Markandeya related Ramayana! | Vana Parva - Section 272 | Mahabharata In Tamil
(திரௌபதி ஹரணப் பர்வத் தொடர்ச்சி)
ராமன் மற்றும் சீதையின் பிறப்பு; ராவணனின் மூதாதையர் பற்றிய அறிமுகம்; குபேரன் பிறப்பு; குபேரன் பெற்ற நன்மைகள் ஆகியவற்றை மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குச் சொன்னது...
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஓ! பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, {தசரத ராமனே} ராமனே கூட இணையற்ற துயரத்தைச் சந்தித்தான். ராட்சச மன்னனான தீய மனம் கொண்ட ராவணன், ஏமாற்றைக் {மாயையைக்} கைக்கொண்டு, ஜடாயு என்ற கழுகை வீழ்த்தி, அவனது {ராமனின்} மனைவியான சீதையை, அவனது {ராமனின்} ஆசிரமத்தில் இருந்து பலவந்தமாகக் கடத்திச் சென்றான். பிறகு உண்மையில், சுக்ரீவனின் உதவியைப் பெற்று, கடலில் பாலத்தைக் கட்டி தனது கூர்முனை கொண்ட கணைகளால் லங்கையை எரித்து, சீதையை மீட்டான்"
யுதிஷ்டிரன் {மார்க்கண்டேயரிடம்}, “ராமன் எந்தக் குலத்தில் பிறந்தான். அவனது பலம் மற்றும் பராக்கிரமத்தின் அளவு என்ன? ராவணன் யாருடைய மகன்? எதன் பேரில் அவன் ராமனுடன் முரண்பட்டான்? ஓ சிறப்புமிக்கவரே {மார்க்கண்டேயரே}, அனைத்தையும் விவரமாக எனக்குச் சொல்லும்; பெரும் சாதனைகள் கொண்ட ராமனின் கதையை நான் கேட்க மிக ஆவலாக உள்ளேன்" என்றான்.
மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பாரதக் குல இளவரசே {யுதிஷ்டிரா}, இந்தப் பழைய வரலாற்றை அது நடந்தவாறே சரியாகக் கேள்! தனது மனைவியுடன் சேர்ந்து ராமன் அனுபவித்த துன்பம் அனைத்தையும் நான் உனக்குச் சொல்கிறேன். இக்ஷவாகு குலத்தில் உதித்த அஜன் என்ற பெரும் மன்னன் ஒருவன் இருந்தான். அவனுக்கு {அஜனுக்கு}, வேத கல்விக்குத் தன்னை அர்ப்பணித்து, எப்போதும் சுத்தமாக இருந்த தசரதன் என்ற பெயர் கொண்ட மகன் ஒருவன் இருந்தான். அந்தத் தசரதனுக்கு, அறநெறிகளையும், பொருளையும் அறிந்த ராமன், லட்சுமணன், சத்ருக்னன் மற்றும் பலம்பொருந்திய பரதன் என்ற நான்கு மகன்கள் இருந்தனர்.
ராமனுக்குக் கௌசல்யை என்ற தாயும், பரதனுக்குக் கைகேயி என்ற தாயும் இருந்தனர். எதிரிகளுக்குக் கசையாக இருந்த லட்சுமணனும், சத்ருக்னனும் சுமித்திரையின் மகன்கள். ஜனகன் விதேக நாட்டின் மன்னாக இருந்தான். சீதை அவனது மகளாக இருந்தாள். அவளை {சீதையை} ராமனின் அன்பிற்குரிய மனைவியாக்க விரும்பிய தஷ்திரி {பிரம்மன்} தானே அவளைப் படைத்தான். ராமன் மற்றும் சீதையின் பிறப்பு குறித்த வரலாற்றை இப்போது நான் உனக்குச் சொல்லிவிட்டேன்.
இப்போது, ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, நான் ராவணனின் பிறப்பைக் குறித்து உரைக்கிறேன். அனைத்து உயிர்களின் தலைவனும், அண்டத்தைப் படைத்தவனும், பெரும் தவத்தகுதி படைத்த தேவனும், சுயம்புவுமான பிரஜாபதியே {பிரம்மனே} ராவணனின் பாட்டனாவான். புலஸ்தியருக்கு, பசுவிடம் பெறப்பட்ட வைஸ்ரவணன் {குபேரன்} என்ற பெயரில் அழைக்கப்பட்ட பலம்பொருந்திய மகன் ஒருவன் இருந்தான். ஆனால் அவரது {புலஸ்தியரின்} மகன் {வைஸ்ரவணன்}, தன் தந்தையை {புலஸ்தியரை} விட்டுவிட்டு, தன் பாட்டனிடம் {பிரம்மனிடம்} சென்றுவிட்டான். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, இதனால் கோபமடைந்த அவனது {வைஸ்ரவணனின்} தந்தை {புலஸ்தியர்}, தன்னிடமிருந்து இரண்டாவதாக ஒரு சுயத்தைப் படைத்தார். தன் சுயத்தின் மறுபாதியின் மூலமே அந்த மறுபிறப்பாளர், வைஸ்ரவணனிடம் கொண்ட கோபத்தைத் தீர்க்க விஸ்ரவஸ் என்றவனைப் பிறப்பித்தார்.
ஆனால் வைஸ்ரவணனிடம் {குபேரனிடம்} மனநிறைவு கொண்ட பெரும்பாட்டனோ {பிரம்மனோ}, அவனுக்கு {வைஸ்ரவணனுக்கு} இறவாமையையும், அண்டத்தில் உள்ள அனைத்துச் செல்வங்களின் மீது ஆட்சி அதிகாரத்தையும், திசைப்புள்ளிகளில் ஒன்றுக்குப் பாதுகாவலன் என்ற பொறுப்பையும், ஈசானனின் நட்பையும், நளகுபேரன் என்ற மகனையும் கொடுத்தான். அவன் {பிரம்மன்}, ராட்சசக் கூட்டத்தால் பாதுகாக்கப்பட்ட, அவனது தலைநகரான இலங்கையையும், செலுத்துபவன் விருப்பதிற்கேற்ப நினைத்த இடம் எங்கும் செல்லும் திறன் கொண்ட புஷ்பகம் என்று அழைக்கப்பட்ட தேரையும் {விமானத்தையும்} கொடுத்தான். யக்ஷர்களுக்கு மன்னனாகவும், மன்னர்களை ஆள்பவனாகவும் அவனை {வைஸ்ரவணனை} நியமித்தான்."
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.