Draupadi called Kichaka! | Virata Parva - Section 22a | Mahabharata In Tamil
(கீசகவத பர்வத் தொடர்ச்சி - 9)
இப்பதிவின் காணொளி புத்தகத்தை யூடியூபில் காண
பதிவின் சுருக்கம்: கீசகனை ஆடற்கூடத்திற்கு அழைக்குமாறு பீமன் திரௌபதிக்கு வழிகாட்டுவது; திரௌபதி கீசகனை ஆடற்கூடத்திற்கு அழைப்பது; கீசகன் மகிழ்ந்து இல்லம் திரும்புவது; மீண்டும் திரௌபதி பீமனை மடைப்பள்ளியில் சந்தித்து ஆலோசிப்பது…
பீமன் {திரௌபதியிடம்} சொன்னான், “ஓ! அச்சமுள்ளவளே {திரௌபதி}, நீ சொல்வதைப் போலவே நான் செய்வேன். நான் தற்சமயம் கீசகனை அவனது நண்பர்கள் அனைவருடன் சேர்த்துக் கொல்வேன். ஓ! இனிய புன்னகை கொண்ட யக்ஞசேனி {திரௌபதி}, துன்ப துயரங்களைக் கைவிட்டு, நாளை மாலை வேளையில் கீசகனைச் சந்திக்க முயற்சி செய். மத்ஸ்ய மன்னன் {விராடன்} கட்டியிருக்கும் ஆடற்கூடத்தைப் பகல் நேரங்களில் பெண்கள் பயன்படுத்துகின்றனர். எனினும் இரவு வேளையில் அவர்கள் தங்கள் இல்லங்களுக்குத் திரும்பிச் செல்கின்றனர். அந்தக் கூடத்தில் மரத்தாலான சிறந்த படுக்கை நல்ல முறையில் வைக்கப்பட்டிருக்கிறது. இறந்து போன அவனது {கீசகனின்} முப்பாட்டன்களின் ஆவிகளை அங்கே அவனைப் {கீசகனைப்} பார்க்கச் செய்கிறேன். ஆனால், ஓ! அழகியே {திரௌபதியே}, நீ அவனிடம் உரையாடிக் கொண்டிருக்கும்போது, மற்றவர்கள் அதை வேவு பார்க்காதவாறு பார்த்துக் கொள்” என்றான் {பீமன்}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “இதே போல மற்றவர்களிடமும் {மற்ற பாண்டவர்களிடமும்} உரையாடிவிட்டு, துயரத்தில் கண்ணீர் விட்டபடி பொறுமையின்மையினால் ஏற்படும் வலியுடன் அந்த இரவின் விடியலுக்காக அவர்கள் காத்திருந்தனர். இரவு கடந்ததும், காலையில் எழுந்த கீசகன் அரண்மனைக்குச் சென்று திரௌபதியை முதலில் சந்தித்து, “சபையின் தரையில் வீசி மன்னனுக்கு {விராடனுக்கு} முன்பாகவே உன்னை நான் உதைத்தேன். பலமிக்க என்னால் நீ தாக்கப்பட்டால், நீ பாதுகாப்பை அடைய முடியாது. இந்த விராடர் பெயரளவுக்கே மத்ஸ்யர்களின் மன்னனாக இருக்கிறார். இவ்வாட்சியின் படைகளுக்குக் கட்டளையிடும் {நிலையில் இருக்கும்} நானே மத்ஸ்யத்துக்கு உண்மையான தலைவன்.
ஓ! அச்சமுள்ளவளே {மாலினி}, நீ என்னை உற்சாகமாக ஏற்றுக் கொள். நான் உனது அடிமையாக இருப்பேன். ஓ! அழகிய இடைகள் கொண்டவளே, நான் உனக்கு நூறு நிஷ்கங்களை [1] {தங்க நாணயங்களை} உடனே தருவேன். (உன்னைக் கவனித்துக் கொள்வதில்) நூறு ஆண் பணியாட்களையும், நூறு பெண் பணியாட்களையும் ஈடுபடுத்துவேன். பெண் கோவேறு கழுதைகள் பூட்டப்பட்ட தேர்களையும் நான் உனக்கு அளிப்பேன். ஓ! அச்சமுள்ள பெண்ணே {மாலினி} நமது கூடுகை {கலவி} நடந்தேறட்டும்” என்றான் {கீசகன்}. அதற்குத் திரௌபதி {கீசகனிடம்}, “ஓ! கீசகரே, எனது நிலையும் அதுதான் என்பதை அறிந்து கொள்ளும். என்னுடனான உமது கலவியை உமது நண்பர்களோ, சகோதரர்களோ அறியக்கூடாது. அந்த ஒப்பற்ற கந்தர்வர்கள் கண்டறிந்துவிடுவார்களோ என்ற பயத்தில் நான் இருக்கிறேன். இந்த வாக்குறுதியை எனக்குக் கொடும். நான் உமக்கு இசைகிறேன்” என்றாள் {திரௌபதி}.
[1] நூற்று எட்டுப் பலம் {பலம் என்றால் கிராம் போன்ற அளவீடாக இருக்க வேண்டும்} நிறைந்த தங்கநாணயம் ஒரு நிஷ்கமாகும்.
இதைக் கேட்ட கீசகன் {திரௌபதியிடம்}, “ஓ! அழகிய இடைகள் கொண்டவளே {மாலினி}, நீ சொல்வதைப் போலவே நான் செய்வேன். காமதேவனால் பீடிக்கப்பட்டிருக்கும் நான், ஓ! அழகிய காரிகையே {மாலினி}, உன்னுடனான கூடுகைக்காக உனது வசிப்பிடத்திற்குத் தனியே வருவேன். ஓ! வாழைத்தண்டுகளைப் போன்று உருண்டு கூராகச் செல்லும் அழகிய தொடைகள் கொண்டவளே {மாலினி}, அதனால், சூரியனைப் போன்ற பிரகாசமிக்க அந்தக் கந்தர்வர்களுக்கு, இந்த உனது செயல் தெரியவராமல் போகும்” என்றான் {கீசகன்}. அதற்குத் திரௌபதி {கீசகனிடம்}, “மத்ஸ்யர்கள் மன்னரால் {விராடரால்} கட்டப்பட்ட ஆடற்கூடத்திற்கு {நர்த்தன மண்டபத்திற்கு} இருட்டிய பிறகு செல்வீராக. பகலில் அங்கே பெண்கள் ஆடுவதற்காக வருவார்கள், இரவில் அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பி விடுவார்கள். கந்தர்வர்கள் அந்த இடத்தை அறியமாட்டார்கள். நாமும் அனைத்துக் கண்டனங்களில் இருந்தும் ஐயமின்றித் தப்பலாம்” என்றாள் {திரௌபதி}.
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், “கீசகனுடனான தனது உரையாடலை நினைத்துக் கொண்டிருந்த கிருஷ்ணைக்கு {திரௌபதிக்கு}, அரை நாள் கூட ஒரு முழு மாதத்தைப் போல நீண்டதாக இருந்தது. மரணமே சைரந்திரி {திரௌபதி} என்ற உருவமெடுத்து வந்திருக்கிறது என்பதை அறியாத மூடனான கீசகன், வீடு திரும்பி பெரும் மகிழ்ச்சியை அடைந்தான். காமத்தால் உணர்விழந்த கீசகன், நறுமணத் தைலங்களாலும், மாலைகளாலும், ஆபரணங்களாலும் தன்னை விரைவாக அலங்கரித்துக் கொண்டான். அகன்ற கண்களைக் கொண்ட காரிகையை {மாலினியை, மனதில்} நினைத்துக் கொண்டே இவற்றையெல்லாம் செய்து கொண்டிருந்த அவனுக்கு {கீசகனுக்கு}, அந்த நாள் முடிவற்றதாகத் தெரிந்தது.
தனது அழகை இனி எப்போதும் கைவிடப்போகும் கீசகனின் அழகு, எரியும் விளக்கின் திரியைப் போல அன்று உயர்வாக இருந்தது. திரௌபதியின் மேல் முழு நம்பிக்கை கொண்ட கீசகன், காமத்தால் உணர்வுகளை இழந்து, எதிர்பார்த்திருக்கும் சந்திப்புக் குறித்த சிந்தனையில் மூழ்கி, அந்த நாள் {கரைந்து} கழிவதைக்கூட உணராமல் இருந்தான். அதேவேளையில், அழகிய திரௌபதி தனது கணவனான குருகுலத்தின் பீமனை அணுகி, மடைப்பள்ளியில் {சமையலறையில்} அவன் {பீமன்} முன்பு நின்றாள்.
அழகிய சுருள் முனைகள் கூடிய கேசம் கொண்ட அந்த மங்கை {திரௌபதி}, அவனிடம் {பீமனிடம்}, “ஓ! எதிரிகளைத் தண்டிப்பவரே {பீமரே}, நீர் வழிகாட்டியது போலவே, எங்கள் சந்திப்பு ஆடற்கூடத்தில் {நர்த்தனமண்டபத்தில்} நடைபெறும் என்பதை நான் கீசகனுக்குப் புரியும்படி சொல்லியிருக்கிறேன். ஒருவருமில்லாத கூடத்திற்கு இரவில் தனிமையில் அவன் {கீசகன்} வரப்போகிறான். ஓ! வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவரே {பீமரே}, அவனை அங்கேயே கொல்லும். ஓ! குந்தியின் மகனே {பீமரே}, அந்த ஆடற்கூடத்திற்குச் சென்று, ஓ! பாண்டவரே {பீமரே}, தற்பெருமையில் போதை கொண்ட அந்தச் சூத மகனான கீசகனின் உயிரை எடுப்பீராக. தற்பெருமையின் காரணமாக மட்டுமே அந்தச் சூத மகன் {கீசகன்} கந்தர்வர்களை ஏளனமாக நினைக்கிறான். ஓ! அடிப்பவர்களில் சிறந்தவரே {பீமரே}, கிருஷ்ணன் நாகனை (காளியனை) யமுனையில் இருந்து தூக்கியது போல, அவனைப் பூமியில் இருந்து தூக்கும். ஓ! பாண்டவரே {பீமரே}, துன்பத்தால் பீடிக்கப்பட்டிருக்கும் எனது கண்ணீரைத் துடைத்து, உமது பெருமையையும், உமது குலத்தின் பெருமையையும் பாதுகாத்து அருளப்பட்டிருப்பீராக” என்றாள் {திரௌபதி}.
அதற்குப் பீமன் {திரௌபதியிடம்}, “ஓ! அழகிய பெண்ணே {திரௌபதி}, உனக்கு நல்வரவு. நீ கொண்டு வரும் நற்செய்தியைத் தவிர, ஓ! அதீத அழுகுடையவளே {திரௌபதி}, எனக்கு வேறு எந்தத் துணையும் தேவையில்லை. ஓ! பேரழகியே {திரௌபதி}, கீசகனுடன் நேரிடப்போகும் மோதலைக் கேட்டு, ஹிடிம்பனை கொன்ற போது உணர்ந்த ஆனந்தத்திற்கு ஈடான மகிழ்ச்சியை நான் அடைகிறேன். உண்மை {சத்தியம்}, எனது சகோதரர்கள், அறம் {தர்மம்} ஆகியவற்றின் மீது ஆணையாக {உறுதியாக}, தேவர்களின் தலைவன் {இந்திரன்}, விருத்திரனைக் கொன்றதைப் போல நான் கீசகனைக் கொல்வேன் என்று உறுதி கூறுகிறேன். கமுக்கமாகவோ {ரகசியமாகவோ}, வெளிப்படையாகவோ நான் கீசகனை நசுக்குவேன். அவன் நிமித்தமாகப் பிற மத்ஸ்யர்கள் மோதலுக்கு வந்தால், அவர்களையும் நான் கொல்வேன். பிறகு துரியோதனனையும் கொன்று, மீண்டும் பூமியை வெல்வேன். குந்தியின் மகனான யுதிஷ்டிரர், மத்ஸ்ய மன்னனுக்கு {விராடனுக்கு} தொடர்ந்து மரியாதை செலுத்தட்டும்” என்றான் பீமன்.
கூவிளம்பழம் {அ} வில்வம்பழம் (Vela fruit) |
[2] //“வில்வம் நாகவியௌதரா” {Vilwam nagaviodhara} என்று சில உரைகளில் இருக்கிறது. அதன் பொருள் “ஒரு யானை வில்வம்பழத்தைத் தூக்குவது போல” என்பதாகும்// என்கிறார் கங்குலி
விளாம்பழம் |
கீசகனைப் பீமன் கொல்வதும், கொன்ற பின்பும் யாருக்கும் தெரியவாய்ப்பில்லை
என்பதும், வெளியே மாறுபாடு ஏற்படுத்தாமலே உள்ளே உயிர் இருக்காது என்பதுதான்
அது. - நன்றி:திரு.ராமராஜன் மாணிக்கவேல்.
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!
Post by முழு மஹாபாரதம்.