http://venmurasu.in/2014/01/10/நூல்-ஒன்று-முதற்கனல்-10/
இந்தப் பகுதியில் காசி மன்னன் செய்யும் திருமண ஏற்பாடு சொல்லப்படுகிறது. அம்பையின் கதை முன்னோட்டமாக சிவன் சதி தட்சன் கதை மறுவாசிப்பு செய்யப்படுகிறது.
*********************************************************************************
எரியிதழ்-1 | முதற்கனல்-10 முழு மஹாபாரதத்தில் கடந்து செல்லும் பதிவுகள்...
காசியில் நடந்த சுயம்வரம் | ஆதிபர்வம் - பகுதி 102 - http://mahabharatham.arasan.info/2013/05/Mahabharatha-Adiparva-Section102.html
*********************************************************************************
நமது கருத்து:
சக்தியை எரித்த சிவனின் கதையை எடுத்துக் கொண்டு சிவனின் கோபத்திற்கு இதில் நல்ல நியாயம் கற்பிக்கப்படுகிறது என்று நினைக்கிறேன். மேலும் அவளை சிவன் எரிக்கவில்லை, நாரதர் சொல்லி சதிதேவி தட்சனின் வேள்வி நெருப்பில் விழுந்தாள் என்று சொல்வதும் வித்தியாசமாக, ஆனால் அதேசமயம் அழகாகவும் சாத்திரத்திற்கு நியாயம் கற்பிக்கும் வகையிலும் இருக்கிறது.
//நூற்றெட்டு சைவர்களும் பதினெட்டு சாக்தர்களும் ஒன்பது வைணவர்களும் என தாந்திரீகர்கள் கண்சிவக்க உடல்நிமிர்த்தி காலடிகள் அதிர நடந்தனர்.// இந்த வரி, அந்தக்காலத்தில் காசி நகரத்தில் இந்த மூன்று மதத்தினரும் என்ன விகிதங்களில் இருந்தனர் என்பதைக் குறியீடாகச் சொல்வதாக நினைக்கிறேன்.
//பீமதேவன் பெருமூச்சுடன் அமைதியானார். “இன்று சதுர்த்தி….சூதர்கள் அகல்விழி அன்னையின் கதைகளைச் சொல்லிவருகையில் இன்று வந்தது தாட்சாயணியின் கதை” என்றார் சிற்பி. மேலும் ஏதோ சொல்லவந்தபின் சொல்லாமல் திரும்பி பந்தலுக்குள் நுழைந்தார்.//அம்பையின் குறியீடாக இந்தக் கதைச் சொல்லப்பட்டதாக நினைக்கிறேன். சதி தேவியின் கதையும் அம்பையின் கதையும் ஒரே மாதிரி இருப்பது போல ஆசிரியர் வடித்துக் கொள்கிறார்.
நான் ரசித்த வரிகள்
* முக்குணங்களும் காசிமன்னனிடம் மூன்று மகள்களாகப் பிறந்திருக்கின்றன என்றனர் நிமித்திகர்கள்.
* ஏழுலகங்களையும் எரித்தழித்தபின் தன்னையும் அழித்துக்கொள்ளும் கடும் விஷம் வாழும் வெண்பற்கள் கொண்டவன். எங்கும் உறைபவன். அனைத்தையும் இயக்குபவன். என்றுமழியாதவன். அவன் வாழ்க!
* பெண்ணழகையும் பொருளழகையும் தேவர்களின் அழகையும் அவளழகு வழியாகவே அவன் அளந்தான். தெய்வங்களை அவள் வழியாகவே அவன் வணங்கினான்.
* அவள் தவம் முதிர்ந்தபோது வெள்ளெருதுக்குமேல் பினாகமும் தமருகமும் மானும் மழுவுமாக சிவன் தோன்றி செந்நெருப்பு எழுந்த அங்கை நீட்டி அவள் கைப்பிடித்து காந்தருவமணம்கொண்டு கையாலயத்துக்கு அழைத்துச்சென்றான். நீலவிடம்கொண்ட அவன் கழுத்தழகில் அவள் காலங்கள் மறைந்து காதல்கொண்டாள்.
* புடவியெனும் தாமரையில் முடிவில்லாமல் இதழ்விரிந்துகொண்டிருக்கும் அத்தனை உலகங்களிலும் உள்ள அனைத்து பிரம்மன்களுக்கும் அவியளிக்கப்பட்டது. அவ்வுலகங்களையெல்லாம் காக்கும் விஷ்ணுவுக்கும் அவியளிக்கப்பட்டது. தட்சனின் ஆணைப்படி சிவனுக்கு மட்டும் அவியளிக்கப்படவில்லை.
* களத்தில் நான் தோற்கவில்லை, உன் மேல் கொண்ட அன்பினால் தோற்றேன்” என்று தட்சன் ஆயிரம் தலைகளால் படமெடுத்து சீறினான்.
* “நாம் விதியை கணிக்காமலிருப்பதல்லவா நல்லது அரசே? வேள்விக்கு எனில் ஆதிதெய்விகம் ஆதிபௌதிகம் என இருவகைத் தடைகள் உள்ளன. ஆதிதெய்வீகத்தின் தடைகளை மட்டுமே நாம் வேள்வியில் கணிக்கிறோம். ஆதிபெளதிகத்தை கணிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது” என்றார் ஃபால்குனர்.
* “அகண்டகாலம் நோக்கித் திறக்கும் கண்கள் கொண்டவர்கள் ஞானியர். அவர்களுக்கு அண்டம் என்பது ஒற்றைப்பெருநிகழ்வு மட்டுமே. அதன் அனைத்தும் அனைத்துடனும் இணைந்துள்ளன. அனைத்தும் அனைத்தையும் சுட்டிக்கொண்டிருக்கின்றன.”
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.