Nala, the superintendent of stables | Vana Parva - Section 67 | Mahabharata In Tamil
(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)
பாம்பு கார்க்கோடகன் மறைந்த பிறகு நளன் அயோத்தி செல்வது; ரிதுபர்ணனின் கொட்டில் (லாயம்) கண்காணிப்பாளன் ஆனது; வார்ஷ்ணேயன் மற்றும் ஜீவலன் என்ற நண்பர்களை அடைந்தது; தனது மனைவி தமயந்தியை நினைத்துப் புலம்பியது…
பிருகதஸ்வர் சொன்னார், "பிறகு அந்தப் பாம்பு {கார்க்கோடன்} மறைந்ததும், நிஷாதர்களின் ஆட்சியாளனான நளன், அன்றிலிருந்து பத்தாம் நாளில் ரிதுபர்ணனின் நகரத்திற்குள் {அயோத்திக்குள்} நுழைந்தான். பிறகு அவன் {நளன்} மன்னனை {ரிதுபர்ணனை} அணுகி, "எனது பெயர் பாகுகன். இந்த உலகத்தில் குதிரைகளை நிர்வகிப்பதில் எனக்கு இணை யாரும் இல்லை. அனைத்து காரியங்களிலும் நிபுணத்துவம் பெற்ற என்னிடம் கடினமான விஷயங்கள் குறித்த ஆலோசனைக்கும் நாடலாம். சமையற்கலையிலும் நான் அனைவரையும் விஞ்சி இருக்கிறேன். கடினமான அனைத்து சாதனைகளிலும், இந்த உலகத்தில் உள்ள அனைத்து கலைகளிலும் வெற்றியடைய நான் முயல்கிறேன். ஓ ரிதுபர்ணரே, என்னை நீர் ஆதரிக்கலாமே!" என்று கேட்டான் {நளன்}.
அதற்கு ரிதுபர்ணன், "ஓ பாகுகா என்னுடன் வசிப்பாயாக. உனக்கு நன்மை ஏற்படட்டும். நீ சொன்ன அனைத்தையும் நீ செய்வாய். குறிப்பாக, எனக்கு எப்போதுமே விரைவாக {பயணம்} செல்வதில் விருப்பம் உண்டு. எனது குதிரைகள் விரைவாகச் செல்ல தக்க நடவடிக்கைகள் எடு. நான் உன்னை கொட்டில்களின் {லாயங்களின்} கண்காணிப்பாளனாக நியமிக்கிறேன். நான் உனக்கு பத்தாயிரம் {10000} (பொன் அல்லது நாணயம்) ஊதியமாகக் கொடுப்பேன். வார்ஷ்ணேயன், ஜீவலன் ஆகிய இருவரும் எப்போதும் உனது கட்டளைப்படியே நடப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து நீ மகிழ்ச்சியாக வாழ்வாய். ஆகையால், ஓ பாகுகா, நீ என்னிடம் வசித்துக் கொள்" என்று மறுமொழி கூறினான் {அயோத்தி மன்னன் ரிதுபர்ணன்}.
பிருகதஸ்வர் தொடர்ந்தார், "இப்படி மன்னனால் சொல்லப்பட்ட நளன், வார்ஷ்ணேயனையும், ஜீவலனையும் துணையாகக் கொண்டு, மரியாதையுடன் நடத்தப்பட்டு, ரிதுபர்ணனின் நகரத்திலேயே {அயோத்தியிலேயே} வசிக்க ஆரம்பித்தான். அந்த மன்னன் {நளன்} அங்கேயே வசித்துக் கொண்டு, விதரப்ப்பத்தின் இளவரசியை {தமயந்தியை} நினைவுகூர்ந்து, எல்லா மாலை நேரங்களிலும் பின்வரும் ஸ்லோகத்தை உரைத்தான். அதாவது, "கதியற்று, பசி மற்றும் தாகத்தால் பீடிக்கப்பட்டு, களைத்துப் போய் அந்த இழிந்தவனை {என்னை} நினைத்து எங்கு படுத்திருக்கிறாளோ? இப்போது யாருக்காக {வேலை செய்யக்} காத்திருக்கிறாளோ?" என்று சொன்னான் {என்ற பொருள் கொண்ட சுலோகத்தைச் சொன்னான்}. ஒருமுறை இரவில், அவன் அந்தச் சுலோகத்தை இப்படிச் சொல்லிக் கொண்டிருந்த போது, ஜீவலன், "ஓ பாகுகா, நீ தினமும் யாருக்காகப் புலம்புகிறாய்? நான் அதைக் கேட்க ஆவலாக இருக்கிறேன். ஓ நீண்ட ஆயுள் அருளப்பட்டவனே, நீ யாருக்காகப் புலம்புகிறாயோ, அவள் யாருடைய மனைவி?" என்று கேட்டான்.
இப்படிக் கேட்கப்பட்ட அந்த மன்னன் நளன், "புத்தியற்ற குறிப்பிட்ட ஒருவனுக்கு, அனைவராலும் நன்கு அறியப்பட்ட ஒரு மனைவி இருந்தாள். அந்த இழிந்தவன் தனது சத்தியங்களைப் பொய்யாக்கினான். ஏதோ காரணத்திற்காக அந்தத் தீய மனிதன் அவளிடம் இருந்து பிரிந்தான். அவளிடம் இருந்து பிரிந்த பிறகு, அந்த இழிந்தவன் ஊரெல்லாம் சுற்றி துயரத்துடனும், துன்பத்தில் எரிந்தும் இரவும் பகலும் ஓயாதிருந்தான். இரவில் அவளைக் குறித்து அவன் நினைத்து, இந்த சுலோகத்தைப் பாடுகிறான். இந்தத் துயரங்களுக்குத் தகுதியில்லாத அவன், உலகம் முழுவதும் சுற்றி, கடைசியாக ஒரு புகலிடத்தை அடைந்து, தனது நாட்களைக் கடத்தி, தனது மனைவியை நினைத்துக் கொண்டிருக்கிறான்.
இந்த மனிதனுக்குப் பேரிடர் சம்பவித்தபோது, அவனது மனைவி அவனுடன் காட்டுக்குத் தொடர்ந்து வந்தாள். அற்ப அறம் கொண்ட அவனால் கைவிடப்பட்ட அவளது உயிர் கூட ஆபத்தில் இருக்கிறது. தனியாக, வழிகளைப் பற்றிய ஞானம் இல்லாமல், தாங்க முடியாத துன்பத்தோடு, பசியாலும் தாகத்தாலும் களைப்படைந்த ஒரு பெண்ணால், தனது உயிரைக் காத்துக்கொள்ள முடியாது. ஓ நண்பா, அதிர்ஷ்டமற்ற, புத்தியற்ற அவனால், இரைதேடும் விலங்குகள் நிறைந்த, அகன்ற, பயங்கரமான கானகத்தில் அவள் கைவிடப்பட்டாள்" என்றான் {நளன் }.
இப்படி தமயந்தியை நினைவுகூர்ந்த நிஷாதர்களின் மன்னன் {நளன்}, யாரும் அறியாதவாறு, அந்த ஏகாதிபதியின் {ரிதுபர்ணனின்} வசிப்பிடத்தில் தொடர்ந்து வசிக்கலானான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.