The weapon called Sakthi! | Vana Parva - Section 300 | Mahabharata In Tamil
(பதிவிரதா மாஹாத்மியப் பர்வத் தொடர்ச்சி)
இந்திரனுக்குக் கவசத்தையும் குண்டலங்களையும் கொடுக்கக் கர்ணன் சூரியனிடம் அனுமதி கோரியது; இந்திரனிடம் சக்தி ஆயுதத்தைப் பெற்றுக் கொண்டு குண்டலங்களையும், வசத்தையும் கொடுக்கும்படி கர்ணனுக்குச் சூரியன் அனுமதி கொடுத்தது...
கர்ணன் {சூரியனிடம்} சொன்னான், "ஓ! பிரகாசத்தின் தலைவா, நான் உன்னை வழிபடுபவன் என்பதை அறிவாயாக! ஓ! கடுங்கதிர்களைக் கொண்டவனே {சூரியனே}, என்னால் தானமாகக் கொடுக்க முடியாதது எதுவுமில்லை என்பதை நீ அறிவாய்! ஓ! பிரகாசத்தின் தலைவா {சூரியனே}, நான் உன் மீது கொண்டிருக்கும் பக்தியைப் போன்று, என் மனைவியரோ, என் மகன்களோ, எனது சுயமோ, எனது நண்பர்களோ, எனக்கு அன்புக்குரியவர்கள் {விருப்பமானவர்கள்} அல்ல. ஓ! ஒளியை உண்டாக்குபவனே {சூரியனே}, பெரும் ஆன்மா கொண்டவர்கள் {மகாத்மாக்கள்}, தங்கள் அன்புக்குரிய வழிபாட்டாளர்களிடம் அன்பு கொண்டிருக்கிறார்கள் என்பதை நீ அறிவாய். "கர்ணன் எனது பக்தனும் அன்பிற்குரியவனும் ஆவான். அவன் சொர்க்கத்தில் வேறு தெய்வத்தை {தேவனை} அறியமாட்டான்." என்று நினைத்தே, ஓ! தலைவா {சூரியா}, நீ எனக்கு நன்மையானதை என்னிடம் சொன்னாய். எனினும், ஓ! பிரகாசமான கதிர்கள் கொண்டவனே {பாஸ்கரனே, சூரியனே}, சிரம் தாழ்த்தி மீண்டும் நான் உன்னை வேண்டுகிறேன், மீண்டும் நான் உன் கைகளில் என்னை ஒப்புக்கொடுக்கிறேன். நான் ஏற்கனவே சொன்ன பதிலையே மீண்டும் உரைப்பேன். நீ என்னை மன்னிப்பதே தகும்!
பொய்மையைப் போல் மரணம் கூட எனக்குப் பயங்கரம் நிறைந்ததாக இல்லை {பொய்மைக்கு அஞ்சுகிறேன், மரணத்திற்கஞ்சவில்லை}. அந்தணர்களைப் பொறுத்தவரை, நான் அவர்களுக்காக எனது உயிரையும் கொடுக்கத் தயங்கமாட்டேன்! ஓ! தெய்வீகமானவனே {சூரியனே}, பாண்டுவின் மகனான பல்குனனை {அர்ஜுனனைக்} குறித்து நீ சொன்னதை மதிக்கிறேன். போர்க்களத்தில் நான் நிச்சயம் அர்ஜுனனை வெல்வேன் என்பதால், ஓ! பிரகாசத்தின் தலைவா {சூரியனே}, நீ என்னையும் அவனையும் தொட்டு, உனது இதயத்தில் தோன்றியிருக்கும் கவலையை அகற்றுவாயாக! ஓ! தெய்வமே {சூரியனே}, ஜமதக்னேயரிடமும் {பரசுராமரிடமும்}, உயர் ஆன்ம {மகாத்மாவான} துரோணரிடமும் பெரும் பலம் பெற்ற ஆயுதங்களை நான் பெற்றிருப்பது குறித்து நீ அறிவாய். ஓ! தேவர்களில் முதன்மையானவனே {சூரியனே}, எனது நோன்பைத் தொடர எனக்கு அனுமதி அளிப்பாயாக! வஜ்ரம் தாங்கியவன் {இந்திரன்} என்னிடம் இரந்து கேட்டு வரும்போது, நான் எனது உயிரையும் அவனுக்குக் கொடுப்பேன்." என்று சொன்னான் {கர்ணன்}.
சூரியன் {கர்ணனிடம்}, "ஓ! மகனே {கர்ணா}, வஜ்ரத்தைத் தாங்கியிருப்பவனுக்கு உனது காது குண்டலங்களைக் கொடுத்தால், ஓ! வலிமைமிக்கவனே, நீ வெற்றியடையும் நோக்கத்திற்காக அவனிடம் {இந்திரனிடம்}, "ஓ! நூறு வேள்விகள் செய்தவனே {இந்திரனே}, நான் ஒரு நிபந்தனையின் பேரில் காது குண்டலங்களை அளிப்பேன்" என்று சொல். காது குண்டலங்களுடன் இருக்கும்போது, உன்னை எந்த உயிரினத்தாலும் கொல்ல முடியாது என்பது நிச்சயம். எனவே, ஓ! மகனே {கர்ணா}, போர்க்களத்தில் அர்ஜுனன் உன்னைக் கொல்வதைக் காண விரும்பியே, தானவர்களை அழிப்பவன் {இந்திரன்}, உன்னை உனது காது குண்டலங்களை இழக்கச் செய்ய விரும்புகிறான்.
வீழ்த்துவதற்கு இயலாத ஆயுதங்களைத் தாங்கியிருக்கும் தேவர்கள் தலைவனான புரந்தரனை {இந்திரனை} உண்மையான வார்த்தைகளால் மீண்டும் மீண்டும் புகழ்ந்து {இந்திரனிடம்}, "எதிரிகள் அனைவரையும் கொல்லும் திறன் கொண்டதும், இலக்கு தவறாததுமான ஒரு கணையை {சக்தி ஆயுதம்} நீ எனக்குக் கொடு. நானும், ஓ! ஆயிரங்கண் தெய்வமே {இந்திரா}, சிறந்த கவசத்துடன் சேர்த்து, காது குண்டலங்களையும் உனக்குக் கொடுக்கிறேன்" என்று வேண்டிக் கேள். இந்த நிபந்தனையின் பேரிலேயே சக்ரனுக்கு {இந்திரனுக்கு} நீ காது குண்டலங்களைக் கொடுக்க வேண்டும். ஓ! கர்ணா, அந்தக் கணையைக் கொண்டு, போர்க்களத்தில் நீ உனது எதிர்களைக் கொல்லலாம். ஓ! வலிய கரங்கள் கொண்டவனே {கர்ணா}, தேவர்கள் தலைவனின் {இந்திரனின்} கணை, எதிரிகளை நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் கொல்லாமல், எய்தவன் கரங்களுக்குத் திரும்பாது!" என்றான் {சூரியன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இதைச் சொன்ன அந்த ஆயிரங்கதிர் தெய்வம் {சூரியன்} திடீரென மறைந்து போனான். அடுத்த நாள், தனது துதிகளைச் சொன்ன பிறகு, கர்ணன் தனது கனவை சூரியனிடம் சொன்னான். விருஷன் {கர்ணன்} தான் கண்ட காட்சியில் கண்டவற்றையும், அவர்களுக்குள் {சூரியனுக்கும் கர்ணனுக்கும் இடையில்} அன்று இரவு நடந்தது அத்தனையும் சொன்னான். அதன் பிறகு, அனைத்தையும் கேட்ட சுவர்ணபானுவின் {ராகுவின்} எதிரியான தலைவனும் {சூரியனும்}, ஒளிபொருந்தியவனும், தெய்வீகமானவனுமான சூரியன், அவனிடம் {கர்ணனிடம்} புன்னகையுடன், "அப்படியே!" என்றான். பிறகு எதிரி வீரர்களைக் கொல்பவனான ராதையின் மகன் {கர்ணன்} இக்காரியம் குறித்து அனைத்தையும் அறிந்து, அந்தக் கணையை {சக்தி ஆயுதத்தை} அடைய விரும்பி, வாசவனை {இந்திரனை} எதிர்பார்த்துக் காத்திருந்தான்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.