Yudhishthira's question! | Vana Parva - Section 271 | Mahabharata In Tamil
(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)
கானக வாழ்வில் துன்பத்தை அனுபவிக்கும் தன்னைப் போலப் பாதிக்கப்பட்டவர் யாரும் உண்டா என்று யுதிஷ்டிரன் மார்க்கண்டேயரிடம் கேட்பது...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, "திரௌபதி அபகரிக்கப்பட்டதன் விளைவாக இத்தகு துன்பத்தை அனுபவித்த பிறகு மனிதர்களில் புலிகளான அந்தப் பாண்டவர்கள் என்ன செய்தார்கள்?” என்று கேட்டான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஜெயத்ரதனை வீழ்த்தி, கிருஷ்ணையை {திரௌபதியை} மீட்ட பிறகு, அறம் சார்ந்த மன்னனான யுதிஷ்டிரன் அந்த முனிவர்களில் சிறந்தவரின் {மார்க்கண்டேயர்} அருகில் அமர்ந்தான். திரௌபதிக்கு நேர்ந்த கேட்டைத் தாங்கிக் கொண்டு, தங்கள் துயரை வெளிப்படுத்திக் கொண்டிருந்த அந்தத் துறவிகளில் முதன்மையானவர்களுக்கு மத்தியில், மார்க்கண்டேயரிடம், பாண்டுவின் மகனான யுதிஷ்டிரன், “ஓ! வணக்கத்தக்க ஐயா, பழங்காலத்தையும் எதிர்காலத்தையும் குறித்த முழு ஞானம் கொண்டவர் என்று தேவர்கள் மற்றும் துறவிகள் மத்தியில் நீர் அறியப்பட்டிருக்கிறீர். என் மனதில் ஒரு சந்தேகம் இருக்கிறது. அதை நீர்தான் தீர்த்துவைக்க வேண்டும்! துருபதன் மகளான இந்த மங்கை {திரௌபதி}, வேள்விப்பீடத்தில் உதித்தவளாவாள். மனித கர்ப்பத்தில் பிறந்தவளல்ல. இவள் உயர்ந்த அருளைக் கொண்டவளும் பாண்டுவின் சிறப்புமிக்க மருமகளுமாவாள். நான் காலத்தைக் குறித்துச் சிந்திக்கிறேன். மனிதனின் விதி அவனது செயல்களைப் பொறுத்து இருக்கிறது. இது உயிரினங்களைப் பொறுத்தமட்டில் தவிர்க்கமுடியாததாக இருக்கிறது. (அது அப்படி இல்லையெனில்) நேர்மையான மனிதன் மீது சொல்லப்படும் போலி திருட்டுக் குற்றச்சாட்டைப் போல, அறம்சார்ந்து உண்மையுள்ளவளாக இருக்கும் எங்கள் மனைவி {திரௌபதி} எப்படி இத்தகு துரதிர்ஷ்டத்தால் துன்புற நேர்ந்தது?
துருபதனின் மகள் {திரௌபதி} ஒரு பாவச் செயலையோ, வரவேற்கத்தகாத எச்செயலையோ செய்யவில்லையே. மறுபுறம், அவள் அந்தணர்களிடம் உயர் அறங்களையல்லவா தொடர்ந்து பயின்று வந்தாள். இருப்பினும் மூடனான மன்னன் ஜெயத்ரதன் அவளைப் பலவந்தமாகத் தூக்கிச் சென்றான். அவள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்செயலின் விளைவாக, அந்த இழிந்த பாவியின் {ஜெயத்ரதனின்} தலையைச் சிரைத்து, போர்க்களத்தில் அவனது கூட்டாளிகளையும் வீழ்த்தினோம். சிந்து நாட்டின் துருப்புகளைக் கொன்று அவளை {திரௌபதியை} மீட்டோம் என்பது உண்மையே. ஆனால், நாங்கள் எதிர்பாராத நேரத்தில் எங்கள் மனைவி பலவந்தமாகக் கடத்தப்பட்டாள் என்ற அவமானம் தொடரும் என்பது நிச்சயம். இந்தக் காட்டு வாழ்க்கை துன்பம் நிறைந்ததாக இருக்கிறது. இந்தக் காட்டிலேயே தங்கி, எங்களுடன் வாழும் இந்தக் காட்டின் விலங்குகளைக் கொல்லக் கடன் பட்டு, அந்த வேட்டையின் மூலமே எங்கள் உயிரைத் தாங்குகிறோம். இப்படிப்பட்ட இந்த வனவாசத்தையும், ஏமாற்றுகர உறவினர்களின் செயல்களாலேயே அனுபவிக்கிறோம். என்னைப்போன்ற பேறிலி வேறு யாரும் உண்டா? இது போன்ற ஒருவனை நீர் முன்னர்க் கண்டதோ கேட்டதோ உண்டா?” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.