Surya warned Karna again! | Vana Parva - Section 299 | Mahabharata In Tamil
(பதிவிரதா மாஹாத்மியப் பர்வத் தொடர்ச்சி)
குண்டலங்களையும் கவசத்தையும் இந்திரனுக்குக் கொடுத்துவிடாதே என்று மீண்டும் கர்ணனை எச்சரித்த சூரியன்...
சூரியன் {கர்ணனிடம்} சொன்னான், “ஓ! கர்ணா, உனக்கும், உனது நண்பர்களுக்கும், உனது மகன்களுக்கும், உனது மனைவியருக்கும், உனது தந்தைக்கும், உனது தாய்க்கும் தீங்கிழைக்கும் எதையும் செய்துவிடாதே; ஓ! உயிரைத் தாங்கியிருப்பவர்களில் சிறந்தவனே {கர்ணா}, மனிதர்கள், தங்கள் உடல்களைத் தியாகம் செய்ய விரும்பாமலே, (இவ்வுலகில்) புகழையும், சொர்க்கத்தில் நீடித்த புகழையும் விரும்புகிறார்கள். ஆனால், .நீயோ உனது உயிரைச் செலவு {தியாகம்} செய்து சாகாப்புகழை விரும்புகிறாய் ஆதலால், சந்தேகமற அவள் {புகழ்} உனது உயிரைப் பறிப்பாள். ஓ! மனிதர்களில் காளையே {கர்ணா}, இவ்வுலகில், தந்தை, தாய், மகன், பிற உறவினர்கள் ஆகியோர் உயிருடனிருப்பவர்களுக்கே பயனளிப்பவர்களாக இருக்கிறார்கள். ஓ! மனிதர்களில் புலியே {கர்ணா}, மன்னர்களைப் பொறுத்தவரை, அவர்கள் உயிருடன் இருக்கும்போதே அவர்களது பராக்கிரமம் அவர்களுக்கு உதவியாக இருக்கும். இதை நீ புரிந்து கொண்டாயா? ஓ! பெரும் பிரகாசம் கொண்டவனே {கர்ணா}, உயிருடன் வாழ்பவர்களுக்குப் புகழ் நன்மையைச் செய்யும்! உடல்கள் சாம்பலாக்கப்பட்ட இறந்தவர்களுக்கு, புகழால் என்ன பயன்?
இறந்து போனவன் புகழைக் கண்டு மகிழ முடியாது. உயிரோடிருப்பவனே அதுகுறித்து மகிழ முடியும். இறந்து போனவனின் புகழ் என்பது சடலத்தின் கழுத்தில் இருக்கும் மலர்கள் நிறைந்த மாலைக்கு ஒப்பானது. நீ என்னை மதித்து வழிபடுபவன் ஆதலால், உனது நன்மைக்காக இதைச் சொல்கிறேன். என்னை வழிபடுபவர்கள் எப்போதும் என்னால் பாதுகாக்கப்படுகிறார்கள். உன்னிடம் நான் பேசுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும்! ஓ! வலிய கரங்கள் கொண்டவனே {கர்ணா}, பெரும் மதிப்புடன் இவன் {கர்ணன்} நம்மை வணங்குகிறான் என்று மீண்டும் நினைத்தே, நான் உன் மீது அன்பால் ஈர்க்கப்பட்டேன். எனவே, என் வார்த்தைகளின் படி நடந்து கொள்!
இது தவிர, விதியால் விதிக்கப்பட்ட ஓர் ஆழமான மர்மம் இவை அனைத்திலும் இருக்கிறது. எந்தவிதமான அவநம்பிக்கையும் இன்றி நீ செயல்படு! ஓ! மனிதர்களில் காளையே {கர்ணா}, தேவர்களுக்கு ரகசியமான இது குறித்து நீ அறிவது தகுந்தது அல்ல. எனவே, நான் அந்த ரகசியத்தை உனக்கு வெளிப்படுத்தவில்லை. எனினும், குறித்த நேரத்தில் நீ புரிந்து கொள்வாய். நான் ஏற்கனவே சொன்னதைத் திரும்பச் சொல்கிறேன். ஓ! ராதையின் மகனே {கர்ணா}, எனது வார்த்தைகளை உனது இதயத்தில் நிறுத்து! வஜ்ரத்தைத் தாங்குபவன் {இந்திரன்} அவற்றை {குண்டலங்களையும் கவசத்தையும்} உன்னிடம் கேட்கும்போது, நீ அவனுக்கு {இந்திரனுக்கு} உனது குண்டலங்களைக் கொடுத்துவிடாதே!
ஓ! பெரும்பிரகாசம் கொண்டவனே {கர்ணா}, நீ உனது குண்டலங்களுடன் இருக்கும்போது, தெளிந்த வானில் இருக்கும் விசாக நட்சத்திரத்து சந்திரன் போல அழகாக இருக்கிறாய்! {உயிருடன்} வாழும் ஒருவனுக்கே, புகழ் பலனளிக்கும் என்பதை அறிந்து கொள். எனவே, தேவர்களின் தலைவன் {இந்திரன்} காது குண்டலங்களைக் கேட்கும்போது, ஓ! மகனே {கர்ணா}, நீ அவனிடம் {அதற்கு} மறுக்க வேண்டும்! பலவிதமான காரணங்கள் பொதிந்த பதில்களை நீ திரும்பத் திரும்பச் சொல்வதால், ஓ! பாவமற்றவனே {கர்ணா}, காது குண்டலங்களை அடைய நினைக்கும் தேவர்கள் தலைவனின் {இந்திரனின்} ஆவல் அகலும்.
இனிமை மற்றும் மரியாதை ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட ஆழ்ந்த சிந்தனைக்குரிய காரணங்கள் நிறைந்த பதில்களை வலியுறுத்திச் சொல்லி புரந்தரனின் நோக்கத்தை நீ அகற்றுவாயாக. ஓ! மனிதர்களில் புலியே {கர்ணா}, தன் இடது கையாலும் வில்லை வளைக்கும் திறன் பெற்றவனுக்கு {அர்ஜுனனுக்கு} எப்போதும் நீ சவால் விடுவாய். மேலும் வீரனான அர்ஜுனனும் போரில் உன்னுடன் நிச்சயம் மோதுவான். {கர்ணா} நீ உனது காது குண்டலங்களுடன் இருக்கும்போது, இந்திரனே அர்ஜுனனின் துணைக்கு வந்தாலும், அவனால் {அர்ஜுனனால்} உன்னைப் போரில் வீழ்த்த முடியாது. எனவே, ஓ! கர்ணா, நீ போர்க்களத்தில் அர்ஜுனனை வீழ்த்த விரும்பினால், இந்த உனது அழகிய காது குண்டலங்கள் உன்னால் இந்திரனுக்குக் கொடுக்கப்படக்கூடாது" என்றான் {சூரியன்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.