The sons of Parikshit and Vamadeva! | Vana Parva - Section 191b | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
பரிக்ஷித்தின் மகனான சலன் வாமதேவரிடம் இரண்டு வாமிக் குதிரைகளைப் பெறுவது; சலன் அக்குதிரைகளை மீண்டும் வாமதேவரிடம் கொடுக்க மறுப்பது; வாமதேவர் சலனை நான் ராட்சசர்கள் மூலம் கொல்வது; சலனின் தம்பி தளன் மன்னனாவது; அவனும் குதிரைகளைக் கொடுக்காமல் வாமதேவரிடம் மோதுவது; வாமதேவர் அவனைச் செயல்பட விடாமல் தடுத்தது; ராணி பெற்ற வரம்...
சில காலம் கழித்து அம்மன்னன் {பரிக்ஷித்} மூன்று மகன்களை அவளிடம் {தவளை இளவரசியிடம்} பெற்றான். அவர்களுக்குச் சலன், தளன், பலன் பெயரிட்டான். அதற்குச் சில காலம் கழித்து அவர்களது தந்தை {பரிக்ஷித்} மூத்தவனை {சலனை} அரியணையில் அமர்த்தி விட்டு, இதயத்தைத் தவத்தில் நிறுத்தி, கானகத்தில் ஓய்ந்தான். ஒரு நாள் சலன் வேட்டையாடச் சென்ற போது, ஒரு மானைக் கண்டு, தனது தேரில் அதைத் தொடர்ந்து சென்றான். அந்த இளவரசன் {சலன்} தனது தேரோட்டியிடம், "விரைவாக ஓட்டு" என்றான். இப்படிச் சொல்லப்பட்ட அந்தத் தேரோட்டி, மன்னனிடம் {சலனிடம்}, "இக்காரியத்தில் ஊக்கமடையாதீர். இந்த மான் உம்மால் பிடிக்கத்தக்கது அல்ல. உண்மையில் வாமி குதிரைகள் உமது தேரில் பூட்டப்பட்டிருந்தால் உம்மால் அந்த மானைப் பிடிக்க இயலும்" என்றான். அதன்பேரில் மன்னன் {சலன்} தனது தேரோட்டியிடம், "வாமி குதிரைகளைக் குறித்து எனக்குச் சொல், இல்லையென்றால் நான் உன்னைக் கொல்வேன்" என்றான். இப்படிச் சொல்லப்பட்ட தேரோட்டி மிகவும் பயந்தான். அவன் மன்னனுக்கும் பயந்தான், வாமதேவரின் சாபத்துக்கும் அஞ்சினான். எனவே மன்னனுக்கு அவன் எதையும் சொல்லவில்லை. உடனே மன்னன் தனது குறுவாளை எடுத்து அவனிடம் {தேரோட்டியிடம்}, "விரைவாகச் சொல். இல்லையெனில் நான் உன்னைக் கொல்வேன்" என்றான். மன்னனுக்கு {சலனுக்கு} அஞ்சிய அந்தத் தேரோட்டி கடைசியாக, "வாமி குதிரைகள் வாமதேவருக்குச்1சொந்தமானவை; அவை மனோ வேகம் கொண்டவை" என்றான் {தேரோட்டி}.
இதைச் சொன்ன தனது தேரோட்டியிடம் அம்மன்னன் {சலன்}, "வாமதேவரின் ஆசிரமத்திற்குச் செல்" என்றான். வாமதேவரின் ஆசிரமத்தை அடைந்த மன்னன் அம்முனிவரிடம் {வாமதேவரிடம்}, "ஓ! புனிதமானவரே {வாமதேவரே}, என்னால் அடிக்கப்பட்ட மான் ஒன்று வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உமது இரண்டு வாமி குதிரைகளை எனக்குக் கொடுத்து, அந்த மான் பிடிபட ஆவன செய்வதே உமக்குத் தகும்" என்றான். அம்முனிவர் {வாமதேவர்} அவனிடம் {சலனிடம்}, இவ்விரண்டு வாமி குதிரைகளை நான் உனக்குத் தருவேன். ஆனால் உனது நோக்கம் நிறைவேறியதும், எனது வாமி குதிரை ஜோடியானது விரைவாக என்னை வந்து அடைய வேண்டும்" என்று பதிலளித்தார். இந்தக் குதிரைகளை எடுத்துக் கொண்ட மன்னன் {சலன்} முனிவரிடம் {வாமதேவரிடம்} விடைபெற்றுக் கொண்டு, தனது தேரில் வாமி குதிரைகளைப் பூட்டி மானைத் தொடர்ந்து சென்றான். ஆசிரமத்தை விட்டு அகன்றதும், அவன் தனது தேரோட்டியிடம், "இந்தக் குதிரை ரத்தினங்களை வைத்துக் கொள்ள அந்தணர்களுக்குத் தகுதியில்லை. இவற்றை வாமதேவருக்குத் திருப்பித் தரக்கூடாது" என்றான். இதைச் சொன்ன அவன் {மன்னன் சலன்} மானைப் பிடித்துக் கொண்டு தனது தலை நகருக்குத் திரும்பினான். அங்கே தனது அரண்மனையின் உள்ளறைகளில் {அந்தப்புரத்தில்} அந்தக் குதிரைகளை நிறுத்தினான்.
அதே வேளையில் முனிவர் {வாமதேவர்}, "இளவரசன் இளைஞன். எனவே அற்புதமான இரண்டு விலங்குகளை அடைந்து, திரும்ப என்னிடம் கொடுக்காமல் அதனுடன் இன்பமாக விளையாடிக் கொண்டிருக்கிறான். அந்தோ, என்ன பரிதாபம்!" என்று நினைத்தார். பிறகு ஒரு மாதம் கழித்து, தனது சீடனொருவனிடம், "ஓ! ஆத்ரேயா, நீ மன்னிடம் {சலனிடம்} சென்று, வாமி குதிரைகளால் ஆக வேண்டிய காரியங்கள் முடிந்து விட்டால், அதை உனது குருவுக்குத் திருப்பி அளிக்க வேண்டும் என்று அவனிடம் {மன்னன் சலனிடம்} சொல்" என்றார். அதன்பேரில் சீடனான ஆத்ரேயரும், மன்னனிடம் சென்று, அவருக்குச் சொல்லப்பட்டதைச் சொன்னார். அதற்கு மன்னன் {சலன்}, "இந்த இரண்டு குதிரைகளை உரிமை கொள்ள மன்னர்ககளுக்கே தகுதியுண்டு. ரத்தினங்கள் போன்ற மதிப்புக் கொண்ட இவற்றை உரிமைகொள்ள அந்தணர்களுக்குத் தகுதி கிடையாது. குதிரைகளைக் கொண்டு அந்தணர்களுக்கு என்ன காரியம் ஆகப் போகிறது? திருப்தியுடன் திரும்பிச் செல்லும்" என்றான் {மன்னன் சலன்}.
மன்னனால் {சலனால்} இப்படிச் சொல்லப்பட்ட ஆத்ரேயர், தனது குருவிடம் {வாமதேவரிடம்} திரும்பி நடந்தது அத்தனையும் சொன்னார். விரும்பத்தகாத காரியத்தைக் கேட்ட வாமதேவரின் இதயம் கோபத்தால் நிறைந்தது. தானே நேரடியாக மன்னனிடம் {மன்னன் சலனிடம்} சென்று தனது குதிரைகளைக் கேட்டார் {வாமதேவர்}. அவர் கேட்டதைக் கொடுக்க மன்னன் {சலன்} மறுத்தான். வாமதேவர், "ஓ பூமியின் அதிபதியே {சலனே}, எனது வாமி குதிரைகளை எனக்குக் கொடு. உன்னால் முடிக்க முடியாத காரியத்தை அவற்றைக் {எனது குதிரைகளைக்} கொண்டு முடித்தாய். பிராமணர்கள் மற்றும் க்ஷத்திரியர்களின் செயல்களில் குறுக்கிட்டு, ஓ! மன்னா {சலனே}, வருணனின் சுருக்கு {பாசக்} கயிற்றால் மரணத்திற்கு ஆட்படாதே" என்றார் {வாமதேவர்}.
இதைக் கேட்ட மன்னன் {சலன்}, "ஓ! வாமதேவரே, இந்த இரண்டும் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட அற்புதமான சாந்தமான காளைகளே அந்தணர்களுக்குத் தகுதியான விலங்குகள். ஓ! பெரும் முனிவரே (அவற்றை எடுத்துக் கொண்டு) நீர் நினைத்த எந்த இடத்திற்கும் செல்லும். உண்மையில், உம்மைப் போன்றோரை {அந்தணர்களை} வேதங்களே சுமக்கின்றன" என்றான். பிறகு வாமதேவர் {மன்னன் சலனிடம்} , "ஓ! மன்னா {சலனே}, எங்களைப் போன்றோரை {அந்தணர்களை} வேதங்கள் சுமக்கின்றன என்பது உண்மையே. ஆனால் அது இந்த உலகத்திற்குப் பின்னர் வரும் உலகத்திலேயே நடக்கும். இருப்பினும் இவ்வுலகில், ஓ! மன்னா {சலனே}, இதைப் போன்ற விலங்குளே {குதிரைகளே} என்னையும், நம்மைப் போன்றோரையும், இன்னும் பலரையும் சுமக்கின்றன" என்றார். அதற்கு மன்னன் {சலன்}, "நாலு கழுதைகளோ, அற்புதமான வகையில் வந்த நாலு கோவேறு கழுதைகளோ, காற்றைப் போன்ற வேகம் கொண்ட நான்கு குதிரைகளோ உம்மைச் சுமக்கட்டும். இவற்றுடன் செல்லும். இந்த இரண்டு வாமி குதிரைகளும் க்ஷத்திரியர்கள் உரிமைகொள்ளத் தக்கவை. எனவே, இவை {வாமி குதிரைகள்} உமதில்லை என்பதை அறிந்து கொள்ளும்" என்று பதிலளித்தான்.
வாமதேவர் {மன்னன் சலனிடம்}, "ஓ! மன்னா {சலனே}, அந்தணர்களுக்குக் கடுமையான நோன்புகள் விதிக்கப்பட்டுள்ளன. நான் அவற்றை {சரியாக} நோற்று வாழ்ந்திருக்கிறேன் என்றால், என்னால் கட்டளையிடப்பட்ட பயங்கரமான முகம் கொண்ட பலம்வாய்ந்த நான்கு கடும் ராட்சசர்கள், கொல்லும் விருப்பத்துடன் உன்னைத் தொடர்ந்து, தங்கள் கூர்மையான ஈட்டியில் உன்னைச் சுமந்து சென்று, உனது உடலை நான்காக வெட்டிப் போடட்டும்" என்றார். இதைக் கேட்ட மன்னன் {சலன்}, "ஓ! வாமதேவரே, எண்ணத்தாலும், வார்த்தையாலும், செயலாலும் எனது உயிரை எடுக்க விரும்பும் அந்தணன் என்று உம்மை நினைப்பவர்கள், எனது கட்டளையின் பேரில், பிரகாசமிக்க ஈட்டிகளையும் வாள்களையும் எடுத்து உம்மையும் உமது சீடர்களையும் எனது முன்பாக {அடித்து} வீழ்த்தட்டும்" என்றான்.
அதற்கு வாமதேவர் {மன்னன் சலனிடம்}, "ஓ! மன்னா, இந்த எனது வாமி குதிரைகளை அடைந்து "நான் அவற்றைத் திரும்பத் தருவேன்" என்று நீ சொல்லியிருக்கிறாய். எனவே, எனது வாமி குதிரைகளைக் கொடுத்து, உனது உயிரைப் பாதுகாத்துக் கொள்" என்று பதிலுரைத்தார். இதைக் கேட்ட மன்னன் {சலன்}, மான்களைத் தொடர்வது அந்தணர்களுக்கு விதிக்கப்படவில்லை. உமது பொய்மைக்காக நான் உம்மைத் தண்டிக்க வேண்டும். ஓ! அந்தணரே, இன்று முதல் உமது கட்டளைகள் அனைத்துக்கும் கீழ்ப்படிந்து அருள் உலகங்களை அடைவேன்" என்றான். பிறகு வாம தேவர், "ஒரு அந்தணன் எண்ணத்தாலும், வார்த்தையாலும், செயலாலும் தண்டிக்கப்படக்கூடாது. கற்றறிந்த எவன் இப்படிப்பட்ட அந்தணர்களைத் தவத்தால் அறிகிறானோ, அவன் இவ்வுலகில் முக்கியத்துவம் அடைவதில் தோற்பதில்லை" என்று பதிலுரைத்தார் {வாமதேவர்}.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "வாமதேவர் இப்படிச் சொன்னதும், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அங்கே பயங்கர முகம் கொண்ட நான்கு ராட்சசர்கள் கைகளில் ஈட்டிகளுடன் அங்கே எழுந்து, மன்னனைக் {சலனைக்} கொல்ல {அவனை} அணுகினர். அப்போது அம்மன்னன் {சலன்}, "இக்ஷவாகு குலத்தில் பிறந்தவர்களும், (எனது தம்பி) தளனும், இந்த அனைத்து வைசியர்களும் எனது அதிகாரத்தை ஏற்றுக் கொண்டவர்களானால், வாமதேவருடைய இரண்டு வாமி குதிரைகளையும் நான் கொடுக்க மாட்டேன். இப்படிப்பட்டவர்கள் அறம் சார்ந்தவர்களாக மாட்டார்கள்" என்று கதறினான். அவன் இப்படிப்பட்ட வார்த்தைகளை உச்சரித்துக் கொண்டிருந்த போது, அந்த ராட்சசர்கள் அவனை {மன்னன் சலனைக்} கொன்றனர். அந்தப் பூமியின் தலைவன் {சலன்} விரைவில் பூமியில் கிடத்தப்பட்டான். தங்கள் மன்னன் {சலன்} கொல்லப்பட்டதை அறிந்த இக்ஷவாகு குலத்தினர், {சலனின் தம்பி} தளனை அரியணையில் அமர்த்தினர்.
அந்தணரான வாமதேவர், (இக்ஷவாகு குலத்தவரின்) நாட்டுக்குச் சென்று புதிய ஏகாதிபதியிடம் {தளனிடம்}, "ஓ! மன்னா, மனிதர்கள் அந்தணர்களுக்குத் தானமளிக்க வேண்டும் என்று புனித நூல்கள் தீர்மானித்திருக்கின்றன. நீ பாவத்திற்கு அஞ்சினால், ஓ! மன்னா {தளனே}, தாமதமில்லாமல் எனது வாமி குதிரைகளைக் கொடுத்துவிடு" என்று கேட்டார். வாமதேவரின் வார்த்தைகளைக் கேட்ட மன்னன் கோபத்துடன் தனது தேரோட்டியிடம், "நான் வைத்திருக்கும் அம்புகளில் ஒன்றில் அழகானதைக் கண்டு அதில் நஞ்சு பூசி என்னிடம் எடுத்து வா. அதனால் துளைக்கப்பட்ட இந்த வாமதேவர் வலியால் தரையில் விழுந்து, நாய்களால் கிழிக்கப்படட்டும்" என்றான். இதைக் கேட்ட வாமதேவர், "ஓ மன்னா {தளனே}, உனக்கு உனது ராணி மூலம் சயேனஜித் என்ற பெயர் கொண்ட பத்து வயது மகன் உண்டு என்பதை நான் அறிவேன். எனது வார்த்தைகளின் உந்துதலால், அந்த உனது அன்பு பிள்ளையை அந்தப் பயங்கரக் கணைகளால் தாமதமில்லாமல் கொல்வாய்" என்றார் {வாமதேவர்}.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "வாமதேவரின் இந்த வார்த்தைகளால், ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, அந்த ஏகாதிபதியால் {மன்னன் தளனால்} அடிக்கப்பட்ட அந்தக் கடும் கணை, அந்தப்புரத்தில் இருந்த இளவரசனைக் கொன்றது. இதைக் கேட்ட தளன் அப்போது, "இக்ஷவாகு குலத்தோரே, நாம் உங்களுக்கு நல்லது செய்வேன். நான் எனது சக்தியைக் கொண்டு இந்த அந்தணனைக் கொல்வேன். எனக்கு மற்றுமொரு கடும் கணையைக் கொண்டு வாரும். பூமியின் தலைவர்களே, எனது பராக்கிமத்தை இப்போது பாரும்" என்றான். தளனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட வாமதேவர், "நஞ்சு பூசி பயங்கரமான தோற்றம் கொண்டு இந்தக் கணையை எனக்குக் குறிவைக்கிறாய். ஓ! மனிதர்களின் ஆட்சியாளனே {தளனே}, உன்னால் குறி வைக்கவோ அல்லது அதை அடிக்கவோ கூட இயலாது" என்றார். அதன்பேரில் மன்னன் {தளன்} "இக்ஷவாகு குலத்தோரே, என்னால் எடுக்கப்பட்ட கணையை அடிக்க இயலாமல் நான் இருப்பதைக் கண்டீர்கள். நான் இந்த அந்தணனுக்கு மரணமளிப்பதில் தோல்வியுற்றேன். நீண்ட வாழ்நாள் கொண்டு வாமதேவர் வாழட்டும்" என்றான். வாமதேவர், "இந்தக் கணையால் நீ உனது ராணியைத் தொட்டால், நீ பாவத்திலிருந்து (அந்தணரைக் கொல்ல முயற்சித்த பாவத்திலிருந்து) தூய்மையடைவாய்" என்றார்.
மன்னன் தளன் தனக்குச் சொல்லப்பட்டது போலவே செய்தான். பிறகு ராணி முனிவரிடம் {வாமதேவரிடம்}, "ஓ! வாமதேவரே, இந்த எனது கொடிய கணவரிடம் நாளுக்கு நாள் நல்ல வார்த்தகளைச் சொல்லத்தக்கவளாகவும், அந்தணர்களுக்காகக் காத்திருந்து அவர்களுக்குச் சேவை செய்பவர்களாகவும் நான் ஆகக் கடவேன். இதனால், ஓ! அந்தணரே, நான் இதற்குப் பிறகு புண்ணிய உலகங்களை அடைவேன்" என்றாள். ராணியின் இவ்வார்த்தைகளைக் கேட்ட வாமதேவர், "ஓ! அழகிய கண்கள் கொண்டவளே, நீ இந்த அரச குலத்தைக் காத்தாய். ஒப்பற்ற ஒரு வரத்தை இரந்து கேள். நீ என்ன கேட்டாலும் நான் உனக்கு அதைத் தருவேன். ஓ! களங்கமற்றவளே, ஓ! இளவரசியே, உனது இனத்தாரையும், இக்ஷவாகு குலத்தவரின் பெரும் நாட்டையும் ஆட்சி செய்வாயாக" என்றார். வாமதேவரின் வார்த்தைகளைக் கேட்ட அந்த இளவரசி {தளனின் மனைவியான ராணி}, "ஓ! புனிதமானவரே, எனது கணவர் இந்தப் பாவத்தில் இருந்து விடுபட வேண்டும். இதுவே நான் வேண்டும் வரம். நீர் அவரது மகனுக்கு அவரது இனத்தாருக்கும் செழிப்பை நினைப்பதில் ஈடுபட வேண்டும். ஓ! அந்தணர்களில் முதன்மையானவரே. இதுவே நான் உம்மிடம் கேட்கும் வரம்!" என்று கேட்டாள்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ராணியின் இவ்வார்த்தைகளைக் கேட்ட முனிவர் {வாமதேவர்}, ஓ! குரு குலத்தில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா}, "அப்படியே ஆகட்டும்" என்றார். அதனால் மன்னன் தளன் மிகுந்த மகிழ்ச்சியடைந்து, அம்முனிவரை வணங்கி, அவரது வாமிக் குதிரைகளை மரியாதையுடன் கொடுத்தான்.
1.வாமதேவர், பெருமுனிவரான கௌதமருக்கும் அகலிகைக்கும் பிறந்த மகனாவார்.↩
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.