திமானும், அறவோனுமான யுதிஷ்டிரனால் போரில் கொல்லப்பட்டு அங்கே கிடக்கிறான்.(1) ஓ! மனிதர்களில் காளையே, அவன் {சல்லியன்} எப்போதும் உனக்கு இணையானவன் என்று சொல்லி தற்பெருமை பேசிக் கொள்வான். அந்த வலிமைமிக்கத் தேர்வீரனான மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்} உயிரையிழந்து கிடக்கிறான்.(2) போரில் கர்ணனின் சாரதி நிலைய ஏற்றபோது அவன் {சல்லியன்}, பாண்டு மகன்களின் வெற்றிக்காகக் கர்ணனின் சக்தியைக் குறைக்க முயன்றான்.(3) ஐயோ, ஐயோ, சந்திரனைப் போன்று அழகானதும், தாமரை இதழ்களுக்கு ஒப்பான கண்களால் அலங்கரிக்கப்பட்டதுமான சல்லியனின் மென்மையான முகம், காகங்களால் உண்ணப்படுவதைப் பார்.(4) ஓ! கிருஷ்ணா, புடம்போட்ட தங்கத்தின் நிறத்தில் இருக்கும் அம்மன்னனின் {சல்லியனின்} நாவு, அவனது வாயிலிருந்து வெளியேறி, ஊனுண்ணும் பறவைகளால் உண்ணப்படுகிறது.(5)
மத்ர அரசக் குடும்பத்தின் மங்கையர், யுதிஷ்டிரனால் உயிரை இழக்கச் செய்யப்பட்டவனும், சபைகளின் ரத்தினமுமாமான அம்மன்னனின் {சல்லியனின்} உடலைச் சுற்றி அமர்ந்து கொண்டு துன்பத்தால் உரக்க ஓலமிட்டனர்.(6) அந்தப் பெண்கள், பருவகாலத்தில் இருக்கும் பெண்யானைக் கூட்டமானது, சகதியில் மூழ்கும் தங்கள் தலைவனைச் சுற்றி இருப்பதைப் போல வீழ்ந்துவிட்ட அந்த வீரனைச் சுற்றிலும் அமர்ந்திருக்கின்றனர்.(7,8) துணிச்சல்மிக்கவனும், தேர்வீரர்களில் முதன்மையானவனும், அந்தச் சல்லியன், கணைகளால் உடல் சிதைக்கப்பட்டு, வீரர்களுக்கான படுக்கையில் நீண்டு கிடக்கிறான்.(9)
பேராற்றலைக் கொண்டவனும், மலை நாட்டு ஆட்சியாளனும், யானை அங்குசம் தரிப்போர் அனைவரில் முதன்மையானவனுமான மன்னன் பகதத்தரும், உயிரை இழந்து அங்கே தரையில் கிடக்கிறார்.(10) அவர் தலையில் அணிந்திருக்கும் தங்கமாலை இன்னும் பிரகாசமாக இருப்பதைப் பார். இரைதேடும் விலங்குகளால் அவனது உடல் உண்ணப்பட்டாலும், அந்த மாலையானது இன்னும் அவரது தலையை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.(11) இந்த மன்னனுக்கும் {பகதத்தனுக்கும்} பார்த்தனுக்கும் {அர்ஜுனனுக்கும்} இடையில் நடந்த போரானது, சக்ரனுக்கும் {இந்திரனுக்கும்}, அசுரன் விருத்திரனுக்கும் இடையில் நடந்ததைப் போல மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில் மிகக் கடுமையானதாக இருந்தது.(12) அந்த வலிய கரத்தோன், பிருதையின் மகனான தனஞ்சயனுடன் போரிட்டு, அவனைப் பெருஞ்சிக்கலில் ஆழ்த்தி, இறுதியில் தன் எதிராளியால் கொல்லப்பட்டார்.(13)
வீரத்திலும், சக்தியிலும் இவ்வுலகத்தில் ஒப்பில்லாதவரும், போரில் பயங்கரச் சாதனைகளை அடைந்தவருமான பீஷ்மர் உயிரை போகக் கிடக்கிறார்.(14) ஓ! கிருஷ்ணா, சூரியப் பிரகாசம் கொண்ட அந்தச் சந்தனுவின் மகன் {பீஷ்மர்}, யுகத்தின் முடிவில் ஆகாயத்தில் இருந்து விழுந்த சூரியனைப் போலப் பூமியில் நீண்டு கிடப்பதைப் பார்.(15) ஓ! கேசவா, போரில் தன் ஆயுதங்களின் நெருப்பால் எதிரிகளை எரித்தவரும், வீரமிக்கவரும், மனிதர்களில் சூரியனுமான அந்த வீரர், உண்மையான சூரியனைப் போலவே மாலையில் மறைந்தார்.(16) ஓ! கிருஷ்ணா, கடமையறிவில் {தன் பெரியப்பாவான} தேவாபிக்கு இணையான அந்த வீரர் {பீஷ்மர்}, வீரர்களுக்குத் தகுந்த கணைகளின் படுக்கையில் இப்போது கிடப்பதைப் பார்.(17) நாணற்கட்டில் கிடக்கும் தெய்வீக ஸ்கந்தனைப் போல, முள்பதித்த மற்றும் முள் பதிக்கப்படாத கணைகளாலான {கர்ணிகள் மற்றும் நாளீகங்களாலான} அவரது சிறந்த படுக்கையில் நீண்டு கிடக்கிறார்.(18) உண்மையில், கங்கையின் மைந்தன், தன் படுக்கைக்கான அன்பளிப்பாகக் காண்டீவதாரியால் கொடுக்கப்பட்டதும், மூன்று கணைகளாலானதுமான சிறந்த தலையணையில் தன் தலையைச் சாய்த்துக் கிடக்கிறார்.(19) தன் தந்தையின் {சந்தனுவின்} ஆணைகளுக்குக் கீழ்ப்படிவதற்காக {தன் தந்தையின் விருப்பம் நிறைவேறுவதற்காக} இந்தச் சிறந்தவர் தன் உயிர்நீரை மேலெழுப்பினார். ஓ! மாதவா, போரில் ஒப்பற்றவரான அந்தச் சந்தனுவின் மகன் {பீஷ்மர்} இதோ இங்கே கிடக்கிறார்.(20)
அற ஆன்மா கொண்டவரும், ஈருலகங்கள் சம்பந்தமான தன் அறிவின் துணையுடன் அனைத்துக் கடமைகளையும் அறிந்தவருமான அந்த வீரர், இறப்புக்குரிய மனிதராக இருந்தும், இறவாதவரைப் போலத் தன் உயிரை இன்னும் பிடித்துக் கொண்டிருக்கிறார்.(21) கணைகளால் தாக்கப்பட்ட சந்தனுவின் மகன் {பீஷ்மர்} கிடக்கும் இன்று, கல்வி, ஆற்றல் மற்றும் போரில் அடையத்தக்க பெருஞ்சாதனைகளைக் கொண்ட வேறு எந்த மனிதனும் இவ்வுலகில் இல்லை என்று தெரிகிறது.(22) பேச்சில் உண்மையுள்ளவராக இருந்த இந்த அறமும், நீதியும் மிக்க வீரர் {பீஷ்மர்}, பாண்டவர்களால் கேட்டுக் கொள்ளப்பட்டதும், தன் மரணத்திற்கான வழியைத் தானே சொன்னார்.(23) ஐயோ, அருகிக் கிடந்த குரு பரம்பரையை எவர் மீட்டாரோ, பெரும் நுண்ணறிவைக் கொண்ட அந்தச் சிறப்புமிக்கவர், குருக்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு இவ்வுலகைவிட்டுச் செல்கிறார்.(24) ஓ! மாதவா, தேவனுக்கு ஒப்பானவரும், மனிதர்களில் காளையுமான தேவவிரதர் {பீஷ்மர்} சொர்க்கத்திற்குச் சென்ற பிறகு, குருக்கள் அறம் குறித்தும், கடமை {நீதிகள்} குறித்தும் யாரிடம் கேட்பார்கள்?(25)
பிராமணர்களில் முதன்மையானவரும், அர்ஜுனன், சாத்யகி மற்றும் குருக்களின் ஆசானுமான துரோணர், தரையில் கிடப்பதைப் பார்.(26) ஓ! மாதவா {கிருஷ்ணா}, அந்தத் துரோணர், பெருஞ்சக்தி கொண்டவராகவும், தேவர்களின் தலைவனை {இந்திரனைப்} போன்றோ, பிருகு குலத்தின் சுக்கிரனைப் போன்றோ நால்வகை ஆயுதங்களையும் அறிந்தவராக இருந்தார்.(27) அவரது அருளாலேயே, பாண்டுவின் மகனான பீபத்சு {அர்ஜுனன்} மிகக்கடுஞ்சாதனைகளை அடைந்தான். {அப்படிப்பட்ட} அவர் உயிரை இழந்து இப்போது தரையில் கிடக்கிறார். (இறுதியில்) ஆயுதங்கள் அவரது உத்தரவுக்கு ஏற்ப இருப்புக்கு வர மறுத்தன.(28) அவரைத் தலைமையில் கொண்டே கௌரவர்கள் பாண்டவர்களை அறைகூவியழைத்தனர். ஆயுததாரிகள் அனைவரிலும் முதன்மையான அவர், இறுதியில் ஆயுதங்களால் சிதைக்கப்பட்டார்.(29) அனைத்துத் திசைகளிலும் தன் எதிரிகளை எரித்தபடியே போரில் அவர் திரிந்த போது, அவரது போக்கு காட்டுத்தீக்கு ஒப்பானதாக இருந்தது. ஐயோ, உயிரை இழந்த அவர் அணைந்த நெருப்பைப் போல இப்போது தரையில் கிடக்கிறார்.(30)
வில்லின் கைப்பிடி இன்னும் அவரது {துரோணரது} பிடியில் இருக்கிறது[1]. ஓ! மாதவா {கிருஷ்ணா}, அவரது விரல்கள் இன்னும் தோலுரைகளுடன் இருக்கின்றன. கொல்லப்பட்டாலும் அவர் இன்னும் உயிருடன் இருப்பவரைப் போலே இருக்கிறார்.(31) ஓ! கேசவா, நான்கு வேதங்களும், அனைத்து வகை ஆயுதங்களும் எவ்வாறு தலைவன் பிரஜாபதியைக் கைவிடவில்லையோ அவ்வாறே இந்த வீரரையும் கைவிடவில்லை.(32) துதிகள் அனைத்திற்கும் தகுந்தவையும், பாணர்கள் மற்றும் துதிபாடிகளால் உண்மையில் துதிக்கப்படுபவையும், சீடர்களால் வழிபடப்படுபவையுமான அவரது {துரோணரது} மங்கலப் பாதங்கள், இப்போது நரிகளால் இழுத்துச் செல்லப்படுகின்றன.(33) ஓ! மாதவா, துயரால் புலனுணர்வுகளை இழந்த கிருபி, துருபதன் மகனால் {திருஷ்டத்யும்னனால்} கொல்லப்பட்ட துரோணரைத் துயரத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.(34) துயரால் பீடிக்கப்பட்டிருக்கும் அந்த மங்கை {கிருபி}, கலைந்த கேசத்துடன், தலையைத் தொங்கப் போட்டப்படி பூமியில் விழுவதைப் பார்.(35) தலையில் சடாமுடி தரித்தவர்களான பிரம்மச்சாரிகள் பலர், திருஷ்டத்யும்னனின் கணைகளால் ஊடுருவி பிளக்கப்பட்ட கவசத்துடன் கூடிய துரோணரின் உடலைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.(36)
[1] இறக்கும்போது ஆயுதங்களைக் கைவிட்டு நிஷ்டையில் அமர்ந்திருந்தார் துரோணர் எனும்போது, இறந்த பிறகும் அவரது கைப்பிடியில் வில் இருப்பது இங்கே பொருத்தமாக இல்லை. இந்தப் பகுதியின் இன்னும் கூடுதல் செய்தியாக, துரோணரின் இறுதி நிமிடங்களில் அவரது ஆணைக்கிணங்க அஸ்திரங்கள் வரவில்லை என்ற குறிப்பும் காணக்கிடைக்கிறது.
சிறப்புமிக்கவளும், மென்மையானவளுமான கிருபி, உற்சாகமற்றவளாக, துயரில் பீடிக்கப்பட்டவளாக, போரில் கொல்லப்பட்ட தன் தலைவனின் உடலுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்ய முயல்கிறாள்.(37) சாமங்களை {சாமவேதத்தை} உரைப்பவர்கள், துரோணரின் உடலை ஈமச்சிதையில் நிறுத்தி, உரிய சடங்குகளுடன் நெருப்பை மூட்டி, (நன்கறியப்பட்ட) மூன்று சாமங்களைப் பாடிக் கொண்டிருக்கின்றனர்.(38) ஓ! மாதவா, தலையில் சடாமுடி தரித்திருக்கும் அந்தப் பிரம்மச்சாரிகள், அந்தப் பிராமணரின் {துரோணரின்} ஈமச்சிதையில் விற்கள், ஈட்டிகள், தேர்க்கூடுகள் ஆகியவற்றைக் குவிக்கின்றனர்.(39) பெருஞ்சக்திகொண்ட அந்த வீரர் {துரோணர்}, பல்வேறு வகைக் கணைகளைத் திரட்டிக் கொண்டு இருந்த அவற்றில் எரிக்கப்படுகிறார். உண்மையில் அவர்கள், சிதையில் அவரை அமர்த்தி, பாடவும், அழவும் செய்கின்றனர்.(40) வேறு சிலர், இத்தகு சூழ்நிலைகளில் உரைக்கப்படும் (நன்கறியப்பட்ட) மூன்று சாமங்களை உரைக்கின்றனர். நெருப்பில் நெருப்பாக அந்நெருப்பில் துரோணரை எரித்தவர்களும்,(41) மறுபிறப்பாள {பிராமண} வகையைச் சார்ந்தவர்களுமான அவரது {துரோணரது} சீடர்கள், அந்தச் சிதைக்கு இடப்புறமாக, கிருபியைத் தங்கள் தலைமையில் கொண்டு கங்கைக் கரையை நோக்கிச் செல்கின்றனர்[2]" என்றாள் {காந்தாரி}.(42)
[2] துரோணரின் இறுதிச்சடங்கில் அஸ்வத்தாமன் பங்குபெறவில்லை என்பது இங்கே தெரிகிறது. பெண்ணான கிருபி, ஈமச்சடங்குகளுக்கான ஏற்பாடுகளைச் செய்கிறாள்.
ஸ்திரீ பர்வம் பகுதி – 23ல் உள்ள சுலோகங்கள் : 42
ஆங்கிலத்தில் | In English |