Goloka for Surabhi! | Anusasana-Parva-Section-83 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 83)
பதிவின் சுருக்கம் : சுரபி மேற்கொண்ட கடுந்தவத்தையும், பிரம்மன் சுரபிக்குக் கொடுத்த இறவாமை குறித்தும், கோலோகம் தேவலோகத்துக்கு மேலிருப்பதன் காரணத்தைக் குறித்தும் இந்திரனுக்குச் சொன்ன பிரம்மன்...
பீஷ்மர், "ஓ! யுதிஷ்டிரா, பசுக்கொடையளிப்போரும், புனித நெருப்பில் ஆகுதிகளாகக் காணிக்கையளிக்கப்பட்டவற்றில் எஞ்சியிருப்பதை உண்டு வாழ்வோரும் அனைத்து வகை வேள்விகளையும் எப்போதும் செய்பவர்களாகக் கருதப்படுகிறார்கள்.(1) தயிர் மற்றும் நெய்யின் துணையின்றி எந்த வேள்வியையும் செய்ய முடியாது. வேள்வியின் தன்மையே நெய்யைச் சார்ந்திருக்கிறது. எனவே, வேள்வியின் வேராகவே நெய் (அல்லது அதை உண்டாக்கிய பசு) கருதப்படுகிறது.(2) கொடைகளனைத்திலும் பசுக்கொடையே உயர்ந்ததென மெச்சப்படுகிறது. பசுக்களே அனைத்திலும் முதன்மையானவை. புனிதமான அவை, தூய்மை செய்வதிலும், புனிதப்படுத்துவதிலும் சிறந்தவையாக இருக்கின்றன.(3) செழிப்பையும், அமைதியையும் அடைவதற்காக மக்கள் பசுக்களைப் பேணி வளர்க்க வேண்டும். பசுக் கொடுக்கும் பால், தயிர் மற்றும் நெய் ஆகியன அனைத்து வகைப் பாவங்களில் இருந்தும் ஒருவனைத் தூய்மைப்படுத்த வல்லவையாகும்.(4) பசுக்கள், இவ்வுலகிலும், மேலுலகிலும் பெருஞ்சக்தி கொண்டவையாகச் சொல்லப்படுகின்றன. ஓ! பாரதக் குலத்தின் காளையே, பசுக்களை விடப் புனிதமிக்கவை வேறு எதுவும் இல்லை.(5)
ஓ! யுதிஷ்டிரா, இது தொடர்பாகப் பெரும்பாட்டனுக்கும், தேவர்கள் தலைவனுக்கும் இடையில் நடந்த உரையாடல் குறிப்பிடப்படுகிறது.(6) தேவர்கள் வீழ்த்தப்பட்டு மூவுலகங்களின் தலைவனாகச் சக்ரன் ஆன பிறகு, அனைத்து உயிரினங்களும் செழிப்பில் வளர்ந்து, உண்மை அறத்திற்கு அர்ப்பணிப்புள்ளவையாக மாறின.(7) அப்போது ஒரு சந்தரப்பத்தில், ஓ! குரு குலத்தின் காளையே, முனிவர்கள், கந்தர்வர்கள், கின்னரர்கள், உரகர்கள், ராட்சசர்கள், தேவர்கள், அசுரர்கள், சிறகு படைத்த உயிரினங்கள், பிரஜாபதிகள் என அனைவரும் ஒன்றுகூடி பெரும்பாட்டனைத் துதித்தனர். அங்கே நாரதர், பர்வதர், விஸ்வாவசு, ஹாஹா-ஹுஹு ஆகியோர்,(8,9) அந்த அனைத்து உயிரினங்களின் பலமிக்கத் தலைவனை {பிரம்மனைத்} துதித்து தெய்வீகத் தொனியில் பாடிக்கொண்டிருந்தனர். காற்றின தேவன் அங்கே தெய்வீக மலர்களின் நறுமணத்தைச் சுமந்து வந்தான்.(10)
உடல்வடிவங்களுடன் கூடிய பருவகாலங்களும், தெய்வீக இசையின் துணையுடன் தெய்வீகக் கன்னியர் ஆடிப் பாடிக் கொண்டிருந்த தேவர்களின் கூட்டத்திற்கு மலர்களின் குறிப்பிட்ட நறுமணங்களைத் தனித்தனியாகச் சுமந்து வந்தன. அந்தச் சபைக்கு மத்தியில் தேவர்களின் தலைவனிடம் {பிரம்மனிடம்} தலைவணங்கிய இந்திரன், அவனிடம்,(11,12) "ஓ! பெரும்பாட்டா, ஓ! புனிதமானவரே, உலகங்கள் அனைத்தின் தலைவர்களான தேவர்களின் உலகத்தைவிடக் கோலோகம் ஏன் உயர்ந்த இடத்தில் இருக்கிறது என்பதை அறிய விரும்புகிறேன்.(13) ஓ! தலைவா, பசுக்கள் செய்த எந்தத் தவம் அல்லது எந்தப் பிரம்மச்சரியத்தின் விளைவால் அவை தேவர்களைவிட உயர்ந்த உலகத்தில் மகிழ்ச்சியாக வசிக்கவல்லவையாக இருக்கின்றன?" என்று கேட்டான் {இந்திரன்}.(14)
இந்திரனால் இவ்வாறு கேட்கப்பட்ட பிரம்மன் அந்தப் பலனைக் கொன்றவனிடம், "ஓ! பலனைக் கொன்றவனே {இந்திரனே}, நீ எப்போதும் பசுக்களை அவமதித்திருக்கிறாய்.(15) எனவே, உன்னால் பசுக்களின் மகிமையை முன்கூட்டியே அறிய முடியவில்லை. ஓ! பலமிக்கவனே, ஓ! தேவர்களின் தலைவா, பசுக்களின் மகிமையையும் பெருஞ்சக்தியையும் சொல்கிறேன் கேட்பாயாக.(16) பசுக்கள் வேள்வியின் அங்கங்களாகச் சொல்லப்படுகின்றன. ஓ! வாசவா அவை வேள்விக்கு ஒப்பானவையாக இருக்கின்றன. அவை இல்லாமல் வேள்வி ஏதும் இருக்க முடியாது.(17) அவற்றின் பால், அதனிலிருந்து உண்டாகும் ஹவி ஆகியவற்றால் அவை அனைத்து உயிரினங்களையும் ஆதரிக்கின்றன.(18) அவற்றில் ஆண் கன்றுகள் உழவுக்குத் துணை செய்வதன் மூலம் நெல் முதலிய தானியங்களை விளைவிக்கன்றன.(19) அவற்றில் இருந்தே வேள்விகளும், ஹவ்யகவ்யங்களும், பால், தயிர் மற்றும் நெய்யும் உண்டாகின்றன. எனவே, ஓ! தேவர்களின் தலைவா, பசுக்கள் புனிதமானவையாக இருக்கின்றன. பசியாலும், தாகத்தாலும் பீடிக்கப்படும் அவை பல்வேறு சுமைகளைச் சுமக்கின்றன.(20)
பசுக்கள் முனிவர்களை ஆதரிக்கின்றன. அவை பல்வேறு செயல்பாடுகளின் மூலம் அனைத்து உயிரினங்களையும் ஆதரிக்கின்றன. ஓ! வாசவா, பசுக்கள் தங்கள் நடத்தையில் வஞ்சனையற்றவையாகும். அத்தகைய நடத்தையின் விளைவாலும், நன்கு செய்யும் செயல்களின் விளைவாலும் அவை நம்மை விட உயர்ந்த உலகங்களில் எப்போதும் வாழ்கின்றன.(21) ஓ! நூறு வேள்விகளைச் செய்தவனே, பசுக்கள் ஏன் தேவர்களை விட உயர்ந்த உலகத்தில் வசிக்கின்றன என்பதை நான் இன்று உனக்கு விளக்கிச் சொல்லிவிட்டேன்.(22) ஓ! வாசவா, பல சிறந்த பல வடிவங்களைக் கொண்ட பசுக்களே (பிறருக்கு) வரங்களை அளிப்பவையாகவும் இருக்கின்றன. அவை சுரபிகள் என்றழைக்கப்படுகின்றன. புனிதமான செயல்பாடுகளையும், மங்கலக் குறிகள் பலவற்றையும் கொண்ட அவை புனிதப்படுத்துவனவற்றில் உயர்ந்தவையாக இருக்கின்றன.(23) ஓ! பலனைக் கொன்றவனே, ஓ! தேவர்களின் தலைவா, சுரபியின் பிள்ளைகளான பசுக்கள் ஏன் பூமிக்கு இறங்கிச் சென்றன என்ற காரணத்தை விரிவாகச் சொல்கிறேன் கேட்பாயாக.(24)
ஓ! மகனே, பழங்காலத்தில் தேவயுகத்தில் உயர் ஆன்ம தேவர்கள் மூவுலகங்களின் தலைவர்களாக இருந்தபோது, அதிதி கடுந்தவங்களைச் செய்து (அதன் வெகுமதியாகத்) தன் கருவறையில் விஷ்ணுவைக் கொண்டாள். உண்மையில், ஓ! தேவர்களின் தலைவா, அவள் ஒரு மகனை விரும்பி நீண்ட பல வருடங்களாக ஒற்றைக் காலில் நின்று {தவம் செய்து} கொண்டு இருந்தாள்.(25,26) பெருந்தேவியான அதிதி இவ்வாறு கடுந்தவங்களைச் செய்வதைக் கண்டவளும், தக்ஷனின் மகளும், அறத்திற்குத் தன்னை அர்ப்பணித்தவளும், சிறப்புமிக்கவளுமான சுரபியும், அவளைப் போலவே தேவர்களும், கந்தர்வர்களும் செல்லும் அழகிய கைலாச மலைகளின் சாரலில் கடுந்தவங்களைச் செய்யத் தொடங்கினாள்.(27,28) உயர்ந்த யோகத்தில் நிறுவப்பட்ட அவள், பதினோராயிரம் {11,000} வருடங்கள் ஒற்றைக் காலில் நின்று {தவம் செய்து} கொண்டு இருந்தாள்.(29) தேவர்கள், முனிவர்கள் மற்றும் பெரும் நாகர்கள் அனைவரும் அவளது தவங்களால் கடுமையாகச் சுடப்பட்டனர். என்னுடன் சேர்ந்து வந்த அவர்கள் அனைவரும் அந்த மங்கலத் தேவியைத் துதிக்கத் தொடங்கினர்.(30)
அப்போது நான், "ஓ! தேவி, ஓ! களங்கமற்ற ஒழுக்கம் கொண்டவளே, எக்காரியத்திற்காக நீ இத்தகைய கடுந்தவங்களைச் செய்கிறாய்?(31) ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவளே, ஓ! அழகானவளே, உன் தவங்களால் நான் நிறைவடைந்தேன். ஓ! தேவி, நீ வரும்பும் வரத்தைக் கேட்பாயாக. நீ கேட்கும் எதையும் நான் தருவேன்" என்றேன். ஓ! புரந்தரா, இவையே நான் சுரபியிடம் சொன்ன சொற்களாகும்.
என்னால் இவ்வாறு சொல்லப்பட்டதும், எனக்குப் பதிலளிக்கும் வகையில் சுரபி, "ஓ! பெரும்பாட்டனே, எனக்கு வரங்கள் தேவையில்லை. ஓ! பாவமற்றவரே, நீர் என்னிடம் நிறைவடைந்ததே எனக்குக் கிட்டிய பெரும் வரமாகும்" என்றாள்.(33)
ஓ! தேவர்களின் தலைவா, ஓ! சச்சியின் தலைவா, ஓ! தேவர்களில் முதன்மையானவனே, இச்சொற்களை என்னிடம் சொன்ன அந்தச் சிறப்புமிக்கச் சுரபியிடம் நான்,(34) "ஓ! தேவி, ஓ! அழகிய முகம்படைத்தவளே, ஆசை மற்றும் பேராசையில் இருந்து விடுப்பட்ட உனது வெளிப்பாட்டிலும், நீ செய்த தவங்களிலும் நான் மிகையான நிறைவை அடைந்தேன். எனவே நான் உனக்கு இறவாமையை வரமாகத் தருகிறேன்.(35) என் அருளின் மூலம் மூவுலங்களிலும் உயர்ந்த இடத்தில் உள்ள உலகத்தில் நீ வசிப்பாயாக. அந்த உலகம் கோலோகம் என்ற பெயரால் அனைவராலும் அறியப்படப் போகிறது.(36) எப்போதும் நற்செயல்களையே செய்யும் உன் சந்ததி, மனிதர்களின் உலகில் இருக்கட்டும். ஓ! உயர்ந்த அருளைக் கொண்டவளே, உண்மையில் உன் மகள்கள் அங்கே வசிக்கப் போகிறார்கள்.(37) தெய்வீக மற்றும் மானுட இன்பங்கள் அனைத்தும் நீ நினைத்த மாத்திரத்தில் உனதாகும். ஓ! அருளப்பட்டவளே, சொர்க்கத்தில் இருக்கும் இன்பம் எதுவும் உனதே ஆகும்" என்று பதிலளித்தேன்.(38)
ஓ! நூறு கண்களைக் கொண்டவனே, சுரபியின் உலகங்கள் அனைத்து விருப்பங்களையும் நிறைவடையச் செய்ய வல்லவையாகும். மரணமோ, முதுமையோ, நெருப்போ அங்கே வசிப்பவர்களைத் தாக்காது.(39) ஓ! வாசவா, தீயூழேதும் அங்கே ஏற்படாது. இனிய காடுகள் பலவும், இனிய ஆபரணங்கள் மற்றும் அழகிய பொருட்கள் யாவும் அங்கே காணப்படுகின்றன.(40) ஓ! வாசவா, சிறப்பான ஆயத்தங்களுடன் கூடியவையும், செலுத்துபவரின் விருப்பத்திற்கேற்பச் சொல்லக்கூடியவையுமான பல அழகிய தேர்களும் அங்கே இருக்கின்றன. ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவனே, பிரம்மச்சரியம், தவங்கள், வாய்மை, தற்கட்டுப்பாடு, கொடைகள், பல்வேறு வகை அறச்செயல்கள், புனித நீர்நிலைகளுக்குப் பயணம் மேற்கொள்ளல் ஆகியவற்றாலும், உண்மையில், கடுந்தவங்கள், நன்றாகச் செய்யப்பட்ட அறச்செயல்கள் ஆகியவற்றாலும் மட்டுமே ஒருவன் கோலோகத்தை அடைய முடியும்.(41,42) ஓ! சக்ரா, நீ கேட்டவை அனைத்திற்கும் நான் முழுமையாகப் பதிலளித்துவிட்டேன். ஓ! அசுரர்களைக் கொல்பவனே, ஒருபோதும் பசுக்களை அவமதியாதே" என்றான் {பிரம்மன்}".(43)
பீஷ்மர் தொடர்ந்தார், "ஓ! யுதிஷ்டிரா, சுயம்புவான பிரம்மனின் இச்சொற்களைக் கேட்டவனும், ஆயிரம் கண்களைக் கொண்டவனுமான சக்ரன், அந்த நேரத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் பசுக்களை வழிபடவும், அவற்றுக்குப் பெரும் மதிப்பளிக்கவும் தொடங்கினான்.(44) ஓ! பெரும் காந்தியைக் கொண்டவனே, பசுக்களின் புனிதத்தன்மை குறித்த அனைத்தையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன். இவ்வாறே, ஓ!மனிதர்களின் தலைவா, ஒவ்வொரு பாவத்தையும் தூய்மையாக்கவல்ல பசுக்களின் புனிதத்தன்மை, முன்சிறப்புகள் மற்றும் மகிமைகளை உனக்குச் சொல்லிவிட்டேன். பிற பொருட்களில் இருந்து புலன்விலக்கம் பெற்ற மனிதன், ஹவ்யகவ்யங்கள் காணிக்கையளிக்கப்படும் தருணங்கள், அல்லது வேள்விகளிலோ, பித்ருக்களைத் துதிக்கும் தருணங்களிலோ இதைக் குறித்துப் பிராமணர்களுக்குச் சொன்னால் அவன் தன் மூதாதையர்களின் ஒவ்வொரு விருப்பமும் கனியும் நிலையை அடைவதில் வெல்கிறான்.(45-47)
பசுக்களிடம் அர்ப்பணிப்பு கொண்ட மனிதன், தன் விருப்பங்கள் அனைத்தும் கனியும் நிலையை அடைவதில் வெல்கிறான். உண்மையில், பசுக்களிடம் அர்ப்பணிப்பு கொண்ட பெண்களும், தங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் நிலையை அடைவதில் வெல்கிறார்கள்.(48) மகன்களைப் பெற விரும்புபவன் மகன்களை அடைகிறான். மகள்களைப் பெற விரும்புபவன் மகள்களைப் பெறுகிறான். செல்வத்தை விரும்புபவன், செல்வத்தை அடைவதில் வெல்கிறான், அறத்தகுதியை விரும்புபவன் அறத்தகுதியை ஈட்டுவதில் வெல்கிறான்.(49) அறிவை விரும்புபவன் அறிவை அடைகிறான். இன்பத்தை விரும்புபவன், இன்பத்தை அடைவதில் வெல்கிறான். உண்மையில், ஓ! பாரதா, பசுக்களிடம் அர்ப்பணிப்புள்ள ஒருவனால் அடைய முடியாதது ஏதுமில்லை" {என்றார் பீஷ்மர்}.(50)
அநுசாஸனபர்வம் பகுதி – 83ல் உள்ள சுலோகங்கள் : 50
ஆங்கிலத்தில் | In English |