“I'll be a courtier” said Yudhishthira! | Virata Parva - Section 1 | Mahabharata In Tamil
(பாண்டவ பிரவேச பர்வம் - 1)
இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
பதிவின் சுருக்கம் : தம்பிகளுடன் ஆலோசித்த யுதிஷ்டிரன் விராட நாட்டிற்குப் போக உறுதி செய்தது; கங்கன் என்ற பெயரில் விராட மன்னனின் அரசவை உறுப்பினராகப் போகவதாக யுதிஷ்டிரன் சொன்னது....
ஓம்! நாராயணனையும், மனிதர்களில் மேன்மையான {புருஷோத்தமனான} நரனையும், சரஸ்வதி தேவியையும் பணிந்து ஜெயம் என்ற சொல் {மஹாபாரதம் என்ற இதிகாசம்} சொல்லப்பட வேண்டும். {இங்கு ஜெயம் என்று குறிப்பிடப்படுவது - அதர்மத்தை தர்மம் வென்ற கௌரவ மற்றும் பாண்டவர்களின் கதையே ஆகும்.}
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “துரியோதனன் மீது பயம் கொண்ட எனது முப்பாட்டன்கள் {பாண்டவர்கள்}, கண்டறியப்படாமல் இருக்க வேண்டிய தங்களது காலத்தை எப்படி விராட நகரத்தில் கழித்தார்கள்? மேலும், ஓ! அந்தணரே {வைசம்பாயனரே}, துயரத்தால் பாதிக்கப்பட்டு, தனது தலைவர்களுக்குத் தன்னை அர்ப்பணித்து, எப்போதும் தெய்வத்தை வணங்கி [1] வந்த, மேலான அருள்பெற்ற திரௌபதி, கண்டறியப்படாமல் கழிக்க வேண்டிய தனது காலத்தை எப்படி கழித்தாள்?” என்று கேட்டான்.
[1] "Brahma Vadini--Nilakantha explains this as Krishna-kirtanasila. பிரம்ம வாதினி - நீலகண்டர் இதை கிருஷ்ண கீர்த்தனாசிலா என்று சொல்கிறார்" என்கிறார் கங்குலி.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மனிதர்களின் தலைவா {ஜனமேஜயா}, உனது முப்பாட்டன்கள், தங்கள் கண்டறியக்கூடாத காலத்தை விராடத்தில் எப்படிக் கழித்தார்கள் என்பதைக் கேள். நீதியின் தேவனிடம் {தர்மதேவனிடம்} இப்படி வரங்களைப் பெற்ற யுதிஷ்டிரன், ஆசிரமத்திற்குத் திரும்பி, என்ன நடந்தது என்ற அனைத்தையும் அந்தணர்களுக்கு உரைத்தான். அவர்களுக்கு அப்படி அனைத்தையும் உரைத்த யுதிஷ்டிரன், பிறகு, கடைக்கோலையும், அரணிகளையும் கேட்டு வந்த அந்தணரிடம் சென்றான். ஓ! பாரதா {ஜனமேஜயா}, நீதி தேவனின் {தர்மதேவனான யமனின்} அரசமகனான உயர் ஆன்மா கொண்ட யுதிஷ்டிரன், தனது தம்பிகள் அனைவரையும் அழைத்து, அவர்களிடம், “நாட்டை இழந்து, கானக வாசம் புரிந்து, பனிரெண்டு {12) வருடங்களைக் கழித்துவிட்டோம். கழிப்பதற்கு கடினமான பதிமூன்றாவது {13வது} வருடம் வந்துவிட்டது. எனவே, குந்தியின் மகனே, ஓ! அர்ஜுனா, நாம் எதிரிகளால் கண்டறியப்படாமல் நமது நாட்களைக் கழிக்க உகந்த இடத்தைத் தேர்ந்தெடு" என்று கேட்டான்.
அதற்கு அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்}, “தர்மர் {யமன்} அளித்த வரத்தின் அறத்தால், ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரரே}, மனிதர்களால் கண்டறியப்படாமலேயே நாம் உலவலாம். இருப்பினும், நாம் வசிப்பதற்கேற்ற சில காண்பதற்கினிய ஒதுக்குப்புறமான இடங்களை நான் குறிப்பிடுகிறேன். அவற்றில் ஒன்றை நீர் தேர்ந்தெடுக்கலாம். குருக்களின் நாட்டைச் {குருஜாங்கலத்தைச்} சூழ்ந்து, பாஞ்சாலம், சேதி, மத்ஸ்யம், சூரசேனம், பட்டாச்சரம், தசார்ணம், நவராஷ்டிரம், மல்லம். சால்வம், யுகாந்தரம், சௌராஷ்டிரம், அவந்தி, பரந்திருக்கும் குந்திராஷ்டிரம் ஆகிய சோளம் நிறைந்த நாடுகள் இருக்கின்றன. {பாஞ்சாலம், மத்ஸ்யம், ஸால்வம், வைதேஹம், பாஹ்லீகம், தசார்ணம், சூரசேனம், கலிங்கம், மகதம் என்று வேறு பதிப்புகளில் இருக்கின்றன}. ஓ! மன்னா, ஓ! ஏகாதிபதிகளில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, இவற்றில் நீர் எதைத் தேர்ந்தெடுத்து, இந்த வருடத்தைக் கழிக்கப் போகிறீர்?” என்று கேட்டான்.
யுதிஷ்டிரன் {அர்ஜுனனிடம்}, “ஓ! வலிமைமிக்க கரங்கள் கொண்டவனே {அர்ஜுனா}, நீ சொன்னவாறே அவை இருக்கின்றன. அனைத்து உயிரினங்களும் வணங்கத்தக்கத் தலைவன் {தர்மதேவனான யமன்} சொன்னது உண்மையாக வேண்டும். ஒருவருக்கொருவர் கலந்தாலோசித்த பிறகு, காண்பதற்கினிய மங்களகரமான, எற்புடைய, அச்சமற்று நாம் வாழக்கூடிய ஒரு பகுதியை நமது வசிப்பிடமாக நாம் நிச்சயம் தேர்ந்தெடுக்க வேண்டும். மத்ஸ்யத்தின் {மத்ஸ்ய நாட்டின்} மன்னனான முதிர்ந்த விராடன் அறம்சார்ந்தவனாகவும், சக்தியுள்ளவனாகவும், தொண்டுள்ளம் கொண்டவனாகவும், அனைவராலும் விரும்பப்படுபவனாகவும் இருக்கிறான். மேலும், அவன் பாண்டவர்களிடம் அன்புள்ளவனாகவும் இருக்கிறான். ஓ! குழந்தாய், ஓ! பாரதா {அர்ஜுனா}, அவனைச் சேவித்து நாம் விராட நகரத்தில் இவ்வருடத்தைக் கழிக்கலாம். ஓ! குரு குலத்தின் மகன்களே {பாண்டவர்களே}, மத்ஸ்யர்களின் மன்னன் முன்பு நீங்கள் உங்களை எப்படிப்பட்ட திறமைகள் கொண்டவர்களாக முன்வைக்கப் போகிறீர்கள் என்பதை எனக்குச் சொல்லுங்கள்!” என்று கேட்டான்.
அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! மனிதர்களில் தேவனே {யுதிஷ்டிரரே}, விராட நாட்டில் நீர் என்ன சேவை செய்வீர்? ஓ! நீதிமானே {யுதிஷ்டிரரே}, எந்தத் திறனைக் கொண்டு நீர் விராட நகரத்தில் வசிப்பீர்? நீர் மென்மையானவராகவும், தொண்டுள்ளம் கொண்டவராகவும், பணிவானவராகவும், அறம்சார்ந்தவராகவும், உண்மையில் நிலை கொண்டவராகவும் இருக்கிறீர். இப்படித் துயரால் பாதிக்கப்பட்டிருக்கும் நீர், ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, என்ன செய்வீர்? ஒரு இயல்பான மனிதனைப் போல இடர்களைத் தாங்கும் தகுதி ஒரு மன்னனுக்கு உண்டா? உம்மைப் பீடித்திருக்கும் பேரிடரை நீர் எப்படி கடக்கப் போகிறீர்?” என்று கேட்டான்.
யுதிஷ்டிரன் {தன் தம்பிகளிடம்}, “குருகுலத்தின் மகன்களே, மனிதர்களில் காளைகளே {பாண்டவர்களே}, மன்னன் விராடன் முன்பு தோன்றும்போது நான் என்ன செய்வேன் என்பதைக் கேளுங்கள். பகடையில் நிபுணத்துவமும், விளையாட்டில் {சூதாடுவதில்} ஆர்வமும் கொண்ட கங்கன் என்ற பெயர் கொண்ட ஓர் அந்தணனாக என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, அந்த உயர் ஆன்ம {மகாத்மாவான} மன்னனின் அரசவை உறுப்பினராவேன் {I shall become a courtier}. கருப்பு மற்றும் சிவப்பு நிறம் கொண்ட பாச்சிகைகளை உருட்டி, நீலம், மஞ்சள், சிவப்பு மற்றும் வெள்ளை நிறம் கொண்ட தந்தங்களால் செய்யப்பட்ட சிப்பாய்களை சதுரங்கப் பலகைகளில் {சாரிகைகளில்} நகர்த்தி, அரசவை உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் கூடிய மன்னனை மகிழ்விக்கப் போகிறேன். அப்படி மன்னனை நான் மகிழ்வித்துக் கொண்டிருக்கும்போது யாரும் என்னைக் கண்டுபிடிப்பதில் வெல்ல மாட்டார்கள். அந்த ஏகாதிபதி {விராடன்} என்னிடம் கேட்டால், “முன்பு, நான் யுதிஷ்டிரருக்கு இதயத் தோழனாக இருந்தேன்" என்று சொல்வேன். இப்படியே நான் எனது நாட்களை (விராட நகரத்தில்) கடத்துவேன் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஓ! விருகோதரா {பீமா}, விராட நகரத்தில் நீ என்ன அலுவலை நிறைவேற்றுவாய்?” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.