Kichaka approached Draupadi! | Virata Parva - Section 14 | Mahabharata In Tamil
(கீசகவத பர்வம் - 1)
இப்பதிவின் இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண
பதிவின் சுருக்கம் : சைரந்திரியைக் கண்ட கீசகன் அவளைக் குறித்துத் தனது சகோதரியிடம் விசாரிப்பது; கீசகன் திரௌபதியிடம் தனது ஆசையைக் கூறுவது; திரௌபதி அவனுக்குப் புத்தி சொல்வது; காமத்தில் மூழ்கிய கீசகன் திரௌபதியிடம் மீண்டும் விண்ணப்பிப்பது; கீசகனை நிந்தித்த திரௌபதி…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “மாறுவேடத்தில் வாழ்ந்து வந்த வலிமைமிக்க வீரர்களான பிருதையின் {Pritha-குந்தியின்} மகன்கள் {பாண்டவர்கள்}, மத்ஸ்யர்கள் நகரத்தில் பத்து மாதங்களை இப்படியே கழித்தனர். ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, மற்றவர்களின் பணிவிடைகளை ஏற்கும் தகுதி படைத்த யக்ஞசேனன் மகள் {திரௌபதி}, ஓ! ஜனமேஜயா, சுதேஷ்ணைக்குப் பணிவிடை செய்து தனது நாட்களைப் பெரும் துயரத்துடன் கழித்தாள். சுதேஷ்ணையின் மாளிகையில் தங்கியிருந்த பாஞ்சால இளவரசி {திரௌபதி}, அந்த மங்கையையும் {சுதேஷ்ணையையும்}, அந்தப்புரத்தில் உள்ள பிற பெண்களையும் மனநிறைவு கொள்ளச் செய்தாள். அந்த வருடம் முடிவடையும் தருணத்தில், விராடனின் படைகளுக்குத் தளபதியான பேராற்றல் படைத்த கீசகன், துருபதன் மகளைக் {திரௌபதியைக்} காண நேர்ந்தது. தேவர்களின் மகளைப் போன்ற பிரகாசத்துடன் இருந்த அந்த மங்கை {திரௌபதி}, பூமியில் தேவதையைப் போல நடந்து வருவதைக் கண்ட கீசகன், காமனின் கணைகளால் துன்புற்று, அவளை {திரௌபதியை} அடைய விரும்பினான்.
ஆசை நெருப்பில் எரிக்கப்பட்ட விராடனின் தளபதி {கீசகன்} (தனது சகோதரியான) சுதேஷ்ணையிடம் வந்து புன்னகையுடன் இந்த வார்த்தைகளைச் சொன்னான். “மன்னர் விராடரின் வசிப்பிடத்தில் இந்த அழகிய மங்கையை இதற்கு முன் நான் கண்டதில்லையே. புதிய மது, தனது வாசத்தால் ஒருவனைப் பித்தடைய வைப்பது போல, இந்தக் காரிகை தனது அழகால் என்னை வெறிகொள்ளச் செய்கிறாள். தேவதையைப் போன்ற அழகைக் கொண்ட இந்த வசீகரமான அழகி யார்? யாருடையவள்? எங்கிருந்து வந்திருக்கிறாள்? என் இதயத்தை அரைத்துக் கொண்டிருக்கும் இவள், நிச்சயமாக என்னை அவளது அடிமையாக்கிவிட்டாள். என் நோய்க்கு (இவளைத்தவிர) வேறு எந்த மருந்தும் இல்லை என எனக்குத் தோன்றுகிறது. ஓ! {சகோதரி-சுதேஷ்ணை}, உனது இந்த அழகிய கையாள், தேவதையைப் போன்ற அழகைப் பெற்றிருப்பதாகத் தெரிகிறது. நிச்சயமாக, இவளைப் போன்ற ஒருத்தி உனக்குச் சேவை செய்வது பொருத்தமானதன்று. இவள் என் மீதும், என்னுடையவை மீதும் ஆட்சி செலுத்தட்டும். எண்ணற்ற யானைகள், குதிரைகள் மற்றும் தேர்களைத் தவிர, பலவிதமான தங்க ஆபரணங்கள், தாராளமான பலகாரங்கள் மற்றும் பானங்கள், சிறந்த தட்டுகள் போன்ற அனைத்துவகைப் பொருட்களும் அபரிமிதமாக இருக்கும் எனது பரந்த அழகிய அரண்மனையை இவள் விளங்கச் செய்யட்டும்” என்றான் {கீசகன்}.
சுதேஷ்ணையுடன் கலந்தாலோசித்த கீசகன் பிறகு, ஒரு பெண் சிங்கத்திடம் செல்லும் ஒரு குள்ளநரி போன்று இளவரசி திரௌபதியிடம் சென்று, அந்தக் கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்} வெற்றிக் குரலில் இந்த வார்த்தைகளைச் சொன்னான். “ஓ! அழகானவளே, நீ யார்? யாருடையவள்? ஓ! அழகிய முகம் கொண்டவளே, எங்கிருந்து இந்த விராட நகரத்திற்கு வந்திருக்கிறாய்? ஓ! அழகிய பெண்ணே இவை யாவையும் எனக்குச் சொல். உனது அழகும் நயமும் முதல் தரத்தில் இருக்கின்றன. உனது இயல்புகளில் உள்ள அழகு இணையற்றதாக இருக்கிறது. உனது முகம் பிரகாசமிக்கச் சந்திரனைப் போல எப்போதும் அழகுடன் மிளிர்கிறது. ஓ! அழகிய புருவங்கள் கொண்டவளே, தாமரை இதழ்களைப் போல அகன்றிருக்கும் உனது கண்கள் அழகாக இருக்கின்றன. ஓ! அழகிய அங்கங்கள் கொண்டவளே, உனது பேச்சு குயிலின் இசையை ஒத்திருக்கிறது. ஓ! அழகிய இடைகள் கொண்டவளே, ஓ! குற்றமற்ற இயல்புகள் கொண்டவளே, உன்னைப் போன்ற அழகுடையவளை இதற்கு முன்னர் நான் இந்த உலகத்தில் கண்டதேயில்லை.
நீ தாமரைகளின் மத்தியில் வசிப்பிடத்தைக் கொண்டிருக்கும் லட்சுமியா? அல்லது, ஓ! கொடியிடையாளே, பூதி [1] {செழிப்பின் தேவதை} என்ற பெயர் கொண்டவளா? அல்லது, ஓ! அழகிய முகம் கொண்டவளே ஹ்ரீ, ஸ்ரீ, கீர்த்தி, காந்தி ஆகியவர்களில் ஒருத்தியா? அல்லது, காம தேவனின் அணைப்புக்குள் விளையாடிக் கொண்டிருக்கும் பெரும் அழகு படைத்த ரதியா? ஓ! அழகிய புருவங்களைக் கொண்டவளே, சந்திரனின் அழகிய ஒளியைப் போல அழகாக ஒளிர்ந்து கொண்டிருக்கிறாயே. உன் முகம் கண்ட பிறகும், ஆசையின் தாக்கத்தில் சிக்காதிருப்பவன் இந்த முழு உலகிலும் யார் இருப்பான்? ஒப்பற்ற அழகும், மிகக் கவர்ச்சியான வகையில், தெய்வீக அருளுடன் இருக்கும் உனது முகம் முழு நிலவைப் போன்று இருக்கிறது. அதன் {உனது முகத்தின்} தெய்வீகப் பிரகாசம், அவனது {சந்திரனின்} பிரகாசமான முகத்தை ஒத்திருக்கிறது. அதன் {உனது முகத்தின்} புன்னகை, அவனது {சந்திரனின்} மென்மையான ஒளியை ஒத்திருக்கிறது. அதன் {உனது முகத்திலிருக்கும்} கண்ணிமைகள் அவனது {சந்திரனின்} வட்டில் உள்ள ஆரங்களைப் போல இருக்கின்றன.
இங்கு ஒரு குறிப்பு வருகிறது:
[1] “பூதி, ஹ்ரீ, ஸ்ரீ, கீர்த்தி, காந்தி என்பவை முறையே செழுமை, அடக்கம், அழகு, புகழ் மற்றும் அழகுடைமை உள்ளடங்கிய பெண்மையின் உருவங்களாகும்” என்கிறார் கங்குலி
மிகுந்த அழகோடு, நன்கு வளர்ச்சி பெற்று, ஒப்பற்ற அருள் கொண்டு, ஆழமாக, வட்டமாக, இடைவெளியற்று இருக்கும் உனது இரு முலைகளும், தங்கத்தாலான மாலைகளைத் தாங்க நிச்சயம் தகுதி பெற்றவையே. ஓ! அழகிய கண்புருவங்கள் கொண்டவளே, அழகிய தாமரை மொட்டுகள் போல இருக்கும் உனது முலைகள், காமனின் சவுக்கால் உந்தப்பட்ட என்னை முன்னோக்கி அழைக்கின்றன. ஓ! அழகிய புன்னகை கொண்டவளே, ஓ! கொடியிடை காரிகையே, ஓ! அழகிய பெண்ணே, உனது முலைகளின் பாரம் தாங்க முடியாததால் சற்று முன் நகர்ந்து வளைந்திருப்பதும், நான்கு மடிப்புகளின் குறிகளைக் கொண்டதும், அகன்ற ஆற்றங்கரையைப் போல இருப்பதும், ஒரு சாண் அளவு கொண்டதுமான உனது வசீகரமான இடுப்பைக் காண்பதால் ஏற்பட்ட ஆசையெனும் தீரா நோய், என்னை மிகவும் வாட்டுகிறது.
உன்னோடு சேர முடியும் என்று, எனது இதயம் கொள்ளும் நம்பிக்கையால் தூண்டப்பட்டு எரியும் காட்டைப் போல, கடுமையாகச் சுடர்விட்டெரியும் ஆசைத்தீ {காமத்தீ} என்னைத் தீவிரமாக எரிக்கிறது. ஓ! பெரும் அழகு கொண்டவளே, உன்னுடன் இணைவது என்பது மழை நிறைந்த மேகமாகும். உன்னை நீ எனக்கு அளிப்பது, அந்த மேகத்தில் இருந்து பொழியும் துளியாகும். மன்மதனால் மூட்டப்பட்டுச் சுடர்விட்டெரியும் நெருப்பை நீ தணிப்பாயாக. ஓ! நிலவைப் போன்ற முகம் கொண்டவளே, உன்னுடனான சேர்க்கை எனும் ஆசையால் கூராக்கப்பட்டு அடிக்கப்பட்ட மன்மதனின் கடும் கணை, வெறிகொள்ளச் செய்யும் தனது மூர்க்கமான போக்கில், இந்த எனது இதயத்தைத் துளைத்து, அதன் மையத்தில் ஊடுருவிவிட்டது.
ஓ! கருங்கண் பெண்ணே, அந்த மூர்க்கமான, கொடூரமான கணைகள் எனது சகிப்புத்தன்மைக்கும் அப்பால் என்னை வெறிகொள்ளச் செய்கின்றன. உன் அரவணைப்பால் என்னை ஆதரித்து, உன்னை எனக்கு ஒப்படைத்து, என்னை இந்த நிலைமையில் இருந்து விடுவிப்பதே உனக்குத் தகும். அழகான மாலைகள் மற்றும் ஆடைகளால் சிங்காரித்துக் கொண்டும், அனைத்து ஆபரணங்களாலும் உன்னை அலங்கரித்துக் கொண்டும், ஓ! இனிய காரிகையே, உன் மனம் நிறையும்வரை என்னுடன் நீ விளையாடுவாயாக. ஓ! மதம் கொண்ட யானையின் நடை கொண்டவளே, இன்பத்துக்குத் தகுந்தவள் நீயென்றாலும், அதை இப்போது இழந்திருக்கிறாய். துயரத்துடன் இங்கு நீ வசிப்பது உனக்குத் தகாது. நிகரற்ற செழுமை உனதாகட்டும். பல்வேறு வகையான வசீகரமான, சுவையான, அமுதம் போன்ற மதுவகைகளைக் குடித்து, மகிழ்ச்சி தரும் பல்வேறு பொருட்களுடன் இன்பத்துடன் விளையாடிக் கொண்டு, ஓ! அருளப்பட்ட மங்கையே, நீ மங்களகரமான செழிப்பை அடைவாயாக. இந்த உனது அழகும், இளமையின் உச்சமும், ஓ! இனிய பெண்ணே, இப்போதும் பயனில்லாமல் இருக்கின்றன. ஓ! கற்புள்ள அழகிய காரிகையே, இத்தகு அழகு கொண்ட நீ, பயன்படுத்தப்படாத, அணிந்து கொள்ளளப்படாத, வசீகரமான மாலை போலப் பிரகாசிக்காமல் இருக்கிறாயே. நான் என் பழைய மனைவியர் அனைவரையும் விட்டுவிடுவேன். ஓ! அழகிய புன்னகை கொண்டவளே, அவர்கள் உனது அடிமைகளாகட்டும். ஓ! அழகிய காரிகையே, ஓ! மிக அழகான முகத்தைக் கொண்டவளே, உனக்கு எப்போதும் கீழ்ப்படியும் அடிமையாக நானும் உன்னுடனேயே வசிப்பேன்” என்றான் {கீசகன்}.
அவனது இந்த வார்த்தைகளைக் கேட்ட திரௌபதி {கீசகனிடம்}, “சிகை அலங்காரம் செய்யும் அவலமான அலுவலில் {வேலையில்} ஈடுபடும் தாழ்ந்த குலத்தைச் சார்ந்த பணிப்பெண்ணான என்னை விரும்புவதால், ஓ! சூதனின் மகனே {கீசகனே}, அந்த மதிப்புக்குத் தகாத ஒருத்தியையே விரும்புகிறாய். மேலும் நான் பிறரின் மனைவியாவேன். எனவே, இந்த உனது நடத்தை சரியானதன்று. உனக்கு மங்களம் உண்டாகட்டும். மனிதர்கள் தாங்கள் மணந்த மனைவியரிடமே இன்பம் கொள்ள வேண்டும் என்ற அறநெறியின் கட்டளையை நினைவு கூர்வாயாக. எனவே, எந்த வகையிலும் முறைபிறழ்புணர்ச்சியை {விபச்சாரத்தை} நோக்கி உன் இதயம் செல்லாதிருக்கட்டும். முறையற்ற செயல்களில் இருந்து விலகியிருப்பதே நல்லவர்களின் நித்திய படிப்பினையாகும். அறியாமையில் மூழ்கும் பாவிகள், ஆசையின் ஆதிக்கத்தால், புகழ்கேட்டையும், பயங்கரமான பேரிடரையும் சந்திக்கின்றனர்” என்றாள் {திரௌபதி}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படி அந்தச் சைரந்திரியால் சொல்லப்பட்ட அந்தத் தீய கீசகன், கற்பின்மையால் {வேசித்தனத்தால்} ஏற்படும் எண்ணற்ற தீமைகளையும், சில நேரங்களில் உயிரின் அழிவுக்கே வழிவகுக்கும் என அனைவராலும் கண்டிக்கப்படும் தீமைகளையும் அறிந்திருந்தாலும், தனது புலன்கள் மீது இருந்த கட்டுப்பாட்டை இழந்து, காமத்தில் மூழ்கி, திரௌபதியிடம், “ஓ! அழகிய பெண்ணே, ஓ! வசீகரமான இயல்புகள் கொண்டவளே, உன் நிமித்தமாக மன்மதனின் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் என்னை, ஓ! அழகிய புன்னகை கொண்டவளே, இப்படி நீ அவமதிப்பது உனக்குத் தகாது. ஓ! அச்சமுள்ளவளே, இப்போது உனது ஆதிக்கத்தின் கீழ் இருந்து, உன்னிடம் இவ்வளவு அழகாகப் பேசும் என்னை அவமதித்தால், ஓ! கருங்கண் காரிகையே, அதற்காக நீ பின்னர் வருந்த வேண்டியிருக்கும்.
ஓ! வசீகரமான கண் புருவங்கள் கொண்டவளே, ஓ! கொடியிடை மங்கையே, இந்த முழு நாட்டின் உண்மைத் தலைவன் நானே. என்னை நம்பியே இந்த நாட்டில் உள்ள மக்கள் வாழ்கின்றனர். சக்தியிலும், பராக்கிரமத்திலும், நான் இந்தப் பூமியில் ஒப்பற்றவனாக இருக்கிறேன். அழகு, இளமை, செழுமை, இன்பம் நுகர் பொருட்களின் உடைமையைக் கொண்டிருக்கும் எனக்கு நிகரான வேறு மனிதன் இந்தப் பூமியில் இல்லை. ஓ! மங்களகரமான பெண்ணே, நிகரில்லாத வசதியையும், அனைத்து ஆடம்பரங்களையும், ஆசைக்குகந்த அனைத்துப் பொருட்களையும் உனது சக்திக்குள் கொண்டு அனுபவிக்காமல், அடிமைத்தனத்தைத் நீ ஏன் தேர்ந்தெடுக்கிறாய்? ஓ! அழகிய முகம் கொண்டவளே, , ஓ! அழகானவளே, என்னை ஏற்று, நான் உனக்கு அளிக்கும் நாட்டுக்குத் தலைவியாகி, ஆசைக்குகந்த அனைத்து சிறந்த பொருட்களையும் பெற்று மகிழ்வாயாக” என்றான் {கீசகன்}.
சபிக்கப்பட்ட வார்த்தைகளாலான கீசகனின் வார்த்தைகளைக் கேட்ட கற்புள்ள துருபதன் மகள் {திரௌபதி}, அவனை {கீசகனை} நிந்தித்துப் பதிலளிக்கும் வகையில், “ஓ! சூதனின் மகனே {கீசகா}, மூடனாக இப்படி நடக்காதே. உனது உயிரை விடாதே. நான் எனது ஐந்து கணவர்களால் காக்கப்பட்டு வருகிறேன் என்பதை அறிந்து கொள். நீ என்னை அடைய முடியாது. நான் கந்தர்வர்களைக் கணவர்களாகக் கொண்டிருக்கிறேன். அவர்கள் கோபம் கொண்டால், உன்னைக் கொன்றுவிடுவார்கள். எனவே, உனக்கு நீயே அழிவைக் கொண்டு வந்துவிடாதே. மனிதர்களால் நடக்க முடியாத பாதையில் நடக்க நீ முனைகிறாய். ஓ! தீயவனே {கீசகா}, கடலின் ஒரு கரையில் நின்றுகொண்டு, அடுத்தக் கரைக்குச் செல்ல நினைக்கும் ஒரு முட்டாள் சிறுவனைப் போன்றவன் நீ.
நீ பூமிக்கடியில் பாதாளத்தில் நுழைந்தாலும், ஆகாயத்தில் பறந்தாலும், கடலின் அடுத்தக் கரைக்கு விரைந்தாலும், அனைத்து எதிரிகளையும் வதைக்கவல்ல, விண்ணதிகாரிகளான தேவர்களுடைய வாரிசுகளின் கையில் இருந்து உன்னால் தப்ப முடியாது. ஓ! கீசகா, தனது இருப்புக்கு ஒரு முற்றுப்புள்ளியை வைக்கப் போகும் இரவை எதிர் நோக்கும் நோயாளியைப் போல, நீ ஏன் இன்று விடாப்பிடியாக என்னிடம் கோரிக் கொண்டிருக்கிறாய்? தாயின் மடியில் கிடக்கும் குழந்தை நிலவைப் பிடிக்க விரும்பியதைப் போல நீ ஏன் என்னை விரும்புகிறாய்? அவர்களது அன்பிற்குரிய மனைவியான என்னிடம் இப்படிக் கேட்கும் உனக்கு, பூமியிலோ வானத்திலோ புகலிடம் இல்லை. ஓ! கீசகா, உனது உயிரைக் காத்துக் கொண்டு உனக்கான நன்மைக்கு வழிவகுக்கும் புத்தி உன்னிடம் இல்லையா?” என்று கேட்டாள் {திரௌபதி}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.