Karkodaka bit Nala | Vana Parva - Section 66 | Mahabharata In Tamil
(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)
தமயந்தியைக் கைவிட்டு வந்த நளன் ஒரு பெரும் காட்டுத் தீயைக் காண்பது; அந்தக் காட்டுத் தீயில் அகப்பட்ட கார்க்கோடகன் என்ற பாம்பை மீட்பது; அந்தப் பாம்பு கடித்ததால் நளன் தனது சுய உருவத்தை இழந்தது;
பிருகதஸ்வர் {Vrihadaswa} சொன்னார், "ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, {தமயந்தியைக்} கைவிட்டு சென்ற நளன், அந்த அடர்ந்த காட்டில் பொங்கி எழும் காட்டுத்தீயைக் கண்டான். அந்தக் காட்டுத்தீக்கு மத்தியில் இருந்து ஏதோ ஒரு உயிரினம், "ஓ நீதிமானான நளனே, இங்கே வா" என்று திரும்பத் திரும்பக் கதறும் ஒலியைக் கேட்டான். அதற்கு மறுமொழியாக "அஞ்ச வேண்டாம்" என்று சொல்லி, அந்த நெருப்புக்கு மத்தியில் நுழைந்து ஒரு பெரும் நாகம் சுருண்டு படுத்திருப்பதைக் கண்டான். அந்த நாகமும் தனது கரங்களைக் கூப்பி, நடுங்கிக் கொண்டே நளனிடம், "ஓ மன்னா, நான் கார்க்கோடகன் என்ற பெயர் கொண்ட பாம்பு. நான் உயர்ந்த துறவுத்தகுதியைப் பெற்ற நாரதப் பெருமுனிவரை ஏமாற்றினேன். அதனால் அவர் என்னை கோபத்தால் சபித்துவிட்டார். ஓ மனிதர்களின் மன்னா {நளனே}, அவர் என்னை, "நளன் வந்து உன்னை எடுக்கும் வரை இங்கேயே அசையாதிருப்பாய். அவன் உன்னை வேறு இடத்திற்கு எடுத்துச் செல்வான். அதன் பிறகு நீ இந்த சாபத்தில் இருந்து விடுபடுவாய்" என்றார்.
அதன்காரணமாகவே நான் ஒரு அடியும் எடுத்து வைக்க முடியாதவனாக இருக்கிறேன். உன் காரியமாக உனக்கு நன்மையானதைச் சொல்வேன். என்னைக் காப்பாற்றுவதே உனக்குத் தகும். நான் உனது நண்பனாக இருப்பேன். எனக்குச் சமமான எந்தப் பாம்பும் கிடையாது. நான் உனது கைகளில் பாரமில்லாதவாறு இருப்பேன். என்னை எடுத்துக் கொண்டு, இங்கிருந்து வேகமாகச் செல்" என்றான் {கார்க்கோடகன்}.
இதைச் சொன்ன அந்தப் பாம்புகளின் இளவரசன் {கார்கோடன்}, கட்டைவிரல் அளவு சிறியதானான். அவனைத் தனது கைகளில் எடுத்துக் கொண்ட நளன், நெருப்பில்லாத இடத்திற்கு சென்றான். நெருப்பில்லாத திறந்த வெளிக்கு வந்ததும் நின்று அந்தப் பாம்பைக் கீழே விட எண்ணினான் நளன். அப்போது கார்க்கோடகன், "ஓ நிஷாதர்களின் மன்னா, உனது பாத எட்டுகளை எண்ணிக் கொண்டே இன்னும் முன்னேறு. அதே வேளையில் நான் உனக்கு ஒரு நல்லதைச் செய்கிறேன்" என்றான். நளன் தனது எட்டுகளை எண்ணினான், பத்தாவது எட்டு எடுத்து வைக்கும்போது அந்தப் பாம்பு அவனைக் {நளனைக்} கடித்தான். அப்படி கடிபட்டதும் அவனது {நளனின்} உருவம் விரைவாக மாற்றம் கண்டது. தனது உருவம் மாறுவதைக் கண்ட நளன் ஆச்சரியம் அடைந்தான். அந்தப் பாம்பு சொந்த உருவத்தை அடைவதையும் அந்த மன்னன் {நளன்} கண்டான்.
அந்தக் கார்க்கோடகன் என்ற பாம்பு, நளனுக்கு ஆறுதல் சொல்லும் வகையில், "மக்கள் உன்னை அடையாளம் காணாதவாறு, நான் உனது அழகை இழக்கச் செய்திருக்கிறேன். ஓ நளனே, யாரால் வஞ்சிக்கப்பட்டு இந்தத் துயரத்தை நீ அடைந்தாயோ, அவன் {கலி} எனது விஷத்தால் சித்திரவதை செய்யப்பட்டு உன்னுள் வசித்திருப்பான். ஓ ஏகாதிபதி {நளனே}, அவன் உன்னை விட்டுப் போகாத வரை, உனது உடலில் இருந்து, உனது அங்கங்கள் அனைத்திலும் இருக்கும் எனது விஷத்தால் வலியை உணர்வான். ஓ மனிதர்களின் ஆட்சியாளனே {நளனே}, நீ அப்பாவியாக இருந்தும், தீமைக்குத் தகுதியில்லாதவனாக இருந்தும், உன் மேலுள்ள கோபத்தாலும், வெறுப்பாலும் உன்னை வஞ்சித்தவனிடம் {கலியிடம்} இருந்து நான் உன்னைக் காத்திருக்கிறேன். ஓ மனிதப் புலியே, ஒ மன்னா {நளனே}, எனது அருளால், இனி நீ எந்த மிருகங்களுக்கும், எதிரிகளின் கோரைப் பற்களுக்கும், வேதங்களை அறிந்த அந்தணர்களுக்கும் அஞ்சத்தேவையில்லை. ஓ ஏகாதிபதியே {நளனே}, எனது விஷத்தாலும் நீ வலியை உணர மாட்டாய்.
மேலும், ஓ மன்னர்களில் முதன்மையானவனே {நளனே}, நீ எப்போதும் போர்க்களத்தில் வெற்றிவாகை சூடுபவனாக இருப்பாய். ஓ இளவரசனே {நளனே}, ஓ நிஷாதர்களின் தலைவனே {நளனே}, இந்த நாளே நீ காண்பதற்கினிய நகரமான அயோத்தியாவுக்குச் சென்று, சூதில் நிபுணனான ரிதுபர்ணன் முன்பு நின்று, "நான் ஒரு தேரோட்டி. எனது பெயர் பாகுகன்" என்று சொல். குதிரைகளைக் குறித்த உனது ஞானத்திற்காக அந்த மன்னன் {ரிதுபர்ணன்} உனக்கு பகடையில் நிபுணத்துவம் கொடுப்பான். இக்ஷவாகு குலத்தில் பிறந்து செழிப்புடன் இருக்கும் அவன் உனக்கு நண்பனாவான். நீ பகடையில் நிபுணனான பிறகு, நீ செழிப்பை அடைவாய். நீ உனது மனைவியையும் குழந்தைகளையும், உனது நாட்டையும் அடைவாய். இதையெல்லாம் உனக்கு உண்மையாகவே சொல்கிறேன். ஆகையால், உனது மனம் கவலை கொள்ளாதிருக்கட்டும். ஓ மனிதர்களின் தலைவா {நளனே}, நீ உனது சரியான உருவத்தைக் காண விரும்பும்போது, என்னை நினைவுகூர்ந்து இந்த ஆடையை அணிந்து கொள். இதை நீ அணிவதால் சுய உருவைத் திரும்பப் பெறுவாய்" என்று சொன்னான் {கார்க்கோடகன்}. இதைச் சொல்லிய அந்த நாகன் {கார்கோடன்} நளனிடம் இரண்டு தெய்வீக ஆடைகளைக் கொடுத்தான். ஓ குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரா}, இப்படி நளனிடம் சொல்லி அவனுக்கு ஆடையைக் கொடுத்த பாம்புகளின் மன்னன் {கார்க்கோடன்}, ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அப்போதே அந்த இடத்திலேயே தன்னைத்தானே அரூபமாக்கிக் {கண்ணுக்குப் புலப்படாதவனாக்கிக்} கொண்டான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.