Jamvavati! | Anusasana-Parva-Section-14a | Mahabharata In Tamill
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 14)
பதிவின் சுருக்கம் : பீஷ்மர் கேட்டுக் கொண்டதற்கிணங்க பரமசிவனின் மகிமையை யுதிஷ்டிரனுக்குச் சொல்லத் தொடங்கிய கிருஷ்ணன்; கிருஷ்ணனிடம் வரம் கேட்ட ஜாம்பவதி; இமயம் சென்ற கிருஷ்ணன்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! கங்கையாற்றின் மைந்தரே, அண்டத்தின் தலைவனுடைய பெயர்கள் அனைத்தையும் நீர் கேட்டிருக்கிறீர். ஓ! பாட்டா, ஓ! பலமிக்கவரே, ஈசன் என்றும் சம்பு என்றும் அழைக்கப்படுபவனின் பெயர்கள் அனைத்தையும் எங்களுக்குச் சொல்வீராக.(1) அண்டத்தையே தன் வடிவமாகக் கொண்டவனும் தேவர்கள் மற்றும் அசுரர்கள் அனைவருக்கும் சிறப்புமிக்க ஆசானும், சங்கரன் என்றழைக்கப்படுபவனும், புலப்படாத தோற்றத்தைக் கொண்டவனும், பப்ரு அல்லது பரந்தவன் {பெரியவன்} என்றும் அழைக்கப்படுபவனுடைய பெயர்கள் அனைத்தையும் எங்களுக்குச் சொல்வீராக. அந்த மஹாதேவனின் பலத்தையும் எங்களுக்குச் சொல்வீராக" என்று கேட்டான்.(2)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "பெரும் நுண்ணறிவைக் கொண்ட மஹாதேவனின் குணங்களை உரைக்க நான் சக்தியுள்ளவன் அல்லன். அண்டத்தில் உள்ள அனைத்துப் பொருட்களிலும் நீக்கமற நிறைந்தவனாய் இருந்தாலும் எங்கும் காணப்படாதவனாக அவன் இருக்கிறான்.(3) பிரம்மன், விஷ்ணு மற்றும் இந்திரனைப் படைத்தவனும் அவனே {ஈசனே}, அவர்களுடைய ஆசானும் அவனே. பிரம்மன் முதலான தேவர்கள் முதல் பிசாசங்கள் வரை அனைவராலும் துதிக்கப்பட்டு வழிபடப்படுபவன் அவனே.(4) பிரகிருதி மற்றும் புருஷன் ஆகிய இரண்டையும் கடந்தவன் அவனே. யோகத்தை அறிந்தவர்களும், கேள்வி சம்பந்தப்பட்ட காரியங்களில் ஞானத்தைக் கொண்டவர்களுமான முனிவர்கள் சிந்திப்பதும், நினைப்பதும் அவனையே.(5) அழிவற்றவனான பரப்பிரம்மம் அவனே. இருப்பு மற்றும் இல்லாமை என்ற இரண்டாகவும் இருப்பவன் அவனே. பிரகிருதி மற்றும் புருஷன் ஆகிய இரண்டையும் தன் சக்தியின் மூலம் கலங்கடித்து, அவற்றிலிருந்து உயிரினங்களின் அண்டத்தலைவனான பிரம்மனைப் படைத்தவன் அவனே.(6)
உயர்ந்த நுண்ணறிவுடன் கூடிய அந்தத் தேவ தேவனுடைய குணங்களைச் சொல்லத் தகுந்தவன் எவன்? மனிதன், (தாயின் கருவறையில்) கருவை அடைதல், பிறவி, முதுமை மற்றும் மரணம் ஆகியவற்றுக்கு உட்பட்டவனாவான்.(7) அவ்வாறிருக்கையில் பவனைப் புரிந்து கொள்ள என்னைப் போன்ற மனிதனால் முடியுமா? ஓ! மகனே, சங்கு, சக்கரம் கதாயுதம் ஆகியவற்றைத் தாக்கும் நாராயணனால் மட்டுமே மஹாதேவனைப் புரிந்து கொள்ள முடியும்.(8) அவனே ஞானவான். அனைத்துப் பொருட்களின் குணங்களில் முதன்மையானவன் அவனே. அண்டத்தில் நீக்கமற நிறைந்திருப்பதால் விஷ்ணு அவனே. தடுக்கப்பட முடியாதவன் அவனே. ஆன்மப் பார்வையுடன் கூடிய உயர்ந்த சக்தியைக் கொண்டவன் அவனே. அனைத்துப் பொருட்களையும் யோகக் கண்களால் காண்பவன் அவனே.(9) ஓ! பாரதா, பதரி ஆசிரமத்தில் அர்ப்பணிப்புடன் {பக்தியுடன்} சிறப்புமிக்க ருத்திரனை நிறைவு செய்ததன் விளைவால் இந்த உயரான்மக் கிருஷ்ணன் மொத்த அண்டத்தையும் {தன்னால்} நிறைப்பதில் வென்றான்.(10)
ஓ! மன்னர்களின் மன்னா, செல்வம் என்ற பெயரில் உள்ள பொருட்கள் அனைத்தையும் விட உலகளாவிய அளவில் ஏற்கப்படும் தன்மையை தெய்வீகப் பார்வை கொண்ட மஹேஸ்வரனின் மூலமே இந்த வாசுதேவன் அடைந்தான்[1].(11) இந்த மாதவன், முழுமையாக ஓராயிரம் வருடங்கள் கடுந்தவங்களைச் செய்து, சிறப்புமிக்கவனும், வரமளிப்பவனும், அண்டத்தில் உள்ள அசைவன மற்றும் அசையாதனவற்றின் ஆசானுமான அந்தச் சிவனை நிறைவு செய்வதில் இறுதியாக வென்றான்.(12) ஒவ்வொரு யுகத்திலும் உயர் ஆன்மக் கிருஷ்ணனின் பெரும் அர்ப்பணிப்பால் மஹாதேவன் நிறைவடைகிறான்.(13) சிதைவுகள் அனைத்தையும் கடந்தவனான ஹரி, ஒரு மகனை அடைவதற்காகப் பதரி ஆசிரமத்தில் தவங்களைச் செய்த போது, அண்டத்தின் மூலக் காரணனும், உயர் ஆன்மா கொண்டவனுமான மஹாதேவனின் பலம் என்ன என்பதைத் தன் கண்களாலேயே கண்டான்[2].(14) ஓ! பாரதா, மஹாதேவனைவிட மேன்மையானவன் எவனையும் நான் காணவில்லை. மேலும் கேட்கும் விருப்பத்தை உண்டாக்காமல் அந்தத் தேவ தேவனின் பெயர்களை முழுமையாக விளக்கிச் சொல்ல கிருஷ்ணன் மட்டுமே தகுந்தவனாவான்.(15) யது குலத்தைச் சேர்ந்த இந்த வலிய கரங்களைக் கொண்டவன் {கிருஷ்ணன்} மட்டுமே சிறப்புமிக்கச் சிவனின் குணங்களைச் சொல்லத் தகுந்தவனாவான். ஓ! மன்னா, உண்மையில், அந்தப் பரமதேவனின் பலத்தை முழுமையாகச் சொல்ல அவனால் மட்டுமே சொல்ல முடியும்" என்றார் {பீஷ்மர்}".(16)
[1] "செல்வம் எப்போதும் அனைத்து மனிதர்களாலும் ஏற்கப்படத்தக்கதாக இருக்கிறது. இந்த வாசுதேவன் செல்வத்தை விட அதிகம் ஏற்கத்தகுந்தவன். செல்வத்தை விட அதிகம் ஏற்கத்தக்கதும், அண்டமனைத்தாலும் ஏற்கத்தக்கதுமான இந்தக் குணம், மஹாதேவனின் உதவியாலேயே அடையப்பட்டது" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.[2] "ஒரு மகனை அடைவதற்காக மஹாதேவனை நிறைவு செய்யும் கிருஷ்ணனின் தவங்கள் இங்கே மறைமுகமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. மஹாதேவனின் வரம் மூலம் அடையப்பட்ட மகன், கிருஷ்ணனுக்குப் பிடித்த மனைவியான ருக்மிணியிடம் அவனுக்குப் பிறந்த பிரத்யும்னன் ஆவான்" எனக் கங்குலி இங்கே விளக்குகிறார்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "குருக்களின் பாட்டனான சிறப்புமிக்கப் பீஷ்மர் இந்த வார்த்தைகளைச் சொன்ன பிறகு, ஓ! ஏகாதிபதி, பவனின் பெருமையைச் சொல்லும் பின் வரும் வார்த்தைகளை வாசுதேவனிடம் சொன்னார்.(17)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "தேவர்கள் மற்றும் அசுரர்களின் ஆசான் நீயே. சிறப்புமிக்கவன் நீயே. மொத்த அண்டத்திலும் நீக்கமற நிறைந்திருப்பதன் விளைவால் விஷ்ணு நீயே. யுதிஷ்டிரனால் என்னிடம் கேட்கப்பட்டவனும், அண்ட வடிவிலானவனுமான சிவன் தொடர்புடைய காரியங்களைக் குறித்துச் சொல்வதே உனக்குத் தகும்.(18) பழங்காலத்தில் பிரம்மனிடம் இருந்து உதித்த முனிவர் தண்டின் {தண்டி}, பிரம்ம லோகத்தில், பிரம்மனின் முன்னிலையில் வைத்து மஹாதேவனின் ஆயிரம் பெயர்களைச் சொன்னார்.(19) தவத்தைச் செல்வமாகக் கொண்டவர்களும், உயர்ந்த நோன்புகளை நோற்பவர்களும், தற்கட்டுப்பாட்டைக் கொண்டவர்களுமான இந்த முனிவர்களும், அவர்களுக்கு மத்தியில் இருக்கும் தீவில் பிறந்த கிருஷ்ணரும்{வியாசரும்} கேட்கும் வகையில் இந்தச் சபையின் முன்னிலையில் அந்த ஆயிரம் பெயர்களையும் நீ சொல்வாயாக.(20) மாற்றமில்லாதவனும், எப்போதும் உற்சாகம் நிறைந்தவனாக, மகிழ்ச்சியாக இருப்பவனும், ஹோத்ரியும், அண்டத்தின் பாதுகாவலனும், அண்டத்தின் படைப்பாளனும், முண்டின் {முடிகளற்றவன்} மற்றும் கபர்த்தின் {சடாமுடிதரித்தவன்} என்று அழைக்கப்படுபவனின் உயர்ந்த அருள்நிலையைக் குறித்துச் சொல்வாயாக" என்றார் {பீஷ்மர்}.(21)
வாசுதேவன் {கிருஷ்ணன்}, "பெரும்பாட்டனான பிரம்மனைத் தங்களுக்கு மத்தியில் கொண்டிருக்கும் பெரும் முனிவர்களும் கூட, மஹாதேவனின் செயற்போக்குகளையும், அவற்றின் விபரங்கள் அனைத்தையும் புரிந்து கொள்ளத் தக்கவர்களல்லர்.(22) மக்களில் அறவோர் அனைவரும் அடையப்போகும் கதி அவனேயாவான். நுண்பார்வை கொண்ட ஆதித்யர்களே கூட அவனது வசிப்பிடத்தைக் காணத் தகுந்தவர்களல்லர். அவ்வாறிருக்கையில், சாதாரண ஒரு மனிதனால் எவ்வாறு அவனைப் புரிந்து கொள்ள முடியும்?(23) எனவே, வேள்விகள் மற்றும் நோன்புகள் அனைத்தின் தலைவனாகக் கருதப்படுபவனும், அசுரர்களைக் கொல்பவனுமான அந்தச் சிறப்புமிக்கவனின் குணங்களில் சிலவற்றை மட்டுமே உண்மையில் நான் உமக்குச் சொல்லப் போகிறேன்" என்றான்".(24)
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "சிறப்புமிக்க வாசுதேவன், இந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, நீரைத் தீண்டி தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, பெரும் நுண்ணறிவையுடைய உயர் ஆன்ம மஹாதேவனின் குணங்களைக் குறித்துச் சொல்லத் தொடங்கினான்.(25)
வாசுதேவன் {கிருஷ்ணன்}, "பிராமணர்களில் முதன்மையானவர்களே, ஓ!ஐயா யுதிஷ்டிரரே, ஓ! ஆற்றின் மைந்தரே {பீஷ்மரே}, கபர்த்தினுக்கு {கபர்த்திக்கு [மஹாதேவனுக்கு]} உரிய பெயர்களைக் கேட்பீராக.(26) காணக்கிடைக்காத (அந்தப் பெருந்தேவனை) {எனது மகன்} சாம்பனுக்காகப் பழங்காலத்தில் கண்டேன். உண்மையில் அந்த நாட்களில் தியான யோகத்தின் விளைவால் அந்தச் சிறப்புமிக்கத் தேவன் {சிவன்}, என்னால் காணப்பட்டான்[3].(27) பெரும் நுண்ணறிவைக் கொண்டவனும், ருக்மிணியின் மகனுமான பிரத்யும்னன், பழங்காலத்தில் அசுரன் சம்பரனைக் கொன்ற காலத்திலிருந்து பனிரெண்டு வருடங்கள் கடந்ததும், என் மனைவியான ஜாம்பவதி என்னிடம் பேசினாள்.(28)
[3] "கிருஷ்ணன், தகுதி மிக்க ஒரு மகனை அடைவதற்காக மஹாதேவனை நிறைவு செய்யும் நோக்கில் இமயச் சாரலில் கடுந்தவங்களைச் செய்தான் என்று சொல்லப்படுகிறது. இங்கேயும், பின்வரப்போகும் ஸ்லோகங்களிலும் காணப்படுவதைப் போல மஹாதேவனின் வரத்தால் அடையப்பட்ட மகன் சாம்பனே. எனினும், வேறு பல இடங்களில் இது ருக்மிணியிடம் பெறப்பட்ட பிரத்யும்னன் என்று சொல்லப்படுகிறது. கிருஷ்ணன் மகன்களை அடைவதற்காக இருமுறை மஹாதேவனைத் துதித்தான் என்று கொண்டால் இந்த முரண் நீங்கிவிடும்" எனக்கங்குலி இங்கே விளக்குகிறார். 31, 32 ஸ்லோகங்களில் கங்குலி சொல்வது சரியாகத்தெரிகறது.
உண்மையில் ஓ! யுதிஷ்டிரரே, ருக்மிணிக்கு பிறந்தவர்களான பிரத்யும்னன், சாருதேஷ்ணன் மற்றும் பிற மகன்களைக் கண்ட ஜாம்பவதி, தானும் ஒரு மகனைப் பெற விரும்பி என்னிடம் இந்த வார்த்தைகளைச் சொன்னாள்,(29) "ஓ! மங்கா மகிமை கொண்டவரே, வீரம், மிக ஏற்புடைய குணங்கள், பாவமற்ற ஒழுக்கம் ஆகியவற்றைக் கொண்டவனாகவும், வலிமைமிக்க மனிதர்களில் முதன்மையானவனாகவும் உள்ள உம்மைப் போன்ற ஒரு மகனை எனக்கு அருள்வீராக. ஓ!, இந்த என் வேண்டுதலை எத்தாமதமுமின்றி அருள்வீராக.(30) மூவுலகங்களிலும் உம்மால் அடையப்பட முடியாது எதுவும் இல்லை. ஓ! யது குலத்தைத் தழைக்கச் செய்பவரே, நீர் விரும்பினால் வேறு உலகங்களையே கூட உண்டாக்க முடியும். பனிரெண்டு வருட நோன்பை நோற்று, உம்மைத் தூய்மை செய்து கொண்டு, உயிரினங்கள் அனைத்தின் தலைவனை (மஹாதேவனைத்) துதித்து, ருக்மிணியின் மகன்களைப் பெற்றீர்.(31,32) சாருதேஷ்ணன், ஸுசாரூ, சாருவேசன், யசோதரன், சாருஸ்ரவன், சாருயசஸ், பிரத்யும்னன், சம்பு என்ற மகன்களை அவள் {ருக்மிணி} உம்மிடம் இருந்து பெற்றாள்.(33) ஓ! மதுசூதனா {மதுவெனும் அரக்கனைக் கொன்றவரே}, ருக்மிணி பெற்றிருக்கும் பேராற்றல் வாய்ந்த மகன்களைப் போல எனக்கும் ஒரு மகனை அருள்வீராக" என்று கேட்டாள்.(34)
அந்த இளவரசியால் இவ்வாறு கேட்கப்பட்டதும், நான் அந்தக் கொடியிடையாளிடம் {ஜாம்பவதியிடம்}, "ஓ! ராணி, (உன்னை விட்டுச் சிலகாலம் பிரிந்து செல்ல) உன் அனுமதி எனக்கு வேண்டும். நிச்சயம் நான் உனதாணைக்குக் கீழ்ப்படிவேன்" என்றேன்.(35)
அவள் என்னிடம், "செல்வீராக, வெற்றியும், செழிப்பும் எப்போதும் உமக்குத் துணை புரியட்டும். பிரம்மன், சிவன், கசியபர், ஆறுகள், மனத்தை ஆளும் தேவர்கள்,(36) மண், இலையுதிர் மூலிகைகள், வேள்விகளில் ஊற்றப்படும் ஆகுதிகளைச் சுமப்பதாகக் கருதப்படும் சந்தங்கள் {த்ரேதாக்னிகள் மற்றும் வேதங்கள்}, முனிவர்கள், பூமி, பெருங்கடல்கள், வேள்விக் கொடைகள், சாமங்களின் {இசையில் உள்ள} ஏற்றத்தாழ்வுகளை நிறைவு செய்யச் சொல்லப்படும் அசைகள், ரிக்ஷங்கள் {நட்சத்திரங்கள்}, பித்ருக்கள்,(37) ஓ! யாதவரே, கோள்கள், தேவர்களின் மனைவிகள் {தேவிகள்}, தேவகன்னிகள், தேவர்களின் தாய்மார், பெரும் யுகங்கள் {மன்வந்தரங்கள்}[4], பசுக்கள், சந்திரமாஸ் {சந்திரன்}, சாவித்ரி {சூரியன்}, அக்னி {விஷ்ணு},(38) காயத்ரி, வேத அறிவு {பிரம்ம வித்தை}, பருவ காலங்கள் {ருதுக்கள்}, ஆண்டுகள், க்ஷணங்கள் {கணங்கள்}, லவங்கள், முகூர்த்தங்கள், நிமிஷங்கள், அடுத்தடுத்த யுகங்கள்,(39) என்ற அனைத்தாலும் பாதுகாக்கப்படுவீராக. நீரெங்கு இருந்தாலும் மகிழ்ச்சியாகவே இருப்பீராக. ஓ! பாவமற்றவரே உமது வழியில் உம்மை ஆபத்து அணுகாதிருக்கட்டும், விழிப்புணர்வின்மை உமதாக வேண்டாம் {ஜாக்ரதையாக இருப்பீராக}" என்று மறுமொழி கூறினாள்.(40)
[4] கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், "எழுபத்தோரு தேவ யுகங்கள்" என்றிருக்கிறது.
இவ்வாறு குரங்குகளின் இளவரசனுடைய மகளால் {ஜாம்பவதியால்} ஆசி கூறப்பட்ட {மங்களசாஸனம் செய்யப்பெற்ற} நான் நல்வாழ்த்து கூறி அவளிமிருந்து விடைபெற்றுக் கொண்டேன். மனிதர்களில் முதன்மையானவரான என் தந்தை {வசுதேவர்}, தாய் {தேவகி}, மன்னன் மற்றும் ஆஹுகர் ஆகியோரிடம்(41) சென்று வித்யாதரர்களின் இளவரசனுடைய மகள் {ஜாம்பவதி}[5] பெருந்துன்பத்துடன் என்னிடம் சொன்ன வார்த்தைகளைத் தெரிவித்தேன். கவலை நிறைந்த இதயத்துடன் அவர்களிமிருந்து பிரியாவிடை பெற்றுக் கொண்டு கதன் மற்றும் பெரும் வலிமை கொண்ட ராமர் {பலராமர்} ஆகியோரிடம் சென்றேன்.(42) அவர்கள் இருவரும் உற்சாகம் நிறைந்தவர்களாக, "எத்தடையுமின்றி உன் தவங்கள் பெருகட்டும்" என்று என்னிடம் சொன்னார்கள்.(43) அவர்கள் அனைவரிடமும் அனுமதிபெற்றுக் கொண்ட நான் கருடனை நினைத்தேன். உடனே என்னிடம் வந்த அவன் (என் ஆணையின் பேரில்) என்னை இமயத்துக்குச் சுமந்து சென்றான். இமயத்தை அடைந்ததும் நான் அவனுக்கு விடைகொடுத்து அனுப்பினேன்.(44) அந்த முதன்மையான மலையில் நான் அற்புதக் காட்சிகள் பலவற்றைக் கண்டேன். தவம் பயில்வதற்கு ஏற்புடையதும், அற்புதமானதும், சிறந்ததுமான ஓர் ஆசிரமத்தைக் கண்டேன்.(45)
[5] கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், "இவளை வித்யாதரராஜன் மகள் என்று சொன்னது ஜாம்பவான் தேவ அம்சம் என்னும் அபிப்பிராயத்தினால்" என்றிருக்கிறது.
அநுசாஸனபர்வம் பகுதி – 14அ வில் உள்ள சுலோகங்கள் : 45
ஆங்கிலத்தில் | In English |