“I'll be a neuter sex” said Arjuna! | Virata Parva - Section 2 | Mahabharata In Tamil
(பாண்டவ பிரவேச பர்வத் தொடர்ச்சி - 2)
இப்பதிவின் காணொலி புத்தகத்தை யூடியூபில் காண
பதிவின் சுருக்கம் : பீமன் சமையற்காரனாக இருக்கப் போவதாகச் சொன்னது; அர்ஜுனன் என்ன அலுவலை மேற்கொள்ளப் போகிறான் என்று யுதிஷ்டிரன் வினவுவது; அலியாக வேடந்தரித்து விராடன் அரண்மனையில் வாழப்போவதாக அர்ஜுனன் சொல்வது....
பீமன், “நான் வல்லபன் [Vallabha; ballavo] {வல்லன் [அ] வல்லபன்}என்ற பெயரைத் தாங்கி, விராடத்தின் தலைவன் முன்பு என்னை ஒரு சமையற்காரனாக முன்வைக்க நோக்கம் கொண்டுள்ளேன். சமையற்கலையில் திறனுள்ள நான், மன்னனுக்காகக் கறிவகைகள் {குழம்பு வகைகள் Curries [அ] பருப்பு வகைகளும், ரச வகைகளும், பண்ட வகைகளையும்} தயாரித்து, இதுவரை அவனுக்கு உணவைத் தயாரித்த அனைத்து சமையல் நிபுணர்களையும் விஞ்சி, அந்த ஏகாதிபதியை மனநிறைவு கொள்ளச் செய்வேன். நான் பெரும் பாரமிக்கச் சுமைகளைக் கொண்ட மரங்களைச் {விறகுகளைச்} சுமப்பேன். அந்த வலிமைமிக்கச் சாதனையைச் சாட்சியாகக் காணும் ஏகாதிபதி {நிச்சயம்} மகிழ்வான்.
ஓ! பாரதா {யுதிஷ்டிரரே}, மனிதசக்திக்கு அப்பாற்பட்ட என்னுடைய சாதனைகளைக் கண்டு, அந்த அரச குடும்பத்தின் பணியாட்கள் அனைவரும் என்னை மன்னனாகவே மதிப்பார்கள். அனைத்து வகையான பலகாரங்கள் மற்றும் பானங்களின் முழுக் கட்டுப்பாட்டையும் நான் அடைவேன். சக்திவாய்ந்த யானைகள் மற்றும் வலிமைமிக்கக் காளைகளை அடக்கும் கட்டளையோடு நான் ஏவப்பட்டால், அதைச் செய்வேன். பட்டியல்களில் உள்ள எந்தப் போராளிகளாவது {மல்லர்களாவது} என்னுடன் போரிட்டால் {மல்யுத்தத்தில் மோதினால்}, நான் அவர்களை வெற்றிக் கொண்டு, அதன் மூலம் மன்னனை {விராடனை} மகிழ்விப்பேன். ஆனால் நான் அவர்களில் யார் உயிரையும் எடுக்க மாட்டேன். அவர்களைக் கொல்வதில்லை என்ற வகையில் மட்டுமே நான் அவர்களை வீழ்த்துவேன். என் முந்தைய வாழ்வு குறித்துக் கேட்கப்பட்டால், "நான் முன்பு யுதிஷ்டிரரிடம் மல்யுத்த வீரனாகவும், சமையற்காரனாகவும் இருந்தேன்" என்று சொல்வேன். இப்படியே, ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, நான் என்னைப் பராமரித்துக் கொள்வேன்" என்றான் {பீமன்}.
யுதிஷ்டிரன், “காண்டவ வனத்தை எரிக்க விரும்பிய தெய்வீகமான அக்னி, அந்தண வேடத்தில், கிருஷ்ணனோடு இருந்த யார் முன்னிலையில் வந்தானோ, அந்த நீண்ட கரங்கள் கொண்ட மனிதர்களில் முதன்மையானவனும், போரில் ஒப்பற்றவனும், குருக்களின் பலமிக்க வழித்தோன்றலும் குந்தியின் மகனுமான தனஞ்சயன் {அர்ஜுனன்} என்ன அலுவலைச் செய்வான்? தனித் தேரில் சென்று பெரும் நாகர்களையும், ராட்சசர்களையும் கொன்று, அவர்களை {அந்த ராட்சசர்களை} வென்று, அக்னியை மனம் நிறையச் செய்வதற்காகக் கானகம் புகுந்தவனும், நாகர்கள் மன்னனான வாசுகியின் தங்கையைத் {உலூபியைத்}* திருமணம் செய்தவனும், வீரர்களில் சிறந்தவனுமான அர்ஜுனன் என்ன அலுவலைச் செய்யப் போகிறான்?
வெப்பத்தைக் கொடுக்கும் கோள்களில் முதன்மையான சூரியனைப் போல, இரண்டு கால் உயிரினங்களில் {bipeds} {மனிதர்களில்} சிறந்த பிராமணனைப் போல, பாம்புகளில் சிறந்த நாகப்பாம்பைப் போல, சக்திமிக்கவைகளில் முதன்மையான நெருப்பைப் போல, ஆயுதங்கள் அனைத்திலும் முதன்மையான வஜ்ரத்தைப் போல, மாட்டினங்கள் அனைத்திலும் முதன்மையான திமில்கொண்ட காளையைப் போல, நீர் நிலைகளில் முதன்மையான கடலைப் போல, மேகங்கள் அனைத்திலும் முதன்மையான மழை சுமக்கும் மேகங்களைப் போல, நாகர்கள் அனைவரில் முதன்மையான ஆனந்தனைப் போல, யானைகள் அனைத்திலும் முதன்மையான ஐராவதனைப் போல, அன்பிற்கினிய பொருட்கள் அனைத்திலும் முதன்மையான மகனைப் போல, கடைசியாக, நண்பர்கள் அனைவரிலும் சிறந்த மனைவியைப் போல, ஓ! விருகோதரா {பீமா}, வில்லாளிகள் அனைவரிலும் முதன்மையானவனே இளைஞனான குடகேசன் {அர்ஜுனன்} ஆவான்.
ஓ! பாரதா {பீமா}, வெண்குதிரைகளால் இழுக்கப்படும் ரதம் கொண்டவனும், இந்திரனுக்கும் வாசுதேவனுக்கும் {கிருஷ்ணனுக்கும்} குறையாதவனும் {நிகரானவனும்}, காண்டீவத்தைத் தாங்குபவனுமான பீபத்சு {பீபத்சு} {அர்ஜுனன்} என்ன அலுவலைச் செய்வான்? தெய்வீக காந்தி கொண்டு ஒளிரும் ஆயிரம் கண் தெய்வத்தின் {இந்திரனின்} வசிப்பிடத்தில் ஐந்து வருடங்கள் தங்கி, தன் சக்தியால் மனித சக்திக்கு அப்பாற்பட்ட தெய்வீக ஆயுதங்களைப் பெற்றவனும், பத்தாவது ருத்திரனாகவும், பதிமூன்றாவது ஆதித்தியனாகவும், ஒன்பதாவது வசுவாகவும், பத்தாவது கிரகமாகவும் என்னால் கருதப்படுபவனும், நாண் நரம்பைச் சுண்டுவதால் கடினமானதும் சமச்சீரானதுமான நீண்ட கரங்கள் கொண்டவனும், காளைகளின் மேடுகளை ஒத்திருக்கும் வடுக்கள் கொண்டவனும், மலைகளில் இமயம் போன்றவனும், நீர்நிலைகளில் கடலைப் போன்றவனும், தேவர்களில் சக்ரன் {இந்திரன்} போன்றவனும், வசுக்களில் ஹவ்யவாகனைப் (நெருப்பு {அ} அக்னி) போன்றவனும், விலங்குகளில் புலியைப் போன்றவனும், பறவைகளில் கருடனைப் போன்றவனுமான வீரர்களில் முதன்மையான அர்ஜுனன் என்ன அலுவலைச் செய்வான்?” என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.
அர்ஜுனன் {யுதிஷ்டிரனிடம்}, “ஓ! பூமியின் தலைவா {யுதிஷ்டிரரே}, அஃறிணைப் பாலினத்தில் {neuter = அஃறிணை [அ] செயலிழந்த sex = பாலினம்; அலிகளில்; நபும்சகர்களில்} ஒருவனாக என்னை நான் அறிவிப்பேன். ஓ! ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, உண்மையில் எனது கரங்களில் உள்ள நாண்கயிற்றால் உண்டான தழும்புகளை மறைப்பது கடினமே. எனினும், நான் தழும்பேறிய எனது இரு கரங்களையும் வளையல்கள் கொண்டு மறைத்துக் கொள்வேன். பிரகாசமிக்க வளையங்களை எனது காதுகளில் அணிந்தும், சங்கு வளையல்களை எனது மணிகட்டுகளில் அணிந்தும், எனது தலையில் இருந்து பின்னலைத் தொங்கச் செய்தும், ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, பிருஹந்நளை [Brihannala; bṛhannaḍā] {ப்ருஹன்னளை [அ] ப்ருஹந்நளை} என்ற பெயர் கொண்டு, மூன்றாவது பாலினத்தைச் சேர்ந்த ஒருவன் போல நான் என்னைத் தோன்றச் செய்வேன். அப்படி ஒரு பெண்ணாக வாழும் நான், கதைகளை உரைத்து, மன்னனையும், அந்தப்புரத்தில் உடன் வாழ்பவர்களையும் (எப்போதும்) மகிழச் செய்வேன்.
ஓ! மன்னா {யுதிஷ்டிரரே}, விராடனின் அரண்மனையில் இருக்கும் பெண்டிருக்கு பாடலும், காண்பதற்கினிய முறைகளிலான ஆடலும், பல்வேறு வகையான இசைக்கருவிகளும் பயிற்றுவிப்பேன். மனிதர்களின் பல்வேறு சிறந்த செயல்களை உரைத்து, ஓ! குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, மாறுவேடத்தில் பாசாங்கு செய்து, என்னை நான் மறைத்து கொள்வேன். ஓ! பாரதா {யுதிஷ்டிரரே}, மன்னன் விசாரித்தால், “யுதிஷ்டிரரின் மாளிகையில் திரௌபதியின் பணிப்பெண்ணாக {பரிசாரிகையாக} நான் வாழ்ந்தேன்" என்று சொல்வேன். ஓ! மன்னர்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, இவ்வழிகளில், சாம்பலால் நெருப்பு மறைக்கப்படுவதைப் போல, {அவ்வேடத்தால்} என்னை மறைத்துக் கொண்டு, விராடனின் அரண்மனையில் ஏற்புடைய வகையில், எனது நாட்களை நான் கடத்துவேன்" என்றான் {அர்ஜுனன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இதைச் சொன்ன மனிதர்களில் சிறந்தவனும், அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையானவனுமான அர்ஜுனன் அமைதியானான். பிறகு மன்னன் {யுதிஷ்டிரன்} தனது மற்றொரு தம்பியிடம் பேசினான். [2]
****************************************************************************[2] "வைசம்பாயனரின் இந்தப் பேச்சு சில உரைகளில் இரண்டாவது பகுதியில் சேர்க்கப்படவில்லை. எனினும், இதை மூன்றாவது பகுதியில் சேர்ப்பது தவறானது என்பது தெளிவு" என்கிறார் கங்குலி
மேலும் விபரங்களுக்கு கீழே சொடுக்கவும்:
உலூபியின் காமமும் அர்ஜுனன் பெற்ற வரமும் - ஆதிபர்வம் பகுதி 216 - See more at: http://mahabharatham.arasan.info/2013/08/Mahabharatha-Adiparva-Section216.html#
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.