King Nriga! | Anusasana-Parva-Section-70 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 70)
பதிவின் சுருக்கம் : மன்னன் நிருகனின் கதையை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்; வழிதவறி வந்த பசு; பசுவை வேறொரு பிராமணருக்குக் கொடையளித்த மன்னன் நிருகன்; ஓணானாக மாறியது; கிருஷ்ணன் நிருகனை விடுவித்தது...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, ஒரு பிராமணனுக்கு உரியதைக் கொள்ளையிட்டதன் விளைவால் மன்னன் நிருகன் அடைந்த பேரிடரைக் குறித்த கதையை இது தொடர்பாக அறவோர் குறிப்பிடுகின்றனர்.(1) சில காலத்திற்கு முன்பு, யதுகுலத்தைச் சார்ந்த சில குறிப்பிட்ட இளைஞர்கள் நீர் தேடிச் சென்ற போது, புல் மற்றும் கொடிகளால் நன்கு மறைக்கப்பட்ட ஒரு பெரிய கிணற்றை அடைந்தனர்.(2) அதனிலிருந்து நீரெடுக்கும் விருப்பத்தில் அதன் வாயைச் சுற்றியிருந்த கொடிகளை அகற்ற பெரிதும் முயற்சி செய்தனர். அந்த வாயில் தூய்மையடைந்ததும், அதனுள் ஒரு பெரிய ஓணான் வசிப்பதைக் கண்டனர். அந்த இளைஞர்கள் அச்சூழலில் இருந்து அந்த ஓணானை மீட்க மீண்டும் மீண்டும் பெரும் முயற்சிகளைச் செய்தனர்.(3,4) மலையின் அளவுக்கு ஒப்பாக இருந்த அந்த ஓணானைக் கயிறுகளாலும், தோல் வார்களாலும் விடுவிக்க முயன்றனர். தங்கள் நோக்கத்தில் வெல்ல முடியாத அந்த இளைஞர்கள் ஜனார்த்தனனிடம் சென்றனர்.(5)
அவர்கள் அவனிடம், "கிணற்றின் மொத்த இடத்தையும் ஒரு பெரிய ஓணான் மறைத்துக் கொண்டிருப்பது தெரிகிறது. எங்கள் சிறந்த முயற்சிகளினாலும் அதை அச்சூழலில் இருந்து மீட்க முடியவில்லை" என்றனர். கிருஷ்ணனிடம் இதுவே சொல்லப்பட்டது.(6) அந்த இடத்திற்குச் சென்ற வாசுதேவன், அந்த ஓணானை வெளியே எடுத்து யாரது என அதனிடம் கேட்டான். அந்த ஓணான் பழங்காலத்தில் பல வேள்விகளைச் செய்து புகழ்பெற்ற மன்னன் நிருகனின் ஆன்மாவைத் தான் கொண்டிருப்பதாக அந்த ஓணான் சொன்னான்.(7)
இச்சொற்களைச் சொன்ன அந்த ஓணானிடம் மாதவன், "நீ அறச்செயல்கள் பலவற்றைச் செய்திருக்கிறாய். நீ எப்பாவத்தையும் இழைக்கவில்லை. ஓ!மன்னா, உனக்கு ஏன் இந்தத் துன்பம் நிறைந்த கதி ஏற்பட்டது? இஃது ஏன்? எதனால் ஏற்பட்டது?(8) நூறும், ஆயிரமும், மீண்டும் நூறும், எண்ணூறும் பத்து லட்சமுமான பசுக்களை நீ கொடையளித்திருப்பதாக நாங்கள் கேட்டிருக்கிறோம். எனவே, இந்தக் கதி உனக்கு ஏன் ஏற்பட்டது?" என்று கேட்டான்.(9)
அப்போது நிருகன் கிருஷ்ணனிடம் மறுமொழியாக, "ஒருநாள், இல்லற நெருப்பை முறையாக வழிபட்டு வந்த ஒரு பிராமணருக்குச் சொந்தமான பசுவானது, உரிமையாளர் இல்லாதபோது அவரது வசிப்பிடத்தில் இருந்து தப்பி என் மந்தையில் நுழைந்துவிட்டது.(10) என்னுடைய மேய்ப்பர்கள் அந்தப் பசுவைத் தங்கள் ஆயிரம் பசுக்களையில் அதையும் சேர்த்துக் கொண்டனர். சமயத்தில், சொர்க்கத்தில் மகிழ்ச்சியை அடைய விரும்பி நான் அந்தப் பசுவை வேறொரு பிராமணருக்குக் கொடையளித்தேன்.(11) உண்னையான உரிமையாளர் வீடு திரும்பியதும், தொலைந்து போன தன் பசுவைத் தேடி இறுதியாக மற்றொருவருடைய வீட்டில் அதைக் கண்டடைந்தார். அவளைக் கண்டதும் அதன் உரிமையாளர், "இஃது என்னுடைய பசு" என்றார்.(12) மற்றொருவர் தன் கூற்றை ஆதரிக்கவும், அவ்விருவருக்குள்ளும் சச்சரவு எழுந்து இறுதியாகக் கோபத்துடன் என்னிடம் வந்தனர்.
அவர்களில் ஒருவர் என்னிடம், "இந்தப் பசுவை எனக்குக் கொடையளித்தவன் நீயே" என்றார். மற்றொருவர், "இந்தப் பசு என்னுடையவள், நீ அவளை என்னிடம் இருந்து களவு செய்துவிட்டாய்" என்றார்.(13)
நான் யாரிடம் பசுவைக் கொடுத்திருந்தேனோ அவரிடம் நூற்றுக்கணக்கான வேறு பசுக்களுக்கு மாற்றாக அந்தப் பசுவை வேண்டிக் கேட்டேன். ஆவல் நிறைந்த என் வேண்டுதலுக்கு இணங்காமல் அவர் என்னிடம்,(14) "நான் பெற்ற பசுவானவள் இடத்திற்கும் காலத்திற்கும் நன்கு பொருந்தியிருக்கிறாள். அவள் அமைதியானவளாகவும், எங்களை மிகவும் விரும்புபவளாகவும் இருப்பதையும் தவிர்த்து அபரிமிதமான பாலையும் தருகிறாள். அவள் தரும் பால் மிக இனிமையானதாக இருக்கிறது. அவள் என் வீட்டில் அனைத்துப் புகழுக்கும் தகுந்தவளாகக் கருதப்படுகிறாள்.(15) அதையும் தவிர, மெலிந்து பலவீனமாக இருக்கும் என் பிள்ளைக்கு அவளே உணவூட்டுக்கிறாள். என்னால் அவளைக் கொடுக்கவே இயலாது" என்றார். இச்சொற்களைச் சொல்லிவிட்டு அந்தப் பிராமணர் சென்று விட்டார்.(16)
பிறகு நான் அந்த மற்றொரு பிராமணரிடம் அவருக்கு ஒரு மாற்றைக் கொடுக்கும் வகையில், "இந்த ஒரு பசுவுக்குப் பதிலாக நூறாயிரம் பசுக்களைப் பெற்றுக் கொள்வீராக" என்றேன்.(17)
எனினும், அந்தப் பிராமணர் என்னிடம் மறுமொழியாக, "அரச வகையைச் சார்ந்தோரிடம் இருந்து நான் கொடைகளை ஏற்பதில்லை. ஆதரவில்லாமலே என்னால் செயல்பட இயலும். காலத்தைக் கடத்தாமல் என் பசுவையே எனக்குக் கொடுப்பாயாக" என்றார். ஓ! மதுசூதனா, இவ்வாறே அந்தப் பிராமணர் என்னிடம் பேசினார்.(18)
நான் அவருக்குப் பொன், வெள்ளி, குதிரைகள் மற்றும் தேர்களையும் கொடையாகக் கொடுக்க முன்வந்தேன். அந்த முதன்மையான பிராமணரோ அக்கொடைகள் எதையும் ஏற்க மறுத்துச் சென்றுவிட்டார்.(19) அதே வேளையில், தடுக்கப்படமுடியாத காலத்தின் ஆதிக்கத்தால் உந்தப்பட்டு நான் இவ்வுலகில் இருந்து சென்றேன். பித்ரு லோகத்திற்குச் சென்ற நான் அங்கிருந்து இறந்தோரின் மன்னனிடம் {யமனிடம்} அழைத்துச் செல்லப்பட்டேன்.(20)
என்னை முறையாக வழிபட்ட யமன், என்னிடம், "ஓ! மன்னா, உன் அறச்செயல்களின் கதியை உறுதிசெய்ய முடியவில்லை.(21) எனினும், ஒரு சிறிய பாவம் நீ அறியாமலேயே உன்னால் இழைக்கப்பட்டிருக்கிறது. அந்தப் பாவத்திற்கான தண்டனையை இப்போதோ, பிறகோ நீ விரும்பியவாறு அனுபவித்துக் கொள்வாயாக.(22) நீ (அரியணை ஏறியதும் சொந்த அனுபவம் கொண்ட அனைத்து மனிதர்களையும்) காப்பாய் என உறுதிமொழியேற்றாய். நீ கூறிய அந்த உறுதிமொழியானது உன்னால் கண்டிப்புடன் காக்கப்படவில்லை. நீ ஒரு பிராமணனுக்கு உரியதை அபகரித்தாய். இந்த இருவகைப் பாவத்தை நீ இழைத்திருக்கிறாய்" என்றான்.(23)
நான், "முதலில் தண்டனை எனும் துன்பத்தை நான் அனுபவிக்கப் போகிறேன், அது முடிந்ததும், ஓ! தலைவா, எனக்காகக் காத்திருக்கும் மகிழ்ச்சியை அனுபவிப்பேன்" என்றேன். நான் இச்சொற்களை இறந்தோரின் மன்னனிடம் {யமனிடம்} சொன்னதும் பூமியில் விழுந்தேன்.(24)
அவ்வாறு விழுந்தாலும், யமனால் உரக்கச் சொல்லப்பட்ட சொற்களை என் காதுகள் இன்னும் கேட்டுக் கொண்டிருக்கின்றன. அந்தச் சொற்கள், "வசுதேவனின் மகனான ஜனார்த்தனன் உன்னைக் காப்பான்.(25) ஓராயிரம் வருடங்கள் நிறைவடைந்ததும், உன் பாவச்செயலுக்கான தண்டனை தீரும்போது, உன் அறச்செயல்களின் மூலம் நீ ஈட்டிய வற்றாத இன்ப உலகங்கள் பலவற்றை நீ அடைவாய்" என்பதாகும்.(26)
தலைகீழே விழுந்த நான், இடைநிலை வகையைச் சார்ந்த ஓர் உயிரினமாக வடிவம் மாறி இந்தக் கிணற்றுக்குள் கிடப்பதைக் கண்டேன். எனினும் என் நினைவு என்னைவிட்ட அகலவில்லை.(27) இன்று உன் மூலமாக நான் மீட்கப்பட்டேன். உன் தவங்களின் பலத்தைத் தவிரச் சாட்சியங்கூறக் கூடியது வேறென்ன? ஓ! கிருஷ்ணா, உன் அனுமதியுடன் நான் விடைபெற வேண்டும். நான் சொர்க்கத்திற்கு உயர விரும்புகிறேன்" என்றான் {நிருகன்}.(28)
கிருஷ்ணனால் அனுமதிக்கப்பட்ட மன்னன் நிருகன், அவனைத் தலைவணங்கியபிறகு ஒரு தெய்வீகத் தேரில் ஏறிச் சொர்க்கத்திற்குச் சென்றான்.(29) ஓ! பாரதர்களில் சிறந்தவனே, நிருகன் இவ்வாறு சொர்க்கத்திற்குச் சென்ற பிறகு, ஓ! குருக்களைத் திளைக்கச் செய்பவனே, வாசுதேவன் இந்த ஸ்லோகத்தைச் சொன்னான்.(30) {அவன்}, "ஒரு பிராமணனுக்கு உரிய எதையும் எவனும் அறிந்தே அபகரிக்கக்கூடாது. ஒரு பிராமணனின் உடைமை அபகரிக்கப்பட்டால் அஃது அந்தப் பிராமணனின் பசு மன்னன் நிருகனை அழித்தது போலவே அவ்வாறு அபகரித்தவனை அழித்துவிடும்" {என்றான் கிருஷ்ணன்}.(31)
ஓ! பார்த்தா, நல்லோரைச் சந்திப்பது ஒருபோதும் கனியற்றுப் போகாது என்பதை நான் மீண்டும் உனக்குச் சொல்கிறேன். ஒரு நல்லோனைச் சந்தித்ததால் நரகத்தில் இருந்து மன்னன் நிருகன் மீட்கப்பட்டதைப் பார்.(32) ஒரு கொடையானது பலனை விளைவிப்பதைப் போலவே, ஒரு கொள்ளைச் செயலும் பாவத்திற்கே வழிவகுக்கிறது. எனவே, ஓ! யுதிஷ்டிரா, ஒருவன் பசுக்களுக்கு எத்தீங்கையும் இழைப்பதைத் தவிர்க்க வேண்டும்" என்றார் {பீஷ்மர்}.(33)
அநுசாஸனபர்வம் பகுதி – 70ல் உள்ள சுலோகங்கள் : 33
ஆங்கிலத்தில் | In English |