Brahmanahood attained by King Vitahavya! | Anusasana-Parva-Section-30 | Mahabharata In Tamil
(அநுசாஸனிக பர்வம் {தான தர்ம பர்வம்} - 30)
பதிவின் சுருக்கம் : வத்ஸ நாட்டு மன்னன் வீதஹவ்யன் பிராமண நிலை அடைந்த வரலாறு; வத்ஸ நாட்டு வீதஹவ்யனின் முன்னோர்கள்; காசி நாட்டு பிரதர்த்தனனின் முன்னோர்கள்; இரு நாட்டுக்கும் இருந்த பகை; வத்ஸர்களால் பீடிக்கப்பட்ட காசி; வீதஹவ்யனை வீழ்த்திய பிரதர்த்தனன்; பிருகுவிடம் தஞ்சமடைந்த வீதஹவ்யன்; அவனைத் தேடி வந்த பிரதர்த்தனன்; வீதஹவ்யன் பிராமணனான பிறகு அவனுக்கு உண்டான வழித்தோன்றல்களின் பட்டியல்...
யுதிஷ்டிரன் {பீஷ்மரிடம்}, "ஓ! குரு குலத்தைத் தழைக்கச் செய்பவரே, இந்தக் கதையை நான் கேட்டிருக்கிறேன். ஓ! நாநயமிக்க மனிதர்களில் முதன்மையானவரே, பிராமண நிலையானது அடைவதற்கு மிக அரிதானது என்று நீர் சொல்கிறீர்.(1) எனினும், பழங்காலத்தில் விஷ்வாமித்திரரால் பிராமண நிலை அடையப்பட்டதாகக் கேள்விப்படுகிறோம். எனினும், ஓ! மனிதர்களில் சிறந்தவரே, அந்நிலை அடையப்பட இயலாதது என எங்களுக்கு நீர் சொல்கிறீர்.(2) பழங்காலத்தில் மன்னன் வீதஹவ்யன் பிராமண நிலையை அடைவதில் வென்றான் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஓ! பலமிக்கவரே, ஓ! கங்கையின் மைந்தரே, மன்னன் வீதஹவ்யன் மேன்மையடைந்த கதையை நான் கேட்க விரும்புகிறேன்.(3) அந்த மன்னர்களில் சிறந்தவன், பிராமண நிலை அடைவதில் எந்தச் செயல்களின் மூலம் வென்றான்? (பெரும்பலம் கொண்ட எவரிடம் இருந்தாவது அடையப்பட்ட) ஏதாவது வரத்தின் மூலமோ, தவ அறத்தின் மூலமோ அது நடந்ததா? அனைத்தையும் எனக்குச் சொல்வதே உமக்குத் தகும்" என்று கேட்டான்.(4)
பீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, "ஓ! ஏகாதிபதி, பெரும் புகழைக் கொண்ட அரசமுனி வீதஹவ்யன், அடைதற்கரிதானதும், உலகில் உள்ள அனைவராலும் உயர்வாக மதிக்கப்படுவதுமான பிராமண நிலையை அடைவதில் பழங்காலத்தில் வென்றான்.(5) பழங்காலத்தில் உயர் ஆன்ம மனு தன் குடிமக்களை நீதியுடன் ஆண்டுக் கொண்டிருந்த போது, அறம் சார்ந்த ஆன்மா கொண்டவனும், சர்யாதி என்ற பெயரில் கொண்டாடப்பட்டவனுமான ஒரு மகனை அடைந்தார்.(6) ஓ! ஏகாதிபதி அந்தச் சர்யாதியின் குலத்தில் ஹைஹயன் மற்றும் தாலஜங்கன் என்ற இரு மன்னர்கள் பிறந்தனர். ஓ! வெற்றிமிக்க மன்னர்களில் முதன்மையானவனே, அந்த இருவரும் வத்ஸ மகன்களாக {வத்ஸ நாட்டைச் சார்ந்தவர்களாக} இருந்தனர்[1]. ஓ! ஏகாதிபதி ஹைஹயனுக்குப் பத்து மனைவியர் இருந்தனர். ஓ! பாரதா, அவன் புறமுதுகிடாத வீரர்களான நூறு மகன்களை அவர்களிடம் {தன் மனைவிகளிடம்} பெற்றான்.(8) அவர்கள் அனைவரும் குணத்திலும் ஆற்றலிலும் ஒத்தவர்களாக இருந்தனர். அவர்கள் அனைவரும் பெரும்பலம் கொண்டவர்களாகவும், போரில் பெருந்திறம் பெற்றவர்களாகவும் இருந்தனர். அவர்கள் அனைவரும் வேதங்களையும், ஆயுத அறிவியலையும் முற்றாகக் கற்றனர்.(9)
[1] கும்பகோணம் பதிப்பில், "ப்ரஜைகளைத் தர்மமாகரக்ஷித்த மஹாத்மாவான மனுவுக்குச் சர்யாதியென்று பெயர் பெற்றவனும் தர்மத்தில் ஊக்கமுள்ளவனுமான ஒரு புத்ரன் இருந்தான். ஜயிப்பவரிற்சிறந்த அரசனே, அவன் வம்சத்தில் ஹைஹயன் தாலஜங்கனென்னும் இரண்டு அரசர்கள் வத்ஸ தேசத்திலிருந்தனர்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் கங்குலியில் உள்ளதைப் போன்றே இருக்கிறது.
ஓ! ஏகாதிபதி, காசியில் திவோதாசனின் பாட்டனான ஒரு மன்னன் இருந்தான். வெற்றிமிக்க மனிதர்களில் முதன்மையான அவன் ஹர்யஸ்வன் என்ற பெயரால் அறியப்பட்டான்[2]. ஓ! மனிதர்களின் தலைவா (வீதஹவ்யன் என்ற வேறு பெயரிலும் அறியப்பட்டிருந்த) மன்னன் ஹைஹயன், காசி நாட்டிற்கு எதிராகப் படையெடுத்து, கங்கை மற்றும் யமுனை ஆறுகளுக்கிடையில் கிடக்கும் அந்நாட்டிற்குச் சென்று மன்னன் ஹர்யஸ்வனுடன் போரிட்டு அவனைக் கொன்றான்.(11) இவ்வழியில் மன்னன் ஹர்யஸ்வனைக் கொன்ற பிறகு, பெரும் தேர்வீரர்களான ஹைஹயனின் மகன்கள் வத்சர்களின் நாட்டில் உள்ள இனிமையான தங்கள் நகரத்திற்கு அச்சமில்லாமல் திரும்பிச் சென்றனர்.(12) அதே வேளையில், காந்தியில் தேவனைப் போலத் தெரிபவனும், இரண்டாம் நீதிதேவன் போல இருந்தவனும், ஹர்யஸ்வதனின் மகனுமான சுதேவன், காசியின் அரியணையில் அதன் ஆட்சியாளனாக நிறுவப்பட்டான்.(13) காசிக்கு மகிழ்ச்சியை அளிப்பவனான அந்த அற ஆன்மா கொண்ட இளவரசன் தன் நாட்டைச் சில காலம் ஆண்டு வந்தான். அப்போது வீதஹவ்யனின் நூறு மகன்களும் மீண்டும் அவனது ஆட்சிப்பகுதிக்குள் படையெடுத்து வந்து, போரில் அவனை வீழ்த்தினார்கள்.(14)
[2] உத்யோக பர்வத்தின் 115ம் பகுதியில் ஹர்யஸ்வன் என்ற மன்னன் குறிப்பிடப்படுகிறான். இவன் அயோத்தியின் மன்னன் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறான். இந்தப் பகுதியில் குறிப்பிடப்படுபவனும், உத்யோக பர்வத்தில் குறிப்பிடப்படுபவனும் வெவ்வேறு நபர்களாக இருக்க வேண்டும். அதே போல உத்யோக பர்வம் 117ம் பகுதியில் திவோதாசன் என்ற மன்னன் குறிப்பிடப்படுகிறான். அவன் காசியின் மன்னனாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறான். எனவே இந்தப் பகுதியில் குறிப்பிடப்படும் திவோதாசனும், உத்யோக பர்வத்தில் குறிப்பிடப்படும் திவோதாசனும் ஒருவராகவே இருக்க வேண்டும்.
இவ்வாறு மன்னன் சுதேவனை வென்ற வெற்றியாளர்கள் தங்கள் சொந்த நகரத்திற்குத் திரும்பிச் சென்றனர். அதன் பிறகு, சுதேவனின் மகனான திவோதாசன் காசியின் அரியணையில் அதன் ஆட்சியாளனாக நிறுவப்பட்டான்.(15) வீதஹவ்யனின் மகன்களான அந்த உயர் ஆன்ம இளவரசர்களின் ஆற்றலை உணர்ந்தவனும், பெரும் சக்தி கொண்டவனுமான திவோதாசன், இந்திரனின் ஆணையின் பேரில் வாராணசி நகரத்தை மீண்டும் கட்டுமானம் செய்து அரணமைத்தான்[3].(16) திவோதாசனுடைய நாட்டின் எல்லைகளில் பிராமணர்களும், க்ஷத்திரியர்களும், வைசியர்களும், சூத்திரர்களும் நிறைந்திருந்தனர். அனைத்து வகைப் பொருட்களும், தனிவகைப் பொருட்களும் அங்கு நிறைந்திருந்தன. செழிப்பில் பெருகும் கடைகள் மற்றும் கடைவீதிகளால் அஃது அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஓ! மன்னர்களில் சிறந்தவனே, அந்த எல்லைகள் கங்கைக்கரையின் வடக்குப்புறத்தில் இருந்து கோமதியாற்றின் தென்கரை வரை பரந்திருந்தது. அது {அந்த வாராணஸி நகரமானது} (இந்திரனின் நகரமான அமராவதியைப் போல) இரண்டாம் அமராவதிக்கு {இரண்டாம் அமராவதி என்று சொல்வதற்கு} ஒப்பாக இருந்தது.(17,18) ஓ! பாரதா, அந்த மன்னர்களில் புலி {திவோதாசன்} தன் நாட்டை ஆண்டுக் கொண்டிருந்தபோது, மீண்டும் ஹைஹயர்கள் தாக்கினார்கள்.(19) வலிமைமிக்க மன்னனான திவோதாசன், தன் தலைநகரைவிட்டு வெளியே வந்து அவர்களுடன் போரிட்டான். பழங்காலத்தின் தேவாசுரப் போரைப் போல இரு தரப்புகளுக்குமிடையே நடந்த அந்தப் போர் மிகக் கடுமையானதாக இருந்தது.(20)
[3] பிரதர்த்தனன் பிறப்பு ஏற்கனவே உத்யோக பர்வம் பகுதி 117ல் சொல்லப்பட்டுள்ளது.
எதிரியுடன் ஆயிரம் நாட்கள் போரிட்ட மன்னன் திவோதாசன், இறுதியில் பெரும் எண்ணிக்கையிலான படைவீரர்களும், விலங்குகளும் கொல்லப்பட்ட பிறகு மிகவும் துன்பமடைந்தான்(21) ஓ! ஏகாதிபதி, தன் படையை இழந்த மன்னன் திவோதாசன், தன் கருவூலம் தீர்ந்துவிட்டதைக் கண்டு தன் தலைநகரைவிட்டுத் தப்பிச் சென்றான்.(22) ஓ! எதிரிகளைத் தண்டிப்பவனே, அந்த மன்னன், பெரும் ஞானியான பரத்வாஜரின் இனிய ஆசிரமத்திற்குச் சென்று, தன் கரங்களை மதிப்புடன் கூப்பிக் கொண்டு அம்முனிவரின் பாதுகாப்பை நாடினான்.(23)
பிருஹஸ்பதியின் மூத்த மகனும், ஒழுக்கச் சிறப்பைக் கொண்டவரும், மன்னன் திவோதாசனின் புரோகிதருமான பரத்வாஜர், தம் முன் இருக்கும் அந்த ஏகாதிபதியைக் கண்டு, அவனிடம்,(24) "நீ இங்கு வந்திருக்கும் காரணம் என்ன? ஓ! மன்னா, அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக. எந்தத் தயக்கமுமின்றி உனக்கு ஏற்புடையதை நான் செய்வேன்" என்றார்.(25)
மன்னன் {திவோதாசன்}, "ஓ! புனிதமானவரே, வீதஹவ்யனின் மகன்கள் என் வீட்டில் உள்ள பிள்ளைகள் மற்றும் மனிதர்கள் அனைவரையும் கொன்றுவிட்டனர். எதிரியால் முற்றிலும் உருக்குலைக்கப்பட்ட நான் மட்டுமே உயிரோடு தப்பி வந்தேன். நான் உமது பாதுகாப்பை நாடுகிறேன்.(26) ஓ! புனிதமானவரே, ஒரு சீடனைக் காப்பதைப் போல என்னைப் பாதுகாப்பதே உமக்குத் தகும். பாவச் செயல்களைச் செய்யும் அந்த இளவரசர்கள், என்னை மட்டுமே உயிருடன் விட்டுவிட்டு, என் குலம் மொத்தத்தையும் கொன்றுவிட்டனர்" என்றான்".(27)
பீஷ்மர் தொடர்ந்தார், "பெருஞ்சக்தியைக் கொண்ட பரத்வாஜர், தம்மிடம் பரிதாபகரமாக இரைஞ்சிக் கொண்டிருந்த அவனிடம் {திவோதாசனிடம்}, "அஞ்சாதே, ஓ! சுதேவன் மகனே, உன் அச்சங்கள் அகலட்டும். நீ ஆஞ்சாதே.(28) ஓ! ஏகாதிபதி, வீதஹவ்யன் தரப்பினரை ஆயிரமாயிரமாகத் தாக்கவல்ல ஒரு மகனை நீ பெறும் வகையில் நான் ஒரு வேள்வியைச் செய்யப் போகிறேன்" என்றார்.(29)
அதன்பிறகு திவோதாசனுக்கு ஒரு மகனைப் பெறும் நோக்கத்தில் அம்முனிவரால் ஒரு வேள்வி நடத்தப்பட்டது. அதன் விளைவாகத் திவோதாசனுக்குப் பிரதர்த்தனன் என்ற பெயரில் ஒரு மகன் பிறந்தான்[4].(30) அவன் பிறந்த உடனேயே பதிமூன்று வயது பாலகனாக வளர்ந்து, வேதங்களிலும், மொத்த ஆயுத அறிவியலிலும் விரைவாகத் திறம்பெற்றான்.(31) பெரும் நுண்ணறிவைக் கொண்ட பரத்வாஜர் தமது யோக சக்திகளின் துணையுடன் அந்த இளவரசனுக்குள் {பிரதர்த்தனனுக்குள்} நுழைந்தார். உண்மையில் பரத்வாஜர், அண்டத்தில் உள்ள பொருட்களின் சக்திகள் அனைத்தையும் திரட்டி அவற்றை, இளவரசன் பிரதர்த்தனனின் உடலுக்குள் நுழையச் செய்தார்.(32) ஒளிரும் கவசத்தைத் தன் மேனியில் பூட்டிக் கொண்டும், வில்லைத் தரித்துக் கொண்டும், வந்திகள் மற்றும் தெய்வீக முனிவர்களால் புகழப்பட்டும், உதிக்கும் சூரியனைப் போலப் பிரகாசமாக ஒளிர்ந்தான் பிரதர்த்தனன்.(33) கச்சையில் வாளைக் கட்டிக் கொண்டு தன் தேரில் ஏறிய அவன், சுடர்மிக்க நெருப்பைப் போல ஒளிர்ந்தான். வாள் மற்றும் கேடயத்துடனும், தன் கேடயத்தைச் சுழற்றிக் கொண்டும் அவன் தன் தந்தையிடம் {திவோதாசனிடம்} சென்றான்.(34) சுதேவனின் மகனான மன்னன் திவோதாசன், இளவரசனைக் கண்டு மகிழ்ச்சியால் நிறைந்தான். உண்மையில் அந்த முதிர்ந்த மன்னன், தன் எதிரியான வீதஹவ்யன் ஏற்கனவே இறந்துவிட்டதாக நினைத்தான்.(34)
[4] ஆதிபர்வம் பகுதி 92ல் யயாதியின் மகள் வயிற்றுப் பேரனாகக் குறிப்பிடப்படும் பிரதர்த்தனன் இவனே.
திவோதாசன் தன் மகன் பிரதர்த்தனனை யுவராஜனாக நிறுவி, வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டதாகக் கருதி பெரிதும் மகிழ்ச்சியடைந்தான்.(36) அதன் பிறகு அந்த முதிர்ந்த மன்னன், எதிரிகளைத் தண்டிப்பவனான இளவரசன் பிரதர்த்தனனிடம், வீதஹவ்யனின் மகன்களை எதிர்த்துச் சென்று போரில் அவர்களைக் கொல்லுமாறு ஆணையிட்டான்.(37) பேராற்றல்வாய்ந்தவனும், பகை நகரங்களை அடக்குபவனுமான பிரதர்த்தனன் தன் தேரில் கங்கையைக் கடந்து, வீதஹவ்யர்களின் நகரத்தை எதிர்த்துச் சென்றான்.(38) வீதஹவ்யனின் மகன்கள், அவனது தேரின் சக்கரங்கள் உண்டாக்கிய சடசடப்பொலியைக் கேட்டு, அரணமைக்கப்பட்ட மாளிகைகளைப் போலத் தெரிந்தவையும், பகை வாகனங்களை அழிக்கவல்லவையுமான தங்கள் தேர்களைச் செலுத்திக் கொண்டு, தங்கள் நகரத்தைவிட்டு வெளியே வந்தனர்.(39) மனிதர்களில் புலிகளும், கவசம்பூண்ட திறமிக்கப் போர்வீரர்களுமான வீதஹவ்யனின் மகன்கள் யாவரும், உயர்த்தப்பட்ட ஆயுதங்களுடன் பிரதர்த்தனனை நோக்கி விரைந்து, தங்கள் கணை மாரியால் அவனை மறைத்தனர்.(40)
ஓ! யுதிஷ்டிரா, எண்ணற்ற தேர்களில் சென்று பிரதர்த்தனனைச் சூழ்ந்து கொண்ட வீதஹவ்யர்கள், இமயச் சாரலில் மழைத்தாரையைப் பொழியும் மேகங்களைப் போலப் பல்வேறு ஆயுதங்களின் மழையை அவன் மீது பொழிந்தனர்.(41) வலிமையும், சக்தியும் கொண்ட பிரதர்த்தனன், அவர்களுடைய ஆயுதங்களைத் தனதால் கலங்கடித்து, இந்திரனின் இடிநெருப்புக்கு ஒப்பான கணைகளால் அவர்கள் அனைவரையும் கொன்றான்.(42) நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான அகன்ற தலைக் கணைகளால் {அர்த்தச்சந்திர பாணங்களால்} தலை துண்டிக்கப்பட்ட வீதஹவ்யனனின் போர்வீரர்கள், கோடரிகளுடன் கூடிய மரவெட்டிகளால் அனைத்துப் பக்கங்களிலும் வெட்டி வீழ்த்தப்படும் கின்சுக {பலாச} மலர்களைப் போலக் குருதியால் நனைந்த உடல்களுடன் கீழே விழுந்தனர்.(43) மன்னன் வீதஹவ்யன், தனது போர்வீரர்களும், மகன்கள் அனைவரும் போரில் வீழ்ந்த பிறகு, தன் தலைநகரில் இருந்து பிருகுவின் ஆசிரமத்திற்குத் தப்பிச் சென்றான்.(44) உண்மையில், அங்கே வந்த அந்த அரச அகதி, பிருகுவின் பாதுகாப்பை நாடினான். ஓ! ஏகாதிபதி, தோல்வியடைந்த மன்னனின் பாதுகாப்பை முனிவர் பிருகு உறுதி செய்தார்.(45)
பிரதர்த்தனன், வீதஹவ்யனின் பாதச்சுவடுகளைப் பின்தொடர்ந்து வந்தான். முனிவரின் ஆசிரமத்திற்கு வந்த திவோதாசன் மகன் {பிரதர்த்தனன்} உரத்த குரலில்,(46) "ஹோ... உள்ளே இருக்கும் உயர் ஆன்ம பிருகவின் சீடர்களே கேட்பீராக. நான் அந்த முனிவரைக் காண விரும்புகிறேன். அவரிடம் சென்று இதைத் தெரிவிப்பீராக" என்றான்.(47)
வந்திருப்பது பிரதர்த்தன் என்பதை அறிந்து கொண்ட முனிவர் பிருகு, தமது ஆசிரமத்தில் இருந்து வெளியே வந்து அந்த மன்னர்களில் சிறந்தவனை உரிய சடங்குகளுடன் வழிபட்டார்.(48) அவனிடம் பேசிய முனிவர், "ஓ! மன்னா, என்ன காரியம் என்று எனக்குச் சொல்வாயாக" என்று கேட்டார். இதனால் தான் வந்த காரணத்தை முனிவரிடம் சொன்னான் மன்னன்.(49)
மன்னன் (பிரதர்த்தனன்), "ஓ! பிராமணரே, மன்னன் வீதஹவ்யன் இங்கே வந்திருக்கிறான். அவனை என்னிடம் கொடுப்பீராக. ஓ! பிராமணரே, அவனது மகன்கள் என் குலத்தையே அழித்திருக்கின்றனர்.(50) காசியின் எல்லைகளும், செல்வமும் அவர்களால் வீணடிக்கப்பட்டன {அழிக்கப்பட்டன / அபகரிக்கப்பட்டன}. எனினும் வலிமையில் செருக்குற்றிருந்த இந்த மன்னனின் நூறு பிள்ளைகளும் என்னால் கொல்லப்பட்டனர்.(51) இந்த மன்னனை {வீதஹவ்யனைக்} கொல்வதன் மூலம் நான் என் தந்தைக்குப் பட்ட கடனை அடைத்தவனாவேன்" என்றான்.
நீதிமிக்க மனிதர்களில் முதன்மையானவரான முனிவர் பிருகு, கருணை கொண்டவராக அவனிடம்,(52) "இந்த ஆசிரமத்தில் எந்த க்ஷத்திரியனும் இல்லை. இங்கே இருப்பவர்கள் அனைவரும் பிராமணர்களே" என்றார்.
பிருகுவின் சொற்களைக் கேட்ட பிரதர்த்தனன்,(53) அஃதை உண்மையென்றெண்ணி, முனிவரின் பாதங்களைத் தொட்டு, மகிழ்ச்சியால் நிறைந்து, மெதுவாக மெதுவாக, "ஓ! புனிதமானவரே, என் ஆற்றலின் விளைவால் இந்த மன்னன் தன் பிறவி வகையையே இழந்திருப்பதனால் நான் வெற்றியால் மகுடம் சூட்டப்பட்டேன் என்பதில் ஐயமில்லை. ஓ!பிராமணரே, நான் விடைபெற்றுச் செல்ல அனுமதிப்பீராக, எனக்கான நன்மையை நான் உம்மிடம் வேண்டுகிறேன்.(55) ஓ! உமது பெயரால் ஒரு குலத்தை நிறுவியவரே, என் வலிமையால் இந்த மன்னன் தன் பிறவி வகையை இழந்திருக்கிறான்" என்றான்[5].
[5] கும்பகோணம் பதிப்பில், "ப்ருகுவின் இந்த உண்மையான சொல்லைக் கேட்டு ப்ரதர்த்தனன், ஸந்தோஷம் அடைந்து அவர் பாதங்களைப் பிடித்துக் கொண்டு மெதுவாக, ’பகவானே, இப்படிச் செய்து யான் க்ருதார்த்தனானேன்; ஸந்தேஹமில்லை. ஏனெனில், நான் என் பராக்ரமத்தினால், இந்த வீதஹவ்யராஜனைத் தன் ஜாதியை விடும்படி செய்தேன். ப்ராம்மணரே, எனக்கு விடைகொடும். எனக்கு க்ஷேமமுண்டாகும்படி நினைக்கடவீர். ப்ருகுவம்சத்தலைவரே, இவ்வரசன் தன் ஜாதியை என்னால் விடுவிக்கப்பட்டானல்லனோ?’ என்றான்" என்றிருக்கிறது.
முனிவர் பிருகுவால் விடைகொடுத்து அனுப்பப்பட்ட மன்னன் பிரதர்த்தனன் அந்த ஆசிரமத்தில் இருந்து வெளியேறி,(56) நஞ்சைக் கக்கும் பாம்பைப் போல நான் சொன்னது போலவே சொல்நஞ்சைக் கக்கிவிட்டு, தனது இடத்திற்குத் திரும்பிச் சென்றான். அதே வேளையில், மன்னன் வீதஹவ்யன், பிருகுவின் அறத்தகுதியால் மட்டுமே, மறுபிறப்பாள தவசி என்ற நிலையை அடைந்தான்.(57) மேலும், அதே காரணத்தின் மூலம் வேதங்கள் அனைத்தையும் முற்றாக அறிந்த நிலையையும் அடைந்தான்[6]. கிருத்சமதன் என்ற பெயரில் இரண்டாம் இந்திரனைப் போன்ற அழகுடன் வீதஹவ்யனுக்கு ஒரு மகன் இருந்தான்.(58) ஒரு காலத்தில் அவனே இந்திரன் என்று நினைத்த தைத்தியர்களால் அவன் பீடிக்கப்பட்டான். அந்த உயர் ஆன்ம முனியை {கிருத்சமதனைப்} பொறுத்தவரையில், "ஓ! பிராமணரே, எங்கே கிருத்சமதர் இருக்கிறாரோ, அங்கே உள்ள மறுபிறப்பாள மனிதர்கள் அனைவராலும் அவர் உயர்வாக மதிக்கப்பட்டார்" என்று ஸ்ருதிகளில் முதன்மையான ரிக்கில் {ரிக் வேதத்தில்} இருக்கிறது. பெரும் நுண்ணறிவைக் கொண்டவரான கிருத்சமதன் பிரம்மச்சரிய நோன்பை நோற்கும் மறுபிறப்பாள முனிவரானான்.(60)
[6] கும்பகோணம் பதிப்பில், "ப்ருகுவினால் விடைகொடுக்கப்பட்ட ப்ரதர்த்தனராஜன் விஷத்தைவிட்டுவிட்ட ஸர்ப்பம் போல வந்த வழியே சென்றான். மஹாராஜனே, அந்த வீதஹவ்யன், ப்ருகுவின் அந்தச் சொல் மாத்திரத்தினாலேயே ப்ரம்ம ரிஷியும் ப்ரம்மஜ்ஞானியுமானான்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில், "அவரது அனுமதியைப் பெற்றுக்கொண்ட மன்னன் பிரதர்த்தனன் நஞ்சகன்ற ஒரு பாம்பைப் போல, தான் எங்கிருந்து வந்தானோ அங்கேயே சென்றான். ஓ! பெரும் மன்னா, பிருகுவின் அந்தச் சொற்களால் மட்டுமே, வீதஹவ்யன் ஒரு பிரம்மரிஷியாகவும், பிரம்மத்தை அறிந்து கொள்ளக்கூடியவனாகவும் ஆனான்" என்றிருக்கிறது.
கிருத்சமதனுக்குச் சுதேஜஸ் {ஸாவைநஸன்} என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான். சுதேஜஸுக்கு வர்ச்சஸ் {விதஸ்த்யன்} என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான். வர்ச்சஸின் மகன் விஹவ்யன் {சிவஸ்தன்} என்ற பெயரில் அறியப்பட்டான்.(61) விஹவ்யன் தன் மடியில் பிறந்த மகனாக விதத்யன் என்ற பெயரில் ஒருவனைக் கொண்டிருந்தான். விதத்யன் சத்யன் என்ற பெயரில் மகனைக் கொண்டிருந்தான். சத்யன் சந்தன் என்ற பெயரில் ஒரு மகனைக் கொண்டிருந்தான். சந்தன் முனிவர் சிரவஸை மகனாகக் கொண்டிருந்தான். சிரவஸுக்கு தமன் {தமஸ்} என்ற பெயரில் ஒரு மகன் இருந்தான். தமன், மிக மேன்மையான பிராமணனும், பிரகாசன் என்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு மகனைக் கொண்டிருந்தான்.(63) பிரகாசன், புனித மந்திரங்களை அமைதியாகச் சொல்பவர்கள் அனைவரிலும் முதன்மையானவனும், வாகிந்திரன் என்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு மகனைக் கொண்டிருந்தான். வாகிந்திரன், வேதங்கள் மற்றும் அதன் அங்கங்கள் அனைத்திலும் முற்றிலும் திறன் பெற்றிருந்தவனும், பிரமதி என்ற பெயரைக் கொண்டவனுமான ஒரு மகனைப் பெற்றிருந்தான். பிரமதி, அப்சரஸ் கிருதாசியிடம் ருரு என்ற பெயரில் ஒரு மகனைப் பெற்றான். ருரு தன் மனைவியான பிரம்மத்வரையிடம் ஒரு மகனைப் பெற்றான்[7]. அந்த மகன் மறுபிறப்பாள முனிவரான சுனகராவார். சுனகர், சௌனகர் என்ற பெயரில் ஒரு மகனைப் பெற்றார்.(65) ஓ! ஏகாதிபதிகளில் முதன்மையானவனே, இவ்வாறே, க்ஷத்திரியர்களின் தலைவா, மன்னன் வீதஹவ்யன் தன் பிறப்பின் வகையால் {வர்ணத்தால்} ஒரு க்ஷத்திரியனாக இருந்தாலும், பிருகுவுடைய அருளின் மூலம் பிராமண நிலையை அடைந்தான்.(66) அவனது மகனான கிருத்சமதனிடம் இருந்து உதித்த குலத்தின் பரம்பரைப் பட்டியலையும் நான் உனக்குச் சொல்லிவிட்டேன். வேறென்ன கேட்கப் போகிறாய்?"[8] என்றார் {பீஷ்மர்}.(67)
[7] ருரு பிரம்மத்வரை கதை ஆதிபர்வம் பகுதி 8ல் ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது.[8] இந்தப் பட்டியலில் சௌனகருடைய பெயரும் வருகிறது. மஹாபாரதம் நடந்து முடிந்து, நாலாம் தலைமுறையில் அர்ஜுனனுடைய பேரனின் மகன் ஜனமேஜயனின் காலத்தில் வாழ்பவர் இந்தச் சௌனகர். நாம் இன்று படித்துவரும் இந்த மஹாபாரதம் இங்கே குறிப்பிடப்படும் சௌனகருக்கே சூத முனிவரான சௌதியினால் சொல்லப்பட்டது. சௌனகரின் பெயர் இங்கே குறிப்பிடப்படுவதால் இந்தப் பகுதியில் 61 முதல் 67ம் ஸ்லோகம் வரையுள்ள பகுதி வைசம்பாயனராலோ, சௌதியினாலோ சொல்லப்பட்டிருக்க வேண்டும்.
அநுசாஸனபர்வம் பகுதி – 30ல் உள்ள சுலோகங்கள் : 67
ஆங்கிலத்தில் | In English |