The warning of Surya to Karna! | Vana Parva - Section 298 | Mahabharata In Tamil
(பதிவிரதா மாஹாத்மியப் பர்வத் தொடர்ச்சி)
கர்ணனின் கனவில் அந்தணனாக வந்த சூரியன்; இந்திரன் அந்தண ரூபத்தில் வந்து அவனிடம் குண்டலங்களையும் கவசத்தையும் இரந்து கேட்பான் என சூரியன் கர்ணனை எச்சரித்தது; இருப்பினும் அவற்றைக் கொடுப்பேன் என்று கர்ணன் சூரியனிடம் சொன்னது ...
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! அந்தணரே, “தனஞ்சயன் {அர்ஜுனன்} இங்கிருந்து சென்ற பிறகு, யார் ஒருவரிடமும் நீ வெளிப்படுத்தாத உனது கடும் அச்சத்தை நான் அகற்றுவேன்" என்ற ஆழ்ந்த பொருள் கொண்ட இந்திரனின் வார்த்தைகளை லோமசர் அந்தப் பாண்டு மகனிடம் {யுதிஷ்டிரனிடம்} சொல்லும் அளவுக்கு, கர்ணன் குறித்து யுதிஷ்டிரன் வளர்த்துக் கொண்ட பெரும் அச்சம் யாது? ஓ! துறவிகளில் சிறந்தவரே {வைசம்பாயனரே}, அறம்சார்ந்த யுதிஷ்டிரன் ஏன் அதை யாரிடமும் வெளிப்படுத்தவில்லை?” என்று கேட்டான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னர்களில் புலியே {ஜனமேஜயா}, நீ கேட்டவாறே, அந்த வரலாற்றை நான் உனக்குச் சொல்கிறேன்! ஓ! பாரதர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, எனது வார்த்தைகளை நீ கேள்! (அவர்களது வனவாசத்தில்) பனிரெண்டு ஆண்டுகள் கடந்து, பதிமூன்றாவது ஆண்டு வந்தபோது, பாண்டு மகன்களிடம் எப்போதும் நட்பாக இருந்த சக்ரன் {இந்திரன்}, கர்ணனிடம் (அவனது காதுகுண்டலங்களை) இரந்து பெறத் தீர்மானித்தான். ஓ! பலமிக்க ஏகாதிபதியே {ஜனமேஜயா}, (கர்ணனின்) காது குண்டலங்களைக் குறித்துத் தேவர்களின் பெருந்தலைவனுடைய {இந்திரனின்} எண்ணங்களை உறுதி செய்து கொண்ட பிரகாசத்தைச் செல்வமாகக் கொண்ட சூரியன், கர்ணனிடம் சென்றான். ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேஜயா}, அந்தணர்களுக்குத் தன்னை அர்ப்பணித்து, பேச்சில் உண்மை கொண்ட அந்த வீரன் {கர்ணன்}, இரவில், விலையுயர்ந்த விரிப்புகள் பரப்பிய ஆடம்பரக் கட்டிலில் வசதியாகப் படுத்திருந்த போது, தனது மகனின் {கர்ணனின்} மீது அன்பும் பாசமும் நிறைந்த அந்தப் பிரகாசமிக்கத் தேவன் {சூரியன்}, ஓ! பாரதா {ஜனமேஜயா}, அவனது {கர்ணனின்} கனவுகளில் தன்னை வெளிக்காட்டினான்.
தன் தவச் சக்தியின் மூலம், வேதங்களை அறிந்த ஓர் அழகான அந்தண உருவம் கொண்ட சூரியன், கர்ணனிடம் அவனின் {கர்ணனின்} நன்மைக்காக இனிமையான வார்த்தைகளில், “ஓ! மகனே, ஓ! கர்ணா, ஓ! உண்மை நிறைந்தவர்களில் முதன்மையானவனே, எனது வார்த்தைகளை நீ கேள்! ஓ! வலிய கரங்கள் கொண்டவனே, உன் மீது கொண்ட பாசத்தால், உனக்கு எது பெரும் நன்மை என்பதை நான் இன்று உனக்குச் சொல்கிறேன்! ஓ! கர்ணா, உனது காது குண்டலங்களை அடையும் நோக்குடனும், பாண்டு மகன்களின் நன்மையில் கொண்ட விருப்பத்தாலும், அந்தணனாகத் தன்னை மறைத்துக் கொண்டு சக்ரன் {இந்திரன்} உன்னிடம் வருவான்! பக்திமான்களால் கேட்கப்படும்போது, நீ கொடையளிப்பாய்; கொடை ஏற்கமாட்டாய்; அது உனது குணம் என்று அவனும் அறிவான்; உலகம் அனைத்தும் அறியும். ஓ மகனே {கர்ணா}, நீ உன்னிடம் கேட்கப்படும் செல்வத்தையோ, எந்தப் பிற பொருளையோ அந்தணர்களுக்குக் கொடுக்கிறாய். மேலும் நீ யாருக்கும் எதையும் மறுப்பதில்லை. இப்படிப்பட்டவன் நீ என்பதை அறிந்த பகனை அடக்கியவன் {இந்திரன்} உன்னிடம் உனது காது குண்டலங்களையும், கவசத்தையும் இரந்து பெற வருவான்.
அவன் உன்னிடம் காது குண்டலங்களை இரக்கும்போது {யாசிக்கும்போது}, நீ அவற்றை அவனுக்கு அளிப்பது தகாது. ஆனால், நீ உன்னால் இயன்ற அளவு இனிய பேச்சுகளால் அவனை மன நிறைவு கொள்ளச் செய்ய வேண்டும். இதுவே உனது தலையாய நன்மை! உன்னிடம் காதுகுண்டலங்களை {இந்திரன்} கேட்கும்போது, அதற்குப் பதிலாக ரத்தினங்கள், பெண்கள், பசுக்கள் மற்றும் பல்வேறு வகையான செல்வங்கள் ஆகியவற்றை அவனுக்கு வழங்கியும், பல்வேறு முன்னோடி நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டியும், பல்வேறு காரணங்களைச் சொல்லியும் அவற்றை {குண்டலங்களை} அடைய நினைக்கும் புரந்தரனிடம் {இந்திரனிடம்} மீண்டும் மீண்டும் நீ மறுக்க வேண்டும். ஓ! கர்ணா, நீ உன்னுடன் பிறந்த உனது அழகிய காது குண்டலங்களைக் கொடுத்துவிட்டால், உனது வாழ்நாள் குறுகி, நீ மரணத்தைச் சந்திப்பாய்! கவசமும் காதுகுண்டலங்களும் கொண்ட நீ, ஓ! மரியாதைகள் செய்பவனே {கர்ணா}, எதிரிகளால் போர்க்களத்தில் கொல்லப்பட இயலாதவானாக இருப்பாய். எனது வார்த்தைகளில் உனது இதயத்தை நிறுத்து! ரத்தினங்களால் இழைக்கப்பட்ட இந்த ஆபரணங்கள் அமுதத்தில் {தேவலோக அமிர்தத்தில்} இருந்து உதித்தவை. எனவே, உன் உயிர் மீது நீ அன்பு கொண்டிருப்பாயானால், அவை உன்னால் பாதுகாக்கப்பட வேண்டும்" என்றான் {சூரியன்}.
இந்த வார்த்தைகளைக் கேட்ட கர்ணன் {சூரியனிடம்}, “என்னிடம் இத்தகு கருணை காட்டும் நீ யார் என்பதைச் சொல்? உனக்கு விருப்பமுண்டானால், ஓ! சிறப்புமிக்கவனே, அந்தண உருவில் இருக்கும் நீ யார் என்பதை எனக்குச் சொல்?” என்று கேட்டான். அதற்கு அந்த அந்தணன், “ஓ! மகனே, நானே ஆயிரம் கதிர்கள் கொண்டவன் {சூரியன்}, பாசத்தாலேயே, நான் உனக்குப் பாதையைக் {நீ செய்ய வேண்டிய காரியத்தைக்} காட்டினேன்! அவ்வாறு செய்வதால் {சுட்டிக்காட்டிய பாதையில் செல்வதால்} உனக்கு மிகுந்த நன்மையுண்டாகும் என்று கொண்டு, எனது வார்த்தைகளின் படி செயல்படு!” என்றான். அதற்குக் கர்ணன் {சூரியனிடம்}, “பிரகாசத்தின் தேவன் {சூரியனான நீ}, என் நலம் நாடி, இன்று என்னிடம் பேசுவதே, நிச்சயமாக நான் அடைந்த உயர்ந்த நற்பேறாகும். எனினும், எனது இந்த வார்த்தைகளைக் கேள்! ஓ! வரங்களை அளிப்பவனே {சூரியனே}, பாசத்தால் மட்டுமே நான் இதை உன்னிடம் சொல்கிறேன். அது உனக்கு மனநிறைவைத் தரட்டும்! நான் உனக்கு அன்பானவனாக இருப்பின், என் நோன்பில் இருந்து நான் விலக்கப்படக்கூடாது! ஓ! பிரகாசத்தைச் செல்வமாகக் கொண்டவனே, மேன்மையான அந்தணர்களுக்கு எனது உயிரையும் கொடுக்கத் தயாராக இருப்பேன் என்ற எனது இந்த நோன்பு உண்மை நிறைந்தது {of a verity} என்பதை முழு உலகமும் அறியும்.
ஓ! விண்ணதிகாரிகள் அனைவரிலும் சிறந்தவனே, பாண்டு மகன்களின் நன்மைக்காகச் சக்ரன் {இந்திரன்}, ஓர் அந்தணனாக வேடந்தரித்து என்னிடம் இரந்து {யாசித்து-பிச்சைகேட்டு} வந்தால், ஓ! தேவர்களின் தலைவா {சூரியனே}, மூன்று உலகங்கள் முழுவதிலும் பரவியிருக்கும் எனது புகழ் பாதிக்கப்படாத வகையில், நான் எனது காது குண்டலங்களையும், சிறந்த கவசத்தையும் அவனுக்குக் {இந்திரனுக்குக்} கொடுப்பேன். உயிரைக் காத்துக் கொள்வதற்காகப் பழிக்கத்தக்க செயலைச் செய்வது எங்களைப் போன்றோருக்குத் தகாது. மாறாக, புகழைக் கொடுக்கும் சூழ்நிலையில், உலகால் புகழப்பட்டு மரணத்தைச் சந்திப்பதே எங்களைப் போன்றோருக்குச் சரியானதாகும். எனவே, நான் எனது காது குண்டலங்களையும், எனது கவசத்தையும் இந்திரனுக்கு அளிப்பேன்! பலனையும், விருத்திரனையும் கொன்றவன் {இந்திரன்}, பாண்டு மகன்களின் நன்மைக்காக {எனது} காது குண்டலங்களைக் கேட்க வந்தால், அதனால் எனக்குப் புகழே விளையும், அதே நேரத்தில் {அச்செயல்} அவனது {இந்திரனுக்கு} புகழ்க்கேட்டுக்கு வழி வகுக்கும்.
ஓ! பிரகாசம் கொண்டவனே {சூரியனே}, புகழுடையோர், தேவலோகங்களில் மகிழும் அதே வேளையில், அது {புகழ்} அற்றவர்கள் தொலைந்து போகிறார்கள் {நாசமடைகிறார்கள்}. எனவே, உயிரைக் கொடுத்துக் கொள்முதல் செய்ய வேண்டியிருந்தாலும், நான் இவ்வுலகத்தில் {அந்தப்} புகழையே விரும்புகிறேன். தாயைப் போல, புகழ், மனிதர்களை இவ்வுலகில் வாழ வைக்கிறது. அதே வேளையில், அழிவற்ற உடல்களுடன் திரிந்தாலும் புகழ்க்கேடு மனிதர்களைக் கொல்கிறது. ஓ! உலகங்களின் தலைவா, ஓ! பிரகாசத்தைச் செல்வமாகக் கொண்டவனே {சூரியனே}, “அடுத்த உலகில் புகழே ஒருவனுக்குத் தலையாய ஆதரவாகும். இந்த உலகில் தூய {பரிசுத்தமான} புகழே வாழ்நாளை அதிகரிக்கும்" என்று படைப்பாளனால் {பிரம்மனால்} பாடப்பட்ட ஒரு பழைய ஸ்லோகம், புகழே மனிதர்களுக்கு உயிர் என்பதற்குச் சாட்சியளிக்கிறது.
எனவே, என்னுடன் பிறந்த எனது காது குண்டலங்கள் மற்றும் கவசம் ஆகிய இவை இரண்டையும் அளிப்பதால், நான் நித்திய புகழை வெல்வேன்! மேலும் அதையே நியமத்தின் படி முறையாக அந்தணர்களுக்கு அளிப்பதாலும், போர் எனும் வேள்வியில் எனது உடலை (தேவர்களுக்குக் காணிக்கையாக) அளிப்பதாலும், செயற்கரிய கடினமான சாதனைகளை அடைவதாலும், போரில் எனது எதிரிகளை வெல்வதாலும், நான் புகழை அடைவேனேயன்றி வேறில்லை. போர்க்களத்தில் தங்கள் உயிருக்காகப் பிச்சை கேட்பவர்களின் அச்சங்களை அகற்றி, முதிர்ந்தவர்களையும், சிறுவர்களையும், அந்தணர்களையும் பயங்கரவாதம் மற்றும் பதட்டத்தில் இருந்து விடுவித்து, சிறந்த புகழையும், உயர்ந்த சொர்க்கத்தையும் நான் வெல்வேன். எனது உயிரையே தியாகம் செய்தாவது எனது புகழ் காக்கப்பட வேண்டும். இதையே எனது நோன்பாக அறிவாயாக! அந்தணனாக வேடமிட்டு வரும் மகவானுக்கு {இந்திரனுக்கு} இப்படிப்பட்ட மதிப்புமிக்கக் கொடையை அளிப்பதனால், ஓ தேவா {சூரியனே}, நான் இவ்வுலகில் மிக மேன்மையான நிலையை அடைவேன்" என்றான் {கர்ணன்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.