Showing posts with label பாண்டவ பிரவேச பர்வம். Show all posts
Showing posts with label பாண்டவ பிரவேச பர்வம். Show all posts

Sunday, November 02, 2014

கிரந்திகனான நகுலன்! - விராட பர்வம் பகுதி 12

Nakula as Granthika! | Virata Parva - Section 12 | Mahabharata In Tamil

(பாண்டவ பிரவேச பர்வத் தொடர்ச்சி - 12)


இப்பதிவின் இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண

பதிவின் சுருக்கம் : நகுலன் விராடன் சந்திப்பு; நகுலனை தனது குதிரைகளின் காப்பாளராக மன்னன் விராடன் நியமிப்பது.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “சிறிது நேரம் கழித்து, பாண்டுவின் மற்றொரு பலமிக்க மகன் {நகுலன்} மன்னன் விராடனிடம் விரைவாகச் சென்ற காட்சி காணப்பட்டது. அவன் {நகுலன்} அப்படி முன்னேறிச் செல்கையில் மேகங்களில் இருந்து வெளிப்படும் சூரியனைப் போல அனைவருக்கும் தெரிந்தான். அவன் {நகுலன்} சுற்றிலும் இருந்த குதிரைகளைக் கண்காணிக்க ஆரம்பித்தான். இதைக் கண்ட மத்ஸ்யர்களின் மன்னன் {விராடன்} தனது தொண்டர்களிடம், “தேவனைப் போன்ற பிரகாசமிக்க அந்த மனிதன் எங்கிருந்து வந்தான், என்று அதிசயிக்கிறேன். அவன் எனது குதிரைகளைக் கவனமாக நோக்குகிறான். நிச்சயமாக அவன் குதிரை சாத்திரங்களில் கைதேர்ந்தவனாக இருக்க வேண்டும். விரைவில் அவனை எனது முன்னிலைக்குக் கொண்டு வாருங்கள். அவன் போர்வீரனாகவும் தேவனாகவும் தெரிகிறான்!” என்றான் {விராடன்}. அந்த எதிரிகளை அழிப்பவன் {நகுலன்} மன்னனிடம் {விராடனிடம்} சென்று, “ஓ! மன்னா {விராடரே}, வெற்றி உமதாகட்டும். நீர் அருளப்பட்டிரும். குதிரை பயிற்சியாளராக, நான் எப்போதும் மன்னர்களால் பெரிதும் மதிக்கப்பட்டிருக்கிறேன். நான் உமது குதிரைகளைப் புத்திசாலித்தனமாகப் பாதுகாப்பேன்" என்றான் {நகுலன்}.


விராடன் {நகுலனிடம்}, “நான் உனக்கு வாகனங்களையும், செல்வத்தையும், பரந்த இடங்களையும் கொடுப்பேன். நீ எனது குதிரைகளைப் பார்க்கும் மேலாளராவாய். ஆனால் முதலில் நீ எங்கிருந்து வருகிறாய்? நீ யார்? நீ எப்படி இங்கு வந்தாய்? என்பனவற்றைச் சொல். நீ நிபுணத்துவம் கொண்ட கலைகள் அனைத்தையும் எங்களுக்குச் சொல்" என்று கேட்டான் {விராடன்}. அதற்கு நகுலன் {விராடனிடம்}, “ஓ! எதிரிகளைச் சிதைப்பவரே {விராடரே}, பாண்டு மகன்கள் ஐவரில் யுதிஷ்டிரரே மூத்த அண்ணன் என்பதை அறிந்து கொள்ளும். முன்பு நான் அவரால் {யுதிஷ்டிரரால்} குதிரை பாதுகாவலனாக நியமிக்கப்பட்டிருந்தேன். குதிரைகளின் குணங்களை நான் நன்கு அறிவேன். அவற்றை உடைக்கும் கலையை முறையாக நான் அறிவேன். தீய குதிரைகளைச் சரி செய்வது எப்படி என்பதையும், அவற்றின் நோய்களைத் தீர்க்கும் முறைகளையும் நான் அறிவேன். என் கைகளில் இருக்கும் எந்த விலங்கையும் பலவீனமோ நோயோ அண்டாது. குதிரைகளைப் பற்றிப் பேச வேண்டாம்; என் கைகளில் இருக்கும் பெண்குதிரைகள் கூடத் தீயதாக அறியப்படாது. மக்கள் என்னைக் கிரந்திகன் {Granthika}என்ற பெயரில் அழைத்தார்கள், பாண்டுவின் மகனான யுதிஷ்டிரரும் என்னை அப்படியே அழைத்தார்" என்றான் {நகுலன்}.

விராடன் {நகுலனிடம்}, “நான் கொண்டிருக்கும் குதிரைகள் அனைத்தும் இன்றிலிருந்து உனக்கு அளிக்கப்படுகின்றன. குதிரைகளைக் காப்பவர்கள் அனைவரும், எனது தேரோட்டிகள் அனைவரும் இன்றிலிருந்து உனக்குத் துணைவர்களாக இருப்பார்கள். இது உனக்குத் தகுந்ததாக இருந்தால், நீ என்ன ஊதியம் விரும்புகிறாய் என்பதைச் சொல். ஆனால், ஓ! தேவனைப் போன்றிருப்பவனே {கிரந்திகா}, குதிரை அதிகாரியின் அலுவல் உனக்குத் தகாது. நீ மன்னனைப் போலத் தெரிகிறாய். நான் உன்னை மிகவும் மதிக்கிறேன். யுதிஷ்டிரனே இங்கு இருப்பது போல உனது தோற்றம் என்னை மகிழச் செய்கிறது. இகழத்தகாத அவன் {யுதிஷ்டிரன்} பணியாட்கள் இல்லாமல் காட்டில் வசித்து எப்படி உலவிக் கொண்டிருக்கிறானோ" என்றான் {விராடன்}.


வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “கந்தர்வர்கள் தலைவனைப் போல இருந்த அந்த இளைஞன் {{Granthika - கிரந்திகனான நகுலன்}, மகிழ்ச்சி நிறைந்த மன்னன் விராடனால் இப்படியே மரியாதையுடன் நடத்தப்பட்டான். யார் காட்சி கிடைத்தால் எந்தக் காரியமும் கனியற்றது ஆகாதோ {பலனற்றது ஆகாதோ} அந்தப் பாண்டுவின் மகன்கள், இந்த வகையில் தான் மத்ஸ்யர்களின் நாட்டில் வாழ்ந்தனர்.
*கடல்களைக் கச்சையாக அணிந்த பூமியின் தலைவர்கள் {பாண்டவர்கள்}, வருந்தத்தக்க துன்பங்கள் ஒருபுறமிருப்பினும் தங்கள் உறுதிமொழிகளுக்கு உண்மையாக இருந்து, தங்கள் மறைநிலை நாட்களைப் பெரும் அமைதியுடன் கழித்தார்கள்.{என்றார் வைசம்பாயனர்}.

*********பாண்டவ பிரவேச பர்வம் முற்றிற்று*********

*********************************************************************************
குறிப்பு:
*கடல்களைக் கச்சையாக அணிந்த பூமியின்..........

இதிலிருந்து நாம் அறிவது என்னவெனில், இந்த மஹாபாரதம் இயற்றப்பட்டு குறைந்தது 4500 வருடங்களாவது இருக்கும் என கணிக்கப்படுகிறது. அத்தகைய தொன்மைவாய்ந்த காலத்திலேயே இந்த பூமியின் வடிவானது தட்டையானது அல்ல என்று இந்த பாரத கண்டத்திலுள்ள அறிஞர் பெருமக்களால் அறியப்பட்டுள்ளது என்பதனை நாம் உணரலாம். வியாசர், கடல்களை என்று பன்மையில் சுட்டிக்காட்டுகிறார். கடல் ஒரே பரப்பாக இருந்தாலும், வேறு வேறு இடங்களில் வேறு வேறு பெயர்களிலேயே அழைக்கப்படுகிறது. அதையே அப்படி பன்மையாகச் சுட்டிக் காட்டுகிறார் என்று ஏற்கலாம். 

தற்காலத்தில் அவற்றின் {கடல்களின்} பெயர்கள் சில... இந்திய பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல் ஆகிய பெருங்கடல்களாகவும், அரபிக் கடல் போன்ற சில சிறுங்கடல்களாகவும், வங்காள விரிகுடா போன்ற வளைகுடாக்களாகவும் உலகைச் சுற்றிய கடலானது நிலப்பரப்பினைக் கொண்டு பகுதி பகுதியாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Saturday, November 01, 2014

பிருஹந்நளையான அர்ஜுனன்! - விராட பர்வம் பகுதி 11

Vrihannala! | Virata Parva - Section 11 | Mahabharata In Tamil

(பாண்டவ பிரவேச பர்வத் தொடர்ச்சி - 11)

இப்பதிவின் இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண

பதிவின் சுருக்கம் : அலியின் வடிவத்தில் விராடனிடம் சென்ற அர்ஜுனன்; தோற்றத்தைக் கண்டு சந்தேகித்த விராடன், பெண்களைக் கொண்டு பிருஹந்நளை என்ற அர்ஜுனனைச் சோதித்தது; பின்பு அந்தப்புரத்திற்குள் அனுமதிப்பது; உத்தரைக்கும், அவளது தோழிகளுக்கும் பிருஹந்நளை நர்த்தனம் பயிற்றுவிப்பது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “அடுத்ததாக, மிகப் பெரிய உருவம் கொண்டவனும், பெண்களின் ஆபரணங்களையும், பெரிய காது வளையங்களையும், தங்கத்தால் தீட்டப்பட்ட அழகான சங்கு கடகங்களையும் {#} அணிந்தவனுமான மற்றொருவன் மதில்சுவர்களின் வாயிலில் தோன்றினான். கழுத்தில் மிதக்கும் நீண்ட அபரிமிதமான முடியுடன் அந்தப் பெரும் பலம்வாய்ந்த கரங்கள் கொண்டவன் நடந்த நடை யானையின் நடையைப் போன்று இருந்தது. தனது நடையால் பூமியைக் குலுக்கிய வண்ணம் விராடனை அணுகிய அவன் {அர்ஜுனன்}, அவனின் {விராடனின்} சபையில் நின்றான்.

தனது உண்மை உருவை மறைத்து, வேடம் தரித்து வந்த அந்த எதிரிகளை வதைப்பவன் {அர்ஜுனன்}, சபா மண்டபத்தில் நுழைந்து, அந்த ஏகாதிபதியை {விராடனை} அணுகிய போது, பெரும் காந்தியும், யானை நடையும் கொண்ட அந்தப் பெரும் இந்திரனின் மகனைக் {அர்ஜுனனைக்} கண்ட மன்னன் {விராடன்} தனது சபை உறுப்பினர்களிடம், “இந்த மனிதன் எங்கிருந்து வருகிறான்? இவனைக் குறித்து நான் இதற்குமுன் கேள்விப்பட்டதில்லையே" என்று கேட்டான்.


அங்கிருந்தவர்கள் புதிதாக வந்தவன் {அர்ஜுனன்} தாங்கள் அறியாதவன் என்று பேசிக்கொண்டிருந்தபோது மன்னன் {விராடன்} ஆச்சரியத்துடன், “பெரும் பலம் கொண்ட நீ தேவனைப் போல இருக்கிறாய். இளமையும் கரிய நிறமும் கொண்ட நீ யானைக்கூட்டத்தின் தலைவனைப் போல இருக்கிறாய். தங்கத்தால் இழைக்கப்பட்ட சங்கு கடகங்களையும், பின்னலையும், காது வளையங்களையும் அணிந்திருக்கும் நீ, கவசமும், வில்லும், கணைகளும் தரித்தும், மலர்மாலை அணிந்தும் மெல்லிய கேசத்துடன் தேரை ஓட்டிச் செல்பவர்களில் ஒருவன் போலப் பிரகாசிக்கிறாய்.சுமைகளை ஒப்படைத்துவிட விரும்பும் முதிர்ந்த வயதினன் நான். நீ எனக்கு மகனாக இருந்து, அனைத்து மத்ஸ்யர்களையும் {Matsyas} என்னைப் போலவே ஆட்சி செய்வாயாக. உன்னைப் போன்ற ஒருவன் நிச்சயம் அலியாக இருக்க முடியாது என்று எனக்குத் தோன்றுகிறது" என்றான் {விராடன்}.

அர்ஜுனன் {மன்னன் விராடனிம்}, “நான் பாடுவேன், ஆடுவேன், இசைக்கருவிகளை வாசிப்பேன். நான் நடனத்தில் கைதேர்ந்திருக்கிறேன். பாடலில் திறமை பெற்றிருக்கிறேன். ஓ! மனிதர்களின் தலைவா {விராடரே}, என்னை (இளவரசி) உத்தரைக்கு நியமியும். நான் அந்த அரச கன்னிக்கு நர்த்தனகுருவாக {ஆடல் கலை புகட்டும் ஆசிரியர்} இருப்பேன். நான் இந்த வடிவம் கொண்ட காரணத்தைக் கேட்பது, எனது வலியை மட்டுமே அதிகரிக்கும் எனும்போது, அதைக் குறித்துக் கேட்பது உமக்கு என்ன பலனைக் கொடுத்துவிடும்? ஓ! மனிதர்களின் மன்னா {விராடரே}, தந்தையோ தாயோ இல்லாத மகனான, அல்லது மகளான என்னைப் பிருஹந்நளை {Vrihannala} என்று அறிந்து கொள்ளும்" என்றான் {அர்ஜுனன்}.

விராடன் {அர்ஜுனனிடம்},ஓ! பிருஹந்நளை, நீ விரும்பியதை நான் கொடுக்கிறேன். எனது மகளுக்கும் {உத்தரைக்கும்}, அவளைப் போன்றோருக்கும் ஆடல்கலையைக் கற்பி. எனினும், இந்த அலுவல் உனக்குத் தகாது என்றே தோன்றுகிறது. கடல்சூழ்ந்த முழு உலகத்திற்கும் {முழு உலகத்தின் ஆட்சிக்கும்} நீ தகுந்தவன்" என்றான் {மன்னன் விராடன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு மத்ஸ்யர்களின் {Matsyas} மன்னன் {விராடன்}, தனது பல்வேறு அமைச்சர்களுடன் ஆலோசித்து, பிருஹந்நளையை ஆடலிலும், பாடலிலும், பிற நுண்கலைகளிலும் சோதித்த பிறகு, பெண்களைக் கொண்டு அவனை {அர்ஜுனனை} முழுமையாகச் சோதித்தான். அவனது அலித்தன்மை நிரந்தர இயல்பு கொண்டது என்பதை அறிந்த பிறகு, அவன் {விராடன்} அவனை {பிருஹந்நளையான அர்ஜுனனை} கன்னியரின் அந்தப்புரத்திற்கு அனுப்பி வைத்தான். அங்கே அந்த வலிமைமிக்க அர்ஜுனன், விராடனின் மகளுக்கும், அவளது தோழிகளுக்கும், அவளது பணிப்பெண்களுக்கும் பாட்டும், கருவி இசையும் கற்பித்து விரைவில் அவர்களிடம் நல்ல பெயரை வென்றெடுத்தான். இப்படியே கவலையற்றவனாக அர்ஜுனன் அங்கே மாறுவேடத்தில் வாழ்ந்து, அவர்களின் துணையில் இன்பம் கொண்டு, அரண்மனைக்குள்ளும், வெளியேயும் மக்களால் அறியப்படாது இருந்தான்”{என்றார் வைசம்பாயனர்}.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Friday, October 31, 2014

இடையனான சகாதேவன்! - விராட பர்வம் பகுதி 10

Sahadeva became a cowherd! | Virata Parva - Section 10 | Mahabharata In Tamil

(பாண்டவ பிரவேச பர்வத் தொடர்ச்சி - 10)

இப்பதிவின் இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண


பதிவின் சுருக்கம் : இடையன் வேடத்தில் சகாதேவன் விராடனின் முன்னிலைக்கு வருவது; சகாதேவனைக் குறித்து விராடன் விசாரித்தல்; சகாதேவன் விராடனிடம் கோரிய பணி; விரும்பிய பணியில் நியமிக்கப்பட்ட சகாதேவன்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இடையரின் ஆடை உடுத்தி, இடையர்களின் பேச்சுவழக்கைப் பேசிக் கொண்டு, விராட நகரத்தின் மந்தைவெளிக்கு வந்தான் சகாதேவன். காந்தியுடன் பிரகாசித்த அந்த மனிதர்களில் காளையைக் கண்ட மன்னன் {விராடன்}, திகைப்படைந்தான். பிறகு அவன் {விராடன்} தனது ஆட்களை அனுப்பிச் சகாதேவனை அழைத்தான். அவன் {சகாதேவன்} வந்ததும், மன்னன் {விராடன்} அவனிடம் {சகாதேவனிடம்}, “நீ யாருக்கு உடையவன்? நீ எங்கிருந்து வருகிறாய்? நீ என்ன வேலையை எதிர்பார்க்கிறாய்? உன்னை இதற்கு முன் நான் கண்டதில்லையே! ஓ! மனிதர்களில் காளையே, உன்னைக் குறித்த உண்மையை எனக்குச் சொல்" என்றான் {மன்னன் விராடன்}.


மன்னனின் {விராட மன்னனின்} முன்னிலைக்கு வந்த எதிரிகளைத் துன்புறுத்துபவனான சகாதேவன், ஆழ்ந்த குரலில் மேகம் போலக் கர்ஜித்து, “நான் ஒரு வைசியன். எனது பெயர் அரிஷ்டநேமியாகும். குருகுலத்தின் காளைகளான பாண்டுவின் மகன்களால் நான் காளைகளைப் பராமரிக்கும் இடையனாக நியமிக்கப்பட்டிருந்தேன். ஓ! மனிதர்களில் முதன்மையானவரே {விராடரே}, மன்னர்களில் சிம்மங்களான அந்தப் பிருதையின் {Pritha -குந்தியின்} மகன்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை நான் அறியாததால், நான் உம்மை அண்டி வாழ விரும்புகிறேன். சேவை செய்யாமல் என்னால் வாழ இயலாது. ஓ! மன்னா {விராடரே}, நான் உம்மைத் தவிர வேறு எவருக்கும் சேவை செய்ய விரும்பவில்லை" என்றான் {சகாதேவன்}.

இந்த வார்த்தைகளைக் கேட்ட விராடன், “நீ அந்தணனாகவோ, க்ஷத்திரியனாகவோ இருக்க வேண்டும். கடல் சூழ்ந்த முழு உலகத்துக்கும் தலைவனைப் போல நீ தெரிகிறாய். ஓ! எதிரிகளைச் சிதைப்பவனே, எனக்கு உண்மையைச் சொல். வைசியரின் அலுவல் {வேலை} உனக்குத் தகாதது. நீ எந்த மன்னனின் பகுதியில் இருந்து வருகிறாய் என்றும், நீ என்ன அறிவாய் என்றும், என்ன திறனுடன் நீ எங்களிடம் இருக்கப் போகிறாய் என்றும், என்ன கூலியை நீ ஏற்பாய் என்றும் எனக்குச் சொல்" என்றான் {மன்னன் விராடன்}.

சகாதேவன் {மன்னன் விராடனிடம்}, “பாண்டுவின் ஐந்து மகன்களில் மூத்தவரான யுதிஷ்டிரர், பசுக்களைப் பத்தாயிரமாகவும் {10,000}, இன்னுமொரு பத்தாயிரமாகவும் {10,000}, மேலும் இருபதாயிரமாகவும் {20,000} என இப்படியே எட்டு லட்சத்துப் பத்தாயிரம் {8,10,000} எண்ணிக்கையிலான பசுக்களை ஒரு பகுதியாக {8,10,000} வைத்திருந்தார். அந்தக் கால்நடைகளைக் காக்கும் பணியில் நான் நியமிக்கப்பட்டிருந்தேன். மக்கள் என்னைத் தந்திரீபாலன் என்று அழைப்பது வழக்கமாகும். பத்து யோஜனைக்குள் வாழும், கணக்கெடுக்கப்பட்ட பசுக்கள் அனைத்தின் நிகழ்காலம், கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தை நான் அறிவேன். என்னிடம் நல்ல மன நிறைவு கொண்டவரும், சிறப்புமிக்கவருமான குரு மன்னர் யுதிஷ்டிரர் எனது நற்தகுதிகளை அறிவார். குறுகிய காலத்திற்குள் பசுக்களின் எண்ணிக்கையைப் பெருக்கும் வழிமுறைகளையும், அவற்றை {பசுக்களை} நோயில் இருந்து காக்கும் உபாயத்தையும் நான் அறிவேன். இந்தக் கலைகளையே நான் அறிந்திருக்கிறேன். எத்தகைய காளைகளின் சிறுநீர் வாசமே கூட, மலடையும் {மலட்டுப் பசுவையும்} கன்று ஈன வைக்குமோ, மனிதர்களால் வழிபடப்படும் அத்தகைய காளைகளின் மங்களக்குறிகளைக் கொண்டு, அவற்றை என்னால் இனம் பிரிக்க முடியும்" என்றான் {சகாதேவன்}.

விராடன் {சகாதேவனிடம்}, “தனித்துவமானவை எனப் பிரிக்கப்பட்ட ஒரு லட்சம் பசுக்கள் {1,00,000 – நூறாயிரம்} என்னிடம் இருக்கின்றன. அவற்றையும், அவற்றைப் பாதுகாப்பவர்களையும் உன் பொறுப்புக்குள் வைக்கிறேன். இனிமேல் என் விலங்குகள் உனது பாதுகாப்பில் இருக்கும்" என்றான் {மன்னன் விராடன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “பிறகு, ஓ! மன்னா {ஜனமேஜயா}, மனிதர்களில் தலைவனான சகாதேவன், விராடனால் பராமரிக்கப்பட்டு, அந்த ஏகாதிபதியால் கண்டுபிடிக்கப்படாதவாறு மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்தான். (அவனது சகோதரர்களைத் தவிர- பாண்டவர்களைத் தவிர} வேறு யாராலும் அவனை {சகாதேவனை} அடையாளம் காண முடியவில்லை". {என்றார் வைசம்பாயனர்}.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Thursday, October 30, 2014

தலை முடிந்தாள் திரௌபதி! - விராட பர்வம் பகுதி 9

Draupadi bonded her knotted braid! | Virata Parva - Section 9 | Mahabharata In Tamil

(பாண்டவ பிரவேச பர்வத் தொடர்ச்சி - 9)

அப்பதிவின் இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண

பதிவின் சுருக்கம் : தலைமுடிந்து, கருப்புநிற ஒற்றையாடை உடுத்திய திரௌபதியை, மாடியில் இருந்து சுதேஷ்ணை பார்ப்பது. திரௌபதியை யார் என்று சுதேஷ்ணை விசாரிப்பது; திரௌபதி என்ன காரியத்திற்காக வந்திருக்கிறாள் என்று சொல்வது; திரௌபதி அனைவரையும் ஈர்ப்பாள் என்று கருதி சுதேஷ்ணை பயந்தது; பின்பு தனது இல்லத்திலேயே பணி அமர்த்திக் கொண்டது...

ரவிவர்மாவின் படத்தில் கூட
திரௌபதி தலை முடியவில்லை
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “கருமையான விழிகளும், இனிய புன்னகையும் கொண்ட திரௌபதி, கருமையான, மென்மையான, மெல்லிய, நீளமான, மெலிந்தமுனைகளுடைய, குற்றமற்ற தனது கூந்தலை, முடிச்சுகள் கொண்ட பின்னலாக்கித் தனது வலது தோளில் தூக்கிவீசி, துணியால் அதை {கூந்தலை} மறைத்தாள் [1]. பிறகு, விலையுயர்ந்ததாக இருந்தாலும் அழுக்காக இருந்த கருப்பு நிற ஒற்றையாடையை அவள் {திரௌபதி} உடுத்தினாள். சைரந்தரியைப் போல உடுத்திக் கொண்ட அவள், துன்பத்திலிருப்பவள் போல அங்கும் இங்கும் நடந்தாள். அப்படி அவள் {திரௌபதி} உலவுவதைக் கண்ட ஆண்களும் பெண்களும், அவளிடம் {திரௌபதியிடம்} விரைந்து வந்து, “நீ யார்? என்ன தேடுகிறாய்?” என்று கேட்டனர்.

இங்கு ஒரு குறிப்பு வருகிறது:
[1] திரௌபதி கூந்தலை முடியமாட்டேன் என்று சபதம் செய்திருந்தாள் என்றொரு கதை உண்டு. அது இந்த வரிகளினால் அடிபட்டுப் போகிறது. அப்படி அவள் சபதம் மேற்கொள்ளவில்லை என்பதையே கங்குலியின் {வங்க, பம்பாய் மூல பதிப்புகளைத் தழுவிய} மொழிபெயர்ப்பு நிறுவுகிறது என்று கொள்ளலாம்.


அதற்கு அவள் {திரௌபதி}, “நான் ஒரு மன்னனின் சைரந்திரி, என்னைப் பராமரிப்பவர் யாராக இருப்பினும், நான் அவர்களுக்குச் சேவை செய்ய விரும்புகிறேன்" என்றாள். ஆனால், அவளின் {திரௌபதியின்} அழகையும், ஆடையையும் கண்டவர்களாலும், அவளது இனிய பேச்சைக் கேட்ட மக்களாலும் பிழைப்புக்காக வந்த ஒரு பணிப்பெண்ணாக அவளை {திரௌபதியை} ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இப்படி இருக்கையில், கேகய மன்னனின் மகளும், விராடனின் அன்புக்குரிய ராணியுமானவள் {சுதேஷ்ணை}, உப்பரிகையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தபோது, தற்செயலாகத் திரௌபதியைக் காணும்படி நேரந்தது.

கதியற்றவளும், ஒற்றையாடையில் இருந்தவளுமான அவளை {திரௌபதியைக்} கண்ட ராணி {சுதேஷ்ணை}, அவளிடம், “ஓ! அழகானவளே, நீ யார்? நீ என்ன தேடுறாய்?” என்று கேட்டாள். அதற்குத் திரௌபதி {ராணி சுதேஷ்ணையிடம்}, “ஓ! அரசிகளில் முதன்மையானவளே, நான் ஒரு சைரந்திரி. என்னைப் பராமரிப்பவர்கள் யாருக்கும் நான் சேவை செய்வேன்" என்றாள்.

பிறகு சுதேஷ்ணை {திரௌபதியிடம்}, “இவ்வளவு அழகுடன் இருக்கும் நீ சொல்வது (உனது தொழிலைப் பொறுத்தவரை) இணக்கமாக இல்லை. (மறுபுறம்) ஆண் மற்றும் பெண் பணியாட்களுக்கு நீ தலைவியாய் இருக்கலாம். உனது குதிங்கால்கள் பிரதானமாக இல்லை {மென்மையானவையாக இருக்கின்றன}. உனது தொடைகள் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருக்கின்றன. உனது புத்திக்கூர்மை பெரிதாக இருக்கிறது, உனது நாபி {தொப்புள்} ஆழமாக இருக்கிறது. உன்னிடம் வார்த்தைகள் மனப்பூர்வமாக வருகின்றன. உனது பெரும் கால்விரல்களும், மார்புகளும், இடைகளும், பின்புறமும், பக்கவாட்டுப் பகுதிகளும், கால்விரல் நகங்களும், உள்ளங்கைகளும் நன்கு வளர்ந்திருக்கின்றன. உனது உள்ளங்கைகள், உள்ளங்கால்கள் மற்றும் முகம் ஆகியன சிவந்து உள்ளன. உன் பேச்சு அன்னத்தைப் போன்ற இனிய குரலில் இருக்கிறது. உனது கேசம் அழகாக இருக்கிறது. உனது மார்புகள் வடிவத்துடன் இருக்கின்றன. நிறைந்த அருளை நீ பெற்றிருக்கிறாய். உனது இடைகளும் மார்புகளும் பருத்திருக்கின்றன.

காஷ்மீரத்து {Kasmerean} பெண் குதிரையைப் போல அனைத்து நற்குறிகளையும் நீ பெற்றிருக்கிறாய். உனது கண் இமைகள் அழகாக இருக்கின்றன. உனது கீழுதடு சிவந்த நிலம் போல இருக்கிறது. உனது இடை மெலிந்திருக்கிறது. உனது கழுத்தில் சங்கு போன்ற கோடுகள் உள்ளன. உனது நரம்புகள் அரிதாகவே தெரிகின்றன. உண்மையில், உனது முகம் முழு நிலவைப் போன்று இருக்கிறது. உனது கண்கள் இலையுதிர் காலத்து தாமரை இதழ்கள் போல இருக்கின்றன. உனது உடல் அந்தத் தாமரையின் நறுமணத்தையே கொண்டிருக்கிறது. அழகில், இலையுதிர் காலத் தாமரையில் அமர்ந்திருக்கும் ஸ்ரீயைப் {மகாலட்சுமியைப்} போல அப்படியே நீ இருக்கிறாய். ஓ! அழகான காரிகையே, நீ யார் என்பதை எனக்குச் சொல். நீ பணிப்பெண்ணாக இருக்கவே முடியாது. நீ யக்ஷியா? தேவியா? {தேவதையா?}, கந்தர்வியா?, அப்சரசா? நீ தேவனின் மகளா? அல்லது நீ நாகப் பெண்மணியா? ஏதாவதொரு நகரத்தின் காவல் தேவதையா? ஒரு வித்யாதரியா? அல்லது கின்னரியா? அல்லது ரோகிணியா? அல்லது ஆலம்புசையா? அல்லது மிச்ரகேசியா? புண்டரீகையா? மாலினியா? இந்திரன் அல்லது வருணனின் ராணியா? அல்லது நீ விஸ்வகர்மனின் மனைவியா? அல்லது படைப்புத்தலைவனின் {பிரம்மனின்} மனைவியா {சரஸ்வதியா}? ஓ! அருளப்பட்டவளே, தேவலோகத்தில் புகழ்பேற்ற இந்தத் தேவியரில் நீ யார்?” என்று கேட்டாள் {விராடன் மன்னனின் மனைவி ராணி சுதேஷ்ணை}.

அதற்குத் திரௌபதி {ராணி சுதேஷ்ணையிடம்}, “ஓ! மங்களகரமான பெண்ணே, நான் தேவியோ, கந்தர்வியோ, யக்ஷியோ, ராட்சசியோ அல்ல. நான் சைரந்திரி வர்க்கத்தைச் சார்ந்த ஒரு பணிப்பெண்ணே. நான் உனக்கு உண்மையைச் சொல்கிறேன். நான் (மணமிக்கப் பொருட்களால்) களிம்புகளும் {#} சிகை அலங்காரமும் செய்வேன். ஓ! அழகான பெண்ணே, மல்லிகைகள், தாமரைகள், நீல அல்லிகள் {கருநெய்தல்}, செண்பக மலர்களைக் கொண்டு அழகான பலவண்ண மாலைகளைச் செய்வேன். கிருஷ்ணனுக்குப் பிடித்தமான ராணியான சத்யபாமாவுக்கும், குருகுலத்தில் அழகில் முதன்மையானவளும், பாண்டவர்களின் மனைவியுமான திரௌபதிக்கும் நான் முன்பு பணி செய்திருக்கிறேன். நல்ல உணவையும், உடையையும் ஈட்டிக் கொண்டு நான் தனியாக உலவி வருகிறேன்; இவை கிடைக்கும்வரை அந்த இடத்திலேயே தொடர்ந்து வாழ்வேன். திரௌபதி என்னை மாலினி (மாலைகள் செய்பவள்) என்று அழைப்பாள்" என்றாள்.

இதைக் கேட்ட சுதேஷ்ணை {திரௌபதியிடம்}, “மன்னரே {விராடரே} உன்னிடம் முழு இதயத்துடன் ஈர்க்கப்படுவார், என்ற சந்தேகம் எனது மனதில் வராதிருந்தால், நான் உன்னை எனது தலையிலேயே வைத்துக் கொண்டிருப்பேன். உன்னால் ஈர்க்கப்பட்டு, எனது அரசகுடும்பத்தின் பெண்மணிகளும், எனது பணிப்பெண்களும் உன்னையே பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பின்னர், எந்த ஆண்மகனால்தான் உன் மீது ஏற்படும் ஈர்ப்பைத் தடுக்க முடியும்? ஓ! அழகிய இடைகள் கொண்டவளே, ஓ! அழகிய குணங்கள் கொண்ட காரிகையே, மனிதப்பெண்ணுக்கு அப்பாற்பட்ட அழகுடைய உனது வடிவத்தைக் கண்டால், மன்னர் விராடர் நிச்சயம் என்னைக் கைவிட்டுவிட்டு, முழு இதயத்துடன் உன்னை நோக்கித் திரும்பிவிடுவார்.

ஓ! குறையற்ற அங்கங்கள் கொண்டவளே, ஓ! துரிதப் பார்வைகளை வீசும் பெரிய கண்களைக் கொண்டவளே, ஆசையுடன் நீ யாரையாவது பார்த்தால், அவன் நிச்சயம் பாதிக்கப்படுவான். ஓ! இனிய புன்னகைகள் கொண்டவளே, ஓ! குற்றமற்ற வடிவம் கொண்டவளே, உன்னைத் தொடர்ந்து பார்ப்பவன், நிச்சயம் நெருப்பைத் தொட்டவனாவான். ஓ! இனிய புன்னகை கொண்டவளே, தனது சொந்த அழிவிற்காகக் கருத்தரிக்கும் நண்டைப் போலவும், தனது சொந்த அழிவை நிர்ணயித்து மரம் ஏறுபவனைப் போலவும், உனக்குத் தஞ்சமளித்தால் நானே எனக்கான அழிவைக் கொண்டு வந்ததாக ஆகிவிடும்" என்றாள் {ராணி சுதேஷ்ணை}.

அதற்குத் திரௌபதி {ராணி சுதேஷ்ணையிடம்}, “ஓ! அழகான பெண்மணியே, கந்தர்வ மன்னனின் மகன்களான ஐந்து இளம் கந்தர்வர்கள் எனக்குக் கணவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் என்னை எப்போதும் பாதுகாப்பதால், விராடரோ, அல்லது எந்தப் பிற மனிதரோ என்னை அடைய முடியாது. யாராலும் எனக்குத் தீங்கிழைக்க முடியாது. மற்றொருவர் ஏற்கனவே தொட்ட உணவைக் கொடுக்காதவர்கள் மற்றும் தங்கள் பாதங்களை, என்னைக் கழுவச் சொல்லாதவர்கள் ஆகியோருக்கு மட்டுமே நான் பணி செய்ய வேண்டும் என்பது எனது கந்தர்வ கணவர்களின் விருப்பமாகும். ஏதோ பொது மனைவியைப் போல என்னை அடைய முயலும் மனிதன் அந்த இரவே மரணத்தைச் சந்திப்பான். ஓ! அழகான பெண்ணே {ராணி சுதேஷ்ணையே}, ஓ! இனிய புன்னகை கொண்டவளே, பெரும் சக்தியும், பெரும் பலமும் கொண்ட அந்த அன்புக்குரிய கந்தர்வர்களால் கமுக்கமாக {இரகசியமாக} எப்போதும் நான் பாதுகாக்கப்படுவதால், என்னை அடைவதில் யாரும் வெல்ல முடியாது" என்றாள் {திரௌபதி}.

சுதேஷ்ணை {திரௌபதியிடம்}, “ஓ! இதயத்துக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவருபவளே, நீ சொல்வது போல இருந்தால், நான் நிச்சயம் உன்னை எனது வீட்டில் வைத்துக் கொள்கிறேன். வேறு ஒருவர் தொட்ட உணவை நீ தொட வேண்டியதோ, வேறொருவர் பாதங்களைக் கழுவ வேண்டியதோ இல்லை" என்றாள்” {ராணி சுதேஷ்ணை}

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “விராடனின் மனைவியால் இப்படிச் சொல்லப்பட்டதும், ஓ! ஜனமேஜயா, தன் தலைவர்களுக்கு எப்போதும் அர்ப்பணிப்புடன் இருந்த கிருஷ்ணை (திரௌபதி) அந்நகரத்தில் வாழ ஆரம்பித்தாள். உண்மையில் அவள் யார் என்பதை யாராலும் உறுதிசெய்ய முடியவில்லை!”.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Tuesday, October 28, 2014

நான் ஒரு சமையற்கலைஞன்! - விராட பர்வம் பகுதி 8

I am a cook! | Virata Parva - Section 8 | Mahabharata In Tamil

(பாண்டவ பிரவேச பர்வத் தொடர்ச்சி - 8)

இப்பதிவின் இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண

பதிவின் சுருக்கம்: பீமன் விராடனைச் சந்தித்து அவனிடம் சமையற்காரனாய் வேலை செய்ய வந்ததாகச் சொன்னது; விராடன் பீமனைப் பணியமர்த்தி அவன் கேட்ட நியமனத்தைக் கொடுத்தது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு, அழகில் சுடர்விடும் பயங்கர வலிமை கொண்ட மற்றொருவன் {பீமன்} சிங்கத்தைப் போன்ற விளையாட்டு நடையுடன் மன்னன் விராடனை அணுகினான். கையில் சமையல் கரண்டி மற்றும் மத்துடனும், மேலும் கருநிற சாயல் கொண்ட களங்கமும் இல்லாத உயரிய வடிவமைப்புக் கொண்ட வாள் ஒன்றையும் கையில் ஏந்தி, முழு உலகத்தையும் பிரகாசிக்கச் செய்யும் சூரியனைப் போல அனைத்துப் புறங்களுக்கும் ஒளியூட்டிக் கொண்டு சமையற்காரன் வேடத்தில் அவன் {பீமன்} வந்தான். மலைகளின் மன்னனைப் போன்ற பலத்தைக் கொண்ட அவன் {பீமன்} கருநிற ஆடை உடுத்தி மத்ஸ்ய மன்னனை {விராடனை} அணுகி அவன் முன்னிலையில் நின்றான்.


மன்னனைப் போன்ற தோற்றம் கொண்ட அவனை {பீமனைக்} கண்ட விராடன் தன்னிடம் கூடியிருந்த குடிமக்களிடம், “சிம்மத்தைப் போன்ற அகன்ற தோள்களும், மிக மேம்பட்ட அழகையும் கொண்ட அந்த இளைஞன் யார்? சூரியனைப் போன்ற அந்த மனிதனை இதற்கு முன் கண்டதே இல்லை. இந்தச் செய்தியை மனதில் சுழற்றியும், இவன் யார் என்பதை என்னால் உறுதி செய்ய முடியவில்லை, முயன்று அதிகமாகச் சிந்தித்தாலும், அந்த மனிதர்களில் காளையின் (வருபவனின்) நோக்கத்தை ஊகிக்க முடியவில்லை. அவனைப் பார்த்தால் கந்தர்வ மன்னனைப் போன்றோ, புரந்தரனை {இந்திரனைப்} போன்றோ தோன்றுகிறது. என் கண்களுக்கு முன்பாக நிற்பவன் யார் என்பதை உறுதி செய்யுங்கள். அவன் வேண்டுவதை அவன் விரைவில் பெறட்டும்" என்றான் {விராடன்}.

இப்படி மன்னன் விராடனால் கட்டளையிடப்பட்டதும், வேகமான கால்களையுடைய தூதுவர்கள் குந்தியின் மகனிடம் {பீமனிடம்} சென்று, அந்த யுதிஷ்டிரனின் தம்பியிடம் {பீமனிடம்} மன்னன் சொன்ன யாவற்றையும் சொன்னார்கள். பிறகு அந்த உயர் ஆன்ம பாண்டுவின் மகன் {பீமன} விராடனை அணுகி, தன் நோக்கத்திற்கு ஏற்ற வார்த்தைகளில், “ஓ !மன்னர்களில் முதன்மையானவரே {விராடரே}, நான் ஒரு சமையற்காரன். என் பெயர் வல்லவன் [Vallava; ballavo]{வல்லன்}ஆகும். உணவுகளைப் பக்குவப்படுத்துவதில் நான் நிபுணன். என்னைச் சமையலறையில் நியமிப்பீராக! [1]” என்றான்.

[1] இங்கே பீமன் தன்னை ஒரு சூத்திரன் என்று சொல்லுவதாக வேறு பதிப்புகளில் இருக்கின்றன. "பகைவர்களை வதம் செய்பவரே! மகாசூரரே! நான் உம்மை அண்டிப் பிழைப்பதற்காகவே உம்மிடத்தில் வந்திருக்கிறேன். நீரே எங்களைப் போன்ற எளியவர்களைக் காப்பாற்றக் கூடியவர். நான் நாலாம் வர்ணத்தைச் சேர்ந்தவன் . குருவின் நியமனத்தால் பரிசாரகத் தொழிலை ஏற்றுள்ளேன். பருப்பு, ரஸம், பக்ஷணங்கள், பழங்களைச் சார்ந்த பலவித ரசாயனங்கள், மாம்ஸ வகைகள் முதலானவற்றைப் பக்குவம் செய்து சமைக்கும் சாமர்த்தியம் எனக்கு உண்டு. எனக்கு ஸத்ருசமான வேறொரு சமையற்காரன் இவ்வுலகில் கிடைக்க மாட்டான்" என்று பீமன் சொன்னதாக ஸ்ரீ ந்ருஸ்ம்ஹப்ரியா வெளியிட்ட மஹாபாரதப் பதிப்பில் உள்ளது. சம்ஸ்க்ருதம் அறிந்தவர்கள், இப்பகுதி சம்பந்தமாக http://sacred-texts.com/hin/mbs/mbs04007.htm என்று Sacred-texts வலைத்தளத்தில் உள்ள பூனா பதிப்பில் நான்காம் வர்ணமான சூத்திர வர்ணத்தைக் குறித்து சொல்கிறதா என்பதை அறிந்து கொள்ளலாம். அதில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

விராடன் {பீமனிடம்}, “ஓ! வல்லவா, சமையலே உனது அலுவல் என்பதை என்னால் நம்பமுடியவில்லை. நீ ஆயிரம் கண் கொண்ட தெய்வத்தை ஒத்திருக்கிறாய். இவர்கள் அனைவர் மத்தியிலும் அருள், அழகு, பராக்கிரமம் ஆகியவற்றில் நீ மன்னனைப் போல இருக்கிறாய்!” என்றான் {விராடன்}.

பீமன் {விராடனிடம்}, “ஓ! மன்னர்களின் மன்னா, முதலில் நான் உனது சமையல்காரனும், பணியாளும் ஆவேன். ஓ! ஏகாதிபதி {விராடரே}, சென்ற நாட்களில் மன்னர் யுதிஷ்டிரர் எப்போதும் என் உணவுகளைச் சுவைப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தாலும், நான் குழம்பு வகைகளில் மட்டுமே அறிவுடையவன் அல்லன். ஓ! பூமியின் தலைவா {விராடரே}, நான் மல்லனுமாவேன் {மல்யுத்த வீரனுமாவேன்}. எனது பலத்திற்கு ஈடானவர்கள் எவரும் கிடையாது. ஓ! பாவமற்றவரே, சிம்மங்களுடனும், யானைகளுடனும் போரிட்டு, நான் எப்போதும் உமக்கு உற்சாகமூட்டுவேன்" என்றான் {பீமன்}.

விராடன் {பீமனிடம்}, “நான் உனக்கு வரங்களை அளிப்பேன். உனது நிபுணத்துவம் குறித்து நீ விளக்குவதைப் போலவே, நீ விரும்பியவற்றைச் செய்வாயாக. எனினும், இந்த அலுவல் உனக்குத் தகாது என நான் நினைக்கிறேன். கடல்சூழ்ந்த (மொத்த) உலகத்திற்கும் நீ தகுந்தவனாவாய். ஆனால் நீ விரும்பிதைச் செய்வாயாக. நீ எனது சமையலறையின் கண்காணிப்பாளராவாயாக. உனக்கு முன்பு, அங்கே என்னால் நியமிக்கப்பட்டவர்களுக்கு நீ தலைவனாக நியமிக்கப்படுகிறாய்" என்றான் {விராடன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படிச் சமையலறையில் {மடைப்பள்ளியில்} நியமனம் பெற்ற பீமன் விரைவில் மன்னன் விராடனுக்குப் பிடித்தமானவன் ஆனான். ஓ! மன்னா {ஜனமேஜயா}, விராடனின் மற்ற வேலைக்காரர்களாலும், பிற மனிதர்களாலும் அடையாளம் காணப்படாதவனாக அங்கே அவன் தொடர்ந்து வாழ்ந்தான்.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


Sunday, October 26, 2014

யுதிஷ்டிரன் விராடன் சந்திப்பு! - விராட பர்வம் பகுதி 7

Yudhishthira meets Virata! | Virata Parva - Section 7 | Mahabharata In Tamil

(பாண்டவ பிரவேச பர்வத் தொடர்ச்சி - 7)

இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண


பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரன் விராடனைச் சந்தித்து அவனிடம் பிழைப்புக்காக வந்ததாகச் சொன்னது; விராடன் யுதிஷ்டிரனைப் பணியமர்த்தி அவன் கேட்ட வேண்டுதல்களை ஏற்றது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “மன்னன் யுதிஷ்டிரன், வைடூரியத்தால் இழைக்கப்பட்டு, தங்கத்தால் செய்யப்பட்டிருந்த பாச்சிகைகளைத் {பகடைக் காய்களை} தனது துணியில் கட்டி, அதைக் கக்கத்தில் {அக்குளில்; கைக்குழியில்} பிடித்துக் கொண்டான். மனிதர்களின் சிறப்புவாய்ந்த தலைவனும், குரு குலத்தைத் தழைக்க வைக்கும் உயர் ஆன்மா கொண்டவனும், மன்னர்களால் மதிக்கப்படுபவனும், கட்டுக்கடங்காத வல்லமை கொண்டவனும், கடும் விஷம் கொண்ட பாம்பு போன்றவனும், மனிதர்களில் காளையும், பலம் அழகு பராக்கிரமம் ஆகியவற்றைக் கொண்டவனும், மேன்மை கொண்டவனும், அடர்த்தியான மேகங்களால் மூடப்பட்ட சூரியன் போன்றோ, சாம்பலால் மூடப்பட்ட நெருப்பு போன்றோ இப்போது இருந்தாலும், தெய்வீக உருவம் கொண்டவனுமான அவன் {யுதிஷ்டிரன்}, புகழ் பெற்ற விராட மன்னன் தனது சபையில் அமர்ந்திருந்தபோது முதலில் தோன்றினான்.


மேகங்களுக்கு இடையில் மறைந்திருக்கும் நிலவைப் போலவும், முழு நிலைவைப் போன்ற அழகிய முகமும் கொண்டிருந்த பாண்டுவின் மகனைத் {யுதிஷ்டிரனைத்} தனது தொண்டர்களுடன் கண்ட மன்னன் விராடன், தனது ஆலோசகர்களிடமும் {அமைச்சர்களிடமும்}, இருபிறப்பாளர்களிடமும் {பிராமணர்களிடமும்}, தேரோட்டிகளிடமும், வைசியர்களிடமும், பிறரிடமும், “எனது சபைக்கு முதல் முறையாக வந்திருக்கும் மன்னனைப் போல இருக்கும் இவன் யார் என்பதை விசாரியுங்கள். இவன் அந்தணனாக இருக்க முடியாது. இவனே மனிதர்களில் ஆண்மகன் என நான் நினைக்கிறேன் {Methinks he is a man of men}. இவனிடம் அடிமைகளோ, தேர்களோ, யானைகளோ {மட்டும்தான்} இல்லை. இருப்பினும் இவன் இந்திரனைப் போலப் பிரகாசிக்கிறானே. இவனது மேனியில் இருக்கும் குறிகள், இவனைப் புனித பட்டம் பெற்று மணிமுடி கொண்டவனாகக் குறிக்கின்றன. இதுவே எனது நம்பிக்கை. இவன் எந்த வித தயக்கமும் இன்றி, தாமரைக் கூட்டத்தை அணுகும் ஒரு மதம் கொண்ட யானை போல என்னை அணுகுகிறானே!” என்றான் {விராடன்}.

மன்னன் {விராடன்} இத்தகு சிந்தனைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, மனிதர்களில் காளையான யுதிஷ்டிரன் விராடனின் முன்பு வந்து அவனிடம், “ஓ! பெரும் மன்னா, அனைத்தையும் தொலைத்துவிட்டு, பிழைப்புக்காக உம்மிடம் வந்திருக்கும் ஓர் அந்தணனாக என்னை அறிவீராக! ஓ! பாவமற்றவரே, ஓ! தலைவா {விராடரே}, உமது கட்டளையின் கீழ் பணி செய்து வாழ்வதற்கு நான் விரும்புகிறேன் [1]” என்றான். இதனால் மிகவும் மகிழ்ந்த மன்னன் {விராடன்} அவனிடம் {யுதிஷ்டிரனிடம்}, “உனக்கு நல்வரவு. நீ வேண்டிய நியமனத்தை ஏற்றுக் கொள்" என்றான். அந்த மன்னர்களில் சிம்மத்தை {யுதிஷ்டிரனை}, அவன் வேண்டிய பதவியிலேயே நியமித்த மன்னன் விராடன், பிறகு, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் அவனிடம் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! குழந்தாய், பற்றுதலால் உன்னிடம் ஒன்று கேட்கிறேன். எந்த மன்னனின் ஆட்சிப்பகுதியில் {நாட்டில்} இருந்து நீ இங்கே வந்திருக்கிறாய்? உனது பெயர், குடும்பம் {கோத்ரம்} ஆகியவை என்ன என்பதையும், உனக்கு எதில் ஞானம் இருக்கிறது என்பதையும் உண்மையாகச் சொல்" என்று கேட்டான் {விராட மன்னன்}.

[1] “வேறு இடங்களில் அப்படியே வேறு பொருளைக் கொடுத்தாலும், Kamachara [kāmacaras] என்பது நீலகண்டரால் இப்படியே விளக்கப்பட்டுள்ளது.” என்கிறார் கங்குலி.

யுதிஷ்டிரன் {விராட மன்னனிடம்}, “எனது பெயர் கங்கன் [Kanka; kaṅketi], நான் வையாக்கிரர் [Vaiyaghra; vaiyāghrapadyaḥ] {வ்யாக்ரபாதர்} [2] என்று பெயரால் அழைக்கப்படும் குடும்பத்துக்குரிய {கோத்ரத்திற்குரிய} அந்தணனாவேன். பகடை வீசுவதில் நான் நிபுணன். முன்பு நான் யுதிஷ்டிரருக்கு நண்பனாக இருந்தேன்" என்றான் {யுதிஷ்டிரன்}.

[2] புலி போலப் பாய்பவன் என்ற பொருள் உடைய "வ்யாக்ரபாத" என்ற பெயர் யமனுக்குடையது. எனவே யுதிஷ்டிரன், தன்னை அவனது {யமனின்} வழியில் வந்தவன் என்று சொல்லி, உண்மையைச் சொல்வதாகப் பண்டிதர்கள் பொருள் கொள்கிறார்கள்.

விராடன் {யுதிஷ்டிரனிடம்}, “நீ விரும்பும் எந்த வரத்தையும் நான் கொடுப்பேன். நீ மத்ஸ்யத்தையே {மத்ஸ்ய நாட்டையே} {ஆள வேண்டுமென்றாலும்} ஆண்டுக் கொள். நான் உனக்கு அடிபணிந்து இருப்பேன். தந்திரமான சூதாடிகள் கூட எனக்குப் பிடித்தமானவர்களே. ஆனால், மறுபுறம் நீயோ தேவனைப் போல இருக்கிறாய். எனவே, நீ நாட்டைப் பெறத் தகுதி வாய்ந்தவனே" என்றான் {விராடன்}.

யுதிஷ்டிரன் {விராடனிடம்}, “ஓ! பூமியின் தலைவா {விராடரே}, இழிந்த மனிதர்களோடு (பகடையின் காரணமாக) எந்தவித சர்ச்சைகளிலும் {தகராறுகளிலும்} என்னை ஈடுபடுத்தக்கூடாது என்பதே எனது முதல் வேண்டுகோள். மேலும், (பகடையில்) என்னால் வீழ்த்தப்பட்ட (என்னால் வெல்லப்பட்ட) மனிதன்,  செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்கக் கூடாது. உமது அருளால் எனக்கு இந்த வரம் கிடைக்கட்டும்" என்றான் {யுதிஷ்டிரன்}.

விராடன் {யுதிஷ்டிரனிடம்}, “உன்னை வெறுப்படையச் செய்யும் ஒருவன் நிச்சயம் என்னால் கொல்லப்படுவான். அவனே இருபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} ஒருவனாக இருந்தால், அவன் எனது நாட்டில் இருந்து விரட்டப்படுவான். கூடியிருக்கும் குடிமக்கள் இதைக் கேட்கட்டும்! கங்கன் இந்த அரசாங்கத்துக்கு என்னைப் போலவே தலைவனாவான். நீ (கங்கன்) எனது நண்பனாக இருந்தாலும், நான் பயணிப்பது போன்ற வாகனங்களிலேயே நீயும் பயணிக்கலாம். உன் பொறுப்பில் நிறைய ஆடைகளும், பல்வேறு வகையான உணவு வகைகளும், பானங்களும் இருக்கும். எனது காரியங்களில் அகம் {உட்புற} புறம் {வெளிப்புற} ஆகிய இரண்டையும் {இரண்டு காரியங்களையும்} நீயே கவனிப்பாயாக. உனக்காக எனது கதவுகள் அனைத்தும் திறந்திருக்கும். வெளியே பணி செய்யும் மனிதர்களும், சூழ்நிலையால் பலவீனப்பட்டவர்களும் உன்னிடம் விண்ணப்பிக்கும் போது, அது எந்த நேரமானாலும், அவர்களின் வார்த்தைகளை என்னிடம் சொல். அவர்கள் என்ன விரும்பினாலும், நான் அதை நிச்சயம் கொடுப்பேன். என்னுடன் நீ வசிக்கும் வரை உனக்கு எந்த அச்சமும் வேண்டாம்" என்றான் {விராடன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இப்படி விராட மன்னனின் பேட்டியை பெற்று, அவனிடம் {விராடனிடம்} வரங்களையும் பெற்ற அந்த மனிதர்களில் வீரக்காளை {யுதிஷ்டிரன்} அனைவராலும் உயர்வாக மதிக்கப்பட்டு மகிழ்ச்சியாக வாழ ஆரம்பித்தான். அவன் {யுதிஷ்டிரன்} அங்கே வாழ்ந்து வந்த போது, யாராலும் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை.”
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


யுதிஷ்டிரனின் துர்க்கையம்மன் துதி! - விராட பர்வம் பகுதி 6

Yudhishthira's prayer to mother goddess Durga! | Virata Parva - Section 6 | Mahabharata In Tamil

(பாண்டவ பிரவேச பர்வத் தொடர்ச்சி - 6)

இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண

பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரன் துர்க்கையம்மனைத் துதிப்பது; துர்க்கையம்மன் யுதிஷ்டிரனுக்குக் காட்சி கொடுத்து, வரங்களளித்தது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “யுதிஷ்டிரன், காண்பதற்கினிய விராட நகரத்திற்குச் செல்லும் வழியில் இருந்த போது, யசோதையின் கருவறையில் பிறந்தவளும்; நாராயணனால் தனக்கு அளிக்கப்பட்ட வரங்களை ஏற்று, இடையர் நந்தரின் {நந்தகோபரின்} குலத்தில் உதித்தவளும்; செழிப்பையும், (வழிபடுபவர்) குடும்பத்தையும் (குடும்பப் புகழையும்) மேம்படுத்துபவளும்; கம்சனுக்கு அச்சமூட்டியவளும்; அசுரர்களை அழித்தவளும்; இந்த அண்டத்தின் உயர்ந்த தேவியுமான {பரமேஸ்வரியுமான} தெய்வீக துர்க்கையை {துர்க்கையம்மனை} மனதாரத் துதித்தான். கல்மேடையில் (கம்சனால்) தூக்கி வீசப்பட்டபோது வானத்தில் உயர்ந்து எழுந்தவளும்; வாசுதேவனின் {கிருஷ்ணனின்} தங்கையும்; தெய்வீக மாலைகள் அணிந்திருப்பவளும்; தெய்வீக ஆடைகள் தரித்திருப்பவளும்; கத்தி, கேடயம் ஆகியவற்றைத் தாங்கியவளும்; துன்பம் நிறைந்த நேரங்களில், புதைகுழியில் உள்ள மாட்டைப் {மாடு} போல, பாவத்தில் மூழ்கிய வழிபாட்டினர், தங்கள் {பாவச்} சுமைகளை அகற்றும் பொருட்டு, நித்திய அருள் வழங்கும் தன்னை {பரமேஸ்வரியான அவளை} அழைக்கும்போது எப்போதும் காப்பவளுமான அந்தத் தேவியை {துர்க்கையம்மனை} யுதிஷ்டிரன் வணங்கினான்.


அந்தத் தேவியின் {துர்க்கையின்} காட்சியைப் பெற, தனது தம்பிகளுடன் விரும்பிய மன்னன் {யுதிஷ்டிரன்}, அவளை அழைக்க (அங்கீகரிக்கப்பட்ட) பாடல்களில் இருந்து பெறப்பட்ட, அவளது பல்வேறு பெயர்களைச் சொல்லித் {துர்க்கையம்மனைத்} துதித்தான். யுதிஷ்டிரன், “ஓ! வரங்களை அளிப்பவளே {துர்க்கையம்மனே}, உன்னை வணங்குகிறேன். ஓ! கிருஷ்ணனைப் போன்றவளே, ஓ! கன்னிகையே, ஓ! பிரம்மச்சரிய நோன்பு நோற்பவளே, ஓ! புதிதாக உதித்த சூரியனைப் போன்ற பிரகாசமான உடல் கொண்டவளே, ஓ! முழு நிலவைப் போன்ற அழகிய முகம் கொண்டவளே, ஓ! நான்கு கரங்களும், நான்கு முகங்களும் கொண்டவளே, ஓ! உருண்ட அழகிய இடைகளும், பருத்த முலைகளும் கொண்டவளே, ஓ! மரகதங்கள் மற்றும் நீலமணிக்கற்களைக் கொண்டு செய்யப்பட்ட வளையல்களை அணிந்தவளே, ஓ! மேல் புஜத்தில் சிறந்த கடகங்களை அணிந்தவளே.

ஓ! தேவி {துர்க்கையம்மனே}, நாராயணனின் மனைவியான பத்மாவைப் {மகாலட்சுமியைப்} போலப் பிரகாசிப்பவள் நீயே. ஓ! தெய்வீக உலகங்களில், உன் உண்மை வடிவத்திலும், உன் பரிசுத்தமான பிரம்மச்சரியத்துடனும் அதிகாரம் செய்பவள் நீயே, கருமேகங்களைப் போன்ற கரிய முகத்துடன் சங்கர்ஷணரைப் போல அழகாக இருப்பவள் நீயே. இந்திரனுக்கு மதிப்பளிக்கும் வகையில் எழுப்பப்படும் கொடிமரங்களைப் {இந்திரத்வஜத்தைப்} போன்ற நீண்ட இரு கரங்களைக் கொண்டவள் நீயே. பாத்திரம், தாமரை மலர், மணி, சுருக்குக் கயிறு {பாசம்}, வில், பெரும் சக்கரம் மற்றும் பல்வேறு பிற ஆயுதங்களையும் உனது மற்ற (ஆறு) கரங்களில் கொண்டவள் நீயே. இந்த அண்டத்தில் பரிசுத்தமான பண்பை அடைந்த ஒரே பெண் {பரிசுத்த ஸ்த்ரீ} நீயே! சிறந்த குண்டலங்களால் அருளப்பட்ட அழகிய காதுகள் கொண்டவள் நீயே.

ஓ! தேவி, நிலவை அறைகூவி அழைக்கும் அழகு முகம் கொண்டவள் நீயே. சிறந்த கிரீடமும், பாம்பு உடல்களால் செய்யப்பட்ட உடையுடன் கூடிய அழகிய பின்னலும், உருண்டு வளைந்த பிரகாசமான இடைகளும் கொண்டவள் நீயே. பாம்புகளால் சூழப்பட்ட மந்தர மலை போல விளங்குபவள் நீயே. தலையில் நிமிர்ந்து நிற்கும் மயில் தோகைகளால் அதிகமாகப் பிரகாசிப்பவள் நீயே. நித்திய கன்னியாக நோன்பு நோற்று {கௌமார விரதம் இருந்து}, தேவலோகங்களைப் பரிசுத்தமாக்கியவள் நீயே. ஓ! மஹிஷாசுரனைக் [1] கொன்றவளே, இதற்காகவே {கௌமார விரதம் இருப்பதால்} மூவுலகங்களின் பாதுகாப்புக்காகத் தேவர்களால் வழிபடப்பட்டுத் துதிக்கபடுபவள் நீயே. ஓ! அனைத்து தெய்வங்களிலும் முதன்மையானவளே, எனக்கு உனது அருளைத் தருவாயாக, என்னிடம் கருணை காட்டுவாயாக, நான் பெறும் மங்கலங்கள் அனைத்துக்கும் நீயே ஊற்றுக்கண்ணாவாயாக.

ஜெயமும், விஜயமும் நீயே. போர்க்களத்தில் வெற்றியை அளிப்பவள் நீயே. ஓ! தேவி, எனக்கு வெற்றியைக் {ஜெயத்தைக்} கொடுப்பாயாக. துயரமிக்க இந்த நேரத்தில் எனக்கு வரங்களையும் {விஜயத்தையும்} கொடுப்பாயாக. மலைகளில் முதன்மையான விந்தியமே உனது நித்திய வசிப்பிடமாகும். ஓ! காளி, ஓ காளி, மது, ஊண் {இறைச்சி}, {ஆடு, கோழி முதலிய} விலங்கு பலிகள் ஆகியவற்றில் மகிழும் பெரும் காளி {மஹாகாளி} நீயே. விரும்பிய இடம் செல்லும் திறன் கொண்டு, வழிபாட்டினருக்கு வரங்கள் அளிப்பவளான உனது பயணங்களில், பிரம்மனும் பிற தேவர்களும் எப்போதும் உன்னைத் தொடர்ந்து வருகிறார்கள். பாரங்களை அகற்றுபவள் என உன்னை அழைப்பவர்களுக்கும், பூமியில் நாள் உதிக்கும்போது {அதிகாலையில்} உன்னை வணங்குபவர்களுக்கும், வாரிசுகள் அல்லது செல்வம் நிமித்தமாக அடைய முடியாதது எதுவுமில்லை. {துயர் களையும் பொருட்டு உன்னை நினைப்பவர்களுக்கும், விடியற்காலையில் உன்னை வணங்குபவர்களுக்கும், வாரிசுகளும் செல்வமும் கிடைப்பது அரிதன்று}.

அடர்ந்த காட்டுப்பகுதியில் துன்புறும்போதும், பெருங்கடலில் மூழ்கும் போதும், அத்துன்பங்களில் இருந்து மக்களை மீட்பதாலே அனைவராலும் துர்க்கை [2] என்று அழைக்கப்படுபவள் நீயே. கொள்ளையர்களால் தாக்கப்படும்போதும், காடுகள், அடர்ந்த காட்டுப்பகுதிகள் {வனாந்திரங்கள்}, கடல்கள், நீரோடைகள் ஆகியவற்றைக் கடப்பதில் ஏற்படும் துன்பத்தின் போதும், மனிதர்களுக்கு ஒரே புகலிடமாக இருப்பவள் நீயே. ஓ! தேவி, உன்னை நினைக்கும் மனிதர்கள் எப்போதும் வீழ்வதில்லை. புகழ் நீயே, செழிப்பு நீயே, உறுதி {நிலைமாறாதவள்} நீயே, வெற்றி நீயே, மனைவி நீயே, மனிதர்களின் வாரிசுகள் நீயே, அறிவு {ஞானம்} நீயே, அறிவாற்றல்{புத்தி} நீயே.

சந்திப்பொழுதுகள் இரண்டும் {அதிகாலை, அந்திமாலை}, இரவு உறக்கம், சூரிய சந்திர ஈரொளிகள், அழகு, பொறுமை {மன்னிக்கும் குணம்}, கருணை மற்றும் பிற அனைத்தும் நீயே. பக்தர்களால் வழிபடப்படும்போது, விலங்குகள், அறியாமை, குழந்தைகள் இழப்பு, செல்வமிழப்பு, நோய், மரணம், அச்சம் ஆகியவற்றை அகற்றுபவள் நீயே. நாட்டை இழந்த நான் உனது பாதுகாப்பை நாடுகிறேன். ஓ! பரமேஸ்வரியே {உயர்ந்த தேவியே}, ஓ! தாமரை இதழ்களைப் போன்ற கண்களை உடையவளே, உன்னைச் சிரம் தாழ்த்தி வணங்கும் எனக்கு, பாதுகாப்பை அருள்வாயாக! உண்மையின் {சத்தியத்தின்} படி செயல்பட்டு வரமளிக்கும் உண்மையாகவும் {சத்தியமாகவும்} எங்களுக்கு ஆவாயாக! {ஓ சத்ய ஸ்வரூபிணி! நீ எங்கள் விஷயத்தில் ஸத்யமாக இருப்பாயாக}. ஓ! துர்க்கையே, உனது பாதுகாப்பை நாடும் யாவருக்கும் கருணைகாட்டுபவளே, உன்னை வழிபடுபவர்கள் யாவரிடமும் பாசம் கொண்டவளே, எனக்குப் பாதுகாப்பை வழங்குவாயாக!” என்றான் {யுதிஷ்டிரன்}.

[1] "மஹிஷாசுரன், ரம்பாசுரனின் மகனாவான். இந்த வல்லமைமிக்க அசுரனைக் கொல்வதற்காகவே பற்பல வருடங்களுக்கு முன்பு துர்க்கை போரிட வேண்டியிருந்தது. இக்கதை மார்க்கண்டேய புராணத்தில் வருகிறது. இந்தக் காலத்திலும், இலையுதிர்காலத்தில் வங்கத்தில் நடைபெறும் துர்கா பூஜை விழாவில் பெரும் வழிபாடுகளுடன் இந்தத் தேவி வணங்கப்படுகிறாள்.” என்கிறார் கங்குலி.

[2] "துர்க்கை என்றால் "சிரமங்களில் மீட்பவள்" என்பது சொல்லுக்குச் சொல் சரியான பொருளுடையது" என்கிறார் கங்குலி.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படிப் பாண்டுவின் மகனால் {யுதிஷ்டிரனால்} துதிக்கப்பட்ட அந்தத் தேவி {துர்க்கையம்மன்}, அவனுக்குக் {யுதிஷ்டிரனுக்கு} காட்சியளித்தாள். அந்த மன்னனை {யுதிஷ்டிரனை} அணுகிய அவள் {துர்க்கையம்மன்}, “ஓ! வலிய கரங்கள் கொண்ட மன்னா, ஓ! தலைவா {யுதிஷ்டிரா}, எனது வார்த்தைகளைக் கேட்பாயாக. எனது அருளால் கௌரவ அணியில் உள்ளவர்களைக் கொன்று முறியடித்த பிறகு, போர்க்கள வெற்றி விரைவில் உனதாகும். உனது நாட்டை முட்களற்றதாக்கி {எதிரகளற்றதாக்க}, நீ மீண்டும் முழுப் பூமியின் தலைவனாவாய். ஓ! மன்னா, உனது தம்பிகளுடன் கூடிய நீ, பெரும் மகிழ்ச்சியையும் அடைவாய். எனது அருளால், மகிழ்ச்சியும், உடல் நலனும் உனதாகும்.

இந்த உலகில் உள்ளவர்கள் {மனிதர்கள்}, என் பண்புகளையும், சாதனைகளையும் உரைத்தால்,  தங்கள் பாவங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு, முழு மனநிறைவு கொள்வார்கள். நான் அவர்களுக்கு, நாட்டையும், நீண்ட வாழ்நாளையும், அழகிய மேனியையும், வாரிசுகளையும் அளிப்பேன். ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, வனவாசத்தில் இருப்பவர்களோ, நாட்டில் இருப்பவர்களோ, போர்க்களத்தின் மத்தியில் இருப்பவர்களோ, எதிரிகளின் ஆபத்தில் இருப்பவர்களோ, காட்டிலோ, அணுகமுடியாத பாலைவனங்களிலோ, கடல்களிலோ, அடர்ந்த காடுகள் கொண்ட மலையிலோ இருந்து உன்னைப் போலவே {உன் முறையில்} என்னை அழைப்பவர்கள், இந்த உலகில் அடையமுடியாதது எதுவுமில்லை.

பாண்டுவின் மகன்களே {பாண்டவர்களே}, இந்தச் சிறந்த பாடலை கேட்பவனோ, பக்தியுடன் மீண்டும் தானே உரைப்பவனோ, தான் செய்யும் அனைத்துத் தொழில்களிலும் வெற்றியடைவான். நீங்கள் விராட நகரத்தில் வசிக்கும் வரை, எனது அருளால், குருக்களின் ஒற்றர்களோ, மத்ஸ்ய {விராட} நாட்டில் வசிப்பவர்களோ உங்களை அடையாளம் காண்பதில் வெற்றியடைய மாட்டார்கள்" என்றாள் {துர்க்கையம்மன்}. பாண்டு மகன்களின் {பாண்டவர்களின்} பாதுகாப்புக்கான ஏற்பாடுகளைச் செய்து {ரக்ஷை செய்து}, எதிரிகளைத் தண்டிப்பவனான யுதிஷ்டிரனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்ன அந்தத் தேவி {துர்க்கையம்மன்} அங்கேயே, அப்படியே மறைந்து போனாள்.”
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


ஆயுதங்களைப் பாதுகாப்பாக வைத்தல்! - விராட பர்வம் பகுதி 5

Stowing of weapons! | Virata Parva - Section 5 | Mahabharata In Tamil

(பாண்டவ பிரவேச பர்வத் தொடர்ச்சி - 5)

இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண

விராட நகரத்தை நோக்கிப் பாண்டவர்கள் புறப்படுவது; திரௌபதி சோர்வடைவது; அர்ஜுனன் திரௌபதியைத் தூக்கிக் கொள்வது; மயானத்தில் இருக்கும் ஒரு வன்னி மரத்தில் தங்கள் ஆயுதங்களைப் பாதுகாப்பாக வைப்பது; அம்மரத்தை மனிதர்கள் அண்டாமல் இருப்பதற்கு, ஒரு சடலத்தை அம்மரத்தில் தொங்க விடுவது; விராட நகரத்துக்குள் நுழைவது...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “தங்கள் இடுப்பைச் சுற்றி வாள்களைக் கட்டிக் கொண்டும், உடும்புத்தோலால் ஆன விரல் உறைகளையும் பல்வேறு ஆயுதங்களையும் அணிந்து கொண்டும், யமுனை நதி இருந்த திசையில் அந்த வீரர்கள் {பாண்டவர்கள்} முன்னேறிச் சென்றனர். தங்கள் நாட்டை (விரைவில்) மீட்க விரும்பிய அந்த வில்லாளிகள் {பாண்டவர்கள்}, அணுக இயலாத மலைகளிலும், கடினமான காடுகளிலும் இதுவரை வாழ்ந்த வந்த அவர்கள், இப்போது தங்கள் காட்டு வாழ்வை {வனவாசத்தை} முடித்து, அந்த நதியின் {யமுனையின்} தெற்கு கரையை நோக்கி முன்னேறினர். காட்டில் மான்களைக் கொன்று வேடுவர்களாகத் தங்கள் வாழ்வைக் கடத்திய அந்தப் பெரும் பலம் பொருந்திய வலிமைமிக்க வீரர்கள் {பாண்டவர்கள்}, தங்களுக்கு வலப்புறத்தில் பாஞ்சாலர்களின் நாட்டை விட்டு, இடப்புறத்தில் தாசர்ண நாட்டை விட்டு, யக்ருல்லோம {Yakrilloma}மற்றும் சூரசேன {Surasena} நாடுகளைக் கடந்து சென்றனர். {காம்யக வனத்தில் இருந்து தசார்ண நாட்டுக்கு வடக்காகவும், பாஞ்சால நாட்டுக்குத் தெற்காகவும், யக்ருல்லோம நாடு, சூரசேனம் ஆகிய நாடுகளுக்கு மத்தியிலும் இருந்த யமுனை நதியை வந்தடைந்தார்கள் என்று வேறு பதிப்புகளில் உள்ளன}. தாடியுடன் வெளிறிப் போய்த் தெரிந்த அந்த வில்லாளிகள், வாள்களை அணிந்து கொண்டு, காட்டை விட்டு வேடுவர்களைப் போன்ற தோற்றத்தில் வெளியேறி மத்ஸ்ய {விராட} நாட்டிற்குள் நுழைந்தனர். அந்த நாட்டை அடைந்ததும் கிருஷ்ணை {திரௌபதி}, யுதிஷ்டிரனிடம், “நடைபாதைகளையும், பல்வேறு வயல்களையும் நாம் காண்கிறோம். இதிலிருந்து விராடத் தலைநகரம் {Virata's metropolis} இன்னும் தொலைவில் இருப்பதாகத் தோன்றுகிறது" என்றாள்.


யுதிஷ்டிரன் {அர்ஜுனனிடம்}, “ஓ! பாரதகுலத்தின் தனஞ்சயா {அர்ஜுனா}, பாஞ்சாலியைத் தூக்கி நீ சுமப்பாயாக [1]. காட்டைவிட்டு வெளியேறிய உடனேயே, நாம் நகரத்தை அடையலாம்" என்றான்.

[1] வேறு சில பதிப்புகளில் யுதிஷ்டிரன் நகுலனிடமும், சகாதேவனிடமும் திரௌபதியைத் தூக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும், அவர்கள் களைப்பாக இருப்பதாகச் சொன்னதால் அர்ஜுனன் சுமந்ததாகவும் வருகிறது.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடந்தார், “பிறகு யானை மந்தையின் தலைமையை யானையைப் போல அர்ஜுனன் திரௌபதியை விரைந்து தூக்கிக் கொண்டான். பிறகு நகரம் அருகே வந்ததும், அவளைக் கீழே இறக்கிவிட்டான். அந்த {விராட} நகரத்தை அடைந்ததும், ருருவின் மகன் (யுதிஷ்டிரன்) அர்ஜுனனிடம், “நகரத்திற்குள் நுழைவதற்கு முன்பு, நமது ஆயுதங்களை எங்கே வைப்பது? ஓ! குழந்தாய் {அர்ஜுனா}, ஆயுதங்களுடன் நுழைந்தால், நாம் நிச்சயம் குடிமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவோம். மேலும், மிகப்பெரிய வில்லான காண்டீவத்தை மனிதர்கள் அனைவரும் அறிவார்கள். அதனால், சந்தேகமற, விரைவில் மக்கள் நம்மை அடையாளம் காண்பார்கள். நம்மில் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டாலும், {நமது} வாக்குறுதியின் படி, நாம் மேலும் பன்னிரெண்டு வருடங்களைக் காட்டில் கழிக்க நேரிடும்" என்றான் {யுதிஷ்டிரன்}.

அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம் சொன்னான்}, “அடைய முடியா சிகரத்தின் அருகில் இருக்கும், அதோ அந்தக் கடுமை நிறைந்த மயானத்தில், ஒரு பெரும் வன்னி மரம் {Sami tree}, ஏறுவதற்குக் கடினமானதாகவும், பெரும் கிளைகளை விரிந்து பரப்பியிருப்பியபடியும்  இருக்கிறது. நாம் நமது ஆயுதங்களை அந்த இடத்தில் {மரத்தில்} வைக்கும்போது, ஓ! பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, நம்மைக் கவனித்துப் பார்க்க அங்கே எந்த மனிதரும் இல்லை என்று நினைக்கிறேன். விலங்குகளும் பாம்புகளும் நிறைந்த காட்டுக்குச் செல்லும் வழியை விட்டு விலகியிருக்கும் {ஒதுக்குப்புறமான} இடத்தின் மத்தியிலும், இருண்ட மயானத்தின் அருகிலும் அந்த மரம் உள்ளது. அந்த வன்னி மரத்தில் நமது ஆயுதங்களைப் பாதுகாப்பாக வைத்துவிட்டு, ஓ பாரதா {யுதிஷ்டிரரே}, நாம் நகரத்திற்குச் சென்று துயரத்தில் இருந்து விடுபட்டு வாழலாம்" என்றான் {அர்ஜுனன்}

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “ஓ! பாரதகுலத்தின் காளையே {ஜனமேஜயா}, இப்படி நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனிடம் பேசிய அர்ஜுனன், (அந்த மரத்தில்) ஆயுதங்களைப் பாதுகாப்பாக வைக்கத் தயாரானான். பிறகு அந்தக் குருக்களின் காளை {அர்ஜுனன்}, பகைக்கூட்டங்களை எப்போதும் அழிப்பதும், தேவர்களையும், மனிதர்களையும், நாகர்களையும் தன்னந்தனித் தேரில் சென்று, அவர்களை வென்று, நாட்டின் எல்லைகளை விரிவாக்க உதவியதும், சுண்டினால் இடியொலியெழுப்புவதுமான பயங்கரமான பெரிய காண்டீவத்தின் நாணைத் தளர்த்தினான். மேலும், பகைவர்களை ஒடுக்கும் போர்க்குணம் கொண்ட யுதிஷ்டிரன், குருக்ஷேத்திரக் களத்தைக் காத்த {தனது} வில்லின் அழியாத நாணைத் தளர்த்தினான். பாஞ்சாலர்கள், சிந்துவின் தலைவன் ஆகியோரைத் தன்னந்தனியாக வீழ்த்த உதவியதும், சுண்டினால் மலையை உடைக்கும் இடியொலியுடன் கர்ஜிப்பதும், (பயத்தால்} எதிரிகளைக் களத்தை விட்டு ஓட வைத்ததுமான தனது வில்லின் நாணை சிறப்புமிக்கப் பீமசேனன் கழற்றினான்.

செம்பின் நிறம், மிதமான பேச்சு, போர்க்களத்தில் பெரும் பராக்கிரமம் ஆகியவற்றைக் கொண்டவனும், குடும்பத்தில் ஒப்பற்ற அழகு கொண்டதன் விளைவாக நகுலன் என்ற பெயரில் அழைகப்பட்டவனுமான பாண்டுவின் மகன், மேற்குப் பகுதிகள் அனைத்தையும் தான் வெல்ல உதவிய வில்லின் நாணைத் தளர்த்தினான். மென்மையான மனநிலை கொண்ட வீரனான சகாதேவனும், தெற்கு நாடுகளைத் தான் வெல்லக் காரணமாக இருந்த வில்லின் நாணைக் கழற்றினான். பிறகு தங்களுடைய விற்களுடன் தங்கள் நீண்ட பளபளக்கும் வாள்களையும், தங்கள் மதிப்புமிக்க அம்பறாத்தூணிகளையும், கத்தி போன்ற கூர்மையுடைய தங்கள் கணைகளையும் ஒன்றாக வைத்தனர். பிறகு நகுலன் அந்த மரத்தில் ஏறி விற்களையும் பிற ஆயுதங்களையும் அதில் வைத்தான் {Nakula ascended the tree, and deposited on it the bows and the other weapons}. அந்த மரத்தில் உடையாத பகுதி என்றும், மழையும் ஊடுருவாத பகுதி என்றும் தான் {நகுலன்} நினைத்த பகுதியில் அவற்றை {அந்த ஆயுதங்களை} இறுக்கமாகக் கட்டினான்.

{உயிரற்றுக் கிடந்த பசுவின் தோலை அறுத்து, அதில் சகாதேவன் [நகுலன் அல்ல] ஆயுதங்களைக் கட்டினான் என்று வேறு பதிப்புகளில் வருகிறது}

பிறகு, {தாங்கள் கட்டப்போகும் சடலத்தின்} துர்வாடையை நுகரும் மக்கள் "இங்கே ஒரு சடலம் இருக்கிறது" என்று கருதி அந்த மரத்தை தூரத்திலேயே தவிர்த்து விடுவார்கள் என்று எண்ணிய பாண்டவர்கள், (அந்த மரத்தில்) ஒரு சடலத்தைத் தொங்கவிட்டனர் {சடலத்தை சகாதேவன் கட்டியதாக வேறு பதிப்புகள் சொல்கின்றன}. ஆடு மேய்ப்பவர்களும், மாடு மேய்ப்பவர்களும் அந்தச் சடலத்தைக் குறித்துக் கேட்ட போது, அந்த எதிரிகளை ஒடுக்குபவர்கள் {பாண்டவர்கள்}, அவர்களிடம், “இது நூற்றியெண்பது வயதான எங்கள் தாய் ஆவாள். எங்கள் மூதாதையர்களின் வழக்கப்படி நாங்கள் அவளது சடலத்தைத் தொங்கவிட்டிருக்கிறோம்" என்றனர்.

பிறகு அந்தப் பகைவர்களைத் தாங்குபவர்கள் {பாண்டவர்கள்} நகரத்தை {விராட நகரத்தை} அணுகினார்கள். தாங்கள் கண்டுபிடிக்கப்படக்கூடாது என்ற காரணத்திற்காக ஜயன், ஜயந்தன், விஜயன், ஜயத்சேனன், ஜயத்பாலன் என்ற (ஐந்து) பெயர்களைத் தனக்கும், தன் தம்பிகளுக்கும் யுதிஷ்டிரன் சூட்டிக்கொண்டான். பிறகு, (துரியோதனனுக்கு) வாக்குறுதி கொடுத்ததற்கு ஏற்ப, கண்டறியப்படாமல் இருக்க வேண்டிய {அஞ்ஜாதவாசம் செய்ய வேண்டிய} பதிமூன்றாவது வருடத்தைக் கழிக்கும் நோக்குடன், அவர்கள் அந்தப் பெரும் நகரத்திற்குள் நுழைந்தனர்.
இப்பதிவின் PDF பதிவிறக்கம்


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2018, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Back To Top