Draupadi went to Kichaka! | Virata Parva - Section 15 | Mahabharata In Tamil
(கீசகவத பர்வத் தொடர்ச்சி - 2)
இப்பதிவின் இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண
பதிவின் சுருக்கம் : கீசகன் சுதேஷ்ணையிடம் பேசுவது; கீசகனிடம் இரக்கம் கொண்ட சுதேஷ்ணை அவனுக்கு ஒரு திட்டத்தைச் சொல்வது; அத்திட்டத்தின் படியே திரௌபதியை கீசகனிடம் சுதேஷ்ணை அனுப்பியது …
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “இப்படி அந்த இளவரசியால் {திரௌபதியால்} நிராகரிக்கப்பட்ட கீசகன், வெறிகொண்ட காமத்தால் தாக்குண்டு, உடைமைத்தன்மை குறித்த உணர்வுகளை மறந்து சுதேஷ்ணையிடம், “கேகேயன் மகளே {சுதேஷ்ணையே}, உனது சைரந்திரி {மாலினி என்ற திரௌபதி} எனது கரங்களுக்குள் வருவது போல நீ செயல்படு. ஓ! சுதேஷ்ணை, யானை நடை கொண்ட அந்தக் காரிகை என்னை ஏற்கும் வழிகளைக் கடைப்பிடி; {என் உயிரை} உறிஞ்சிக் கொண்டிருக்கும் ஆசையால் நான் செத்துக் கொண்டிருக்கிறேன்” என்றான் {கீசகன்}”
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அவனின் {கீசகனின்} பயங்கரப் புலம்பல்களைக் கேட்ட விராடனின் புத்திசாலி மனைவியான அந்த மென்மையான பெண் {சுதேஷ்ணை} அவனிடம் இரக்கம் கொண்டாள். தனக்குள்ளேயே ஆலோசித்து, கீசகனின் நோக்கத்தையும், கவலையோடு இருக்கும் கிருஷ்ணையையும் {திரௌபதியையும்} நினைத்துப் பார்த்த சுதேஷ்ணை அந்தச் சூதனின் மகனிடம் {கீசகனிடம்}, “ஏதாவதொரு விழாவின் போது, நீ எனக்காகப் பலகாரங்கள் மற்றும் மது வகைகளைக் கொள்வன செய். அதன் பின்னர் நான் அந்த மதுவைக் கொண்டு வரும் பாசாங்கில், எனது சைரந்திரியை {மாலினி என்ற திரௌபதியை} உன்னிடம் அனுப்புகிறேன். அவள் {சைரந்திரி) அங்கே தனிமையில் வரும்போது, குறுக்கீடு ஏதும் இல்லாமல், நீ விரும்பியவாறு அவளிடம் {சைரந்திரியிடம்} நகைச்சுவை செய். இப்படி அமைதிப்படுத்துவதன்மூலம், அவள் தனது மனதில் உன்னை விரும்பலாம்” என்றாள் {சுதேஷ்ணை}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படிச் சொல்லப்பட்டதும் அவன் {கீசகன்}, தனது சகோதரியின் {சுதேஷ்ணையின்} அறையில் இருந்து வெளியேறினான். விரைவில் ஒரு மன்னனுக்குத் தகுந்த வகையில் நன்கு வடிகட்டப்பட்ட மதுவைக் கொள்முதல் செய்தான். பிறகு திறன் கொண்ட சமையற்கலைஞர்களை நியமித்து, தேர்வு செய்யப்பட்ட பல்வேறு வகைகளிலான பலகாரங்களையும், சுவையான பானங்களையும் மற்றும் பல்வேறு வகைகளில் தயாரிக்கப்பட்ட பல வகைகளிலான இறைச்சிகளையும் தயார் செய்தான். இவை அனைத்தும் முடிந்த பிறகு, மென்மையான பெண்ணான சுதேஷ்ணை, ஏற்கனவே கீசகனுடன் ஆலோசித்தபடி, தனது சைரந்திரியை கீசகனின் வசிப்பிடத்திற்கு அனுப்ப விரும்பி, அவளிடம் {மாலினி என்ற திரௌபதியிடம்}, “ஓ! சைரந்திரி, நான் தாகத்தால் துன்புறுவதால், எழுந்து, மதுவைக் கொண்டு வர கீசகன் வசிப்பிடம் செல்” என்றாள் {சுதேஷ்ணை}.
அதற்குச் சைரந்திரி {திரௌபதி சுதேஷ்ணையிடம்}, “ஓ! இளவரசி {சுதேஷ்ணையே}, என்னால் கீசகனின் அறைக்குச் செல்ல இயலாது. ஓ! ராணி {சுதேஷ்ணையே}, அவன் {கீசகன்} எப்படிப்பட்ட வெட்கங்கெட்டவன் என்பதை நீயே அறிவாய். ஓ! களங்கமற்ற அங்கங்கள் கொண்டவளே, ஓ! அழகான பெண்ணே, உனது அரண்மனையில் எனது கணவர்களுக்கு விசுவாசமற்றவளாகி காம வாழ்வை என்னால் வாழ முடியாது. ஓ! மென்மையான பெண்ணே, ஓ! அழகானவளே, உனது வீட்டுக்குள் நுழையும் முன்னர் நான் வைத்த நிபந்தனைகளை நினைத்துப் பார். ஓ! வசீகரமான சுருள் முனைகளுடைய கேசம் கொண்டவளே, காம தேவனால் தாக்கப்பட்ட மூடனான கீசகன் என்னைப் பார்த்தால், என்னை அவமதிப்பான்.
எனவே, நான் அவன் {கீசகன்} இருக்கும் இடத்திற்குச் செல்லமாட்டேன். ஓ! இளவரசி {சுதேஷ்ணையே}, உனக்குத்தான் நிறையப் பணிப்பெண்கள் இருக்கிறார்களே. உனக்கு மங்களம் உண்டாகட்டும். என்னை நிச்சயம் கீசகன் அவமதிப்பானாதலால், அவர்களில் ஒருத்தியை அனுப்பு” என்றாள் {திரௌபதி}. அதற்கு சுதேஷ்ணை, “எனது வசிப்பிடத்தில் இருந்து என்னால் அனுப்பப்படுவதால், அவன் உனக்குத் தீங்கிழைக்க மாட்டான்” என்றாள். இப்படிச் சொன்ன அவள் {சுதேஷ்ணை}, அவளது கையில் ஒரு மூடியுடன் கூடிய ஒரு தங்கப் பாத்திரத்தைக் கொடுத்தாள். பயம் நிறைந்து, அழுது கொண்டு, பாதுகாப்புக்காகத் தேவர்களிடம் மனதுக்குள்ளேயே வேண்டுதல் செய்த திரௌபதி, மதுவைப் பெறுவதற்காகக் கீசகன் வசிப்பிடத்திற்குக் கிளம்பினாள். அவள் {மாலினி என்ற திரௌபதி}, “எனது கணவர்களைத் தவிர வேறொரு மனிதரை நான் அறியாததால், அந்த அறத்தின் உண்மைத்தன்மையால் {சத்தியத்தால்}, நான் கீசகனின் முன்னிலைக்குச் சென்றாலும், அவனால் {கீசகனால்} என்னை வீழ்த்த முடியாது போகட்டும்” என்று சொன்னாள் {திரௌபதி}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “அந்த ஆதரவற்ற காரிகை {திரௌபதி} பிறகு, ஒரு நொடி சூரியனைப் புகழ்ந்தாள். அவள் வேண்டிக்கொண்ட அனைத்தையும் கருத்தில் கொண்ட சூரியன், காட்சிக்குப் புலப்படாமல் அவளை {திரௌபதியை} பாதுகாக்க ஒரு ராட்சசனுக்குக் கட்டளையிட்டான். அந்த நேரத்தில் இருந்து அந்த ராட்சசன் அந்தப் பழியற்ற மங்கையை எந்தச் சூழ்நிலையிலும் காக்க ஆரம்பித்தான். பயந்த புறாவைப் போலத் தன் முன்னிலையில் இருந்து கிருஷ்ணையைக் {திரௌபதியைக்} கண்ட அந்தச் சூதன் {கீசகன்}, தனது ஆசனத்தில் இருந்து எழுந்து, அடுத்தக் கரைக்குச் செல்ல விரும்பும் ஒருவன், ஒரு படகை அடைந்தால் எவ்வளவு மகிழ்வானோ அவ்வளவு மகிழ்ந்தான்.”
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.