Bhima killed the Kichakas! | Virata Parva - Section 23 | Mahabharata In Tamil
(கீசகவத பர்வத் தொடர்ச்சி - 10)
இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண
பதிவின் சுருக்கம்: கீசகனின் உறவினர்கள் வந்து கீசகனின் உடலைக் கண்டு அழுவது; திரௌபதியின் மீது கோபம் கொண்டு, கீசகனோடு சேர்த்து அவளையும் தகனம் செய்வது என்று முடிவு செய்வது; விராடனிடம் அனுமதி பெற்று திரௌபதியைக் கட்டி சுடுகாட்டுக்குத் தூக்கிச் செல்வது; திரௌபதி தனது கணவர்களைச் சங்கேத மொழியில் அழைப்பது; பீமன் வந்து திரௌபதியைக் காப்பது; பீமனால் கீசகர்கள் கொல்லப்படுவது…
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், “பிறகு கீசகனின் உறவினர்கள் அனைவரும் அந்த இடத்திற்கு வந்து, அவனைக் {கீசகனைக்} கண்டு, எல்லாப்புறங்களிலும் அவனைச் சூழ்ந்து கொண்டு உரத்த ஒலி கொண்டு அழுதனர். காய்ந்த நீர் நிலையில் இருந்து இழுத்துவரப்பட்ட ஆமையைப் போன்று, அனைத்து அங்கங்களும் சிதைக்கப்பட்ட கீசகனைக் கண்ட அவர்கள் அனைவரும் மிகுந்த அச்சமடைந்தனர். அவர்களது உடல் முடிகள் நுனி வரை எழும்பி நின்றன. இந்திரனால் நசுக்கப்பட்ட தானவனைப் போல, பீமனால் நசுக்கப்பட்ட அவனைக் {கீசகனைக்} கண்டனர். இறுதிச் சடங்குகளுக்காக அவனை {கீசகனை} வெளியே கொண்டு வர முனைந்தனர்.
இப்படி ஒன்றாகக் கூடிய சூத குலத்தைச் சேர்ந்த அந்த மனிதர்கள், தூணின் மீது சாய்ந்து கொண்டிருந்த களங்கமற்ற அங்கங்கள் கொண்ட கிருஷ்ணையைத் {திரௌபதியை} தங்கள் கடுங்கண்ணால் கண்டார்கள். அங்குக் கூடியிருந்த கீசகர்கள் அனைவரும், “எவளுக்காகக் கீசகன் தனது உயிரை இழந்தானோ, அந்தக் கற்பற்ற இவள் {மாலினி} கொல்லப்படட்டும். அல்லது இவளை இங்கே கொல்லாமல், இவள் மீது காமுற்ற அவனுடன் {கீசகனுடன்} சேர்த்து இவளையும் தகனம் செய்வோம். இறந்து போன அந்தச் சூதனின் மகனுக்கு {கீசகனுக்கு}, அனைத்து வகையிலும் ஏற்புடைய இக்காரியத்தை நாம் செய்வதே நமக்குத் தகும்” என்றனர்.
பிறகு அவர்கள் விராடனிடம் {சென்று}, “இவள் {சைரந்திரியான மாலினி} பொருட்டே கீசகன் உயிரை இழந்தான். எனவே, இவளோடு {இந்த மாலினியோடு} சேர்த்து அவன் {கீசகன்} தகனம் செய்யப்படட்டும். இதற்கு அனுமதி அளிப்பதே உமக்குத் தகும்” என்றனர். இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் விராடன், ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, அந்தச் சூதர்களின் பராக்கிரமத்தை நன்கு அறிந்ததால், சூத மகனுடன் {கீசகனுடன்} சேர்த்து சைரந்திரியை எரிப்பதற்கு அனுமதி கொடுத்தான். அதன்பிறகு, உணர்வை இழந்து பயத்துடனும் தாமரை போன்ற கண்களுடனும் இருந்த கிருஷ்ணையை {திரௌபதியை} அணுகி அவளை வன்முறையுடன் அவர்கள் {கீசகர்கள்} பற்றினர். மெல்லிய இடுப்புக் கொண்ட அந்தப் பெண்ணைக் {திரௌபதியைக்} கட்டி, பாடையில் ஏற்றி, சுடுகாட்டை நோக்கி பெரும் சக்தியுடன் புறப்பட்டனர்.
ஓ! மன்னா {ஜனமேஜயா}, இப்படி அந்தச் சூத குலத்தின் மகன்களால், சுடுகாட்டை நோக்கி பலவந்தமாகத் தூக்கிச் செல்லப்பட்டவளும், தனது தலைவர்களின் {பாண்டவர்களின்} பாதுகாப்பின் கீழ் வாழ்பவளுமான களங்கமற்ற கற்புடைய கிருஷ்ணை {திரௌபதி} தன் கணவர்களின் உதவியை நாடி உரத்த ஒலியுடன், “ஓ!, ஜயரும், ஜயந்தரும், விஜயரும், ஜயத்சேனரும், ஜயத்பாலரும் எனது வார்த்தைகளைக் கேட்பீராக. இந்தச் சூதர்கள் என்னைக் கொண்டு போகிறார்கள். யாருடைய தேர் சக்கரச் சடசடப்பு உரத்த ஒலி கொண்டதாகவும், யாருடைய வில்லின் நாணொலி பெரும்போருக்கு மத்தியிலும் இடியெனக் கேட்கப்படுவதாகவும் இருக்குமோ, கரங்களில் வேகம் கொண்ட அத்தகைய சிறப்புமிக்கக் கந்தர்வர்களே, என்னுடைய வார்த்தைகளைக் கேளுங்கள். இந்தச் சூதர்கள் என்னைக் கொண்டு போகிறார்கள்!” என்று கதறினாள் {திரௌபதி}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “கிருஷ்ணையின் {திரௌபதியின்} இந்தச் சோகமான வார்த்தைகளையும், புலம்பலையும் கேட்ட பீமன், ஒரு நிமிடமும் சிந்தித்துப் பார்க்காமல் தனது படுக்கையில் இருந்து எழுந்து, “ஓ! சைரந்திரி, நீ பேசிய வார்த்தைகளை நான் கேட்டுவிட்டேன். எனவே, ஓ! அச்சமுற்றவளே, அந்தச் சூதர்களிடம் இனி உனக்கு அச்சம் தேவையில்லை” என்றான் {பீமன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இதைச் சொன்ன பெரும்பலமிக்கக் கரங்கள் கொண்ட பீமன் அந்தக் கீசகர்களைக் கொல்ல விரும்பி, தனது உடலைப் பெருக்கினான். பிறகு கவனமாகத் தனது ஆடையை மாற்றிக் கொண்டு, {நேர்வழியல்லாத} குறுக்கு வழியில் {wrong way = தவறான வழியில்} அரண்மனையிலிருந்து வெளியே சென்றான். ஒரு மரத்தின் உதவியைக் கொண்டு மதில் சுவர் ஏறிய அவன் {பீமன்}, கீசகர்கள் சென்ற சுடுகாட்டை நோக்கிச் சென்றான். சுவரைத் தாண்டி வெளியே இருந்த அந்தச் சிறந்த நகரத்திற்குள் வந்த பீமன், அந்தச் சூதர்கள் இருக்கும் இடத்தை நோக்கி விரைந்தான்.
ஓ! ஏகாதிபதி {ஜனமேஜயா}, சிதையை நோக்கிச் சென்ற அவன் {பீமன்}, பெரிய கிளைகளைக் கொண்டு, மேலே வாடிப் போய், பனைமர உயரமிருந்த ஒரு பெரிய மரத்தைக் கண்டான். அந்த எதிரிகளைக் கொல்பவன் {பீமன்} பத்து வியாமங்கள் அளவு கொண்ட அந்த மரத்தைத் தனது கரங்களால் பற்றி, யானையைப் போல அதை வேரோடு பிடுங்கி, தனது தோள்களில் வைத்துக் கொண்டான். பிறகு பத்து வியாமங்கள் [1] அளவு கொண்ட கிளைகளும் தண்டும் கொண்ட அந்த மரத்தை எடுத்துக் கொண்ட அந்தப் பெரும் வீரன் {பீமன்}, கையில் கதாயுதத்துடன் செல்லும் யமனைப் போலச் சூதர்களை நோக்கி விரைந்தான். அப்படி அவன் மூர்க்கமாக விரைந்ததால் [2] ஆலமரங்களும், அரச மரங்களும், பலாச மரங்களும் முறிக்கப்பட்டுப் பூமியில் கொத்துக் கொத்தாக விழுந்தன.
[1] வியாமம் என்பது கையின் நுனியில் இருந்து (கை நடு விரலின் நுனியில் இருந்து) தோள் முடிவு வரை உள்ள ஒரு அளவீடாகும். ஒரு வியாமம் 84 அங்குலங்கள் என்றும், 5 அடி 3 அங்குலங்கள் நீளம் கொண்டது என்றும் கூட சொல்வார்கள்.[2] “இது பீமனின் தொடைகளின் விசையை இலக்கிய வடிவில் எடுத்தரைப்பதாகும்” என்கிறார் கங்குலி
சீற்றத்துடன் வரும் சிங்கத்தைப் போலத் தங்களை நோக்கிவரும் கந்தர்வனைக் {பீமனைக்} கண்ட அந்தச் சூதர்கள் அனைவரும் மிகவும் கவலை கொண்டு, பயத்தால் நடுங்கி பீதியடைந்தனர். பிறகு அவர்கள் ஒருவருக்கொருவர், “அதோ, கையில் மரத்தை உயர்த்திப் பிடித்துக் கொண்டு பலமிக்கக் கந்தர்வன் கோபத்துடன் இங்கே வருகிறான். எனவே, யாரால் நமக்கு இந்த ஆபத்து எழுந்திருக்கிறதோ, அந்தச் சைரந்திரியை விடுவிப்போம்” என்று சொன்னார்கள். அந்த மரம் பீமசேனனால் வேரோடு பிடுங்கப்பட்டதைக் கண்ட அவர்கள், திரௌபதியை விடுவித்துவிட்டு, நகரத்தை நோக்கி மூச்சுவிடாமல் ஓடினர்.
ஓ! மன்னர்களில் முதன்மையானவனே {ஜனமேயனே}, அப்படி அவர்கள் ஓடுவதைக் கண்ட வாயுத்தேவனின் பெரும்பலமிக்க மகனான பீமன், அந்த மரத்தைக் கொண்டு, தானவர்களைக் கொல்லும் வஜ்ரத்தைத் தாங்குபவன் {இந்திரனைப்} போல அவர்களில் நூற்றைந்து {105} பேரை யமனின் வசிப்பிடத்துக்கு அனுப்பினான். பிறகு திரௌபதியை அவளது கட்டுகளில் இருந்து விடுவித்து, ஓ! மன்னா {ஜனமேஜயா}, அவளுக்கு {திரௌபதிக்கு} ஆறுதல் கூறினான். கவலையுற்றுக் கண்ணீரில் குளித்த {நனைந்த} முகத்துடன் இருந்த பாஞ்சால இளவரசியிடம் {திரௌபதியிடம்}, பெரும் பலம்வாய்ந்த கரங்கள் கொண்டவனும், பாண்டுவின் மகனுமான கட்டுக்கடங்காத விருகோதரன் {பீமன்}, “ஓ! அச்சமுற்றவளே {திரௌபதி}, “எந்தக் காரணமுமின்றி உனக்குத் தீங்கிழைப்பவர்கள் இப்படியே கொல்லப்படுவார்கள். ஓ! கிருஷ்ணை {திரௌபதி}, நீ நகரத்திற்குத் திரும்பு. இனி உனக்கு எந்தப் பயமும் வேண்டாம். நான் வேறு வழியில் விராடனின் மடைப்பள்ளிக்குச் செல்கிறேன்” என்றான் {பீமன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இப்படியே, ஓ! பாரதா {ஜனமேஜயா}, அந்த நூற்றைந்து கீசகர்கள் கொல்லப்பட்டனர். தரையில் கிடந்த அவர்களது சவங்களைக் காண, புயலால் வேரோடு பிடுங்கப்பட்டு மரங்கள் பெருங்காட்டில் கிடப்பது போலத் தெரிந்தது. இப்படியே நூற்றைந்து கீசகர்கள் வீழ்ந்தனர். ஏற்கனவே கொல்லப்பட்ட விராடனின் தளபதியோடு {கீசகனோடு} சேர்த்து, கொல்லப்பட்ட சூதர்களின் எண்ணிக்கை நூற்றாறு {106} ஆகும். கூடியிருந்த ஆண்களும் பெண்களும் இந்த அற்புத சாதனையைக் கண்டு மலைப்பால் நிறைந்தனர். ஓ! பாரதா {ஜனமேஜயா}, அங்கு நின்ற ஒவ்வொருவரும் {அந்நேரத்தில்} பேசும் சக்தியை இழந்தனர்.” {என்றார் வைசம்பாயனர்}.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.