Vaka muni and Indra ! | Vana Parva - Section 192 | Mahabharata In Tamil
(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)
மரணமற்றவர்களின் துன்பம் மற்றும் இன்பம் குறித்து முனிவர் பகருக்கும் இந்திரனுக்கும் இடையில் நடந்த விவாதத்தை யுதிஷ்டிரனுக்கு மார்க்கண்டேயர் சொல்லல்...
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "முனிவர்களும், அந்தணர்களும், யுதிஷ்டிரனும் கூடி மார்க்கண்டேயரிடம், "பக முனிவர் எப்படி வாழ்நாள் நீண்டவராக ஆனார்?" என்று கேட்டனர்.
"இப்படிக் கேட்கப்பட்ட மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, "அரச முனி பகன் பெரும் தவசியாகவும் நீண்ட வாழ்நாள் கொண்டவராகவும் இருந்தார். இதற்கான காரணம் குறித்து நீங்கள் ஆராய வேண்டாம்" என்று பதிலுரைத்தார்.
"ஓ! பாரதா {ஜனமேஜயா}, நீதிமானான குந்தியின் மகன் யுதிஷ்டிரன் தனது தம்பிகளுடன் கூடி மார்க்கண்டேயரிடம், "பகர், தாலப்யர் என்ற பெரும் ஆன்மா படைத்த இருவரும் இறவா நிலை பெற்றவர்கள் என்றும், அம்முனிவர்கள் தேவர்கள் தலைவனின் {இந்திரனின்} நண்பர்கள் என்றும் அண்டத்தால் மதிக்கப்படுபவர்கள் என்றும் கேட்விப்படுகிறோம். ஓ! புனிதமானவரே {மார்க்கண்டேயரே}, இன்பமும் துன்பமும் கலந்த நிகழ்வான, பகரும் இந்திரனும் சந்தித்துக் கொண்ட (வரலாற்றை) நிகழ்வை நான் கேட்க விரும்புகிறேன். அவ்வரலாறை நீர் எங்களுக்குத் தெளிவாக விவரியும்" என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் நடந்த பயங்கரப் போர் முடிவுற்றதும், இந்திரனே மூவலகத்திற்கும் ஆட்சியாளனானான். மேகங்கள் அபரிமிதமாக மழையைப் பொழிந்தன. பூமியில் வசித்தவர்கள் அபரிமிதமான விளைச்சலைப் பெற்று அற்புதமான நிலையைப் பெற்றனர். அறத்திற்குத் தங்களை அர்ப்பணித்து, எப்போதும் அறநெறிகள் பயின்று, அமைதியை அனுபவித்தனர். அனைத்து மனிதர்களும் தங்கள் வகைக்குரிய கடமைகளுக்குத் தங்களை அர்ப்பணித்து, இன்பமாகவும் உற்சாகமாகவும் இருந்தார்கள். வளனைக் கொன்றவன் {இந்திரன்}, உலகத்தின் அனைத்து மனிதர்களும் இன்பமாகவும், உற்சாகமாவும் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியில் நிறைந்தான். அந்த நூறு வேள்விகள் செய்தவனான தேவர்கள் தலைவர் {இந்திரன்}, தனது யானையான ஐராவதத்தின் முதுகில் அமர்ந்த படி, தனது குடிகளை ஆராய்ந்தான். அவன் {இந்திரன்}, முனிவர்களின் காண்பதற்கினிய ஆசிரமங்கள் மீதும், பலதரப்பட்ட மங்களகரமான நதிகள் மீதும், செழிப்புடன் இருக்கும் நகரங்கள் மீதும், கிராமங்கள் மற்றும் ஊர்ப்புறங்கள் மீதும் தனது கண்களை மிகுந்த மகிழ்ச்சியோடு செலுத்தினான்.
அவன் {இந்திரன்}, அறப்பயிற்சிகளுக்குத் தங்களை அர்ப்பணித்து, அதிநிபுணத்துவத்துடன் தங்கள் குடிகளை ஆளும் மன்னர்கள் மீதும் கண்களைச் செலுத்தினான். குளங்கள், அணைகள் {நீர்த்தேக்கங்கள்}, கிணறுகள், ஏரிகள், தடாகங்கள் ஆகியன நீர் நிரம்பி, நோன்பு நோற்கும் அந்தணர்களில் சிறந்தவர்களால் வழிபடப்பட்டும் இருப்பதைக் கண்டு, காண்பதற்கினிய பூமியில் இறங்கினான். நூறு வேள்விகள் செய்த அந்தத் தேவன் {இந்திரன்}, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, விலங்குகளும், பறவைகளும் நிறைந்து, காய்கறிகள் அதிகமாக விளையும் கிழக்குப் பகுதியில் கடற்கரையோரமாக இருக்கும் மங்களகரமான, காண்பதற்கினிய, அருள் நிறைந்த ஆசிரமத்தை நோக்கி முன்னேறினான். அந்தத் தேவர்கள் தலைவன் {இந்திரன்}, அங்கே அந்த ஆசிரமத்தில் பகரைக் கண்டான். பகரும் இறவாதவர்களின் {தேவர்களின்} ஆட்சியாளனைக் கண்டு மிகவும் மகிழ்ந்தார். அவர் {பகர்}, கால் கழுவ நீரும், அமர தரைவிரிப்பும், வழக்கமாகக் கொடுக்கும் ஆர்க்கியாவும், கனிகளும், கிழங்குகளும் கொடுத்து இந்திரனை வழிபட்டார். வளனைக் கொன்றவனும் வரமளிப்பவனும், மூப்பறியாதவர்களை ஆள்பவனுமான அந்தத் தெய்வீக ஆட்சியாளன் {இந்திரன்}, வசதியாக அமர்ந்த பிறகு பகரிடம் பின்வரும் கேள்வியைக் கேட்டான். அவன் {இந்திரன்}, "ஓ! பாவமற்ற முனிவரே {பகரே}, நீர் நூறு {தேவ} வருடங்கள் {ஒரு லட்சம் வருடங்கள் என்றும் படித்திருக்கிறேன்} வாழ்ந்துவிட்டீர்! ஓ அந்தணரே, இறவாதவர்களின் துன்பங்கள் குறித்து நீர் எனக்குச் சொல்லும்" என்று கேட்டான்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "இதைக் கேட்ட பகர், "உடன்படாதவர்களுடன் வாழ்வதும், உடன்பட்டு அன்போடு இருப்பவர்களிடம் இருந்து பிரிவதும், தீயவர்களுடன் தோழமை கொள்வதும் இறவாதவர்கள் {சிரஞ்சீவிகள்} தாங்க வேண்டிய தீமைகளாகும். மகன்கள், மனைவிகள், சொந்தங்கள், நண்பர்கள் ஆகியோரின் இறப்பு, அடுத்தவரை நம்பியிருக்கும் நிலையில் ஏற்படும் வலி ஆகியவை தீமைகளில் மிகப்பெரிதானவைகளில் சிலவாகும். (இவை அனைத்தையும் இறப்பில்லாதவர்களின் {மரணமற்றவர்களின்} வாழ்வில் கவனிக்கலாம்). பொருளற்றவர்களைப் பிறர் அவமதிப்பதைவிடப் பரிதாபமான காட்சி உலகில் ஏதும் கிடையாது என்று நான் கருதுகிறேன். குடும்பக் கண்ணியத்தைக் கண்ணியமற்றவர்கள் பெறுவது, கண்ணியவான்கள் குடும்பக் கண்ணியத்தை இழப்பது, சேர்க்கைகள், பிரிவுகள் ஆகிய அனைத்தையும் மரணமற்றவர்களின் வாழ்வில் கவனிக்கலாம். குடும்பக் கண்ணியமற்றவர்கள் செழிப்புடன் இருந்து, அவர்கள் வெல்லாததை வெல்வது ஆகிய அனைத்தும், ஓ நூறு வேள்விகளைச் செய்த தேவனே {இந்திரா}, உன் கண் முன்பாகவே இருக்கின்றன. தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், மனிதர்கள், பாம்புகள், ராட்சசர்கள் ஆகியோரால் ஏற்படும் பேரிடர்கள் மற்றும் பின்னடைவுகளை விட எது பரிதாபகரமாக இருக்க முடியும்? நல்ல குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் இழிபிறப்பாளர்களின் தொடர்பால் துன்பங்களை அனுபவிக்கிறார்கள். ஏழைகள் செல்வந்தர்களால் அவமதிக்கப்படுகிறார்கள். இவற்றைவிட எது பரிதாபகரமாக இருக்க முடியும்? இது போன்ற முரண்பட்ட நிலைப்பாடுகளைக் கொண்ட எண்ணிலடங்கா உதாரணங்கள் உலகத்தில் இருக்கின்றன. முட்டாள்களும், அறியாமை கொண்டவர்களுமே உற்சாகமாகவும் இன்பமாகவும் இருக்கிறார்கள். அதேவேளையில் கற்றவர்களும், விவேகிகளும் {ஞானிகளும்} துயரத்தால் பாதிக்கப்படுகிறார்கள். துன்ப துயரங்களின் எண்ணற்ற நிகழ்வுகள் மனிதர்களிடையே இந்த உலகத்தில் காணப்படுகிறது. (இறவா வாழ்வு வாழ்பவர்கள் இவை அனைத்தையும் கண்டு, அதன்காரணமாகத் துன்புற வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளனர்)" என்றார் {பகர்}.
பிறகு இந்திரன் {முனிவர் பகரிடம்}, "ஓ! பெரும் நற்பேறு பெற்றவரே {முனிவர் பகரே}, மரணமற்றவர்களின் இன்பங்களையும், தேவர்கள் மற்றும் முனிவர்களால் புகழப்படும் இன்பங்களையும் எனக்குச் சொல்லும்" என்று கேட்டான்.
அதற்குப் பகர் {இந்திரனிடம்}, "தீய நண்பனின் சேர்க்கையற்று, தனது இல்லத்திலேயே பகலின் எட்டாவது அல்லது பனிரெண்டாவது பாகத்தில் குறைந்த காய்கறிகளை {கீரையை மட்டுமாயினும்} சமைப்பவனின் {சமைத்து உண்பதைவிட} இன்பம் போன்று வேறு எதுவும் கிடையாது. (எனவே, மரணமற்ற வாழ்வு வாழ்பவர்கள் இந்த அருளை நாளுக்கு நாள் எப்போதும் பெற்று இன்பமாக வாழலாம்). நாளை எண்ணாதவன் பெருந்தீனிக்காரன் என்று சொல்லப்படுவதில்லை. ஓ! மகவானே {இந்திரனே}, தன் சொந்த வீட்டில் சொற்ப காய்கறிகளையாவது {கீரையையாவது} சமைப்பவன் இன்பமாக இருக்கிறான். தன் முயற்சியால் பெற்று, யாரையும் நம்பியிராமல், பழங்களையோ காய்கறிகளையோ தன் சொந்த வீட்டிலேயே வைத்து உண்பவன் மரியாதைக்குரியவனாவான். பிறர் வீட்டில் இகழ்ச்சியுடன் கொடுக்கப்பட்ட உணவை உண்பவன், அது இனிமையான ஆடம்பர உணவாக இருந்தாலும், வெறுக்கத்தக்கதையே செய்கிறான் {அது மேன்மையுள்ளதாகாது}.
எனவே, நாயைப் போன்றோ அல்லது ராட்சசனைப் போன்றோ அடுத்தவர் இல்லத்தில் உண்ணும் குறுகிய மனம் படைத்த இழிந்தவனின் உணவு நிந்திக்கத்தக்கது என்று ஞானம் உள்ளவர்கள் கருதுகிறார்கள். விருந்தினர்களையும், வேலைக்காரர்களையும் உபசரித்து, பித்ருக்களுக்கும் கொடுத்து மீந்த உணவை உண்ணும் நல்ல அந்தணனைப் போல யாரும் மகிழ்ச்சியாக இருந்துவிட முடியாது. ஓ! நூறு வேள்விகளைச் செய்தவனே {இந்திரனே}, எவன் முதல் பாகத்தை விருந்தினர்களை உபசரித்து, மீந்ததை உண்ணும் மனிதனுக்கு அதைவிட இனிமையான புனிதமான உணவு வேறு கிடையாது. விருந்தினர்களை உபசரித்த பிறகு, ஒரு அந்தணன் உண்ணும் வாய் நிறைந்தவை (ஒரு வாய் சோறு) ஒவ்வொன்றும் ஆயிரம் பசுக்களைத் தானம் கொடுத்தற்குச் சமமான தகுதியை {பலனைத்} தருகிறது. மேலும் அப்படிப்பட்டவர் இளமையில் செய்த பாவங்கள் அனைத்தும் நிச்சயமாகக் கழுவப்படுகின்றன. உணவருந்தி, தானம் பெற்ற அந்தணனுடைய கைகளில் இருக்கும் நீர் (அன்னமிட்டவன் மீது தெளிக்கப்பட்டால்) ஒரு நொடியில் அனைத்துப் பாவங்களையும் அழிக்கிறது.
இதையும், இன்னும் பல காரியங்களையும் பகரிடம் பேசிய தேவர்கள் தலைவன் {இந்திரன் சொர்க்கத்திற்கு {தேவலோகம்} சென்றான்.
(பகர் சொல்லும் அனைத்தும் இந்திரனின் கேள்விக்கான பதில்தானா என்பதைப் புரிந்து கொள்ளக் கடினமாக இருக்கிறது. தேவர்கள் தலைவன், "மரணமற்ற வாழ்வு வாழ்பவர்களின் இன்பங்கள் என்ன?" என்று கேட்கிறான். பகர், அதிலிருந்து வழுவி ஒரு குழப்பமான இணக்கமில்லாத பதிலாக யாரையும் நம்பியிராமல் இருப்பது, விருந்தினர்கள் மற்றும் வேலைக்காரர்களை உபசரிப்பதன் தர்ம பலன் ஆகியவற்றைச் சொல்கிறார். அச்சில் வந்த அனைத்து பதிப்புகளிலும் இந்த வாக்கியமே இருக்கிறது என்று இந்த இடத்தில் சொல்கிறார் கங்குலி)
{சேவை செய்வதே இன்பம் என்று நினைக்கும் பலரை நாம் இந்நாட்களில் கூட காண்பதுண்டு. எனவே மேற்சொன்ன பகரின் பதில் சரியானதுதான் என்றே எனக்குப் படுகிறது}
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.