காதல்…. மயக்கம் தரும் ஒரு மந்திரச்சொல்?…. இது நம்மால் சரியாகத் தான் புரிந்து கொள்ளப்படுகிறதா? காதலைப் புரிந்து கொள்ள வேண்டியதல்ல, உணர்ந்து கொள்ள வேண்டும் என்றே சொல்லப்படுகிறது. உண்மையான காதலை உணர வேண்டுமா? உலகத்தின் ஒப்பற்ற காதல் கதையான “நளன் தமயந்தி” கதையைப் படியுங்கள்.
உலகத்தில் உள்ள பெரும்பாலான காதல் கதைளைப் படிக்கும்போது, திருமணம் செய்து கொள்ளப் போராடித் தோற்ற காதல் இணைகளையே நாம் காண முடியும். அந்த வகையில் நளன் தமயந்தி கதை, காதலை வேறு கோணத்தில் நமக்குச் சொல்கிறது.
ஒருவரை ஒருவர் காணாமல் காதலித்து, இடைஞ்சல்களுக்குப் பிறகு திருமணமும் செய்து கொண்டு, இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்து, காலத்தின் கோலத்தால் நாட்டையும், செழிப்பையும் இழந்து, காட்டுக்குத் துரத்தப்பட்டு, கணவன் மனைவி இருவரும் பிரிந்து, ஆளுக்கொரு திக்கு சென்று, தனித்தனியே அல்லல்பட்டு, ஒருவரை ஒருவர் காணாமல் வாடி, பிள்ளைகளை நினைத்து உருகி என அன்பையும் காதலையும் பின்னிப் பிணைந்து தன்னுள் கொண்டதுதான் இந்த "நளன் தமயந்தி" கதையாகும்.
மஹாபாரதத்தின் ஒரு துணைக் கதையான இது, பல மொழிகளிலும் பலவாறாக வழங்கப்பட்டு வருகிறது. வடமொழியில் “நைஷதம்” என்ற பெயரில், ஸ்ரீஹர்ஷர் என்பவரால் இக்கதை தனி நூலாகவே செய்யப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் புகழேந்திப் புலவரின் “நளவெண்பா” மிகப் புகழ்பெற்றதாகும். மேலும் வடமொழியில் வந்த ஸ்ரீஹர்ஷரின் “நைஷதம்” என்ற நூலைத் தழுவி, தமிழில் நைடதம் என்ற பெயரில் அதிவீரராம பாண்டியர் இயற்றியிருக்கிறார். மஹாபாரதத்தில் இல்லாத சில நுணுக்கமான தகவல்கள் நளவெண்பாவிலும், நைடதத்திலும் உள்ளன.
எனினும், மஹாபாரதமே இக்கதைக்கு மூலமென்பதால், நான் மொழிபெயர்த்துவரும் முழுமஹாபாரதத்தைவிட்டுப் பிறழாமல், அங்கு என்ன சொல்லப்பட்டுள்ளதோ அதை மட்டுமே எடுத்துக் கையாண்டிருக்கிறேன். தனிக்கதையாக இது தெரிய வேண்டும் என்ற காரணத்தால் பிருஹதஸ்வர், யுதிஷ்டிரன், பீமன் ஆகியோரது உரையாடல்களை மட்டும் இதில் நீக்கியிருக்கிறேன்.
மஹாபாரதத்தில் வனவாசம் செய்து கொண்டிருந்த யுதிஷ்டிரன், தான் சூதாடித்
தோற்று வனவாசம் அடைந்த கதையைத் தன் தம்பி பீமனிடம் சொல்லிப் புலம்பிக்
கொண்டிருந்தான். பீமன் அவனுக்கு ஆறுதல் கூறிக் கொண்டிருந்தான். அப்போது
அங்கு வந்த பிருஹதஸ்வர் முனிவரிடம், தன் நிலையைச் சொல்லிப் புலம்பிய
யுதிஷ்டிரன், அவரிடம், “முனிவரே, என்னை விடப் பரிதாபகரமான நிலையை இதற்கு
முன் வேறு எந்த மன்னனாவது அடைந்திருக்கிறானா?” என்று கேட்டான். அப்போது
பிருகதஸ்வர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னதே இந்த “நளன் தமயந்தி” கதையாகும்.
இக்கதையின் முடிவில், இதைப் படிப்பதனால் உண்டாகும் பலனை முன்னறிவிக்கிறார் பிருஹதஸ்வர். அது பின்வருமாறு..
நளனின் இந்த உயர்ந்த வரலாற்றைத் திரும்பத் திரும்பச் சொல்பவனையோ, அல்லது சொல்லும்போது கேட்பவனையோ, தீயூழ் {துரதிர்ஷ்டம்} எப்போதும் அணுகாது. இந்தப் பழைய அற்புதமான வரலாற்றைக் கேட்கும் ஒருவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், விலங்குகள், மனிதர்களில் உயர்ந்த இடம், ஆரோக்கியம், மகிழ்ச்சி ஆகியவற்றைப் பெறுவதோடு, சந்தேகமற, தனது எல்லாக் காரியங்களிலும் வெற்றியடைந்து, புகழடைவான்.
மேற்கண்ட பலன்களைக் கருதவில்லையெனினும், இக்கதையைப் படிப்போருக்கு எழும் எண்ணவோட்டங்கள் அவர்களது வாழ்க்கையைச் செம்மைப் படுத்தும் என்பதில் கிஞ்சிற்றும் ஐயமில்லை.
மஹாபாரதத்தில் இது போன்ற பல துணைக் கதைகள் உள்ளன. அவற்றையெல்லாம் எந்தக்
கருவியிலும் படிக்கும் வண்ணம் தனித்தனி மின்புத்தகங்களாக ஆக்க வேண்டும்
என்ற விருப்பத்தின் விளைவால், முதல் முயற்சியாக இந்த “நளன் தமயந்தி” கதையை
ஆண்டிராய்டு, கிண்டில், பிசி, மற்றும் நூக் கருவிகளில்
படிக்குமாறு EPUB, MOBI, PDF-A4, PDF-6" என்ற நான்கு வகைகளில்
மின்னூலாக்கியிருக்கிறேன்.
"நளன் தமயந்தி" கதையை மின்நூலாகப் பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
புது கிண்டில் கருவிகளில் படிக்க
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
அன்புடன்
செ.அருட்செல்வப்பேரரசன்
11.06.2015
திருவொற்றியூர்