Bhima killed Jimuta! | Virata Parva - Section 13 | Mahabharata In Tamil
(சமய பாலன பர்வம்)
இப்பதிவின் இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண
பதிவின் சுருக்கம்: பாண்டவர்களின் தலைமறைவு வாழ்வை வைசம்பாயனர் ஜனமேஜயனுக்கு உரைப்பது; பீமனுக்கும் ஜிமூதனுக்கும் இடையில் நடைபெற்ற மோதல்; மற்ற பாண்டவர்கள் விராடனுக்குச் செய்த சேவைகள்; கணவர்கள் படும் துன்பத்தைக் கண்டு திரௌபதி கலங்குவது…
ஜனமேஜயன் {வைசம்பாயனரிடம்}, “ஓ! மறுபிறப்பாளரே {வைசம்பாயனரே}, மத்ஸ்யர்களின் {Matsyas} நகரத்தில் மாறுவேடத்தில் வாழ்ந்து வந்தபோது, பெரும் சக்தி கொண்ட குரு குலத்தின் வழித்தோன்றல்கள் {பாண்டவர்கள்} என்ன செய்தார்கள்?” என்று கேட்டான்.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “ஓ! மன்னா {ஜனமேஜயா}, மத்ஸ்யர்களின் நகரத்தில் மாறுவேடத்தில் வசித்து வந்த போது, {விராட} மன்னனை வழிபட்டு வந்த அந்தக் குரு குல வழித்தோன்றல்கள் {பாண்டவர்கள்} என்ன செய்தார்கள் என்பதைக் கேள். முனிவர் திருணபிந்துவின் அருளாலும், உயர் ஆன்ம நீதித்தலைவன் {மகாத்மாவான தர்மத்தின் தலைவன் - யமன்} அருளாலும், பாண்டவர்கள் அந்த விராட நகரத்தில் யாராலும் அடையாளம் காணாதபடி வாழ்ந்து வந்தார்கள்.
ஓ! மனிதர்களின் தலைவா {ஜனமேஜயா}, தன்னைத்தானே அரசவை உறுப்பினனாக்கிக் கொண்ட யுதிஷ்டிரன், விராடனுக்கும், அவனது மகன்களுக்கும் மற்றும் ஏனைய மத்ஸ்யர்களுக்கும் ஏற்புடையதையே செய்து வந்தான். பகடையின் புதிர்களில் திறமைபெற்ற பாண்டுவின் மகன் {யுதிஷ்டிரன்}, தனது விருப்பத்துக்கு ஏற்றவாறு அவர்களை {மத்ஸ்யர்கள், விராடன் மற்றும் விராடனின் மகன்களை} பகடை விளையாட வைத்து, கயிற்றில் கட்டப்பட்ட பறவைகளைப் போல {சூதில் அகப்பட்டிருக்கிற} அவர்களைச் சபாமண்டபத்தில் வரிசையாக அமர வைத்தான். மனிதர்களில் புலியும், நீதிமானுமான மன்னன் யுதிஷ்டிரன், விராடனிடம் தான் வென்ற செல்வத்தை, அந்த ஏகாதிபதி {விராடன்} அறியாதவண்ணம், தன் தம்பிகளின் மத்தியில் {செல்வத்தைப்} பகிர்ந்து கொடுத்தான்.
பீமசேனன் தனது பங்குக்கு, மன்னனிடம் {விராடனிடம்} தான் பெற்ற இறைச்சியையும், பலவிதமான பானங்களையும் யுதிஷ்டிரனுக்கு விலைக்கு விற்றான் {விற்பது போலக் கொடுத்து வந்தான்}. அர்ஜுனன், அரண்மனையின் அந்தப்புரத்தில் தான் ஈட்டிய பழைய துணிமணிகளை {ஆடைகளை} தனது சகோதரர்களுக்கு மத்தியில் பகிர்ந்து கொடுத்தான். மாட்டு இடையனாக மாறுவேடத்தில் இருந்த சகாதேவனும், பால், தயிர், மற்றும் தெளிந்த நெய் ஆகியவற்றைத் தனது சகோதரர்களுக்குக் கொடுத்தான். நகுலனும், குதிரைகளைத் தான் நிர்வாகம் செய்வதில் மனநிறைவு கொண்ட மன்னன் {விராடன்} கொடுக்கும் செல்வத்தைத் தனது சகோதரர்களுடன் பகிர்ந்து கொண்டான். பரிதாபகரமான நிலையில் இருந்த திரௌபதி, அந்தச் சகோதரர்கள் அனைவரையும் பார்த்துக் கொண்டு, யாரும் அடையாளம் காணாத வகையில் நடந்து கொண்டாள்.
இப்படியே ஒருவரின் தேவையை மற்றவர் பூர்த்திச் செய்தபடி இருந்த, அந்த வலிமைமிக்க வீரர்கள் {பாண்டவர்கள்}, தாயின் கருவறையில் மீண்டும் ஒருமுறை இருப்பது போல, அந்த விராடத் தலைநகரில் {மற்றவர்களின்} பார்வையில் இருந்து மறைந்து வாழ்ந்தனர். அந்த மனிதர்களின் தலைவர்களான பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, திருதராஷ்டிரன் மகனால் {துரியோதனனால்} ஏற்படக்கூடிய ஆபத்தினால் உண்டான பயத்தில், தங்கள் மனைவி திரௌபதியைப் பார்த்துக் கொண்டு, அந்த இடத்திலேயே மறைந்து வாழத் தொடங்கினார்கள்.
மூன்று மாதம் கழிந்த பிறகு, நான்காவது மாதத்தில், தெய்வீக பிரம்மத்தின் நினைவாக, மத்ஸ்யர்கள் நாட்டில் ஆடம்பரமாகக் கொண்டாடப்படும் மகத்தான விழா {சங்கர மஹோத்சவம்} வந்தது., அங்கே நடைபெறும் திருவிழாவைச் சாட்சியாகக் காண, பிரம்மன் அல்லது சிவனின் வசிப்பிடத்திற்கு வரும் தேவர்கள் கூட்டம் போல, அனைத்துப் பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் {மல்லர்கள்} வந்திருந்தார்கள். அவர்கள் காலகஞ்சர்கள் {காலகேயர்கள்} என்ற பேய்களைப் {அசுரர்களைப்} போலப் பெரிய உடல்களும், பெரும் பராக்கிரமமும் கொண்டவர்களாகவும் இருந்தார்கள். பராக்கிரமத்தால் மேன்மையானவர்களும், பலத்தில் செருக்குடையவர்களுமான அவர்கள் {அந்த மல்லர்கள்}, மன்னனால் {விராடனால்} கௌரவிக்கப்பட்டனர்.
அவர்களது தோள்களும், இடைகளும், கழுத்துகளும் சிம்மத்தைப் போல இருந்தன. தங்கள் உடல்களைச் சுத்தமாகவும், இதயங்களையும் துன்பமற்றதாகவும் அவர்கள் {அந்த மல்லர்கள்} வைத்திருந்தனர். மன்னர்களின் முன்னிலையில் உள்ள பட்டியல்களில் அவர்கள் பல சமயம் வெற்றிபெற்றவர்கள் ஆவார்கள். மற்ற மனிதர்களின் மத்தியில் கோபுரம் போல {உயரமாக} இருந்த அவர்களில் ஒருவன், அவர்கள் அனைவரிடமும் மோதலுக்காகச் சவால்விட்டான். அவன் கர்வத்துடன் {அங்கிருந்த} அரங்கில் நடந்தபோது, அவனைத் துணிவுடன் அணுக யாரும் இல்லை.
அனைத்து வீரர்களும் உற்சாகமிழந்து சோகத்துடன் நின்று கொண்டிருந்தபோது, மத்ஸ்யர்களின் மன்னன் {விராடன்}, தனது சமையற்காரனுடன் {வல்லவன் என்ற பீமனுடன்} அவனை மோதவிட்டான். மன்னனால் உந்தப்பட்ட பீமன், வெளிப்படையாக அரச கட்டளையை மீற முடியாமல், தயக்கத்துடன் தனது மனதைத் தயார் செய்தான் {அப்படிப் பாசாங்கு செய்ததாக வேறு பதிப்புகள் கூறுகின்றன}. மன்னனை வணங்கிய அந்த மனிதர்களில் புலி {பீமன்}, அந்தப் பரந்த அரங்கத்திற்குள் புலியைப் போல அலட்சியமாக நடந்தான். அந்தக் குந்தியின் மகன் {பீமன்} பார்வையாளர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தரும்படி, தனது இடுப்பைச் சுற்றி {கச்சையை} இறுகக் கட்டிக் கொண்டான்.
பிறகு பீமன், அசுரன் விருத்திரனைப் போன்றவனும், பராக்கிரமத்துக்காகப் பரந்த புகழ் கொண்டவனுமான ஜிமூதன் {Jimuta}என்ற பெயரில் அறியப்பட்ட வீரனை {மல்லனை} மோதலுக்கு அழைத்தான். இருவரும் {பீமனும் ஜிமூதனும்} பெரும் வீரமிக்கவர்களாகவும், பயங்கரப் பராக்கிரமம் கொண்டவர்களாகவும் இருந்தனர். அறுபது வயதுடைய, பெரும் உடல்படைத்த இரு சீற்றமுடைய யானைகளைப் போல அவர்கள் இருவரும் இருந்தனர். ஒருவரை ஒருவர் வீழ்த்த எண்ணிய மனிதர்களில் வீரப்புலிகளான அவர்கள் இருவரும் உற்சாகமாக மற்போரில் ஈடுபட்டனர்.
பாறைகள் நிறைந்த மலையின் மார்பில் இடி மோதுவது போல அவர்களுக்குள் நடந்த மோதல் பயங்கரமாக இருந்தது. அவர்கள் இருவருமே அளவிலா சக்தியும், தங்கள் பலத்தில் அளவிலா மகிழ்ச்சியும் கொண்டவர்களாக இருந்தனர். ஒருவரை ஒருவர் வீழ்த்த விரும்பிய அவர்கள் இருவரும், எதிரியின் {எதிர்வீரனின்} குறையைப் பயன்படுத்திக் கொள்ள ஆர்வமாக இருந்தனர். பெரும் மகிழ்ச்சியில் இருந்த அவ்விருவரும் மகத்தான அளவு கொண்ட கோபமூட்டப்பட்ட இரு யானைகளைப் போல இருந்தனர்.
பாறைகள் நிறைந்த மலையின் மார்பில் இடி மோதுவது போல அவர்களுக்குள் நடந்த மோதல் பயங்கரமாக இருந்தது. அவர்கள் இருவருமே அளவிலா சக்தியும், தங்கள் பலத்தில் அளவிலா மகிழ்ச்சியும் கொண்டவர்களாக இருந்தனர். ஒருவரை ஒருவர் வீழ்த்த விரும்பிய அவர்கள் இருவரும், எதிரியின் {எதிர்வீரனின்} குறையைப் பயன்படுத்திக் கொள்ள ஆர்வமாக இருந்தனர். பெரும் மகிழ்ச்சியில் இருந்த அவ்விருவரும் மகத்தான அளவு கொண்ட கோபமூட்டப்பட்ட இரு யானைகளைப் போல இருந்தனர்.
பலமாகப் பற்றப்பட்ட முஷ்டிகளைக் கொண்டு பல விதமான தாக்குதல் மற்றும் தற்காப்பு முறைகளை வெளிப்படுத்தினர் [1]. இருவரும் ஒருவருக்கொருவர் எதிராக மோதிக் கொண்டு, எதிரியை சிறிது தூரத்திற்குத் தூக்கி எறிந்தனர். ஒவ்வொருவரும் மற்றவரை கீழே தள்ளி, தரையோடு சேர்த்து அழுத்தினார்கள். மீண்டும் எழுந்து, தனது கரங்களால் மற்றவனை இருவரும் பிழிந்தனர். மார்பில் ஓங்கிக் குத்துவதன் மூலம், ஒருவரை மற்றவர் வீசியெறிந்தனர். இருவரும் தங்கள் கால்களால் மற்றவனைப் பிடித்து, அவனைச் சுழற்றி தரையில் சாய்த்தனர். அவர்கள் இருவரும் தங்கள் உள்ளங்கைகளால் இடியைப் போல அறைந்து கொண்டனர். விரிந்த விரல்களைக் கொண்டு, அவற்றை ஈட்டிகளைப் போல விரித்து, ஒருவரின் நகத்தை மற்றவர் உடலில் செலுத்தினார்கள். இருவரும் பயங்கரமாக உதைத்துக் கொண்டார்கள். கால் முட்டியால் தாக்குவதும், தலைக்குத் தலை மோதுவதாலும், பாறைகள் இரண்டு மோதும் ஒலி கேட்டது. ஆயுதங்களற்ற அவரவர் கரங்களின் பலத்தைக் கொண்டும், அவரவர் உடல் மற்றும் மனோ சக்தியைக் கொண்டும் நடந்த இந்தக் கடும் மோதல், பார்வையாளர்கள் கூட்டத்திற்கு அளவிலா மகிழ்ச்சியை அளித்தது.
[1] “கிருதம் {Krita} – தாக்குதல்; பிரதிகிருதம் {Pratikrita} – தடுத்தல்; சங்கதம் {Sankata} – பலமாகப் பற்றப்பட்ட {Clenched}. சில உரைகள் சங்கதகைகள் {Sankatakais} என்று சொல்கின்றன. அப்படியென்றால் அதன் பொருள் “கையுறைகளால் பாதுகாக்கப்பட்ட” என்றாகிவிடும்.” என்கிறார் கங்குலி.“கிருதம், பிருதிகிருதம், ஸந்நிபாதம், அவதூதம், பிரமாதம், உன்மதனம், க்ஷேபணம், முஷ்டி, வரஹோத்தூதம், நிஸ்வனம், உள்ளங்கையால் அறைதல், சலாகாபாதம், நகபாதம், பயங்கரமான பாதோத்தூதம், முழங்கால் இடி, அம்சநிர்கோஷம், தலை இடி முதலியவற்றால் ஒருவருடன் ஒருவர் மல்யுத்தம் செய்தார்கள்” என்று வேறு பதிப்புகளில் இருக்கின்றன.
ஓ! மன்னா {ஜனமேஜயா}, இந்திரன் மற்றும் அசுரன் விருத்திரன் ஆகியோர் போன்று போராடிய அந்த வலிமைமிக்க மற்போர் வீரர்களின் மோதலில் மக்கள் அனைவரும் ஆழ்ந்த அக்கறை கொண்டனர். இருவருக்கும், தங்கள் கரவொலியின் மூலம் உரத்த பாராட்டுகளைத் தெரிவித்து {மக்கள்} ஆரவாரம் செய்தனர். பரந்த மார்பும், நீண்ட கரங்களும் கொண்ட அந்த மல்யுத்த நிபுணர்கள், ஒருவரை ஒருவர் இழுத்தும், அழுத்தியும், சுழற்றியும், கீழே வீசியும், ஒருவரை ஒருவர் கால்முட்டிகளால் தாக்கிக் கொண்டும், உரத்த குரலெழுப்பி ஒருவரை ஒருவர் ஏளமனாக இகழ்ந்து {scorn- திட்டுதல், வைதல்} கொண்டனர்.
இரும்பாலான பரிகம் {முள் பொருந்திய தண்டம்} போன்று இருந்த தங்கள் வெறுங்கைகளைக் கொண்டே அவர்கள் போராடினர். இறுதியாக, மத்ஸ்ய {நாட்டு} மக்களும், கூடியிருந்த வீரர்களும் {மல்லர்களும்} பெரும் வியப்பெய்தும் வண்ணம், எதிரிகளைக் கொல்பவனும், பலமிக்கவனும், வலிமைநிறைந்த கரங்கள் கொண்டவனுமான பீமன், உரத்த குரலெழுப்பி, சிங்கம் யானையைப் பிடிப்பதைப் போல, ஆவேசம் கொண்ட அந்த வீரனை {ஜிமூதனைப்} பற்றி, தரையில் இருந்து அவனை மேலே தூக்கி சுழற்றத் தொடங்கினான். அப்படியே அவன் உணர்வையிழக்கும் வரை நூறு {100}முறை மீண்டும் மீண்டும் சுழற்றிய வலிய கரங்கள் கொண்ட விருகோதரன் {பீமன்}, அவனைத் {ஜிமூதனைத்} தரையில் வீசிக் கொன்றான்.
வீரனும் புகழ்பெற்றவனுமான ஜிமூதன் இப்படிக் கொல்லப்பட்ட போது, தனது நண்பர்களுடன் கூடிய விராடன் பெரும் மகிழ்ச்சியில் நிறைந்தான். பேருவகைக் கொண்ட மேன்மையான மனம் கொண்ட மன்னன் {விராடன்}, குபேரனைப் போலக் கொடையளிக்கும் விதமாக வல்லவனுக்கு {பீமனுக்கு} வெகுமதி அளித்தான். எண்ணற்ற வீரர்களையும், பெரும் உடல் வலிமை கொண்ட பிற மனிதர்களையும் கொன்ற அவன் {பீமன்} மன்னனை மிகவும் மகிழ்ச்சி கொள்ள வைத்தான். பட்டியலில் இருக்கும் யாரும் அவனிடம் மோத முடியாத போது, புலிகளிடமும், சிங்கங்களிடமும், யானைகளிடமும் அவனை {பீமனை} மன்னன் {விராடன்} போராடவிட்டான். மேலும் அந்த மன்னன் {விராடன்}, அந்தப்புர மகளிரை மகிழ்விக்கும்பொருட்டும், வலிமைமிக்கச் சிங்கங்களுடன் அவனை {வல்லவன் என்ற பீமனை} மோதவிட்டான்.
மன்னன் மற்றும் அந்தப்புர மகளிரைப் பாடல் மற்றும் நடனம் ஆகியவற்றால் அர்ஜுனனும் மகிழ்வித்தான். எங்கு விரும்பினாலும், அவனைத் தொடர்ந்து சென்ற வேகமான குதிரைப்படையையும், நன்கு பயிற்றுவிக்கப்பட்ட குதிரைகளையும் காட்டி மன்னர்களில் சிறந்த விராடனை நகுலன் மகிழ்வித்தான். அவனிடம் {நகுலனிடம்} மனநிறைவு கொண்ட மன்னன் ஏராளமான பரிசுகளை வெகுமதிகளாக அவனுக்கு அளித்தான். சகாதேவனால் நன்கு பயிற்சி பெற்ற காளைகளின் கூட்டத்தைச் சுற்றிலும் கண்ட மனிதர்களில் காளையான விராடன், அவனுக்கு {சகாதேவனுக்கு} பல்வேறு வகைச் செல்வங்களை அளித்தான். மேலும், ஓ! மன்னா {ஜனமேஜயா}, அந்த வீரர்கள் {பாண்டவர்கள்} அடையும் வலியைக் கண்டு துக்கமடைந்த திரௌபதி, இடைவிடாமல் பெருமூச்சு விட்டாள். மாறுவேடத்தில் வாழ்ந்த அந்த மேம்பட்ட மனிதர்கள் {பாண்டவர்கள்}, இவ்வழியிலேயே, மன்னன் விராடனுக்குத் தங்கள் சேவைகளைச் செய்தனர்.
*********சமய பாலன பர்வம் முற்றிற்று*********
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.