Naga Vali Offering! | Anusasana-Parva-Section-132 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 132)
பதிவின் சுருக்கம் : நாகபலி காணிக்கையளிக்கும் முறைகளை ரேணுகன் என்ற யானைக்குச் சொன்ன திக்கஜங்கள்...
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஆதி தாமரையில் உதித்தவனும், (இனிமையிலும், நறுமணத்திலும்) தாமரைக்கே ஒப்பானவனுமான பெரும்பாட்டன் பிரம்மன், சச்சியின் தலைவனான வாசவனை {இந்திரனைத்} தங்கள் தலைமையில் கொண்ட தேவர்களிடம்,(1) "அதோ பாதாள லோகத்தில் வசிப்பவனான வலிமைமிக்க {யானையான} நாகன் அமர்ந்திருக்கிறான். பெரும் பலத்தையும், சக்தியையும், ஆற்றலையும் கொண்ட அவனது பெயர் ரேணுகன் ஆகும். நிச்சயம் அவன் பெரியவன் ஆவான்.(2) பெரும் சக்தியும், பலமும் கொண்டவையும், மலைகள், நீர்நிலைகள் மற்றும் தடாகங்களுடன் கூடிய மொத்த பூமியையும் தாங்கிக் கொண்டிருப்பவையும் வலிமைமிக்க யானைகளை {திக்கஜங்களை} உங்கள் வேண்டுகோளுக்கிணங்க இந்த ரேணுகன் பேட்டி காணட்டும். ரேணுகன் அவற்றிடம் சென்று அறம் அல்லது கடமையின் புதிர்களைக் குறித்து அவற்றிடம் கேட்கட்டும்" என்றான்.(3,4) பெரும்பாட்டனின் இச்சொற்களைக் கேட்ட தேவர்கள், தங்கள் மனங்களில் நிறைவடைந்தவர்களாக (யானையான) ரேணுகனை, அந்த உலகைத் தாங்கிப் பிடிப்பவையிடம் {திக் கஜங்களிடம்} அனுப்பினர்.(5)
அந்த யானைகள் இருந்த இடத்திற்குச் சென்ற ரேணுகன் அவற்றிடம் {யானைகளிடம்}, "வலிமைமிக்க உயிரினங்களே, அறம் மற்றும் கடமையின் புதிர்களைக் குறித்து உங்களிடம் கேட்குமாறு தேவர்கள் மற்றும் பித்ருகள் எனக்கு ஆணையிட்டுள்ளனர். நீங்கள் அவை குறித்து விரிவாகப் பேசுவதை நான் கேட்க விரும்புகிறேன். உயர்வாக அருளப்பட்டவர்களே, உங்கள் ஞானத்தின் ஆணைப்படி இக்காரியத்தைக் குறித்து நீங்கள் பேசுவீராக" என்றான் {நாகனான ரேணுகன் என்ற யானை}.(6)
எட்டுத் திக்குகளில் நிற்கும் (எட்டு) யானைகள், "கார்த்திகை மாதத் தேய்பிறையின் மங்கலமான எட்டாம் நாளில் {அஷ்டமியில்} அஸ்லேஷ {ஆயில்யம்} நட்சத்திரத்தில் ஒருவன் பாகு மற்றும் அரிசி கொடைகளை அளிக்க வேண்டும்.(7) கோபத்தை அடக்கி, முறையான உணவுத்திட்டத்திற்கு ஒழுங்கமைந்து வாழும் ஒருவன் ஒரு சிராத்தத்தில் பின்வரும் மந்திரங்களைச் சொல்லிக் கொண்டே இந்தக் காணிக்கைகளை அளிக்க வேண்டும். "பெரும் பலத்தைக் கொண்ட பலதேவனும் பிற நாகர்களும்,(8) அழிவற்ற, நித்தியமான பேருடல்படைத்த வலிமைமிக்கப் பாம்புகள் பிறவும், குலங்களில் பிறந்திருக்கும் வேறு பெரும் பாம்புகள் அனைத்தும்,(9) என் பலமும், சக்தியும் பெருகுவதற்காக எனக்குப் பலி காணிக்கைகளை அளிக்கட்டும். உண்மையில், என் பலமானது, மூழ்கிய பூமியை உயர்த்திய அருளப்பட்ட நாராயணனைப் போலப் பெரும்பலமாக அமையட்டும்" {என்ற மந்திரத்தைச் சொல்லிக் கொண்டே பாகு மற்றும் அரசிக் கொடைகளை அளிக்க வேண்டும்}.(10)
இந்த மந்திரங்களைச் சொல்லிக் கொண்டே அவன் ஓர் எறும்புப்புற்றில் பலி காணிக்கைகளை இட வேண்டும். நாள் சமைப்பவன் {சூரியன்}, மேற்கில் உள்ள தன் அறைகளுக்குள் ஓயச் செல்லும்போது அரிசி மற்றும் கச்சா சர்க்கரை {வெல்லமாக இருக்க வேண்டும்} ஆகியவற்றாலான காணிக்கைகளைத் தேர்ந்தெடுக்கப்பட்ட எறும்புப் புற்றுகளில் வைக்க வேண்டும்.(11) அதற்கு முன்பே அந்த எறும்புப்புற்றில் கஜேந்திர மலர்களைத் தூவ வேண்டும். நீலத் துணிகள் மற்றும் நறுமணக் களிம்புகளும் காணிக்கையளிக்கப்பட வேண்டும்.(12) இவ்வகையில் காணிக்கைகள் அளிக்கப்பட்டால் பாதாள லோகத்தில் வாழ்வோரும் {நாகர்களும்}[1], மேலுலகங்களின் கனத்தைத் தங்கள் தலைகளிலும், தோள்களிலும் தாங்கி நன்கு நிறைவடைகின்றனர். எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் இத்தகைய காணிக்கைகள் எங்களுக்கு அளிக்கப்பட்டதன் விளைவால் நாங்கள் பூமியைத் தாங்குவதில் எந்தக் களைப்பையும் அடையவில்லை.(13)
[1] கும்பகோணம் பதிப்பின் அடிக்குறிப்பில், "திக்கஜங்களும், ஆதிசேஷனும் பூமியைத் தாங்குவதனாலும், நாகம் என்னும் பெயர் ஸர்ப்பத்திற்கும், யானைக்கும் பொதுவாயிருத்தலாலும் இவ்வாறு சொல்லப்பட்டது" என்றிருக்கிறது.
சுமக்கும் சுமையால் பீடிக்கப்படும் நாங்கள், தன்னல நோக்கங்கள் கிஞ்சிற்றும் இன்றி (மனிதர்களின் நன்மைக்காக) இதையே சிந்திக்கிறோம். இந்த விதியை நோற்று ஒரு முழு வருடம் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் உண்ணா நோன்பிருக்கும் பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள், அத்தகைய கொடைகளின் மூலம் பெரும்பலன்களை அடைகிறார்கள்.(14) எறும்புப் புற்றில் இத்தகைய பலி காணிக்கைகளை அளிப்பது உண்மையில் மேன்மையான பலன்கள் நிறைந்தது என்று நாங்கள் நினைக்கிறோம்.(15) இத்தகைய காணிக்கைகளை அளிப்பதன் மூலம் ஒருவன், மூவுலகங்களில் உள்ள வலிமைமிக்க யானைகள் அனைத்திற்கும் நூறு வருடகாலம் விருந்தோம்பல் கடமைகளைச் செய்தவனாகக் கருதப்படுவான்" என்றன {திக்கஜங்கள்}.(16)
அந்த வலிமைமிக்க யானைகள் {திக்கஜங்கள்} சொன்ன இந்தச் சொற்களைக் கேட்ட தேவர்களும், பித்ருக்களும், உயர்வாக அருளப்பட்டவர்களான முனிவர்கள் அனைவரும் ரேணுகனை மெச்சினார்கள்" {என்றார் பீஷமர்}.(17)
அநுசாஸனபர்வம் பகுதி – 132ல் உள்ள சுலோகங்கள் : 17
ஆங்கிலத்தில் | In English |