Bhima killed Kichaka! | Virata Parva - Section 22b | Mahabharata In Tamil
(கீசகவத பர்வத் தொடர்ச்சி - 9)இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண
பதிவின் சுருக்கம்: கீசகனுக்கும் பீமனுக்கு இடையில் நடந்த கைச்சண்டை; பீமன் கீசகனைக் கொன்றது; திரௌபதிக்குச் சமாதானம் கூறி தனது வசிப்பிடம் திரும்பியது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “வேடம் மாற்றிக் கொண்ட பீமன், இரவில் குறித்த இடத்திற்கு முன்கூட்டியே சென்று அமர்ந்து கொண்டான். தான் தேர்ந்தெடுத்த வகைபோல் தன்னை அலங்கரித்துக் கொண்ட கீசகன், பாஞ்சாலியைச் {திரௌபதியைச்} சந்திக்கும் நம்பிக்கையோடு, குறித்த நேரத்தில் ஆடற்கூடத்திற்கு வந்தான். குறித்த செய்திகளை நினைத்துக் கொண்டே அவன் {கீசகன்} அந்த மண்டபத்துக்குள் நுழைந்தான். ஆழ்ந்த இருளில் மூழ்கி இருந்த அந்தக் கூடத்திற்குள் நுழைந்த தீய ஆன்மா கொண்ட அந்த இழிந்தவன் {கீசகன்}, சற்று முன் அங்கு வந்து ஒரு மூலையில் காத்திருந்த ஒப்பிலா பராக்கிரமம் கொண்ட பீமனின் அருகில் வந்தான்.
கிருஷ்ணைக்கு {திரௌபதிக்கு} இழைக்கப்பட்ட அவமானத்தால் கோபத்தில் எரிந்து கொண்டு, தானே அந்தச் சூதனின் {கீசகனின்} மரணவுரு என்று நினைத்துக் கொண்டு படுக்கையில் படுத்திருந்த பீமனை, சுடர்விட்டெரியும் நெருப்பைப் பூச்சி அணுகுவது போலவோ, சிங்கத்தை அணுகும் மெலிந்த விலங்கைப் போலவோ கீசகன் அணுகினான். காமத்தால் பீடிக்கப்பட்டு, ஆன்மாவும், இதயமும் குதூகலித்து, {திரௌபதி என்று நினைத்துக் கொண்டு} பீமனை அணுகிய கீசகன் புன்னகையுடன், “ஓ! மெலிய கண் புருவங்கள் கொண்டவளே {மாலினி}, நான் ஈட்டியிருந்த பலதரப்பட்ட எண்ணிலடங்கா செல்வங்களை எனது காப்பகத்தில் இருந்து, ஏற்கனவே உனக்குக் கொடுத்துவிட்டேன். நூறு பணிப்பெண்களையும், பல அழகிய ஆடைகளையும் {உனக்காகக்} கொடுத்துவிட்டேன். இவை யாவையும் தவிர, இளமை நிரம்பிய அழகிய பணிப்பெண்களால் அலங்கரிக்கப்பட்டதும், அனைத்து வகை விளையாட்டுகளும் கேளிக்கைகளும் கொண்ட அந்தப்புரத்துடன் கூடிய மாளிகை ஒன்றையும் உனக்காகக் கொடுத்த பிறகே, நான் இங்கே விரைந்து வந்தேன். தீடீரெனப் பெண்கள் அனைவரும், “அழகிலோ ஆடையிலோ உமக்கு நிகரானவர் வேறு யாரும் இந்த உலகத்தில் இல்லை” என்று என்னைப் புகழ ஆரம்பித்தனர்” என்றான் {கீசகன்}.
இதைக் கேட்ட பீமன் {கீசகனிடம்}, “நீ அழகாய் இருப்பது நன்று; உன்னை நீயே புகழ்ந்து கொள்வதும் நன்று! எனினும், இத்தகு மகிழ்ச்சிகரமான தொடுதலை நீ ஒரு போதும் பெற்றிருக்க மாட்டாய் என்று நான் நினைக்கிறேன். நீ தீவிரத் தொடுதலை அடையப் போகிறாய். மேலும் வீரதீரச் செயல்களுக்கான வழிகளை நீ அறிந்திருக்கிறாய். காதற்கலையில் நீ கைதேர்ந்தவனாக இருக்கிறாய். நீ பெண்களுக்குப் பிடித்தமானவனாகவும் இருக்கிறாய். உன்னைப் போன்றவன் இந்த உலகத்தில் வேறு யாரும் கிடையாது” என்றான் {பீமன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இதைச் சொன்ன பயங்கரப் பராக்கிரமம் கொண்ட அந்தக் குந்தியின் மகன் பீமன், திடீரென எழுந்து பெருஞ்சிரிப்புச் சிரித்துக் கொண்டே, “ஓ இழிந்தவனே {கீசகா}, பெரும் மலையைப் போன்ற ஒரு பலமிக்க யானை சிங்கத்தால் தரையில் இழுத்துச்செல்லப்படுவதைப் போல, இன்று உன்னை நான் தரையில் இழுத்துச் செல்வதை உனது சகோதரி {சுதேஷ்ணை} காண்பாள். நீ கொல்லப்பட்டால் சைரந்திரி {திரௌபதி} அமைதியாக வாழ்வாள். அவளது கணவர்களான நாங்களும் அமைதியுடன் வாழ்வோம்” என்று சொன்ன பெரும் பலமிக்கப் பீமன், {மலர்} மாலைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த கீசகனின் தலைமுடியைப் பற்றினான். இப்படித் தலைமுடியைப் பிடித்துப் பலமாக இழுக்கப்பட்ட பெரும் பலம் கொண்ட மனிதர்களில் முதன்மையான கீசகன், தனது முடியை விரைவாக விடுவித்துக் கொண்டு, பீமனின் கரங்களைப் பற்றினான்.
பிறகு கோபத்தால் எரிந்த மனிதர்களில் சிங்கங்களான அந்த இருவருக்குள்ளும், வசந்த காலத்தில் பெண்யானைக்காகச் சண்டையிடும் இரு பலமிக்க யானைகள் போலவோ, குரங்குகளில் சிங்கங்களும் சகோதரர்களுமான வாலிக்கும் சூக்ரீவனுக்கும் இடையில் பழங்காலத்தில் நடந்த மோதலைப் போலவோ, கீசக குலத்தின் தலைவனுக்கும் {கீசகனுக்கும்}, மனிதர்களில் சிறந்தவனுக்கும் {பீமனுக்கும்} இடையில் கைச்சண்டை நடந்தது. சமமாக வெறியூட்டப்பட்டு, வெற்றியில் ஆவலுடைய அந்தப் போட்டியாளர்கள் இருவரும் ஐந்து தலை பாம்புகளைப் போன்ற தங்கள் கரங்களை உயர்த்தி, தங்கள் நகங்களாலும், பற்களாலும் வேகம் கொண்ட கோபத்தோடு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். பலமிக்கக் கீசகனால், அந்த மோதலில் அவசரமாகத் தாக்கப்பட்டாலும் உறுதிமிக்கப் பீமன் ஓர் அடியேனும் தடுமாறாமல் இருந்தான்.
ஒருவர் அணைப்பில் ஒருவர் கட்டுண்டு, ஒருவரையொருவர் இழுத்துக் கொண்டு, பலமிக்கக் காளைகளைப் போல அவர்கள் இருவரும் சண்டையிட்டனர். நகங்களையும், பற்களையும் ஆயுதமாகக் கொண்ட அவர்கள் இருவருக்கிடையில் நடந்த அந்தக் கடும் போர், சீற்றமிகு இரு புலிகளுக்கிடையில் நடந்த மோதலைக் கண்டது போலப் பயங்கரமாக இருந்தது. கோபத்தால் ஒருவரை ஒருவரே கீழே தள்ளிய இருவரும், மதங்கொண்ட இரு யானைகள் போல மோதிக் கொண்டனர். பிறகு பலமிக்கப் பீமன் கீசகனைப் பிடித்தான். அப்போது பலமிக்க மனிதர்களில் முதன்மையான கீசகன், பீமனை வன்முறையுடன் கீழே தள்ளினான். அந்த இரு போட்டியாளர்களும் தங்கள் கரங்களின் மோதலால் மூங்கிலைப் பிளக்கும் பெரும் ஒலியை ஏழுப்பினர்.
பிறகு விருகோதரன் {பீமன்} பெரும் பலத்துடன் கீசகனை அறைக்குள் கீழே தள்ளி, புயற்காற்று மரத்தைத் தூக்கி வீசுவது போல, அவனை {கீசகனை} மூர்க்கமாகத் தூக்கி எறிய ஆரம்பித்தான். இப்படி அந்தப் போரில் பலமிக்கப் பீமனால் தாக்கப்பட்ட கீசகன் பலமிழந்து போய் நடுங்கத் தொடங்கினான். எனினும், அவன் {கீசகன்}, தனது சக்தியில் சிறந்ததைக் கொண்டு அந்தப் பாண்டவனிடம் {பீமனிடம்} {சிக்காமல்} இழுபறி செய்தான். பிறகு, பீமனைத் தாக்கி, அவனை லேசாக அசையச் செய்த பலமிக்கக் கீசகன், தனது முட்டிகளால் தாக்கி அவனைத் {பீமனைத்} தரையில் சாய்த்தான். பலமிக்கக் கீசகனால் {தரையில்} சாய்க்கப்பட்ட பீமன், கையில் கதாயுதம் கொண்ட யமனைப் போல விரைவாக எழுந்தான்.
இப்படியே அந்தப் பலமிக்கச் சூதனும் {கீசகனும்}, அந்தப் பாண்டவனும் {பீமனும்}, தங்கள் பலத்தால் போதையுண்டு, ஒருவரை ஒருவர் சவாலுக்கழைத்து, நள்ளிரவில், அந்தத் தனிமையான இடத்தில் ஒருவரை ஒருவர் பற்றிக் கொண்டு சண்டையிட்டனர். அப்படி அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கோபத்தால் கர்ஜித்த போது, வலுவான அந்தச் சிறந்த மாளிகை ஒவ்வொரு நொடியும் குலுங்கத்தொடங்கியது. பலமிக்கப் பீமனால் மார்பில் அறையப்பட்ட கீசகன் கோபத்தால் நிறைந்தாலும் ஓர் அடியும் நகர இயலவில்லை. பூமியால் தாங்கிக் கொள்ள முடியாது அந்தத் தாக்குதலை ஒரு நொடி தாங்கிய அந்தச் சூதன் {கீசகன்}, பீமனின் பலத்துக்கு அடங்கிக் கட்டுப்பட்டான்.
அவன் {கீசகன்} பலவீனமடைவதைக் கண்ட பெரும் பலம் கொண்ட பீமன் அவனைப் பலவந்தமாகத் தனது மார்பை நோக்கி இழுத்து, கடுமையாக அழுத்தத் தொடங்கினான். கோபத்தால் கடும் மூச்சு விட்டபடியே அந்த வெற்றியாளர்களில் சிறந்தவனான விருகோதரன் {பீமன்}, கீசகனின் தலைமயிரைப் பலவந்தமாகப் பற்றினான். அப்படிக் கீசகனைப் பிடித்த பீமன், பெரும் விலங்கைக் கொன்ற பசிகொண்ட புலியைப் போலக் கர்ஜித்தான். மிகவும் களைப்படைந்த அவனைக் {கீசகனைக்} கண்ட விருகோதரன், ஒரு விலங்கைக் கயிறால் கட்டுவதைப் போலத் தனது கரங்களால் கடுமையாகக் கட்டி அணைத்தான். பிறகு, உடைந்த எக்காளத்தைப் [1] போலப் பயத்தால் கதறிய கீசகன் உணர்வற்றதும், பீமன் அவனை நீண்ட நேரம் சுழற்றினான்.
[1] //“வேறி” {veri} என்ற பதம், பேரிகை என்றும், எக்காளம் என்றும் பொருள் கொள்ளும். எனினும் எக்காளம் என்பதே இங்குச் சிறந்த பொருளைத் தருகிறது// என்கிறார் கங்குலி
கிருஷ்ணையின் {திரௌபதியின்} கோபத்தைத் தணிக்கும்பொருட்டு, விருகோதரன் {பீமன்}, கீசகனின் தொண்டையைத் தனது கைகளால் பிடித்து நசுக்கத் தொடங்கினான். பிறகு தனது முட்டிகளைக் கொண்டு கீசகர்களில் இழிந்த அவனை {கீசகனை} இடுப்பில் தாக்கினான். அவனது {கீசகனின்} உடலில் இருந்த அங்கங்கள் எல்லாம் துண்டுகளாக நொறுங்கின. அவனது {கீசகனின்} கண் இமைகள் மூடிக் கொண்டன. ஒருவன் விலங்கைக் கொல்வதைப் போல விருகோதரன் {பீமன்} அவனைக் {கீசகனைக்} கொன்றான். முழுவதும் அசைவற்றிருந்த கீசகனைக் கண்ட பாண்டுவின் மகன் {பீமன்} அவனைத் தரையில் உருட்டத் தொடங்கினான்.
“சைரந்திரியின் {திரௌபதியின்} அருகில் இருந்த இந்த முள்ளை {கீசகனை}, எங்கள் மனைவியைக் களங்கப்படுத்த எண்ணிய இந்தப் பாவியைக் கொன்றதால், நான் எனது சகோதரர்களுக்குப் பட்ட கடனில் இருந்து விடுபட்டு முழு அமைதியை அடைந்தேன்” என்றான். இதைச் சொன்ன அந்த மனிதர்களில் முதன்மையானவன் {பீமன்} கோபத்தில் கண்கள் சிவக்க, மேனியில் இருந்து ஆடைகளும் ஆபரணங்களும் வீசி எறியப்பட்டு, கண்கள் உருள, இன்னும் உடல் நடுங்கிக் கொண்டிருந்த கீசகன் மீதிருந்த தனது பிடியை விட்டான்.
பிறகு பலமிக்க மனிதர்களில் முதன்மையானவன் {பீமன்}, தனது கரங்களைப் பிசைந்து கொண்டும், கோபத்தால் தனது உதடுகளைக் கடித்துக் கொண்டும், எதிரியை {கீசகனை} மீண்டும் மீண்டும் தாக்கி, பினகையைத் தாங்கியிருப்பவன் {சிவன்}, வேள்விக்காக மானை உருவமற்ற ஒன்றாக்க, அது தனது கோபத்தில் இருந்து தப்புவதற்காக எப்படிக் குறைத்தானோ, அதே போலக் கீசகனின் கரங்கள், கால்கள், கழுத்து தலை ஆகியவற்றை அவனது {கீசகனின்} உடலுக்குள்ளேயே அழுத்தித் திணித்தான் {பீமன்}. அனைத்து உறுப்புகளையும் அப்படித் திணித்து, அவனை {கீசகனை} வெறும் சதைப் பிண்டமாக்கிய வலிமைமிக்கப் பீமன், அதைக் கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்} காட்டினான்.
பிறகு பெரும் சக்தி கொண்ட அந்த வீரன் {பீமன்}, அனைத்துப் பெண்களிலும் முதன்மையான திரௌபதியிடம், “பாஞ்சால இளவரசியே {திரௌபதியே} வா, வந்து இந்தக் காமாந்தகனான இழிந்தவன் எப்படி ஆனான் என்பதைப் பார்!” என்றான். இப்படிச் சொன்ன பயங்கரப் பராக்கிரமம் கொண்ட பீமன் தனது காலால் அந்த இழிந்த பாதகனின் {கீசகனின்} உடலை அழுத்தினான். பிறகு ஒரு பந்தத்தை ஏற்றி திரௌபதியிடம் கீசகனின் உடலைக் காட்டிய அந்த வீரன் {பீமன்} அவளிடம் {திரௌபதியிடம்}, “ஓ! அழகான சுருள் முடி கொண்டவளே {திரௌபதி}. சிறந்த நிலையில் அனைத்து அறங்களுடன் இருக்கும் உன்னிடம் கோரிக்கை வைக்கும் அனைவரும் கீசகன் கொல்லப்பட்டது போலவே, ஓ! அச்சமுள்ளவளே, என்னால் கொல்லப்படுவார்கள்” என்றான் {பீமன்}.
கிருஷ்ணைக்கு {திரௌபதிக்கு} ஏற்புடைய அந்தக் கடினமான பணியைச் சாதித்தவன் {பீமன்}, கீசகன் கொல்லப்பட்டதும் தனது கோபத்தைத் தணித்துக் கொண்டு, துருபதன் மகளான கிருஷ்ணையிடம் {திரௌபதியிடம்} விடைபெற்றுக் கொண்டு விரைந்து மடைப்பள்ளிக்குத் திரும்பினான். பெண்களில் சிறந்த திரௌபதியும், கீசகனைக் கொல்லச்செய்த பிறகு துக்கம் அகன்று பெரும் மகிழ்ச்சியை அடைந்தாள்.
பிறகு அந்த ஆடற்கூடத்தின் காவலாளிகளிடம் சென்று {திரௌபதி}, “வாருங்கள், பிற மனிதர்களின் மனைவியைக் களங்கப்படுத்தியக் கீசகன், எனது கந்தர்வக் கணவர்களால் கொல்லப்பட்டுக் கீழே கிடப்பதைப் பாருங்கள்” என்றாள். இந்த வார்த்தைகளைக் கேட்ட காவலாளிகள் கையில் தீப்பந்தங்களுடன், ஆயிரக்கணக்கில், அந்த ஆடற்கூடத்திற்கு வந்தனர். பிறகு அந்த அறையை அடைந்து, ரத்தத்தில் நனைந்து தரையில் வீசப்பட்டுக் கிடக்கும் உயிரற்ற கீசகனைக் கண்டனர்.
கரங்களற்றும், கால்களற்றும் இருக்கும் அவனைக் {கீசகனைக்} கண்டு அவர்கள் அனைவரும் துயரம் கொண்டனர். அப்படி அவர்கள் கீசகனைக் கண்டபோது அவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். கீசகனை வீழ்த்திய மனித சக்திக்கு அப்பாற்பட்ட செயலைக் கண்ட அவர்கள், “இவனது கழுத்து எங்கே? இவனது கால்களெங்கே?” என்று கேட்டனர. இந்த நிலையில் கிடந்த அவனைக் {கீசகனைக்} கண்ட அவர்கள், அவன் {கீசகன்} கந்தர்வனால் கொல்லப்பட்டான் என்றே தீர்மானித்தனர்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.