Fight between Indra and Kesin! | Vana Parva - Section 222 | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
ஆதிகாலத்தில் அசுரர்களிடம் தேவர்கள் தொடர் தோல்வி காண்பது; அதனால் தேவர்கள் படைக்கு ஒரு பலமிக்கத் தளபதி வேண்டும் என்று இந்திரன் நினைப்பது; இந்திரன் மானச மலைக்குச் செல்வது; அங்கு அவனுக்கும் கேசினுக்கும் இடையே நடக்கும் மோதல் ஆகியவற்றை மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது...
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ! குரு குலத்தின் பாவமற்ற வாரிசே {யுதிஷ்டிரா}, அக்னி குலத்தின் பல்வேறு கிளைகளை நான் உனக்கு விவரித்துவிட்டேன். இப்போது, புத்திக்கூர்மை கொண்ட கார்த்திகேயனின் பிறப்புக் கதையைக் கேள். நான் உனக்கு, பிரம்ம முனிவர்களின் மனைவியரிடம், அத்புத நெருப்பு {அக்னி} பெற்ற அற்புதமான, புகழ்பெற்ற, உயர்ந்த சக்தி கொண்ட மகனைக் குறித்துச் சொல்கிறேன். பழங்காலத்தில் தேவர்களும், அசுரர்களும் ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்வதில் சுறுசுறுப்பாக இருந்தார்கள். பயங்கரமான அசுரர்கள் தேவர்களை வீழ்த்துவதில் எப்போதும் வெற்றி பெற்றார்கள்.
அவர்களால் {அசுரர்களால்} தனது படையினர் கொல்லப்படுவதைக் கண்ட புரந்தரன் {இந்திரன்}, தேவர்கள் படைக்கு ஒரு தலைவனைக் கண்டுபிடிக்கும் ஆவல் கொண்டு, தனக்குள்ளேயே, "தேவர்கள் படை அசுரர்களால் முறியடிக்கப்படுவதைக் கண்டு வீரத்துடன் அப்படையைப் பாதுகாக்கும் ஒரு பலமிக்கவனை நான் கண்டுபிடிக்க வேண்டும்" என்று ஆலோசித்தான். பிறகு அவன் {இந்திரன்} மானச மலைகளுக்குச் சென்றான். அங்கே அவன் இந்தச் சிந்தனையில் ஆழ்ந்திருந்த போது, "யாராவது ஒருவர் விரைவாக வந்து என்னைக் காக்கட்டும். அவன் எனக்கு ஒரு கணவனைக் காட்டட்டும் அல்லது அவனே எனக்குக் கணவனாகட்டும்" என்ற ஒரு பெண்ணின் இதயத்தைத் தொடும் அழுகுரலைக் கேட்டான்.
புரந்தரன் {இந்திரன்} அவளிடம், "அஞ்சாதே பெண்ணே!" என்று சொன்னான். இப்படிச் சொன்ன அவன், அங்கே தலையில் கிரீடத்துடனும், கைகளில் கதாயுதத்துடனும், உலோகங்களின் மலை போலத் தூரத்தில் நின்று கொண்டிருக்கும் (அசுரன்) கேசினைக் {Kesin} கண்டான். அவன் {கேசின்} அந்தப் பெண்ணைத் தனது கையில் பிடித்து வைத்திருந்தான். வாசவன் அந்த அசுரனிடம் {கேசினிடம்}, "ஏன் நீ இந்தப் பெண்ணிடம் இவ்வாறு இழிவாக நடந்து கொள்கிறாய்? என்னை வஜ்ரத்தைத் தாங்கும் தேவன் {இந்திரன்} என அறிந்து கொள். இந்தப் பெண்ணிடம் வன்முறை செய்வதைவிட்டு விலகு" என்றான். அவனிடம் {இந்திரனிடம்} கேசின், "ஓ! சக்ரா {இந்திரா}, நீ இவளைத் தனியாக விடு. நான் இவளை அடைய விரும்புகிறேன். ஓ! பகனைக் கொன்றவனே {இந்திரா}, நீ உயிருடன் வீடு திரும்ப முடியுமா என்பதை நினைத்துப் பார்" என்றான்.
இவ்வார்த்தைகளைச் சொன்ன கேசின், இந்திரனைக் கொல்வதற்காகத் தனது கதாயுதத்தை வீசினான். அது {கதாயுதம்} வரும் வழியிலேயே வாசவன் {இந்திரன்} தனது வஜ்ராயுதத்ததால் அறுத்துப் போட்டான். பிறகு கோபத்தால் சீற்றமடைந்த கேசின் பெரும் கற்பாறையை அவன் {இந்திரன்} மீது வீசினான். இதைக் கண்ட நூறு வேள்விகள் செய்தவன் {இந்திரன்}, அவனது வஜ்ராயுதத்தால் அதைப் பிளந்து போட்டான். அது பூமியில் விழுந்தது. அந்தக் கற்பாறைக் குவியல் அவன் மீது விழுந்ததால், கேசின் காயப்பட்டான். இதனால் பலத்த துன்பத்துக்குள்ளான அவன் {கேசின்}, அந்தப் பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு ஓடினான். அந்த அசுரன் சென்றுவிட்ட பிறகு, இந்திரன் அந்த மங்கையிடம், "நீ யார்? யாருடைய மனைவி நீ? ஓ அழகான முகம் கொண்ட மங்கையே, எது உன்னை இங்கு அழைத்து வந்தது?" என்று கேட்டான் {இந்திரன்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.